.
13 வயதே நிரம்பிய தமிழ்ப் பையன் லிடியன் நாதஸ்வரம் இன்று உலகில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும் ஒரு மிகப் பெரிய வெற்றியைச் சம்பாதித்தித்துக் கொடுத்திருக்கிறார்.
The World's Best என்ற அமெரிக்க நாட்டின் பல்துறை இசை வித்தக நிகழ்ச்சியில் தனி நபர் பிரிவில் தன் அசாத்திய பியானோ வாசிப்புத் திறனால் நடுவர்களையும், வந்திருந்த இசை வல்லுநர்களையும் வியப்பில் ஆழ்த்தி இறுதிச் சுற்றில் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பரிசினை வென்று சாதனை படைத்திருக்கிறார். இது உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளின் சாதனையாளர்கள் அரங்கேறும் போட்டிக் களமாகும்
லிடியன் நாதஸ்வரம் இதற்கு முந்திய பல சுற்றுகளை வெற்றிகரமாகத் தன்னுடைய இசைத் திறமையால் கையகப்படுத்தி சாம்பியன் பிரிவில் நுழைந்த போது ஹாலிவூட் பிரபலங்களோடு, இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற இசைப் புயல் ரஹ்மானின் ஆச்சரியம் கலந்த பாராட்டையும் பெற்றவர்.
லிடியன் நாதஸ்வரம் என்ற இளைய இசை மேதை இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷனின் வாரிசு, மற்றும் இவரின் சகோதரி அமிர்தவர்ஷிணியும் வாத்திய வாசிப்பில் அசாத்தியத் திறன் கொண்டவர். தன் பிள்ளைகளை இசைக்காகவே அர்ப்பணித்து அவர்களின் பள்ளி வாழ்க்கை நேரத்தையும் அதற்காகவே முழுமையாக மாற்றிக் கொண்டதன் அறுவடையாக இந்த வெற்றி விளங்குகிறது.
லிடியன் நாதஸ்வரம் தமது குருவாக 118 வயது நிரம்பிய Madras Musical Association Choir இன் இசையமைப்பாளர் அகஸ்டின் பால் ஐக் கொண்டு தன் இசைத் திறனை மேம்படுத்தினார்.
தந்தை சதீஷ் வர்ஷன் நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன இசை மேடைகளில் இசை வழங்கிச் சிறப்பித்ததோடு இவரோடு மகள் அமிர்தவர்ஷிணியும், நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலை ஒலிமாலை 2017 இல் இசை விருந்து படைத்துச் சிறப்பித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாக்கம் : கானா பிரபா
https://www.youtube.com/watch?v=lKUI1Wr3_R4
No comments:
Post a Comment