''செல்போனாலதான் எல்லாப் பிரச்சினையும்; தூக்கிப்போடுங்க!'' - மாணவிகளுக்கு இளையராஜா அட்வைஸ்

''செல்போனாலதான் எல்லாப் பிரச்சினையும் இங்கே நடக்குது. அதைத் தூக்கிப் போடுங்க. நிம்மதியா, நாட்டுக்கே முன்னுதாரணமா இருக்கலாம்'' என்று கல்லூரியில் நடந்த விழாவில் இளையராஜா தெரிவிக்க, மாணவிகள் கரவொலி எழுப்பினர்.
சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75 விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதையடுத்து, பல பாடல்களைப் பாடினார் இளையராஜா. இடையிடையே மாணவிகள் பல கேள்விகளைக் கேட்டனர். அவற்றுக்குப் பதிலளித்தார்.இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவிகள் நாட்டுப்புற பாடல்களைப் பாடியும் பறையடித்தும் வரவேற்பு அளித்தார்கள்.
அப்போது மாணவி ஒருவர், ''மாணவ மாணவிகளுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன ஐயா?'' என்று கேட்டார்.
உடனே இளையராஜா, ''அட்வைஸ் சொல்றது முக்கியமில்லை. அந்த அட்வைஸை ஏத்துக்கிட்டு அதன்படி நடக்கணும். அதான் முக்கியம். நீங்க எல்லாரும் அந்த அட்வைஸை ஏத்துக்கிட்டு செயல்படுவீங்களான்னு எனக்குத் தெரியலை. அப்புறம் நான் ஏன் அட்வைஸ் சொல்லணும்?'' என்றார் இளையராஜா.
உடனே மாணவிகள் பலரும் ''சொல்லுங்க ஐயா, கேக்கறோம்'' என்றனர்.
அதைக் கேட்ட இளையராஜா, ''உங்க செல்போனை தூக்கிப்போட்ருங்க. இங்கே செல்போனாலதான் பல நிகழ்வுகள், பிரச்சினைகள் வந்துக்கிட்டிருக்கு. செல்போனை மட்டும் தூக்கிப்போட்டுட்டீங்கன்னா, உலகத்துக்கே நீங்கதான் ரோல் மாடல். 'பாருங்கப்பா... தமிழ்நாட்ல மாணவர்கள், இளைஞர்களெல்லாம் செல்போனைப் பயன்படுத்தறதே இல்லியாம்'னு பெருமையாச் சொல்லுவாங்க'' என்றார்.
அதைக் கேட்ட மாணவிகள், ''ஐயா, உங்க பாடல்களை அதுலதானே கேக்கறோம்'' என்றனர். அதைக் கேட்டுச் சிரித்த இளையராஜா, ''பாட்டைக் கேக்கணும். அவ்ளோதானே. அதுக்கு நிறைய வசதிகள் வந்திருச்சு. நிறைய உபகரணங்கள் இருக்கே'' என்றார்.   

No comments: