பயணியின் பார்வையில் - அங்கம் - 02 முருகபூபதி

.
 எனது புகலிட வாழ்வில் இலக்கிய முயற்சிகளுக்கு களம் தந்த பிரான்ஸ் ஊடகங்கள்  " உன் உழைப்பின் வலி   உன் உடலில் தெரிந்தால்தான்  உன் உயர்வின் வழி திறக்கும்" - யாரோ 
                                   -              
நோர்வேயிலிருந்து உமைபாலன், பிரான்ஸ் வருமாறு என்னை அழைத்தபோது, முதலில் தயங்கினேன். ஏற்கனவே சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து சென்ற சந்தர்ப்பங்களில் பிரான்ஸ் செல்வதற்கு சந்தர்ப்பமிருந்தும் தவிர்த்துக்கொண்டேன்.
1999 இல் ஜெர்மனி - சுவிட்சர்லாந்து -  ஜெனீவா  பாதையில் எனது பெறாமகன் தனது காரில் என்னை அழைத்துவந்தவேளையில் பிரான்ஸ் போகும் திசையை காண்பித்து செல்வோமா? எனக்கேட்டபோதும் மறுத்துவிட்டேன்.
1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர், எனது எழுத்துக்களுக்கு முதலில் களம் வழங்கிய நாடு பிரான்ஸ். இலங்கை பத்திரிகைகள், இதழ்களில் எழுதிக்கொண்டே பாரிஸிலிருந்து அக்காலப்பகுதியில் வெளியான பாரிஸ் ஈழநாடு, தமிழன், ஓசை, அம்மா முதலான இதழ்களில் தொடர்ச்சியாக கதைகள், கட்டுரைகள், சிறுவர் இலக்கியம் முதலானவற்றை எழுதியிருக்கின்றேன்.




பாரிஸ் ஈழநாடு ஆசிரியர் எஸ். எஸ். குகநாதனை, அவர் இலங்கையில் ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றிய காலம் தொடக்கம் நன்கு அறிவேன். அவரது அண்ணன் காவலூர் ஜெகநாதன் எனது நல்ல நண்பர். குகநாதனின் பாரிஸ் ஈழநாடு இதழை கணினியில் பதிவுசெய்து வடிவமைத்தவர் அவரது துணைவியார் றஜனி. இவரது பெயரில் குகநாதன் யாழ்ப்பாணத்தில் ஒரு பதிப்பகம் நடத்தி,  சில மாத நாவல்களையும் வெளியிட்டவர். பாரிஸ் ஈழநாடு இதழில்தான் எனது நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடர் வெளியாகி, பின்னர் நூலாகியது. அதன் விரிவாக்கமே நான் தற்போதும் எழுதிவரும் காலமும் கணங்களும் தொடர். இதுவரையில் இந்தத்  தொடரில் சுமார் நூறு பதிவுகளை எழுதிவிட்டேன். அனைத்தும் என்னுடன் நட்புறவாடிய - மறைந்த  எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் பற்றிய நினைவுப்பதிகைகள்.
இலங்கை ஈழநாடுவில் பணியாற்றிய காசிலிங்கம் தமிழன் பத்திரிகையை நண்பர்களுடன் இணைந்து தொடங்கியபோது,  அதிலும் எழுதுமாறு கேட்டுக்கொண்டார். அவ்வாறு எழுதப்பட்டதுதான் பாட்டி சொன்ன கதைகள். இந்தச்சிறுவர் இலக்கியமும் பின்னாளில் நூலாகியிருக்கிறது.
ஓசை மாத இதழை வெளியிட்ட மனோகரன், நாம் அவுஸ்திரேலியாவில் நடத்தும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில் தொடக்ககாலத்தில் பங்களிப்புச்செய்ததுடன், பல அன்பர்களுக்கும் எமது நிதியத்தை அறிமுகப்படுத்தி இணைத்துவிட்டவர். மனோகரன், அம்மா என்ற இதழையும் நடத்தி அவுஸ்திரேலிய சிறப்பிதழும் வெளியிட்டார்.
ஓசையிலும்  நான் எழுதிய எழுத்தாளர்களுடனான நேர்காணலும் பின்னாளில் சந்திப்பு என்ற பெயரில் நூலாகியிருக்கிறது.
இவ்வாறு எனது மூன்று நூல்கள் உருவாவதற்கு மூலகாரணமாக இருந்த பிரான்ஸ் செல்வதற்கு நான் தயக்கம் காண்பித்தமைக்கு சில காரணங்கள் இருந்தன!
பிரான்ஸில் வாழ்ந்த சபாலிங்கம் சபாரத்தினம் அவர்களுடனும் எனக்கு கடிதத் தொடர்புகள் நீடித்திருக்கின்றன. அவர் கொலைசெய்யப்பட்டதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தேன்! அய்ரோப்பாவில் இலக்கியச்சந்திப்புக்கு கால்கோள்  இட்ட பலருடனும் தொடர்புகள் இருந்தன. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் எழுதிய புஸ்பராசாவுடனும்  தொடர்புகள் இருந்தன.
ஷோபா சக்தியுடனும் தொலைபேசித்தொடர்புகள், மின்னஞ்சல் தொடர்புகள் இற்றைவரையில் நீடித்திருந்தபோதிலும்,  இதுவரையில் அவரை நேரில் பார்க்கவில்லை. அவர் என்னையும் என்னை அவரும் பரஸ்பரம் நேர்காணல் செய்திருக்கின்றோம்.
அகாலம் எழுதியபின்னர் புஸ்பராணி அவர்களுடனும் தொடர்புகளை பேணிவந்தேன். "நடு"  இணைய இதழை கோமகன் தொடங்கியபின்னர் அதிலும் எழுதத் தொடங்கியதனால் அவரும் எனது நண்பர்கள் வட்டத்தில் இணைந்துவிட்டார்.
பாரிஸில் வதியும்,  எங்கள் ஊரில் எனது உடன்பிறவாத சகோதரி அம்பிகாவின் மூத்த புதல்வன் ரவி பிரதீபனை குழந்தைப்பருவத்திலிருந்தே தெரியும். அவர் குறும்படங்கள் எடுத்தவர். இவரது எனது வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் பிரசித்தமானது. இவரது மற்றும் ஒரு குறும்படத்தை இலங்கையில் 2011 இல் நடத்திய மாநாட்டிலும் காண்பித்தோம்.
எங்கள் நீர்கொழும்பில் எனது சமகால நண்பர் செல்லையா செல்வரத்தினம் இலங்கையில் வீரகேசரி, தினபதி , சிந்தாமணி பத்திரிகைகளில் ஊடகவியலாளராக பணியாற்றியவர். எங்கும் எதிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பமாட்டார். இவர் நான் அவுஸ்திரேலியாவுக்கு வருமுன்னரே  பிரான்ஸ் சென்றவர். இலங்கையில் இனநெருக்கடி உக்கிரமடையத் தொடங்கிய காலம் முதல்  ஊடகங்களுக்கு செய்திகளை சேகரித்து கொடுத்துவந்தவர். எனினும் பிரான்ஸிலிருக்கும் இலக்கியவாதிகள் பலர் இவரை அறிந்திருந்தால் ஆச்சரியமே!
இவ்வாறு பலரதும் தொடர்பும் உறவும் எனக்கு பிரான்ஸிலிருந்தபோதிலும் நண்பர்கள் ஷோபா சக்தியும் கோமகனும் சில தடவைகள் என்னை அங்கு அழைத்தபோதும், ஏனோ அங்கு வருவதற்கு தயக்கமிருந்தது. சபாலிங்கம் சபாரத்தினத்தின் எதிர்பாராத இழப்பு என்னை வருத்திக்கொண்டிருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். கலைச்செல்வன், புஸ்பராசா , சபாலிங்கம் சபாரத்தினம் இல்லாத பிரான்ஸை பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது. இவர்கள் அற்பாயுளில் மறைந்துவிட்ட ஆளுமைகள்.
எனது ஆசான் பண்டிதர் மயில்வாகனன் அவர்களின் ஆன்மாதான் என்னை அங்கு அழைத்திருக்கவேண்டும் என்ற குருட்டு நம்பிக்கையுடன் உமைபாலனிடமும் பண்டிதரின் மகன்மார் சிவானந்தன், மகேசானந்தன் ஆகியோரிடமும் வருவதாக சம்மதம் தெரிவித்தேன். இக்காலப்பகுதியில் எனது சொல்லத்தவறிய கதைகள் நூலை கிளிநொச்சியில் நண்பர் கருணாகரன் தனது மகிழ் பதிப்பகத்தினால் வெளியிட்டிருந்தார்.
அதன் பிரதிகளை நண்பர் குகநாதன் ஊடாக பாரிஸ் அனுப்பியிருந்தார். அங்கு யார் யாரைப்பார்க்கவேண்டும் என்ற பெயர்ப்பட்டியலை தயாரித்தேன். அங்கிருந்து லண்டன் செல்வதற்கு விரும்பியிருந்தமையால், ரயிலில் பயணிக்கும் ஆசையும் வந்தது. சமுத்திரத்தை ஊடறுத்து அதன் ஆழத்தில் செல்லும் அந்தத் துரித   Euro star  ரயிலிலிருந்து சமுத்திரத்தை பார்க்கமுடியாதுதான்!
குகநாதனின் துணைவியார், அதற்கான ரயில்  டிக்கட்டை எடுத்து மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். ஜெர்மனியிலிருக்கும் தேனி ஆசிரியர் ஜெமினி எனது ஆக்கங்களுக்கு சிறந்த களம் வழங்கிவருபவர். எனினும் அவரையும் நான் பார்த்திருக்கவில்லை. அவரும் ஜெர்மனிக்கு வருமாறு அழைத்தார். நாம் தொலைபேசியில் உரையாடி பிரான்ஸில் சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தோம்.
கடந்த ஜனவரி 25 ஆம் திகதி பாரிஸ் விமான நிலையத்தில் காலை இறங்கியபோது ஒரு சோதனை காத்திருந்தது. மின்சாரக்கோளாறினால், பயணிகள் பொதிகள் வரும் பெல்ட் இயங்கமறுத்துவிட்டது. அதனால் குடிவரவு பகுதியில் நீடித்த நீண்ட தாமதம் பயணிகளது பொறுமையை சோதித்தது.
மெல்பனிலிருந்து புறப்பட்டு பல மணிநேரங்களின் பின்னர் அபுதாபி வந்து, அங்கும் சில மணிநேரங்கள் தரித்து,  மற்றும் ஒரு விமானத்தில் மேலும் சில மணிநேரங்கள் பயணித்து, களைத்து சோர்ந்து வந்து இறங்கிய பின்னரும் வெளியே செல்லமுடியாமல் தவித்த பயணிகள் உரத்துச்சத்தமிடத்தொடங்கினர். அவர்கள் பேசிய பிரெஞ்சையும் புரிந்துகொள்ளமுடியாத என்போன்றவர்கள் திரு திருவென முழித்து ஒருவர் முகத்தை ஒருவர் சோகத்துடன் பார்த்துக்கொண்டோம். ஆனால், அந்த நாட்டுப்பிரஜைகள், அந்த  மொழிதெரியாத எங்களுக்கும் சேர்த்து குரல் எழுப்பினர் என்பதை ஊகிக்கமுடிந்தது!
அங்கிருந்த அதிகாரிகள் பிரெஞ்சு மொழியில் சொன்னதும் அம்மொழி தெரியாதவர்களுக்கு எரிச்சலைத்தந்தது. பின்னர் நிலைமையை புரிந்துகொண்ட பிரெஞ்சுப்பொலிஸாரும் விமான நிலைய அதிகாரிகளும் ஆங்கிலத்திலும் பேசத் தொடங்கினர்.
என்னை அழைத்துச்செல்வதற்கு வெளியே யார் யார் காத்திருப்பார்கள்? அவர்களது அன்றாட பணிகளும் தாமதிக்கப்போகிறதே என்ற கவலையில் ஆழ்ந்தேன். சுமார் இரண்டு மணிநேரம் தாமதத்தின் பின்னர் வெளியே வந்தபோது , பண்டிதரின் பிள்ளைகள் மலர்ச்செண்டுடன் காத்திருப்பது தெரிந்தது. அவர்களுக்குள் நண்பர் செல்வரத்தினமும் நின்றார்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் பண்டிதரின் மக்களை அன்று  காண்கின்றேன். சித்தங்கேணியில் 1963 - 64  காலப்பகுதியில் குழந்தைகளாக நான் கண்டவர்கள் குடும்பத்தலைவர்களாகியிருந்தனர். அவர்களின் மூத்த சகோதரர்களுடன் அங்கு கிளித்தட்டு என்ற தாச்சி மறிப்பு, கிரிக்கட் முதலான விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கின்றேன். என்னையும் என்னுடன் அச்சமயம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரி ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து படித்த எனது மாமா மகன் முருகானந்தனையும் பண்டிதர் அவர்கள் வாரவிடுமுறைக்காக வந்து அழைத்துச்சென்ற கதைகளை ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். பசுமை நிறைந்த அந்த நினைவுகளை அன்று பாரிஸ் விமான நிலையத்தில் அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
பிரான்ஸில் மஞ்சள் அங்கிப்போராட்டம் தொடங்கியிருந்த வேளையில் அங்கு சென்றமையினால், நண்பர் செல்வரத்தினம் வீட்டில் தங்கியிருந்து தினமும் தொலைக்காட்சியில் அந்தப்போராட்டத்தை அவதானித்தேன். எரிபொருள் விலை உயர்வைக்கண்டித்து தொடங்கப்பட்ட அறப்போராட்டம் எவ்வாறு வன்முறையை நோக்கியும் விரிந்தது என்பதை ஊடகவியலாளரான செல்வரத்தினம் விளக்கினார்.
வெளியே பனிமழை பொழிகிறது. வீடுகளையும் வீதிகளையும் பனி சூழ்ந்தால், சூரியபகவான் பார்வை கடுமையாகும் வரையில் சிரமம்தான். எனினும் பனிக்குள் நெருப்பாக அம்மக்கள் வாழ்வது வியப்பானது. ரயில் தண்டவாளங்களை பனிபோர்த்தினால், சூரிய வெப்பத்தில் பனிப்படலமும் பனிக்குவியலும்  கரைந்தோடும் வரையில் ரயில் போக்குவரத்து தடைப்படும். இந்தக்காட்சிகளை கனடாவிலும் பார்த்திருப்பதனால் வியப்படையவில்லை.
 பிரெஞ்சு மொழி தெரியாமல் வெளியே நடமாடுவதற்கும் தயக்கமிருந்தமையால், செல்வரத்தினத்தின் துணையை நம்பியிருந்தேன்.  அவரது தந்தையார் ( அமரர்) செல்லையா நீர்கொழும்பில் பிரபலமான வர்த்தகர். அவரது பிள்ளைகளும் எங்கள் ஊர் பாடசாலையில் படித்தவர்கள். எங்கள் ஊரில்  ஶ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் செல்லையா அவர்கள் தலைமையில்தான் வருடாந்த உற்சவ காலத்தில் நான்காம் திருவிழா வெகு சிறப்பாக நடந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து, தவில் மேதைகள் தட்சணாமூர்த்தி, சின்னராசா, நாச்சிமார் கோயிலடி கணேசன், பஞ்சமூர்த்தி - கானமூர்த்தி,  நாதஸ்வர மேதை பத்மநாதன் முதலான பிரபல கலைஞர்களை அழைத்துவருவார். செல்லையா முதலாளியின் தலைமையில் சுருட்டுத் தொழிலாளர் சங்கத்தினர்  அந்தத் திருவிழாவை வெகுவிமரிசையாக நடத்துவார்கள். நாம் யாழ்ப்பாணம் சின்னமேளம் பார்த்து வியந்து ரசித்ததும் அவர்களின் திருவிழாவில்தான். விடிய விடிய நடக்கும். ஆலயத்தின் முன்புறம் கடற்கரை வீதியில்  இரவு 11 மணிக்கு மேல் வாகனப் போக்குவரத்துக்கு தடைவிதிக்கும் பொலிஸார் வீதியின் குறுக்கே மேடை அமைப்பதற்கும் அனுமதியளிப்பார்கள்.
செல்லையா அவர்கள் அங்கம் வகித்த சுருட்டுத் தொழிலாளர்  சங்கத்தின் முன்முயற்சியினால்தான்  அங்கு இந்து வாலிபர் சங்கமும் உருவாகி, பின்னாளில் அவர்களின் தீவிர ஊக்கத்தினால் விவேகானந்தா வித்தியாலயமும் 1954 ஆம் ஆண்டு தோன்றியது.
அதன் முதல் தலைமை ஆசிரியர்தான் பண்டிதர் மயில்வாகனன். செல்லையா அவர்களின் பிள்ளைகளும் அவரிடம் கற்றவர்கள். செல்வரத்தினத்தின் அக்கா எனது அக்காவுடனும், அண்ணன் என்னுடனும் படித்தவர்கள். எமது பாடசாலையின்  பெற்றோர் ஆசிரியர் சங்கத்திலும் செல்லையா அவர்கள் இணைந்திருந்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டவர். அத்துடன் 1972 இல் நாம் அங்கு பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கியபோது செல்வரத்தினத்தின் அண்ணன், நவரத்தினம்தான் நிதிச்செயலாளர். இவ்வாறு எமது கல்விச்சாலையுடன் நெருக்கமான உறவைக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் பிரதிநிதியுடன் தங்கியிருந்துதான் பிரான்ஸில் நடந்த பண்டிதர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டேன்.
செல்வரத்தினம் என்னை தமிழர்கள் வர்த்தக நிலையங்கள் நடத்தும் ஈழத் தமிழர்கள் செறிந்து நடமாடும் லாசப்பல் பிரதேசத்திற்கு அழைத்துச்சென்றார். இங்குதான் எனக்கு ஏற்கனவே பல வழிகளிலும் அறிமுகமாகியிருந்த சிலரையும் நீண்ட இடைவெளிக்குப்பின்னர்  சந்தித்தேன்.
லாசப்பல் பிரதேசத்திற்குள் பிரவேசித்ததும் யாழ்ப்பாணத்தில்தான் நிற்கின்றேனா? என்ற மயக்கமும் வந்தது. " அங்கு எல்லாம் இருக்கிறது! " என்று சொன்னால் அக்கூற்று,   பல பொருள் தரும்! அவர்களின் கடின  உழைப்புக்கும் முன்னேற்றத்திற்கும் பின்னால் ஏராளமான சொல்லவேண்டிய கதைகளும் - சொல்ல மறந்த கதைகளும் - சொல்லத்தவறிய கதைகளும் -  சொல்லமுடியாத கதைகளும் இருக்கலாம்!
அவற்றை எழுதவேண்டியவர்கள் அங்கு வாழும் படைப்பிலக்கிவாதிகள்தான். ஊடகம், இலக்கியம், கல்வி, கலை, இசை, மொழிபெயர்ப்பு, சமூகப்பணி  முதலான துறைகளில் ஈடுபாடுகொண்டவர்களும் அங்கு நிறுவனங்கள், வர்த்தக ஸ்தாபனங்கள் நடத்துகிறார்கள்.
அதனால் பிரான்ஸில் புகலிடம் பெற்றவர்களின் வாழ்வையும் வளத்தையும் வெற்றி தோல்விகளையும் லாசப்பலையே தொடக்கப்புள்ளியாக வைத்து, ஆவணப்படுத்தவேண்டும் என்று சிலரிடம் சொன்னேன். எனது இந்தக்கோரிக்கையை அவர்கள் விநோதமாக புரிந்துகொண்டார்கள் என்பதை அவர்களின் முகமே காண்பித்தது.
லாசப்பல் பற்றிய மனச்சித்திரத்தை எழுத்தில் வடிக்க வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கின்றேன்.
-->
( தொடரும்)










No comments: