.
புத்தாடை வாங்கிடுவோம்
புத்துணர்வு பெற்றிடுவோம்
முத்தான முறுவலுடன்
சித்திரையை காத்திருப்போம்
எத்தனையோ சித்திரைகள்
எம்வாழ்வில் வந்தாலும்
அத்தனையும் அடிமனதில்
ஆழமாய் பதிந்திருக்கும்
சொத்துள்ளார் சுகங்காண்பர்
சொத்தில்லார் சுகங்காணார்
எத்தனையோ துயரங்கள்
இருந்தேங்க வைக்கிறது
அத்தனையும் பறந்தோட
சித்திரைதான் உதவுமென
நம்பிடுவார் வாழ்வினிலே
நலம்விளைப்பாய் சித்திரையே
வெள்ளப் பெருக்காலே
வேதனைகள் ஒருபக்கம்
உள்ளத்தை வதைக்கின்ற
உணர்வற்றார் ஒருபக்கம்
கள்ளத்தை விதைக்கின்ற
கயவரெலாம் ஒருபக்கம்
கழன்றோட காத்துள்ளோம்
கைகொடுப்பாய் சித்திரையே
அரசியலில் அறமிப்போ
அருகியே போகிறது
ஆண்டவனின் சன்னிதியில்
அநியாயம் நிகழ்கிறது
அறமுரைப்போர் அனைவருமே
அடக்கமாய் ஆகிவிட்டார்
அடங்கிநிற்பார் தனையெழுப்பி
அழைத்துவா சித்திரையே
புலம்பெயர்ந்து வந்தவர்கள்
புலனெல்லாம் பிறந்தமண்ணின்
நலம்பற்றி நினைப்பதிலே
நாளதனைப் போக்குகின்றார்
வந்தவர்கள் சிலபேர்கள்
வம்புகளை வாங்குகின்றார்
அந்தநிலை அகற்றுவிட
வந்துவிடு சித்திரையே
ஈழத்தில் தமிழ்மக்கள்
இடர்களின்றி வாழவேண்டும்
ஆளுகின்ற அரசமைப்பில்
அவரமைதி பெறவேண்டும்
வாழுகின்ற இடத்திலவர்
வாழ்வாங்கு வாழுதற்கு
வகைநல்கும் பாங்கினிலே
வந்திடுவாய் சித்திரையே
வாழ்வளிக்கும் நாடதனில்
வழிமுறைகள் மாற்றுகிறார்
ஈனமுடை செயலனைத்தும்
எண்ணெயெண்ணி ஆற்றுகிறார்
பிறந்தமண்ணின் துயரங்களை
பிய்த்தெறிந்து நிற்குமவர்
மனந்திருத்தும் மருந்துடனே
வந்திடுவாய் சித்திரையே
சன்மார்க்கச் சாலையெல்லாம்
சரிவையொட்டிப் போகிறது
பொல்லாத கூட்டமொன்று
பொறுப்பேற்று நிற்கிறது
நல்லவல்ல நாட்டினிலே
நாளும்வாழ்க்கை போராட்டம்
அல்லலெல்லாம் அகற்றிவிட
அமைந்திடுவாய் சித்திரையே
எத்தனைதான் இடர்வரினும்
இறைவனே துணையென்னும்
எண்ணமதை மனங்களிலே
இருத்திவிடு சித்திரையே
இன்பமொடு சுகவாழ்வு
எல்லோர்க்கும் கிடைக்கவென்று
எண்ணமுடன் எழுச்சிபெற்று
எழுந்தாவா சித்திரையே
No comments:
Post a Comment