இலங்கைச் செய்திகள்


அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கமறியல்

ஓமந்தை ரயில்க்கடவையின் வீதித் தடையால் மக்கள் அவதி 

கிளிநொச்சி பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பகிஸ்கரிப்பில் 

மன்னாரிலும் அதிபர், ஆசிரியர்கள்   சுகயீன விடுமுறை போராட்டம்

மஹிந்த உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட  மனு வாபஸ்

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான வழக்கு மீள் விசாரணை!

ஆரம்பமானது யாழில் மாபெரும் பேரணி: நீதி கோரி மக்கள் முழக்கம்

முறைப்பாடு செய்ய சென்றவர்களை திருப்பி அனுப்பிய யாழ் பொலிஸார்


அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கமறியல்


14/03/2019 பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட  அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 
அவ் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தினை மேற்கொண்டனர். இதன் போது அனைத்து  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கைதுசெய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைத்து  பல்கலைக்கழக  ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மகில் தெகிதெனியவை இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்  உத்தரவு பிரப்பித்துள்ளது.  நன்றி வீரகேசரி 










ஓமந்தை ரயில்க்கடவையின் வீதித் தடையால் மக்கள் அவதி 

13/03/2019 வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதி ரயில் கடவைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றி அவ்வீதியூடான போக்குவரத்தினை அனுமதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த 5 ஆம் திகதி முதல் வவுனியா ரயில்வே திணைக்களம் தடை செய்துள்ளது. 
இதையடுத்து அப்பகுதியிலுள்ள மக்கள் ரயிலை வழிமறித்து போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளத்திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திருமதி அஞ்சலா கோகிலகுமாருடன் தொடர்புகொண்ட ஓமந்தை பொலிசார் அப்பகுதி மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை 6மணியளவில் அம்பாள் வீதி ரயில்க் கடவைக்கு அருகில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர், ஆலய நிர்வாகத்தினர் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கடந்த மாதம் 25ஆம் திகதி இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயப்பங்களிப்புடன் ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதிக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில் ரயில்வே திணைக்களத்தின் அனுமதி பெற்றிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு அப்பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு ரயில்வே திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டது இதன் பின்னர் அவ்வீதி தண்டவாளம் இடப்பட்டு மக்கள் போக்குவரத்து மேற்கொள்ளமுடியாமல் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 











கிளிநொச்சி பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பகிஸ்கரிப்பில் 

13/03/2019 நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஸ்கரிப்பில் கிளிநொச்சி பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
குறித்த போராட்டத்திற்கு ஆசிரிய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் கிளிநாச்சியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். 
பாடசாலைகளிற்கு மாணவர்கள் வழமைபோல் வருகை தந்திருந்த நிலையில் குறித்த போராட்டம் சுமார் அரை மணிநேரம் முன்னெடுக்கப்பட்டது. 
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் சார்பில் கருத்து தெரிவிக்கையில்,
எமது பிரதேசத்தில் தொடர்ச்சியாக வந்த கர்த்தால், பாடசாலை விடுமுறை நாட்களை கருத்தில்கொண்டும், மணவர்களின் கல்வி, பரீட்சைகளை கருத்தில்கொண்டும் வடக்கு கிழக்கு பகுதிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களான நாம் போராட்டத்தை அரை மணிநேரமாக மட்டுப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். 
இன்று பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுக்கம் மிகவும் மோசமாக உள்ளது. ஆசிரியர்களிற்கு வழங்கப்படும் கடமைகளில்கு மேலதிகமாக எழுத்து வேலைகளு அதிகமாக வழங்கப்படுகின்றது. வெளிநாடுகளை போல் அல்லாது எமது கல்வி கற்பிக்கும் செயற்பாடானது மிகவும் மோசமாக உள்ளது. 
வெளிநாடுகளில் ஆசிரிய துறையை தேடி பலரும் விரும்பி செல்கின்றனர். இலங்கையில் ஆசிரியர் துறையிலிருந்து பலரும் விலகி வேறு வேலைகளை நோக்கி செல்கின்றனர். இவ்வாறன நிலை மாற்றப்பட்டு சீரான கல்வி செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். நன்றி வீரகேசரி 













மன்னாரிலும் அதிபர், ஆசிரியர்கள்   சுகயீன விடுமுறை போராட்டம்

13/03/2019 பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் இலங்கை முழுவதும் ஆசிரியர்கள் கருப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று காலை  சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று காலை 8 மணி முதல் 8.30 மணிவரை தமது பாடசாலைகளுக்கு முன்பாக கருப்பு பட்டி அணிந்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும், 2019 ஆம் ஆண்டு அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதீட்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தல் வேண்டும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழுத்தங்கள்  உடனடியாக நிறுத்த வேண்டும்,ஆசிரியர்களின் மான்பினை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த போரட்டத்தின் பின் பாடசாலையின் செயற்பாடுகள் வழமை போல் இடம் பெற்றமைகுறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










மஹிந்த உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட  மனு வாபஸ்

12/03/2019 மஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 பேருக்கு எதிராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த கோவொறொன்டோ நீதிப் பேராணை மனு, முறைப்பாட்டாளர்களால் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. 
இது குறித்த மனு இன்று மேன்முறையீட்டு மன்றின் நீதிபதி அர்ஜுன் ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே மனுதாரர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் இம்மனு வாபஸ் பெற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 
அதனை ஏற்றே நீதிமன்றம் அம்மனுவை வாபஸ் பெற அனுமதியளித்தது. 
கடந்த 2018 ஒக்டோபர் மாதம், ஜனாதிபதியினால் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்ட தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் 48 பேர் அடங்களான அமைச்சரவை உறுப்பினர்கள், அந்தப் பதவிகளை வகிப்பதற்கு சட்டபூர்வ உரிமை இல்லை என அறிவித்து அவர்களை பதவியிலிருந்து நீக்குமாறு கோரியே கோவொறொன்டோ நீதிப் பேராணை மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான வழக்கு மீள் விசாரணை!

16/03/2019 லண்டன் இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக் எதிரான வழக்கை எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லண்டன் நீதிமன்ற ஊழியர்கள் இவ்வழக்கை முன்னிலைப்படுத்துவதில் ' தவறு இழைத்துள்ளதாக காணப்பட்டதன் அடிப்படையிலேயே பிரதமர் மெஜிஸ்ட்ரேட் எம்மா ஆர்புத்நொட் மீள் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ இலங்கை தமிழர்கள் சுதந்திர தினத்தன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் ' கழுத்து அறுப்பேன் ' என சைகை மூலம் அச்சுறுத்திய விவகாரத்தில் ஜனவரி மாதம் குற்றவாளியாக லண்டன் நீதிமன்றத்தால் இனங்காணப்பட்டார். 
பிரித்தானிய பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் துன்புறுத்தல் எனும் அடிப்படையிலேயே இலங்கை இராணுவ வீரர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ குற்றவாளியாக இனங்காணப்பட்டு லண்டன் நீதிமன்றத்தால் தீர்பளிக்கப்பட்டது. 
இத்தீர்ப்பையே கேள்விக்குறியாக்கி தற்போது மீள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
மே மாதம் 7 ஆம் திகதி செவ்வாய்கிழமை இவ்வழக்கு மீள் விசாரணைக்கு வரும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.    நன்றி வீரகேசரி 










ஆரம்பமானது யாழில் மாபெரும் பேரணி: நீதி கோரி மக்கள் முழக்கம்

16/03/2019  ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும், இலங்கை விவகாரத்தை ஐ.நா வின் பாதுகாப்பு சபையிடம் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது. 
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ். பல்பலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் பேரணி இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகியது. 
மதத் தலைவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த பெருமளவான மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது மக்கள் எனப் பெருந்திரளானோர் இந்தப் ரேணியில் கலந்து கொண்டிருந்தனர்.
இவர்களோடு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செ. கஜேந்திரன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
பால், வயது வேறுபாடின்றி கொழுத்தும் வெயிலிலும் பெருமளவானோர் உணர்ச்சி பொங்கக் கலந்து கொண்டுள்ளனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஈழத்தமிழருக்கு நீதி வேண்டும் எனச் சாரப்பட்ட கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் தாங்கிச் சென்றனர்.
நன்றி வீரகேசரி 











முறைப்பாடு செய்ய சென்றவர்களை திருப்பி அனுப்பிய யாழ் பொலிஸார்

16/03/2019 வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல இலட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு வழங்க  பாதிக்கப்பட்டவர்கள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றிருந்தனர்.
எனினும் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார், பாதிக்கப்பட்டவர்களை நாளை மு.ப. 10 மணிக்கு முறைப்பாட்டை வழங்க வருமாறு கூறித் திருப்பி அனுப்பினர்.
யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பயண முகவர் நிறுவனத்துக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்து 35 பேருக்கு மேற்பட்டவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றனர்.
அந்த நிறுவனத்தில் வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்கு சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு பணம் செலுத்தி முற்பதிவு செய்துள்ளனர். எனினும் அந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டது போலி விமான பயணச் சிட்டை என அவர்கள் பின்னரே அறிந்துள்ளனர்.
அதுதொடர்பில் அந்த நிறுவனத்தை நாடிய போது, அதன் முகாமையாளர் இல்லை என அங்கு பணியாற்றிய பெண் பணியாளர் ஒருவர் தெரிவித்து வந்துள்ளார். முகாமையாளர் வந்ததால்தான் பணத்தை மீள வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று போலி விமானச் சிட்டை எனத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு வழங்க இன்றைய தினம் சென்றனர். அவர்களுடன் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பங்காளர் எனத் தெரிவித்த ஒருவரும் தனது சட்டத்தரணியுடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்றார்.
பாதிக்கப்பட்டவர்களால் பயண முகவர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் பணியாளரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தார். அத்துடன், அந்த நிறுவனத்தின் உதவி முகாமையாளர் எனத் தெரிவித்த ஒருவரும் வருகை தந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பாதிக்கப்பட்டவர்களை நாளை மு.ப. 10 மணிக்கி முறைப்பாடு வழங்க வருமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.  நன்றி வீரகேசரி 




No comments: