‘சொல்ல வேண்டிய கதைகள்’ முருகபூபதி ஐயா அவர்கள்
தனது வாழ்வின் அனுபவங்கள் வாயிலாக நமக்கு சொல்ல நினைக்கும் சில பல நிகழ்வுகளின் தொகுப்பு
எனலாம். அந்நிகழ்வுகளினை தனக்கே உரித்தான நகைச்சுவை மொழிநடையில் புனைவு சாரா இலக்கியமாக
பத்திக் கட்டுரைகளாக பதிவு செய்துள்ளார்.

இந்நூல் தாங்கி வரும் இருபது பத்திக்கட்டுரைகளும்
இருபது வேறுபட்ட விடயங்கள் பற்றி பேசுகின்றது. நாம் எமது கண்களால் கண்டதும் காணததுமான
பல இடங்கள், பாதைகள், நபர்களிடம் நம்மை அழைத்துச் செல்கிறது. முதலாவது கட்டுரை முத்தாய்ப்பான
கட்டுரை. நம் ஒவ்வொருவரதும் வாழ்வின் முதல் ஆசானும் கடைசி நம்பிக்கையுமான அம்மா பற்றி
பேசுகிறது. என்றுமே தன்னை வழி அனுப்ப விமானநிலையம் வரை வராத தாயார் தனது மறைவுக்கு
முன் தன்னோடு விமான நிலையம் வரக் காரணம் என்ன? இனி மகனை காணும் வாய்ப்பு இல்லை என்ற
உள்ளுணர்வா? என்ற கேள்வியோடு கட்டுரை முடிகிறது. இழப்பின் வலியையும் இலக்கியமாக்கித்
தர இலக்கியவாதிகளாலேயே முடியும்.
அடுத்து ‘குலதெய்வம்’
எனக்கும் முருகபூபதி ஐயா அவர்களுக்கும் ஒரே குலதெய்வம்தான். இதேதடா புதுக்கதை என நீங்கள்
நினைக்கலாம். உண்மைதான் நாங்கள் நடந்து வந்த பாதையில் எங்கள் கஷ்டங்கள் அகல அருள் பாலித்த
அன்னபூரணி அவள். அவள்தான் எங்கள் வீட்டு ஆட்டுக்கல். ஆட்டுக்கல் எப்படி குலதெய்வம்
ஆனது என்பதனை புத்தகத்தை வாசிக்கும் போது நீங்கள் காணலாம். அக்கட்டுரையை வாசிக்கும்
ஒவ்வொரு வாசகருக்கும் தனது வாழ்வின் மிக முக்கியமான நபர் அல்லது பொருள் பற்றிய உணர்வும் நினைவும் வருவது
திண்ணம்.

இதே புத்தகத்திலுள்ள ‘இலக்கியக் கூட்டணி’ ‘இயற்கையுடன் இணைதல்’ என்பன இலக்கிய உலகில் நடந்து
வரும் மாற்றங்களும் அதன் போக்குகளும் பற்றி பதிவு செய்கிறது. ‘பேனைகளின் மகத்மியம்’
காலத்தினால் ஏற்படும் நிலைமாற்றங்கள் வழி அருகி வரும் எழுது கருவிகளின் நிலையினையும்
அவ்விடத்தை பிடித்துள்ள கணினி போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் பற்றியும் பேசுகிறது. ‘ஸ்கைப்பில் பிள்ளை பராமரிப்பு’ கட்டுரையும்
மேற்கண்ட விடயத்தை வேறு கோணத்தில் ஆராய்கின்றதெனலாம்.

‘எங்களை இங்கு தொடர்ந்து
இருக்க விடுவார்களா?’ எனும் ஒரு குழந்தையின் கேள்வியின் வாயிலாக ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும்
அந்நிய நாட்டில் எதிர்கொள்ளும் இருப்புக்கான கேள்வியினை ‘கனவுகள்
ஆயிரம்’ கட்டுரை பேசுகிறது. அதே கட்டுரை இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்திய வம்சாவளியினரை
ஏனைய இலங்கையர் ‘கள்ளத்தோணி’ என அழைப்பதையும்,
அந்நிய தேசத்திற்கு படகுகள் வழி வந்தவர்களை அந்நாட்டவர்களும் ஊடகங்களும் நாகரீகமாக
Boat People என்று அழைப்பதையும் குறிப்பிடுகிறார். அதே போல
‘எங்கள் நாட்டில் தேர்தல்’ எனும் கட்டுரை வழியாகவும், ஆசியர்களின் தேர்தல் கலாசாரத்திற்கும்
அவுஸ்திரேலியர்களின் தேர்தல் கலாசாரத்திற்கும் இடையில் உள்ள மலைக்கும் மடுவுக்குமான
இடைவெளி பற்றி பேசுகிறது. நாகரீகத்தில் மூத்தவர் நாம் தமிழர் எனும் கூற்று சரிதானா?
என நம்மையே கேள்வி கேட்கிறது.
‘யாதும் ஊரே’ கதையில் ஓரிடத்தில் மனைவி பற்றி குறிப்பிடும்
போது ‘முதலில் அத்தான் என்றாள். சிறிது காலத்தில் அப்பா என்றாள். இப்போது மனுஷன் என்கிறாள்’
எனக்கவலைப்படுகிறார். ஆனால், எனக்கு தோன்றுவது
என்ன எனறால் மணம் முடித்ததும் முருகபூபதி ஐயா அவர்களின் அன்பை மட்டும் மனைவி அறிந்திருப்பார்
அதனால் அத்தான் என்றார். பின்பு இவருள் நிறைந்துள்ள தாய்மை உணர்வை அறிந்திருப்பார்
அதனால் அம்மாவின் ஆண்பால் எனும் அர்த்தத்தில் அப்பா என்றார். அதன்பின்பு முருகபூபதி
ஐயா அவர்களின் மனம் முழுதும் நிறைந்துள்ள மனிதத்தன்மையை அறிந்திருப்பார் அதனால் மனுஷன்
என விளிக்கிறார். ஐயாவின மனைவி எனது ஆசிரியர். அதுவும் பட்டதாரி தமிழாசிரியர். ஒரு
தமிழாசிரியர் காரண காரியம் அறியாமலா பெயர் வைத்திருப்பார்?
இப்படியாக ‘சொல்ல வேண்டிய கதைகள்’ நூல் முழுவதும் தனது வாழ்வின் அனுபவங்களை பதிந்து
தந்துள்ளார் நூலாசிரியர். சுவாரசியமான எழுத்து நடை காரணமாக ஒரே மூச்சில் நூலினை வாசித்து
விட முடிகிறது. வாசகர்களுக்கு தனது வாழ்வின் சம்பவங்களையும் தொடர்புபடுத்தி பார்க்கும்
வகையில் ஒவ்வொரு கட்டுரையும் அமைந்துள்ளமை மேலும் சிறப்பு. அக்கட்டுரைகளில் ஒன்றான
‘துண்டு கொடுக்கும் துன்பியல்’ எனும் கட்டுரை
இந்நேரத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
மேடை கிடைத்தது.
இதுதான் சந்தர்ப்பம் என்று விடாது பேசும் பேச்சாளர்களுக்கும்
குறித்த நேரத்தில் அல்லாது தாமதித்து தொடங்கும் விழாக்களில் குறித்த நேரத்திற்குள்
முடிக்க வேண்டிய தேவை காரணமாக பேச்சாளர்களுக்கு ‘நேரம் போகிறது’ என்று துண்டு
கொடுக்கும் கலாசாரம் உள்ளதாம்.
அவ்வாறு துண்டு பெறாது அளவோடு விடைபெறும் பேச்சாளராக
விடைபெற விரும்புகிறேன்.
( நீர்கொழும்பில்
அண்மையில் இடம்பெற்ற நூல் அறிமுகவிழாவில் சமர்ப்பிக்கப்பட்ட
நயப்புரை)
---0---
No comments:
Post a Comment