தமிழ் விளையாடுவோம் LETS PLAY TAMIL - 2019


மெல்பேண் பாரதி பள்ளி South Morang வளாகத்தில் கடந்த 31.03.2019 ஞாயிற்றுக்கிழமையன்று காலை பத்து மணி முதல் பிற்பகல் இரண்டு மணிவரை தமிழ் விளையாடுவோம் - LETS PLAY TAMIL என்ற நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பாரதி பள்ளியின் SOUTH MORANG, BERWICK, CLAYTON, DANDENONG, EAST BURWOOD, ஆகிய ஐந்து வளாகங்களில் படிக்கும் தமிழ் மாணவ, மாணவிகள் யாவரும் ஒன்று கூடி மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.  
தமிழ் விளையாடுவோம் என்ற நிகழ்ச்சி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு இந்த ஆண்டு மூன்றாவது ஆண்டாக நடைபெற்றுள்ளது. பாரதி பள்ளி வருடத்தில் ஒரு நாளை இந்த நிகழ்சிக்கென ஒதுக்கியிருக்கின்றார்கள். இதன் நோக்கம் மெல்பேண் வாழ் அனைத்து தமிழ் சிறார்கள் யாவரும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து வகுப்புரீதியாக தமிழ் விளையாட்டு நிகழ்ச்சிகளை, ஒருவருடன் ஒருவர் உரையாடி மகிழ்ச்சியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே. இந்த நிகழ்ச்சி பாரதி பள்ளி என்றில்லாமல் அனைத்து மெல்பேண் வாழ் தமிழ் சிறுவர்களுக்காகவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பாரதி பள்ளியின் இயக்குனர், அதிபர் மாவை நித்தியானந்தன், மற்றும் வளாக அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர். அன்றைய தினம் தமிழ் புத்தகத்தினை எடுத்துப் பாடம் படிக்காமல் முற்று முழுக்க ஒன்று கூடி தமிழ் வகுப்பு விளையாட்டு நிகழ்ச்சிகளை நான்கு மணித்தியாலங்கள் விளையாடி மகிழ்ச்சியாக இருந்த நாளாக அமைந்திருந்தது.  
ஒவ்வொரு வகுப்பிலும் பலவகையான விளையாட்டுக்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. பிள்ளைகள் யாவரும் ஒன்று கூடி தமிழில் பேசி விளையாடுவதன் மூலம் தமிழ் கற்றுக் கொள்ளக் கூடிய, மற்றும் கூட்டு முயற்சி அனுபவத்தினையும் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பாகவும் அமைகின்றது. அன்றைய தினம் அனைத்து வளாகப் பெற்றோர்களுக்கும் தமிழில் விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. வைத்தியகலாநிதி பவானி அருளையா தலைமையில் பெற்றோர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றான “எமது பிள்ளைகளுக்கு உணவு ஊட்டுவதில் இருக்கும் சிக்கல்கள்“ என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம் பெற்றது. பெற்றோர்களின் முழுமையான, அனுபவரீதியான பங்களிப்புடன் மிகவும் பயனுள்ளதொரு நிகழ்ச்சியாக நடைபெற்றது. காரணம் இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கின்ற பிரச்சனை அல்லவா. 
இறுதி நிகழ்ச்சியாக ஒன்று கூடல் நடைபெற்றது.  அனைத்து அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் யாவரும் ஒன்று கூடினார்கள். பாரதி பள்ளியின் தமிழ் வாழ்த்துப் பாடல் மாணவ, மாணவிகளால் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வளாகத்தின் இணை அதிபர் திரு.சௌசாங்கன் திருஞானம் நிகழ்ச்சியை ஆரம்பித்து அனைவரையும் வரவேற்று தனது உரையை ஆற்றினார். பாரதி பள்ளி இயக்குனர், அதிபர் மாவை நித்தி உரையாற்றுகையில் இந்த தமிழ் விளையாடுவோம் நிகழ்ச்சியின் முக்கியத்துவம், அதனால் பிள்ளைகள் பெறக்கூடிய நன்மைகள் பற்றியும், 2019ம் ஆண்டு தொழில் நுட்ப ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளதன் காரணத்தையும் விளக்கியிருந்தார். அத்துடன் பாரதி பள்ளியில் தமிழ் படிக்கும் சிறார்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மிகவும் அபரிமிதமாகக் கூடியிருப்பதாக, விக்டோரிய அரசால் வழங்கப்படும் மான்யங்கள் புள்ளி விபரங்களை ஆதாரமாக வைத்துக் கூறியிருந்தார். அது தமிழ் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். புலம் பெயர் நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியா மெல்பேண் மாநிலத்தில் மாணவர்களுக்கு தமிழ் படிக்கும் ஆர்வம் கூடியிருப்பதைக் காட்டுகின்றது.
South Morang வளாக அதிபர் திரு.சிவகரன் சிவானந்தன் தனதுரையில் தமிழ் விளையாடுவோம் நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பு பற்றியும், தொடர்ந்து நடாத்தப்பட வேண்டும் என்பதன் அவசியத்தையும் கூறி அனைவருக்கும் நன்றியையும் கூறினார். அத்துடன் பாரதி பள்ளி ஆரம்பித்து இருபத்தைந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்திருந்தார். வளாகத்தின் பெற்றோர் சங்கத்தின் நடப்பாண்டுச் செயலாளர் வைத்தியகலாநிதி பாலசுந்தரம் தர்மேந்திரா அவர்கள் இந்த நிகழ்ச்சிகள் யாவும் திறம்பட நடாத்துவதற்கு முழுமையாக உழைத்த சகல பெற்றோர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.
வளாகத்தின் பெற்றோர் சங்கம் அனைத்து நிகழ்வுகளையும் செவ்வனே நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள். முக்கியமாக அனைத்து மெல்பேண் வாழ் தமிழ் சிறார்களின் வரவேற்பு, பதிவு செய்தல், வகுப்புகள் ஒழுங்கமைப்பு, முதலுதவி, வைத்திய வசதி, வளாகப் பாதுகாப்பு, வாகன தரிப்பு பாதுகாப்பு, மதிய போசனம், BBQ, மற்றும் சிற்றுண்டிகளையும் சகலதையும் செவ்வனே ஒழுங்கு செய்திருந்தார்கள். அன்றைய தினம் தமிழ் விளையாடுவோம் நிகழ்ச்சி தமிழ் சிறார்களுக்கு முற்றிலும் பிரயோசனமான நாளாக அமைந்ததையிட்டு பெரு மகிழ்ச்சியே.
வாழ்க தமிழ். வளர்க நம் தாய் மொழி.
-->
நவரத்தினம் அல்லமதேவன்












































No comments: