தென் சூடான் தலைவர்களின் கால்களில் திடீரென வீழ்ந்த பரிசுத்த பாப்பரசர்!

.


புனித பிரான்சிஸ் பாப்பரசர் சமாதானமாக இருக்குமாறு வேண்டியும் மீண்டும் யுத்தமொன்றுக்கு செல்லாதிருக்குமாறு கோரியும் தென் சூடான் ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு தலைவர்களின் காலில் வீழ்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தெற்கு சூடானில் நடைபெற்ற சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கைக்கு ஆதரவு வழங்குமாறு பாப்பரசர், அவர்களின் காலில் வீழ்ந்து கோரிக்கை விடுத்துள்ளார்.
தெற்கு சூடான் ஜனாதிபதி, உப ஜனாதிபதி, எதிர்க் கட்சித் தலைவர் உட்பட தூதுக் குழுவினர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வத்திக்கானுக்கு சென்றுள்ளனர். இதன்போது, புனித பாப்பரசரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மேற்கொண்ட சந்திப்பின் போதே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்..
சமாதானமாக இருங்கள் என நான் உங்களிடம் ஒரு சகோதரனாக இருந்து வேண்டிக் கொள்கின்றேன். இதனை நான் எனது உள்ளத்தால் கேட்கின்றேன். நாம் ஒன்றாக இணைந்து முன்னேறிச் செல்வோம் எனவும் பாப்பரசர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி சல்வா கீர் மற்றும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருக்கும் இடையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் போது 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.
இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் கடந்த வருடம் சமாதான உடன்படிக்கையொன்றில் அவர்கள் கைச்சாத்திட்டிருந்தனர் எனவும் சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

No comments: