கழுவேற்ற வேண்டும் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


            பொள்ளாச்சி என்றவுடன் வந்துநிற்பார் மகாலிங்கம்
               வள்ளலாய் அவரிருந்து வாரியே வழங்கிநின்றார் 
           தெள்ளுதமிழ் நூல்படைப்பார் சிறந்தபக்தி நூல்படைப்பார் 
image1.JPG                 நல்லபடி வாழ்வதற்கு அள்ளியே அவர்கொடுத்தார் 

           மகாலிங்கம் எனும்பெரியார் வாழ்ந்ததனால் பொள்ளாச்சி
                மக்களிடம் பேரூராய் புகழ்பெற்று விளங்கியதே  
           இனிமைநிறை இளநீரை கொடுத்துநின்ற காரணத்தால்  
                எல்லோரின்  மனத்தினிலும் நின்றதுவே பொள்ளாச்சி 

           பொள்ளாச்சி எனும்பெயரை இப்போது  உச்சரிக்க
                 பொறுக்காத வெறுப்புத்தான் மேலோங்கி வருகிறது 
           நல்லவர்கள் வாழ்ந்தவிடம் நலனழிந்து நிற்பதனால்
                 நாடெல்லாம் பொள்ளாச்சி பேச்சுத்தான் எழுகிறது 

           செல்வாக்கு மிக்கவரும் செல்வமுடன் இருப்பாரும் 
                 நல்வழியை விட்டுவிட்டு தம்வழியில் செல்லுகிறார்
          பொல்லாத செயலையவர் பொறுப்பென்றே மனதிருத்தி
                 தொல்லையினை கொடுப்பதையே சொர்க்கமாய் எண்ணுகிறார்

          வாழவெண்ணும் மங்கையரை மயக்கமொழி பேசியவர்
               வாழ்விழக்கச் செய்துநிற்கும் வலைவிரித்தே நிற்கின்றார் 
          ஏழ்மைநிலை தனையவரும் சாதகமாய் ஆக்கிநின்று 
                இறுமாப்பு கொண்டபடி இன்பம் கொண்டாடுகிறார் 

          அரசியலில் உள்ளாரும் அதற்குத் துணையாகின்றார் 
                அதிகார வர்க்கமுமே அவர்பக்கம் சாய்கின்றார்
         ஆனாலும் மக்களெலாம் ஆர்ப்பரித்தே எழுந்ததனால்
                  அதிகாரம் இப்போது அறமுரைக்க வந்திருக்கு 

         பெண்கள்தான் நாட்டினது கண்ணென்று சொல்லிவிட்டு
                பெண்கள்தமை குறிவைத்து வேட்டையாடி நிற்கின்றார்
         காந்திதேசம் இப்போது கண்ணீரில் மிதக்கிறது 
                 சாந்தியினை கொடுப்பதற்கு  காந்திமகான் வருவாரா

          கற்பழித்து சீரழிக்கும் கசடர்தமை கழுவேற்றும் 
                  கடுஞ்சட்டம் வந்தால்த்தான் கசடர்தமை அழித்திடலாம்
          நற்புத்தி இழப்பாரை நடுவீதி தனில்வைத்து
                   மக்களெலாம் தண்டித்தால் மாகுற்றம் மறையுமன்றோ ! 
       
       
              
                

               
No comments: