முருகபூபதியின் “சொல்ல வேண்டிய கதைகள் “ வாழ்வியல் அனுபவங்களைப் பதிவுசெய்யும் கதைகள் ஞா.டிலோசினி, கிழக்குப் பல்கலைக்கழகம் -இலங்கை


அவுஸ்திரேலியப் புலம்பெயர் எழுத்தாளர்களுள் ஒருவரான லெ.முருகபூபதி அவர்கள் இலங்கையின் நீர்கொழும்பைச் சேர்ந்தவர். படைப்பாளியாகவும் பத்திரிகையாளராகவும் இயங்கி வரும் முருகபூபதி,  பத்திரகையில் செய்தி மற்றும் அறிக்கை எழுதுவது நேர்காணல்களைப் பதிவு செய்வது முதலான பணிகளில் ஈடுபடுபவர்.
 இலக்கியப் படைப்பிலும் முருகபூபதியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 1975இல் இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி ‘சுமையின் பங்காளிகள்’ வெளிவந்தது. நாவல், சிறுகதை தொகுப்புக்கள் , புனைவுசாரா இலக்கியம் என்ற வகையில் இவரது பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் புனைவுசாரா இலக்கியம் என்ற வகையில் இவரது சொல்ல வேண்டி கதைகள் தொகுப்பு’ காணப்படுகிறது.
ஜீவநதியின் 82வது வெளியீடாக முருகபூபதியின் சொல்ல வேண்டிய கதைகள் (2017) பத்தி கட்டுரைகளின் தொகுப்பு வெளிவந்தது. இப்பத்தி கட்டுரைகள் 2013 தைமாத ஜீவநதியில் வெளிவரத் தொடங்கி, ஜீவநதியின் 20 இதழ்களில் தொடராக வெளியானவையாகும்.
 முருகபூபதி தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களை, தன்வாழ்வியலுடன் தொடர்புடைய நிகழ்வுகளை,  சமூகத்திற்கு நன்மை பயக்கும் விடயங்களை சுவாரசியமான மொழியில் மனதில் பதிந்து நிற்கும் வகையில் இப்பத்தி கட்டுரைகளில் எழுதியுள்ளார்.
பொலிஸ்காரன் மகள், குலதெய்வம், யாதும் ஊரே, நாற்சார் வீடு, ஊருக்கு புதுசு, மனைவி இருக்கிறாவா…?, திசைகள், காவியமாகும் கல்லறைகள், எங்கள் நாட்டு தேர்தல், தனிமையிலே இனிமை, படித்தவற்றை என்ன செய்வது?, வீட்டுக்குள் சிறை, நடைப் பயிற்சி, கனவுகள் ஆயிரம், நம்பிக்கை, ஸ்கைப்பில் பிள்ளை பராமரிப்பு, துண்டு கொடுக்கும் துன்பியல், பேனைகளின் மகத்மியம், இயற்கையுடன் இணைதல், இலக்கியத்தில் கூட்டணி ஆகிய 20 பத்திக் கட்டுரைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.
இத்தொகுப்பில் இடம்பெறும் ‘பொலிஸ்காரன் மகள்’ அவரது தாயுடனான நினைவுகளை ஞாபகப் படுத்துகின்றன. முருகபூபதியின் அம்மாவின்  வீட்டு பெயர் பொலிஸ்காரன் மகள் என்பதாகும். அம்மாவின் தந்தை பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் பொலிஸில் இருந்தவர் என்பதால் இவ்வாறு அழைத்தனர். தனது தாயை மையப்படுத்தி எழுதியமையால் அக்கட்டுரைக்கு தாயின் வீட்டு பெயராகிய பொலிஸ்காரன் மகள் எனத் தலைப்பிட்டுள்ளார்.
 தலைப்புக்கு பொருத்தமான சம்பவங்கள் கட்டுரையில் ஊடுருவுகின்றன. வீட்டுத் தலைமைப் பொறுப்பை முருகபூபதிக்கு கொடுத்த தாய், அவர் 1987இல் அவுஸ்ரேலியாவுக்குப் புலம் பெயர்ந்து செல்ல இருக்கும் போது குடும்ப பொறுப்புக்களை நினைவுபடுத்தி அழுதமையையும், அவுஸ்ரேலியாவுக்கு செல்ல ஆயத்தமான போது எழுந்த அயலவர்களின் விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளது.

‘1984 இல் இந்தியாவுக்குப் போனார்- புத்தகங்களுடன் வந்தார்.  1985 இல் சோவிய நாட்டுக்கு போனார் - புத்தகங்களுடன் வந்தார். 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறார் என்னதான் கொண்டு வருவார் பார்ப்போமே?’ என்ற விமர்சனங்கள் எழுந்ததையும் அதற்கு   “புத்தகங்களுடனும்  வருவேன் அம்மா “ என்று முருகபூபதி கூறிச் சென்றதையும் இக்கட்டுரை கூறுகிறது.
அவர் கூறியதற்கு அமைவாக எத்தனை தடவை இலங்கைக்கு வந்தாலும் வரும்போதெல்லாம் புத்தகங்களுடனே வருகின்றார்.  இது பாராட்டத்தக்க விடயமாகும். அவரது ‘பறவைகள்’ நாவலுக்கு சாகித்திய விருது (2003) கிடைத்த போது வரவிரும்பாத முருகபூபதி,  தனது தாய் கட்டாயமாக வரவழைத்ததனால் வந்தார். சாகித்திய விருது பெற்றுத் திரும்பிச் செல்லும் போது அம்மா  முத்தமிட்டு வழியனுப்பி விட்டதையும் கூறுகிறது.
அவுஸ்ரேலியாவில் பைபாஸ் சத்திர சிகிச்சையில் இருந்த போது அம்மா  சுகயீனம் உற்று இருந்ததையும்,  உறவுகள் அதை மறைத்ததையும் கூறி தனக்கு வந்த மாரடைப்பு, சத்திர சிகிச்சைப் பற்றி அறியாது அம்மா  மரணித்ததையும்,  அவரது அம்மாவின் மறைவு பற்றி ‘உயிர் வாழ’ (கங்கை மகள்  தொகுப்பில் இடம்பெற்ற கதை ) என்ற சிறுகதையை தினக்குரலில் எழுதியமையும் கூறியுள்ளார்.
சாகித்திய விருது பெறுவதற்கு  வர விரும்பாத தன்னை,  அம்மா  கட்டாயமாக அழைத்து பார்த்ததையும்,  மூன்று தடவை விமான நிலையம் வராத அம்மா  இறுதியாக வந்து வழியனுப்பி விட்டதையும் நினைவுபடுத்திய முருகபூபதி, ‘அந்தப் பயணம் தான் நான் அம்மாவை சந்தித்த இறுதி சந்தர்ப்பம் என்று அம்மாவின் உள்ளுணர்வு சொல்லிவிட்டதோ?’ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இப்பொழுதும் தனது அம்மாவின்  நினைவுகள் தன்னுடன் பயணித்துக் கொண்டிருப்பதையும் உணர்வுபூர்வமாக இக்கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
இன்றைய சூழலில் சிலர் தாம் வளர்ந்து உயர்ந்த நிலையை அடைந்து விட்ட பின்னர், தாம் முன்பிருந்த நிலையை மறந்து பலவாறு பேசுவர். ஆனால்,  முருகபூபதி தனது  சிறுபராயத்திலிருந்து தானும் தனது குடும்பமும் பட்ட கஷ்டங்களை ‘குலதெய்வம்’ என்ற பத்தியில் பதிவு செய்துள்ளார்.
அக்காலத்தில் முருகபூபதியின் சிறுவயதிலிருந்து அவர்களது குடும்பத்தின் மூல உழைப்பளிகளாக இருந்த ஆட்டுக்கல்லையும் குலவியையும் இன்று நவீன தொழிநுட்ப உலகில் மறக்க முடியாமல் அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி, அபிசேகம் செய்து, மலர்கள் வைத்து, தீபமேற்றி குலதெய்வமாக வழிபடுவதை கூறியுள்ளார். இக்கட்டுரை முருகபூபதி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்து வந்த கஷ்டகாலங்களை நினைவுபடுத்துகின்றன.
இத்தொகுப்பில் இடம்பெறும் இன்னொரு கட்டுரை ‘நாற்சார் வீடு’ ஜீவநதியில் வெளிவந்த குந்தவையின் நீட்சி சிறுகதையைப் படித்து, குந்தவைக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசியில் முடியாது போனதையும் பின்னர் குந்தவையின் வீட்டிற்கு நேரடியாக வாழ்த்தச் சென்ற போது நடைபெற்ற சம்பவங்களையும் இக்கட்டுரை கூறுகிறது.
