இலங்கைச் செய்திகள்


ஆவா குழுவினரால் உடமைகளுக்கு சேதம் - யாழில் சம்பவம்

யாழ்.பல்கலை மாணவர்கள் குறித்து வெளியான செய்தியில் உண்மையில்லை - துணைவேந்தர்

மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழு அடாவடி

கோத்தபாயவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த தமிழர்- இலங்கையில் அனுபவித்த சித்திரவதைகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழ் விஜயம்

மன்னாரில் மத ரீதியான பிளவுகளை கண்டித்து சர்வமத மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனி பீடம்


ஆவா குழுவினரால் உடமைகளுக்கு சேதம் - யாழில் சம்பவம்

11/04/2019 யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் பிரவேசித்த ஆவா குழுவினர் வீட்டில் வசிப்பவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், அவர்களின் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் மோட்டார் சைக்களில் வருகை தந்த 9 பேர் குறித்த பகுதியில் அமைந்துள்ள மூன்று வீடுகளுக்குள் மாத்திரம் பிரவேசித்து அவர்களை அச்சுறுத்தியும் உடமைகளை சேதப்படுத்திவிட்டும் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் உரிய தரப்பினர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
நன்றி வீரகேசரி 










யாழ்.பல்கலை மாணவர்கள் குறித்து வெளியான செய்தியில் உண்மையில்லை - துணைவேந்தர்

11/04/2019 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் புதுமுக மாணவிகள் மீது மூத்த மாணவர்கள் சிலரால் பாலியல் சீண்டல்கள் இடம்பெற்றன என வெளியாகிய செய்தி உண்மைக்குப் புறம்பானது என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளாரல் அனுப்பிவைக்கப்பட்ட  ஊடக  அறிக்கையிலேயே இந்த தகவலை துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த 6 ஆம் திகதி கலைப்பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. அன்றைய தினம் புதுமுக மாணவிகள் சிலர் மீது மூத்த நிலை மாணவர்கள் சிலர் பாலியல் சீண்டல்களை முன்னெடுத்தனர் என செய்திகள் வெளியாகின.
அது ஊடகங்களில் வெளியாகியதையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று  மறுப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் ஊடக அறிக்கையை விடுத்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
06.04.2019 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக 07.04.2019 அன்று ஊடகங்களில் வெளியான தகவல்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளது.
ஊடகங்களில் வெளியான இந்த விடயம் தொடர்பான தகவல்கள் பாலியல் தொந்தரவு பற்றியது என்பது உண்மைக்குப் புறம்பானது.
இந்தச் சம்பவம் மாணவர்களுக்கு இடையிலான முரண்பாடு பற்றியதே என்பதையும் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதையும் பல்கலைக்கழக நிர்வாகம் தெளிவுப்படுத்துகின்றது என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 










மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழு அடாவடி

10/04/2019 மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கையிலுள்ள அடுத்தடுத்து இரண்டு வீடுகள் மற்றும் மானிப்பாய் நகருக்கு அண்மையிலுள்ள வீடொன்றிலும் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 9 பேர் கொண்ட வன்முறைக் கும்பலே இந்தத் தாக்குதலை முன்னெடுத்தனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸ் தெரிவித்தனர்.
அத்துடன், மானிப்பாய் கொமர்ஷியல் வங்கிக்கு அண்மையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்ததுடன் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.   நன்றி வீரகேசரி 










கோத்தபாயவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த தமிழர்- இலங்கையில் அனுபவித்த சித்திரவதைகள்

10/04/2019 இலங்கை சிறைகளில் பெண்கள் பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தப்படுவது வழமையான விடயம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ள ரோய் சமாதானம் தெரிவித்துள்ளார்
இலங்கை சிறைச்சாலையில் இடம்பெற்ற சித்திரவதைகளிற்காக  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ள ரோய் சமாதானம் செவ்வாய்கிழமை லண்டனில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்
சிறைகளில் பெண்கள் பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தப்படுவது வழமையான விடயமாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்
நான் பார்த்த பல விடயங்களை நான் இன்னமும் மறக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்
நான் பார்த்த காட்சிகள் அங்கிருந்த யுவதிகள் இளைஞர்கள் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை போன்றவைகளால் என்னால் தற்போதும் நினைத்து பார்க்க முடியும் அந்த முகங்களை நான் மறக்கவில்லை  அவர்களிற்கு என்ன நடந்தது என்பதையும் நான் மறக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்
அவர்கள் எனக்கு கைவிலங்கிட்டு கொழும்பிலுள்ள டி.ஐ.டி தலைமையகத்திற்கு கொண்டு சென்றார்கள் அங்கு என்னை தனிமையில் அடைத்துவைத்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்
அவர்கள் என்னை சட்டத்தரணிகள் எவரும் சந்திப்பதற்கு அனுமதிக்கவில்லை நான் கனடா பிரஜை என்பதால்  கனடா தூதரக அதிகாரிகள் மாத்திரம் என்னை சந்திப்பதற்கு அனுமதித்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நான் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால் என்னை எந்த வழக்கறிஞரும் பிரதிநிதித்துவம் செய்யமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ள ரோய் சமாதானம் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது சட்டவிரோதமானது ஜனநாயக நாடுகள் ஏற்றுக்கொள்ளாதது எனவும் தெரிவித்துள்ளார்
என்னை ஒரு வருடகாலத்திற்கு மேல் தடுத்துவைத்திருந்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அவர்கள் என்னிடமிருந்து வாக்குமூலத்தை பெற்றனர் அதனை எழுதுமாறு கேட்டனர்  என தெரிவித்துள்ள ரோய் சமாதானம் அந்த வாக்குமூலத்தை பயன்படுத்தியே என்மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய பின்னர் என்னை  உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றனர் எனவும் தெரிவித்துள்ளார்
இராணுவதளபதியையும் அமைச்சர்களையும் முக்கிய பிரமுகர் ஒருவரையும் கொலை செய்வதற்கு சதி செய்ததாக அவர்கள் குற்றம் சுமத்தினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
என்னை அதன் பின்னர்மூன்று வருடங்கள் தடுத்துவைத்திருந்தார்கள் எனவும் குறிப்பிட்டுள்ள ரோய் சமாதானம் விடுதலையான பின்னர் ஜெனீவா சென்று வழக்கு தாக்கல் செய்தேன் 2015 இல் வெற்றிபெற்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்
எனக்கு நஸ்டஈடு வழங்கவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது ஆனால் எதுவும் இடம்பெறவில்லi ஆகவே நான் சிவில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன் மேலும் பலர் இதற்கு முன்வருவார்கள் என கருதுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
நான் கடும் மன அழுத்தம்  உளவியல் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளமை மருத்துவ பரிசோதனைகளின் போது தெரியவந்துள்ளது இது எனது குடும்பத்தை மனைவி குழந்தைகளையும் பாதித்துள்ளது அவர்கள் நான் கைதுசெய்யப்பட்டு அழைத்துச்செல்லப்படுவதை பார்த்தார்கள் எனவும் ரோய் சமாதானம் தெரிவித்துள்ளார்
 இலங்கை சிறையிலிருந்தவேளை மனிதாபிமானமற்ற நடவடிக்கை என்றால் என்பதை நான் அறிந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்
இது வரை எவரும் பொறுப்புக்கூறச்செய்யப்படவில்லை,இதன் காரணமாக நான் நீதிக்கான முதல் நடவடிக்கையை எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எனது நடவடிக்கை இலங்கையில் உள்ள சித்திரவதை செய்யப்பட்டவர்களிற்கு நம்பி;க்கையை அளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 










முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழ் விஜயம்

10/04/2019 யாழ்ப்பாணத்திற்கு  விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை வடக்கு ஆளுநர் வரவேற்றார்
யாழ்ப்பாணத்திற்கு  விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று (09) முற்பகல் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார்
நன்றி வீரகேசரி 










மன்னாரில் மத ரீதியான பிளவுகளை கண்டித்து சர்வமத மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

10/04/2019 'மதங்களை கடந்த மனிதத்தை நேசிப்போம்' எனும் தொணிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று புதன் கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் யாட்சன் தலைமையில் குறித்த அமைதி போராட்டம் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் மத ரீதியான பிணக்குகள் இனியும் வேண்டாம் எனவும் மதம் எனும் அடையாலத்திற்காக எமது உரிமைக்காக நாம் சண்டையிட்டு பிரிந்து விடக்கூடது எனவும் கோரி குறித்த போராட்டம் இடம்பெற்றது.
மன்னார் ,மடு , மாந்தை , முசலி , நானாட்டான் ஆகிய ஐந்து பிரதேசங்களை சேர்ந்த சர்வ மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தி சுமார் 500 ற்கும் மேற்பட்ட மக்கள் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடி குறித்த அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியான முறையில் முன்னெடுத்தனர்.
ஆண்டாண்டு காலமாக கட்டியெழுப்பப்பட்ட எமது ஒற்றுமை சில மத ரீதியான காரணங்களுக்காக   தகர்க்கப்படக் கூடாது எனவும், மத ரீதியான பிரச்சினைகள் எல்லா இடங்களிலும் ஏற்படுவது உண்டு.
 அதை மதம் சார்ந்தவர்கள் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது நீதிமன்றம் ஊடக தீர்த்துக்கொள்ள வேண்டும் அதை விடுத்து அவ் பிரச்சினையை அடையாலப்படுத்தி மன்னார் மாவட்டத்தை பிரித்து விடாதீர்கள்  என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதே நேரத்தில் மதங்களையும் மதஸ்தலங்களையும் மதிப்போம் , மதங்களை கடந்த மனித விழுமியங்களை மதிப்போம்,  அன்பு அமைதி , சமாதானம் , நீதியின் பால் ஒன்றிணைவோம் .
மன்னார் மண்ணில் மதங்களிடையே ஒருமைப்பாட்டை வளர்ப்போம். காலமாக பேணிவந்த உறவுகளை மத பிரச்சினையால் பிளவுபடுத்தி விடாதீர்கள் என பல்வேறுபட்ட மத ஒற்றுமையை வழியுறுத்தும் வகையிலான வாசகங்களை உள்ளடைக்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.  நன்றி வீரகேசரி 













யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனி பீடம்

09/04/2019 யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் ஒப்பமிட்டு, கடந்த மார்ச் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2115/5 ஆம் இலக்க அதி விசேட அரசிதழ் மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலின் படி யாழ். பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தையடுத்து 11ஆவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் அமையவுள்ளது. இந்து நாகரிகம், சைவ சித்தாந்தம், சமஸ்கிருதம் ஆகிய துறைகள் இந்து கற்கைகள் பீடத்தினுள் உள்வாங்கப்படவுள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தை நிறுவிய காலத்திலிருந்தே இந்து நாகரிகத்துறைக்கென தனியான பீடமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் சேர்.பொன்.இராமநாதனின் கனவு இப்போது தான் மெய்ப்பட்டுள்ளதாக மூத்த கல்வியியலாளர்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி 






No comments: