இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில்
பணியாற்றிய காலத்தில் சென்னையிலிருந்து ஒரு திரைப்பட நடிகரும் அவரது காதலியான நடிகையும்
கொழும்புக்கு வந்து கலதாரி மெரிடீன் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள்.
அவர்களை அழைத்தவர் செட்டியார்
தெருவில் ஒரு பிரபல நகைக்கடை முதலாளி. அவர் மற்றும் ஒரு கிளையை திறக்கும்போது குறிபிட்ட
நடிகரையும் அவரது காதலியையும் அந்தத் திறப்புவிழாவுக்கு
பிரதம விருந்தினர்களாக அழைத்து, எங்கள் பத்திரிகையில் அரைப்பக்கம் விளம்பரமும் கொடுத்திருந்தார்.
விளம்பரத்திற்குரிய கட்டணமும்
செலுத்திய அந்த வர்த்தகப்பிரமுகர், குறிப்பிட்ட
நடிகர் - நடிகையை யாராவது ஒரு நிருபர் சந்தித்து பேட்டிகண்டு பத்திரிகையில் எழுதி,
தனது வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் மேலும் பரவலான தகவல் தரவேண்டும் என்று பிரதம ஆசிரியரிடம்
வினயமாக கேட்டுக்கொண்டார்.
அந்தவேலைக்கு பிரதம ஆசிரியர்
என்னை அனுப்பியபோது வேண்டா வெறுப்பாகச்சென்றேன். " ஒரு சினிமா நடிகரிடம் சென்று
எதனைக்கேட்பது? அரசியல்வாதி - இலக்கியவாதியிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன.
அந்த சினிமா நடிகரிடம் என்ன கேட்கமுடியும்?
அடுத்து எந்தப்படத்தில் நடிக்கிறீர்கள்? உடன் வந்திருக்கும் காதலியைத்தான் மணம்
முடிக்கப்போகிறீர்களா? இலங்கை ரசிகர்களுக்கு
என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? " இதனைத்தானே கேட்கமுடியும். இந்த பொறுப்பான(?)
கேள்விகளுக்கும் அர்த்தமுள்ள இந்தக் கடமைக்கும் (?) நானா கிடைத்தேன். வேறு எவரும் இல்லையா?
என்று எனது சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினேன்.
என்னை ஒரு படைப்பிலக்கியவாதியாகவும்
நன்கு தெரிந்துவைத்திருந்த ஆசிரியர், " ஐஸே, நாய் வேடம் போட்டால் குரைக்கத்தான்
வேண்டும். பத்திரிகையாளருக்கு எல்லோரும் ஒன்றுதான். அது நாட்டின் அதிபராக இருந்தால்
என்ன, சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களாக இருந்தால் என்ன எல்லோரும் ஒன்றுதான். பத்திரிகைக்கு
செய்தி முக்கியம். அத்துடன் வரும் விளம்பரங்களும் அவசியம்" என்றார்.
அலுவலக படப்பிடிப்பாளரையும்
அழைத்துக்கொண்டு அந்த நடிகர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்தேன். வரவேற்பு உபசரணைப்பெண்ணிடம்
தகவல் கொடுத்தேன். அங்கிருந்து நடிகர் தங்கியிருந்த அறைக்கு இன்டர்கொம்மில் தகவல் சொல்லப்பட்டதும்,
நடிகர் என்னுடன் பேசினார். பத்திரிகையின் பெயரும் சொல்லி வந்தவிடயத்தையும் சொன்னேன்.
பதினைந்து நிமிடம் கழித்து
வரச்சொன்னார். அவ்வாறே நானும் படப்பிடிப்பாளரும் காத்திருந்து சென்றோம். அவரும் அந்த
நடிகையும் தங்களை அலங்கரித்துக்கொண்டு தயாராக இருந்தார்கள்.
தமிழ்ப்பத்திரிகை என்றவுடன்
நடிகர் தமிழ் இனம், தமிழ் மொழி என்று ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டார். உடனிருந்த நடிகை
தமிழ் தெரியாதவர். அவர் தெலுங்கில் நடிகரிடம்
ஏதோ சொன்னார். எமக்குத் தெலுங்கு தெரியாது.
அலுவலகத்தில் ஆசிரியரிடம்
குறிப்பிட்ட கேள்விகளையே அந்த நடிகரிடமும் கேட்டேன். ஆசிரியர் சொன்னவாறு நாய்வேடம்
தரித்தேன்.
" எம்.ஜி. ஆர் -
ஜானகி - என்.எஸ். கிருஷ்ணன் - மதுரம் - எஸ். எஸ். ராஜேந்திரன் - விஜயகுமாரி -
ஏ.வி. எம். ராஜன் - புஷ்பலதா - ஜெமினி கணேசன் - சாவித்திரி - ஏ.எல். ராகவன் - எம்.
என். ராஜம் ஆகியோரைப்போன்று நீங்களும் மணம்முடித்து
தொடர்ந்தும் திரையுலகில் நடித்துக்கொண்டிருப்பீர்களா? "
நடிகர் , நடிகையரின் பெயரைக்கேட்டமாத்திரத்தில்
அந்த நடிகை உஷாராகிவிட்டார். மீண்டும் தெலுங்கில் ஏதோ சொன்னார். நடிகர் சிரித்துக்கொண்டு
பதில்தந்தார். படங்கள் எடுத்தோம்.
அலுவலகம் திரும்பி செய்தியை
எழுதிக்கொடுத்தேன். அந்த நடிகர் - நடிகை படத்துடன் மறுநாள் செய்தி வெளியானது. செய்தி
ஆசிரியர் செய்தியின் தலைப்புக்கு கீழே எனது பெயரையும் ( By Line) பதிவுசெய்துவிட்டார்.
இரண்டாம் நாள் காலை எங்கள்
வீட்டிலிருந்து கடமைக்கு புறப்பட்டுக்கொண்டிந்தேன்.
எங்கள் ஊரைச்சேர்ந்த சில இளம் யுவதிகள் வீட்டு வாசலில் நின்றார்கள். தெரிந்தவர்கள்தான்.
"அந்த நடிகரையும் நடிகையையும் பார்க்கவேண்டும். அழைத்துச்செல்லமுடியுமா
? எனக்கேட்டார்கள். அவர்கள்
பத்திரிகையை படித்துவிட்டு வந்து கேட்பது புலனாகியது!
" உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா? முடிந்தால் அந்த
நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்று பாருங்கள். அல்லது அந்த ஹோட்டல் வாசலுக்குச் சென்று
தவமிருங்கள்." என்று சொல்லி கலைத்துவிட்டேன்.
எத்தனையோ படைப்பிலக்கியவாதிகள்,
கலைஞர்கள் பற்றியெல்லாம் பத்திரிகையில் எனது பெயருடனேயே எழுதியிருக்கின்றேன். இவ்வாறு
எவருமே வந்து அவர்களைப்பார்க்கவேண்டும், சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் எனக்கேட்டதில்லை!
இதுபற்றி எனது அம்மாவிடம் சொல்லி உதட்டை பிதுக்கினேன்.
அதற்கு அம்மா, " நடிகர் - நடிகை பற்றி நீ எழுதியதும் தப்பில்லை. அந்தப்பிள்ளைகள்
வந்து கேட்டதிலும் தப்பில்லை " என்றார்கள். இது நடந்து சில வருடங்களில் நான்
அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன்.
எனது குடும்பத்தினருடன்
அம்மாவையும் சென்னைக்கு அழைத்துவிட்டு, நானும் அங்கு சென்றேன். கோடம்பாக்கத்தில் ஒரு
விடுதியில் தங்கியிருந்தோம். கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர் எமது குடும்ப நண்பர்கள்.
அந்தப்பயணத்தின்போது கண்ணதாசனின் துணைவியார் ( பார்வதி அம்மா) எதிர்பாராதவகையில்
திடீரென மறைந்துவிட்டார்கள். உடனே நான் மாத்திரம் கண்ணதாசன் இல்லம் சென்றேன்.
திருமதி கண்ணதாசனின் பூதவுடல்
அந்த இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பழநெடுமாறன், குமரி அனந்தன், பஞ்சு
அருணாசலம், இயக்குநர் சந்தான பாரதி உட்பட பல அரசியல் , திரையுலக பிரபலங்களும் வந்தார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தனது துணைவியார் கமலாவுடன் வந்திருந்தார்.
தங்கியிருந்த விடுதிக்கு
திரும்பியதும், எனது அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, மரணவீட்டுக்கு வந்தவர்கள்
பற்றிச்சொன்னேன். உடனே அம்மா, " இப்படித் தெரிந்திருந்தால் தானும் வந்திருப்பேனே.
" என்று மனக்குறைபட்டார்கள்.
" சரி, போகட்டும்
சிவாஜியுடன் பேசினாயா? அவரைக்காண்பிக்க அழைத்துப்போகிறாயா? " என்றெல்லாம் கேட்கத்தொடங்கிவிட்டார்கள்.
நான் அம்மாவிடம் இப்படிச்சொன்னேன்:
" நான் சொன்னதும் தப்பில்லை நீங்கள் கேட்டதும்
தப்பில்லை. "
அந்தப்பயணத்தில் ஜெயகாந்தன்
உட்பட பல இலக்கியவாதிகளை சந்தித்தேன். அதுபற்றியும் அம்மாவிடம் சொன்னேன். ஆனால், அம்மா
அவர்களையெல்லாம் பார்க்கும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.
சினிமா எத்தகைய வலிமையான
ஊடகம் என்பதற்கு இந்தச்சம்பவங்கள் சிறிய பதச்சோறுதான்.
கதை வசனகர்த்தா இயக்குநர்
மகேந்திரன் மறைந்தபின்னர், சில தகவல்களுக்காக இணையத்தில் தேடும்போது சில உண்மைகள் வெளிச்சமாகியிருக்கின்றன.
அவர் உமாசந்திரன், புதுமைப்பித்தன், பொன்னீலன், சிவசங்கரி, கந்தர்வன் முதலான தமிழக
எழுத்தாளர்களினதும் கதைகளை தனது பாணியில் மாற்றி, திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்கியவர். இவற்றில் முள்ளும்
மலரும் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியான ( 1978 இல்) முதலாவது படம்.
இக்கதை கல்கி வெள்ளிவிழா
போட்டியில் (1967 இல்) முதல் பரிசுபெற்றது. சுமார் பதினொரு ஆண்டுகளின் பின்னர் இக்கதை
பல்வேறு மாற்றங்களுடன் திரைப்படமாகி வெற்றிபெறுகிறது. ரசிகர்களிடம் முள்ளும் மலரும் மகேந்திரன் பிரபல்யம் அடைகிறார்.
எழுத்தாளர் உமாசந்திரனின்
இயற்பெயர் பூர்ணம் ராமச்சந்திரன். இவரது தாயாரின் பெயர்தான் உமா. அதனையும் இணைத்துக்கொண்டு
எழுத்தாளராக அறிமுகமானவர்.
இவரது சகோதரர்கள்தான்
நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் மற்றும் சோவியத் நாட்டில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தில்
பணியாற்றிய மொழிபெயர்ப்பாளர் பூர்ணம் சோமசுந்தரம் ஆகியோர்.
உமாசந்திரனின் மகன் ஆர். நடராஜ். பொலிஸில் உயர் அதிகாரி (IPS ) அத்துடன் தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்காக
தேர்வு நடத்தும் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவர். 2012 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய
பரீட்சையில் ஆர். நடராஜின் தந்தையார் எழுதிய பிரபல்யமான நாவலின் பெயர் என்ன? என்ற கேள்வியும்
இடம்பெற்றிருந்தது. பதில்: முள்ளும் மலரும்.
குறிப்பிட்ட முள்ளும்
மலரும் நாவலின் புதிய பதிப்பில் ரஜனிகாந்த்
- ஷோபா நடித்த படத்தின் காட்சிதான் முகப்பில் இடம்பெற்றுள்ளது. இது மூலக்கதையாசிரியர்
உமாசந்திரனுக்கு பெருமையா? அதனை மாற்றி திரைப்படமாக்கி வெற்றிகண்ட மகேந்திரனுக்கு பெருமையா?
தமிழ்ச்சிறுகதை இலக்கியத்திற்கு
வளம்சேர்த்த புதுமைப்பித்தனின் சிற்றன்னை நாவலையும் மகேந்திரன் திரைப்படமாக்கினார்.
சிற்றன்னையின் புதிய பதிப்பின் முகப்பில், உதிரிப்பூக்கள்
திரைப்படத்தின் மூலக்கதை என்று பதிவாகியிருக்கிறது.
இரண்டு கதைகளுமே திரைவடிவத்தில்
முற்றாக மாற்றப்பட்டவை!
இந்தப்பின்னணிகளுடன் இலங்கையில்
சிங்கள எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட, சிங்கள
வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நாவல்கள் மார்டின் விக்கிரமசிங்க எழுதிய கம்பெரலிய, மடோல்தூவ மற்றும் கருணாசேன ஜயலத்
எழுதிய கொளு ஹதவத்த மடவள எஸ். ரத்நாயக்க எழுதிய அக்கர பஹ ஆகிய நாவல்களை அவற்றின் மூலம் சிதையாமல்
சிங்களப்படங்களாக்கி வெற்றியும் விருதும் பெற்றவர் லெஸ்டர் ஜேம்ஸ்பீரிஸ். எனினும் இந்த நாவல்கள் மறுபதிப்பு பெற்றபோது, அவற்றின்
திரைப்படத்தில் தோன்றிய நடிகர் - நடிகைகளின் முகங்கள் பதிவாகவில்லை. திரைப்படமாகிய
கதைதான் என்ற பிரகடனமும் இவற்றின் முகப்பில் இல்லை. இவற்றில் சில மும்மொழிகளிலும் வெளிவந்துள்ளன.
இலங்கையில் செங்கைஆழியான்
எழுதிய வாடைக்காற்றும் மறுபதிப்பு கண்டது. அதன் திரைப்படவடிவத்தில் தோன்றிய நடிகர்
- நடிகைகள் அந்தப்பதிப்பின் முகப்பில் இடம்பெறவில்லை.
சமகாலத்தில் மணிரத்தினம்
இயக்கத்தில் கல்கி எழுதிய பிரபல்யமான நாவல் பொன்னியின்
செல்வன் திரைப்படமாகவிருப்பதாக அறிகின்றோம். இந்த நாவலும் பல பதிப்புகளைக்கண்டு
பல்லாயிரக்கணக்கான மூத்த தலைமுறை வாசகரை வந்தடைந்தது.
இனி இக்கதையும் திரைப்படமாகும்
பட்சத்தில், கல்கியின் மூலக்கதையில் வரும் முக்கிய பாத்திரமான பூங்குழலியாக நடிகை நயன்தரா
நடிக்கவிருக்கிறாராம்!
பொன்னியின் செல்வன் நாவலை புதிய தலைமுறை வாசகர்களிடம் எடுத்துச்செல்வதற்கு
நயன்தாராவின் படத்தை அட்டையில் பதிவுசெய்வதற்கு புதிய பதிப்பாளர்கள் முயற்சி செய்தாலும்
ஆச்சரியமில்லை!
இலக்கிய விழாக்கள், நூல்
வெளியீடுகளுக்கு சினிமா நடிகர் - நடிகையரை அழைத்தால் என்ன நடக்கும்? என்பதை விபரித்து
தனது உள்ளக்குமுறலை லதா ராமகிருஷ்ணன் திண்ணை
இணையத்தளத்தில் அண்மையில் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.
நடிகர், நடிகையர் சிபாரிசுசெய்தால் குறிப்பிட்ட புத்தகங்களின் விற்பனையும்
அதிகரிக்கலாம்! அவ்வாறு நிகழ்ந்தும் இருக்கிறது!
பொன்னியின் செல்வனின்
மூலக்கதையை இனி திரை வடிவத்தில் எந்தக்கோலத்தில் பார்க்கப்போகிறோம்?
இதுபற்றி ஒரு இலக்கிய
நண்பரிடம் பிரஸ்தாபித்தேன். அதற்கு அவர், "
நீர் சொல்வதும் தப்பில்லை. அவர்கள் செய்வதும் தப்பில்லை" என்றார். நிரந்தரமாக விடைபெற்றுவிட்ட எனது அம்மாவின் நினைவு
எனக்கு வந்தது!
---0---
No comments:
Post a Comment