எழுத்தாளர் தெணியானின் பிறந்த நாளை முன்னிட்டு ஜீவநதி நடத்திய இலக்கிய சந்திப்புக்கு தலைமை தாங்க வடமராட்சிக்கு வந்த போது,  முருகபூபதி, ஜீவநதி ஆசிரியர் பரணீதரனுடன் குந்தவையின் நாற்சார் வீட்டிற்கு சென்றமையினையும் அந்த வீடு அவரை கவர்ந்தமையினையும் அதன் அழகினையும் குறிப்பிட்டுள்ளார்.
நாற்சார் வீடு என்பது நடுவில் திறந்த வெளியிருக்க அதனை சுற்றி அறைகளும் கூடங்களும் அமைக்கப்பட்ட வீடே ஆகும். இது கேரள மாநிலத்தில் ‘நாலுகெட்டு’ என அழைக்கப்படுகிறது. ஜீவநதியில் வெளியான நீட்சி சிறுகதைதான் அவுஸ்ரேலியாவிலிருந்து உங்களைத் தேடி வரச் செய்தது எனக் கூறி வாழ்த்திய சம்பவங்களும் குந்தவையுடனான உரையாடல்களையும் குறிப்பிட்டுள்ளார். குந்தவை பற்றிக் கூறும் போது,
“அவரது ஏற்கனவே வெளியான படைப்புக்கள் குறித்த மறுவாசிப்புக்கள் இலக்கிய பரப்பில் நிகழ வேண்டும். அவரை எம்மவர்கள் அவ்வப்போது சென்று பார்த்து உரையாட வேண்டும். அவரை இலக்கிய உலகம் கனம் பண்ண வேண்டும். புதிய தலைமுறை படைப்பாளிகளுக்கு குந்தவையின் படைப்புகள் அறிமுகமாக வேண்டும்” என்கிறார்.
சுயநலம் பிடித்த இவ்வுலகில் ஏனைய படைப்பாளர்களின் தரமான படைப்புகளும் இலக்கிய உலகில் பேசப்பட வேண்டும். என்ற அவரது நல்ல எண்ணம் இங்கு வெளிப்படுவதை அவதானிக்கலாம். தமிழ் நாட்டில் கோயம்புத்தூரில் கோவைஞானி அவர்களை சந்தித்து அவர்களுக்கிடையில்’ நடைப்பெற்ற இலக்கியம், அரசியல் பற்றிய உரையாடல் இடம் பெற்றுள்ளதையும் கூறும் இக்கட்டுரை, குந்தவையின் மூதாதையர்கள் அமெரிக்காவுக்கு கப்பல் செலுத்தியவர்கள். அந்த நினைவாக குந்தவை வழங்கிய ஒரு பெரிய நங்கூரம் வல்வெட்டித் தறை ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது என்ற வரலாற்றுச் செய்தியையும் முன்வைத்துள்ளது.
‘ஊருக்குப் புதுசு’ என்ற கட்டுரை 2013இல் முருகபூபதி தனது மருமகனின் திருமணத்திற்கு இந்தியா வந்த போது, சென்னையில் குமரன் சில்க்ஸில் உடுபுடைவைகள் வாங்க உறவினர்களை அழைத்து வந்த போது நடைபெற்ற சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. அங்கு நடைபெற்ற சம்பவங்கள் ‘ஊருக்கு புதுசா?’ என்று முருகபூபதியைப் பார்த்து கேள்வி கேட்பது போல் அமைந்திருந்தன. அச்சூழலில் தான் கண்ட துயரச் சம்பவங்களையும் இக்கட்டுரையில் கூறியுள்ளார். கடைத் தெருவிலே குழந்தைகளுடன் அலைந்து திரிந்த தாய்மார்களுக்கு பண உதவி செய்த முருகபூபதிக்கு  அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உறவினர்களின் பதில்கள் அமைந்துள்ளதையும் இங்கு கூறியுள்ளார்.
“அந்த ஏழைத்தாய்மாரின் கரத்தில் இருந்த குழந்தைகள் பெரும்பாலும் வாடகைக்கு எடுக்கப்பட்ட குழந்தைகளாகத்தான் இருக்கும்” என்று ஒருவர் கூறிய பதில் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“குழந்தைகளை வெயிலில் வாட்டி வருவாய் தேடுபவர்களை இங்கு பார்க்கிறேன். ஒரு அம்மா முதலமைச்சராக இருக்கும் மாநிலத்தில் அம்மாமார் இப்படி குழந்தைகளை வெயிலில் வாட்டிக் கொண்டிருப்பது கொடுமையானது.” என்றார்.
“நீங்க ஊருக்கு புதுசு. அதனால்தான் இப்படி பேசுகிறீர்கள்” என்றார் அந்த உறவினர்.
தமிழ் அன்னைக்கு சிலை வைப்பதை விட்டு வீதியில் வெயிலில் வாடிக்கொண்டு கையேந்தும் அன்னையர்களுக்கு நல்வழிகாட்ட வேண்டும் என்ற சிந்தனையையும் இக்கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.
‘மனைவி இருக்கிறாவா…?’ என்ற இன்னுமொரு கட்டுரை ஏழைப் பிள்ளைகளுக்கு உதவி கேட்டு வந்த ஒரு யுவதிக்கும் முருகபூபதிக்கும் இடையில் ஆங்கிலத்தில் நடைபெற்ற உரையாடலைத் தமிழ்ப்படுத்திக் கூறுகின்றது.
சிறுநீர் உபாதை, அதனோடு தொடர்புடைய நீரிழிவு நோய் பற்றிய கருத்துக்களும் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. மனைவி வீட்டில் இருக்கிறாவா? என்பதை அறிந்து சிறுநீர் கழிக்க யுவதி குளியலறையில் நுழைந்தது முருகபூபதியை அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும், அவள் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் அக்கூற்று அமைந்துள்ளதையும் கூறும் இக்கட்டுரை, தமிழக இலக்கியவாதி சுமதி தங்கபாண்டியனின் ‘பாம்படம்’ என்ற கட்டுரையில் இடம்பெறும் வெயிலில் தாகம் எடுத்தாலும் தான்விற்கும் இளநீரை கூட குடிக்காமல் எச்சிலை விழுங்கியவாறு தனது உபாதையைக் கட்டுப்படுத்தும் அந்தப் பெண்ணின் வார்த்தைகளையும் எடுத்துக்கூறியுள்ளது.
  “நடுவீதியில் உபாதை வந்தால் ஒதுங்க ஏதாவது ஒரு இடம் வேண்டும். அந்த உபாதைகளை எழுத்தில் சொல்வதாயின் வார்த்தைகளும் வேண்டும்.” என அக்கட்டுரை முடிவடைகிறது. 
‘திசைகள்’ என்ற கட்டுரை பராமரிப்பு நிலையங்களில் குழந்தைகளும் வயது வந்தவர்களும் விடப்படுகின்ற நிலையை தனது பேத்தியுடன் தொடர்புபடுத்திக் கூறியுள்ளார். ஓரிடத்தில் பிறந்தாலும் பயணங்கள் வேறு வேறு திசையில்தான். எனது மகளும் என்னை ஒரு நாள் முதியோர் இல்லத்தில் விடலாம். அதே போன்று தற்போது குழந்தை பராமரிப்பு நிலையம் செல்லும் எனது பேத்தியும் தனது தாயை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் விடலாம் என்ற யதார்த்தத்தை இக்கட்டுரை வெளிப்படுத்துகின்றது.
இறந்தவர்களின் உறவுகளுக்கு அவர்களது கல்லறைகள் காவியம் என்பதை உணர்த்தும் கட்டுரை “காவியம் ஆகும் கல்லறைகள்” என்பதாகும். முருகபூபதி,  தான் பார்த்த, தரிசித்த அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளது பல தேசங்களில் காணப்படும் கல்லறைகள் பற்றிக் குறிப்பிடுகிறார். புலம்பெயர் தமிழர்கள் புலம்பெயர் தேசங்களில் கல்லறைகளை துப்பரவு செய்து, செலவுக்குப் பணம் பெறுவது பற்றியும் ஈழத்தில் உள்ள துயிலும் இல்லங்கள் பற்றியும் கூறியுள்ளார். டானியலின் தஞ்சைக் கல்லறை பற்றி இளங்கோவனின் பதிவுகளையும் கூறும் இக்கட்டுரை புகழ்பெற்ற படைப்பாளிகள், சமூக விடுதலைப் போராளிகளின் கல்லறைகளை இப்படியா பராமரிப்பது? என்று தஞ்சை நகரசபையை விமர்சிப்பதையும் காணலாம்.
வாழ்க்கை முதுமையை நோக்கிப் பயணிக்கும் போது தனிமை என்பது தவிர்க்க முடியாதது என்பதைச் சுட்டும் ‘தனிமையில் இனிமை’ என்ற கட்டுரையில் புலம்பெயர் சூழலில் காணப்படும் தனிமையின் கொடுமைகளை தனக்கு நடந்த சம்பவங்களுடன் தொடர்புபடுத்திக் கூறியுள்ளார். மேலும் தனிமையில் வாழ்ந்த எழுத்தாளர்களைப் பற்றியும் கூறியுள்ளார்.
அந்த வகையில் தருமு சிவராம், ஏ.ஜே. கனகரத்னா, அ.செ.முருகானந்தன், சி.சுதந்திரராஜா ஆகியோரின் தனிமை வாழ்வு பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ‘நடைப் பயிற்சி’ என்ற கட்டுரை ஆரம்பகாலத்தில் பல்வேறு தேவைகளை நடந்து வந்து நிறைவேற்றியதையும், பின்னர் நடைப்  பயிற்சி படிப்படியாகக் குறைந்து விட்டதையும் கூறி, இன்று தேகாரோக்கியத்துக்காகவே நடைப்பயிற்சியை மேற்கொள்வதையும் குறிப்பிட்டுள்ளார்.
‘இயற்கையுடன் இணைதல்’ என்ற கட்டுரையில் இலங்கையில் உள்ள பூங்காக்களுக்குச் சென்ற முருகபூபதிக்கு கிடைக்காத புதிய அனுபவங்கள் அவுஸ்திரேலியாவில் சில மாநிலங்களில் உள்ள பூங்காக்களுக்குச் சென்ற போது கிடைத்ததையும்  கூறுகிறது. எழுத்துலக வாழ்க்கை அனுபவங்களைத் திறந்த வெளியில் பகிர்ந்து கொள்ளும் போது எங்களை அறியாமலேயே மனமும் விசாலமடையும். புதிய தேடல்களுக்கும் வழி பிறக்கும் என்ற வகையில் இயற்கையை இலக்கியத்திற்குப் பயன்படுத்துவோம் என அக்கட்டுரை முடிவடைகிறது.
இத்தொகுப்பின் இறுதிக் கட்டுரை ‘இலக்கியத்தில் கூட்டணி’ என்பதாகும். இது இலக்கியத்தில் இடம்பெறும் கூட்டு முயற்சியை வாசகர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. படைப்பு இலக்கியங்களைச் இணைந்து எழுதியுள்ள இலக்கிய கர்த்தாக்களைப் பற்றிக் குறிப்பிட்டு, பின்னர் புலம்பெயர் சூழலில் “விழுதல் என்பது எழுகையே” என்ற நீண்ட தொடர்கதையை பல்வேறு நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் இணைந்து எழுதியுள்ளதையும், அதில் தானும் ஒருவர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இதில் முதல் அத்தியாயத்தை சுவிட்சர்லாந்தில் வதியும் கல்லாறு சதீஸ் எழுதியுள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே ‘சொல்ல வேண்டிய கதைகள்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்திக் கட்டுரைகள் பல்வேறு அனுபவங்களைப் பேசுகின்றன. முருகபூபதியின் வாழ்வில் ஈழத்திலும் புலம்பெயர் தேசத்திலும் நடைபெற்ற சம்பவங்களுடான அனுபவப் பகிர்வுகளை இக்கட்டுரைகள் முன்வைத்துள்ளன. கட்டுரையில் கூறவந்த விடயத்தைக் கூறுவதற்கு முன் பொருத்தமான விடயங்களைக் கூறி தனது அனுபவங்களைப் பேசியுள்ளார். இருபது கட்டுரைகளின் தலைப்புகளும் கட்டுரையில் கூறப்பட்ட சம்பவங்களுக்கு, கருத்துக்களுக்குப் பொருத்தமான வகையில் அமைந்துள்ளன. கட்டுரையில் கூறவந்த விடயம் எல்லோர் மனதிலும் தெளிவாகப் பதியும்படி எளிய நடையில் எழுதியுள்ளார். இத்தொகுப்பில் உள்ள பத்திக் கட்டுரைகளைக் கொண்டு புகலிட எழுத்தாளர்களது தாயக உணர்வுகளையும், ஏக்கங்களையும், புகலிட வாழ்வியல் சிக்கல்களையும், அனுபவங்களையும் அறியக் கூடியதாக உள்ளது.
( மட்டக்களப்பு அரங்கம் இதழும்  “கா “ இலக்கியவட்டமும் இணைந்து நடத்திய இலக்கியச்சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட  நயப்புரை)

-->








No comments: