தமிழ் சினிமா - பூமராங் திரைவிமர்சனம்


இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், RJ பாலாஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ளது பூமராங். படம் நதிநீர் இணைப்பை வலியுறுத்தும் கதை என ட்ரைலர் மற்றும் படக்குழு வெளியிட்ட சில நிமிட காட்சிகளின் மூலமே புரிந்தது. மொத்த படத்தையும் பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் எப்படி? வாருங்கள் பாப்போம்.
கதை:
காட்டுத்தீயில் சிக்கி முகம் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் சிவா. அவரது முகத்தையே கண்ணாடியில் பார்க்க முடியாமல் உடைந்து போகிறார் அவர். அதன்பின் முகம் மாற்று அறுவைசிகிச்சை செய்யலாம் என மருத்துவர் கூற, அதற்கு ஒப்புக்கொண்டு மூளை சாவடைந்த நிலையில் இருக்கும் சக்தி (அதர்வா)வின் முகத்தை எடுத்து சிவாவிற்கு வைக்கின்றனர். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்புகிறார் அவர்.
பின்னர் அதர்வாவின் அழகை கண்டு காதலில் விழுகிறார் மேகா ஆகாஷ். எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்க ஒரு நாள் அதர்வாவை கொலை செய்ய முயற்சிகள் நடைபெறுகிறது. தன்னுடைய புதிய முகம் தான் இந்த கொலை முயற்சிகளுக்கு காரணம் என அறிந்து, அந்த முகத்திற்கு சொந்தக்காரரான அதர்வா உண்மையில் யார் என அறிய தேடி செல்கிறார்.
பின்னர் சக்தியின் பிளாஷ்பேக் கதை ஓடுகிறது. ஒரு பிரபல ஐடி கம்பெனியில் பணியாற்றும் சக்தி (அதர்வா), RJ பாலாஜி, இந்துஜா உள்ளிட்டவர்கள் கூண்டோடு வேலையில் இருந்து நீக்குகிறது நிறுவனம். பின்னர் என்ன செய்வது என அறியாது நின்றிருக்கும் அவர்கள் அதர்வாவின் குடும்ப நிலத்தில் விவசாயம் செய்யலாம் என முடிவெடுக்கிறார்கள்.
ஆனால் அந்த ஊரில் சொட்டு தண்ணீர் கூட இல்லை. ஊருக்கு தண்ணீர் கொண்டுவர 20 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஒரு ஆற்றில் இருந்து இந்த ஊர் அருகில் இருக்கும் ஆற்றை இணைத்தால் விடிவு பிறக்கும் என முடிவெடுத்து அதற்காக போராடுகிறார்கள்.
நதிகளை இணைக்கவேண்டும் என்ற அவர்களது ஆசை நிறைவேறியதா? அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் அனைத்தையும் காட்டுகிறது மீதி படம்.
இதையெல்லாம் அறிந்து தற்போது அதர்வா முகத்துடன் இருக்கும் சிவா என்ன செய்தார் என்பது தான் படத்தின் கிளைமக்ஸ்.
படத்தை பற்றிய அலசல்:
நதிநீர் இணைத்தால் வறண்ட இடங்களையும் விவசாயம் செழிக்கும் இடங்களாக மாற்றலாம் என்ற கருத்து நீண்டகாலமாக கூறப்பட்டு வரும் ஒன்று, ஆனால் அதற்காக அரசாங்கமே பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்ததில்லை. இந்த திட்டங்களை எல்லாம் நடக்காமல் இருக்க காரணமாக இருக்கும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் சாட்டை அடி கொடுக்கும் விதத்தில் உள்ளது பூமராங்.
அதர்வா இந்த ரோலுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். செம அழகாக இருக்கும் மேகா ஆகாஷுக்கு ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது (வழக்கமாக அனைத்து படங்களை போல).
நடிகர் ஆர்ஜே பாலாஜி இதுநாள் வரை காமெடி செய்து பார்த்த நமக்கு அவருக்கு குணச்சித்திர வேடத்திலும் நடிக்க வரும் என காட்டிவிட்டது பூமராங்.
சுஹாசினி, காமெடியன் சதிஷ், இந்துஜா தங்கள் பங்களிப்பை கச்சிதமாக கொடுத்துள்ளனர்.
க்ளாப்ஸ்:
படம் நம் மனதில் பதிவு செய்த கருத்து தான் படத்தின் பெரிய ப்ளஸ். கத்தி படத்திற்கு பிறகு விவசாயிகள் பிரச்சனைகள் பற்றி நம்மை சலிப்படைய வைக்காமல் படம் முழுவதும் பேசியுள்ள படம் இது. படம் பார்க்கும்போது பல இடங்களில் கத்தி படம் நினைவிற்கு வந்து செல்வதையும் தவிர்க்க முடியவில்லை.
நிஜ வாழ்க்கையில் நம் நாட்டில் நடந்த பல விஷயங்களை பற்றி ஆங்காங்கே வரும் காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு பெரிய கிளாப்.
சில பாடல்களே இருந்தாலும் அது எதுவும் வேகத்தடையாக இல்லை.
பல்ப்ஸ்:
இருப்பினும் படத்தை பற்றி குறையே சொல்ல முடியாது என சொல்லிவிடமுடியாது. பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள்.
ஆபரேஷன் செய்து தையல் போட்டு தழும்பு உள்ள இடத்தில் முடி வளர்வது சாத்தியம் இல்லாத ஒன்று என அனைவர்க்கும் தெரியும். ஆனால் முகத்தை மாற்றி அறுவை சிகிச்சை செய்துகொண்டு சில மாதங்களில் அந்த தழும்புகளை மறைக்க தாடி வளர்த்துகொள்வார் அதர்வா. வாட் எ மெடிக்கல் மிராக்கில் மொமெண்ட் தான் இது.
மண்சரிவு என கூறி மணலையா காட்டுவது? அதுவும் அந்த சீனின் கிராபிக்ஸ் காட்சிகள் படுமோசம்.
இடைவேளைக்கு முன்னர் தான் படமே விறுவிறுப்பு பெறுகிறது. அது வரை படம் சற்றுபொறுமையை சோதிக்கும். சதிஷின் காமெடி அந்த முதல் பாதியில் சற்று ஆறுதல்.
மொத்தத்தில், பூமராங் - எதிர்பார்ப்பு இல்லாமல் ஒருமுறை பார்க்கலாம்.
நன்றி CineUlagam.


















No comments: