"737 மேக்ஸ் 8 ரக" விமான விநியோகத்தை நிறுத்திய போயிங்
இடைத்தேர்தலையும் சந்திக்கும் கமலின் மக்கள் நீதி மய்யம்..!
போயிங் 737 மேக்ஸ் 8 தரையிறக்கம்- இன்று 35 விமானங்களை ரத்து
போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை:ட்ரம்பின் இறுதி தீர்மானம்
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மீண்டும் தோல்வியை சந்திந்தது பிரெக்ஸிட் ஒப்பந்தம்
ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் சரண்
"737 மேக்ஸ் 8 ரக" விமான விநியோகத்தை நிறுத்திய போயிங்
15/03/2019 "737 மேக்ஸ் 8 ரக" விமானங்களை விநியோகம் செய்வதை போயிங் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ கடந்த 2017 ஆம் ஆண்டு ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக பயணிகள் விமானங்களை அறிமுகம் செய்தது.
இந்த ரக விமானம் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திலேயே உலக நாடுகளுக்கு வழங்கி வருகிறது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம், புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிர் இழந்தனர்.
அதேபோல் எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த 10 ஆம் திகதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.
இதனால் விமானம் பயன்பாட்டுக்கு வந்த குறுகிய காலத்திலேயே தொடர்ந்து 2 பெரும் விபத்துகளை சந்தித்ததால், ‘போயிங் 737 மேக்ஸ்’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது.
இதனால் சீனா, இங்கிலாந்து அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை இயக்க தடை விதித்தன.
இந்த நிலையில், 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
இடைத்தேர்தலையும் சந்திக்கும் கமலின் மக்கள் நீதி மய்யம்..!
14/03/2019 இடைத்தேர்தலையும் சந்திக்கும் கமலின் மக்கள் நீதி மய்யம்..!“லோக்சபா தேர்தலோடு நடைபெறவுள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்” என, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி முதல் மே மாதம் 19ஆம் திகதி வரை 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதனுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளன. இந்த இரண்டு தேர்தலையும் எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க, கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து தொகுதி பங்கீட்டையும் முடித்துள்ளது.
அந்த வகையில், கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் எனும் பெயரில் கட்சி தொடங்கி, தீவிரமாக அரசியல் பணியாற்றி வரும் கமல்ஹாசன், வரும் லோக்சபா தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்தார். இதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அவருடைய கட்சிக்கு சின்னமாக பேட்டரி டார்ச் லைட் கிடைத்துள்ளது. எனினும், இடைத் தேர்தல் குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல் இருந்ததால், மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலில் மட்டும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என கமல் அறிவித்துள்ளார். மேலும், இதற்கான விருப்ப மனு அளிப்பவர்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கான டிமாண்ட் டிராஃப்ட் செலுத்தி, அதனை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்றும், கட்சியின் இணையதளத்திலும் விருப்ப மனுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறோம்; லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறேன். எந்தத் தொகுதி என்பதை விரைவில் தெரிவிக்கிறேன்” என கமல் கூறிய நிலையில், தற்போது அதிரடியாக இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என தெரிவித்துள்ளதால் அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. நன்றி வீரகேசரி
போயிங் 737 மேக்ஸ் 8 தரையிறக்கம்- இன்று 35 விமானங்களை ரத்து
14/03/2019 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை தரையிறக்கிய பின்னர், இன்று 35 விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரத்து செய்ய உள்ளது.
எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர்.
இதே ரக விமானம் இந்தோனேஷியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்தன.
இந்தியாவிலும் போயிங் 737 மேக்ஸ்-8 விமானங்களை தரையிறக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) முடிவு செய்தது. அதன்படி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
அதன்பின்னர், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் நேற்று 20 விமானங்களின் சேவையை ரத்து செய்தன. இதனால் சுமார் 300 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இன்று 35 விமானங்களின் சேவையை ஸ்பைஸ்ஜெட் ரத்து செய்ய உள்ளது.
முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் பெறாமல் அவர்களுக்கு தேவையான தங்கும் வசதியை செய்துகொடுக்க வேண்டும் என்றும் ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை:ட்ரம்பின் இறுதி தீர்மானம்
14/03/2019 இந்தோனேசியாவில் நடைபெற்ற விமான விபத்துக்கும், எத்தியோப்பியா விமான விபத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செயதிகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு அமெரிக்காவும் தடை விதிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், போயிங்737 மேக்ஸ் ரக விமானங்களை கொள்வனவு செய்வதற்குமான உத்தரவையும் அந்நாட்டு விமான போக்குவரத்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
விபத்துக்குள்ளான இரு விமானங்களும் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளன. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதன் எதிரொலியாக, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த ஒவ்வொரு நாடுகளாக தடை விதித்து வருகிறது.
இந்தியா,எத்தியோப்பியா,சீனா, சிங்கப்பூர், பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்சு உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.
எத்தியோப்பியாவில் கடந்த 10 ஆம் திகதி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 189 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மீண்டும் தோல்வியை சந்திந்தது பிரெக்ஸிட் ஒப்பந்தம்
14/03/2019 ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மீண்டும் தோல்வியடைந்தது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்த இங்கிலாந்து அரசு, இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தியது.
அந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் இதற்கு ஆதரவாக வாக்களித்ததால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது என முடிவானது.
அதனை தொடர்ந்து, பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக பதவி ஏற்ற தெரசா மே முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்.
ஆனால் அது அவருக்கு அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. ஏனெனில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டபோதிலும், எந்த மாதிரியான முன்னேற்பாடுகளுடன் இது நிகழவேண்டும் என்பதில்தான் சிக்கல் உள்ளது.
‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்காக தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கான ஒப்புதலையும் பெற்றார்.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி இந்த ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது இந்த ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி அமைச்சர்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.
அதன் பின்னர் எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறலாம் என்கிற தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்தார்.
ஆனால் இங்கிலாந்து அமைச்சர்கள் அதையும் நிராகரித்தனர். அத்துடன் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்காக புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் தெரசா மேவை வலியுறுத்தினர்.
தெரசா மே அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கு தற்போது உள்ள ஒப்பந்தமே இறுதியானது என்றும், பேசுவதற்கு இடம் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்த நிலையில் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் சில சட்டப்பூர்வ மாறுதல்களை கொண்டுவந்தார். இதையடுத்து மாற்றங்களுடன் கூடிய அந்த ஒப்பந்தம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.
அப்போது இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 242 ஓட்டுகள் கிடைத்தன. எனினும் ஒப்பந்தத்தை எதிர்த்து 391 உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டனர். இதனால் 149 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த தெரசா மே, சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இங்கிலாந்து வெளியேறும் என தான் இன்னும் நம்புவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ மீது பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடக்கும். அதையும் எம்.பி.க்கள் நிராகரித்துவிட்டால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 50-ன் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதை தாமதப்படுத்தலாமா என்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தப்படும்” என கூறினார். நன்றி வீரகேசரி
3 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் சரண்
14/03/2019 சிரியாவில் 3 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒரே நாளில் சரணடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் அரசபடைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வரும் அதேவேளையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு காலூன்றி கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் களம் இறங்கியது. அதன் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்து அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டன என அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் டெயிர் எஸ் ஜோர் மாகாணத்தில் உள்ள பாகுஸ் கிராமம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதையும் அவர்களிடம் இருந்து மீட்க அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து, சிரிய இராணுவம் அங்கு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், முழுக்கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டதால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு இராணுவத்திடம் சரணடைந்து வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிரிய இராணுவ வீரர்களிடம் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment