இலங்கைச் செய்திகள்


வவுனியாவில் இந்து ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள புத்த விகாரை

யாழ். மாநகர சபை முதல்வருக்கு கொலை மிரட்டல்

வடக்கு கிழக்கில்  சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள் RTI மூலம் அம்பலம்!

இராணுவத்தால் வழிபடப்பட்ட புத்தர் சிலை உள்ள காணியை கோரும் பௌத்த பிக்கு

பெலியத்தை - யாழ்ப்பாண ரயில் சேவை!



வவுனியாவில் இந்து ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள புத்த விகாரை

21/03/2019 பேயாடி கூழாங்குளத்தில் இந்து ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள புத்த விகாரையின் காணியை பௌத்த மதகுரு தமக்கு கோரியுள்ள நிலையில் அது தொடர்பாக பேயாடிகூழாங்குளம் மக்கள் நேற்று மாலை அங்குள்ள முனியப்பர் ஆலயத்தில் கலந்துரையாடியிருந்தனர்.
1995 ஆம் ஆண்டு அப்பகுதி இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டது.  இதன் பின் இராணுவத்தினர் தாம் அமைத்த இராணுவ முகாமில் இராணுவ வழிபாட்டிற்காக சீமெந்தினால் புத்தருடைய சிலை ஒன்றை நிறுவி வழிபட்டு வந்தனர். ஆனால் தற்போது அந்தப் பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட போதும் அந்தப் புத்தர் சிலை அவ்விடத்தில் இருந்து அகற்றப்படவில்லை.
இந்நிலையில், வவுனியாவில் உள்ள பிக்கு ஒருவர் குறித்த புத்தர் சிலை அமைந்துள்ள காணியை ஒப்படைக்கும் படி மாவட்ட செயலகத்தை கோரியுள்ளார். ஆனால், இவ்விடயம் தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்கப்படும் என மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.  
இக் கலந்துரையாடலில் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதுக்குளம் வட்டார உறுப்பினர் ப.சத்தியநாதன் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.  நன்றி வீரகேசரி 









யாழ். மாநகர சபை முதல்வருக்கு கொலை மிரட்டல்

21/03/2019 யாழ்ப்பாணம், மாநகர சபை முதல்வருக்கு தொலைபேசி ஊடாகவும், கடிதம் ஊடாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
யாழில். நடைபெற்ற கம்பன் விழாவுக்கு செல்லக் கூடாது எனவும் , மீறி சென்றால் கொலை செய்யப்படுவீர் என எச்சரித்து , அரசியல்வாதி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவருடன் மோத வேண்டாம் எனவும் எச்சரித்து கடந்த 15 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
அதேவேளை முதல்வரின் மனைவியின் தொலைபேசி இலக்கத்திற்கு புதைகுழி ஒன்றின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டு அதற்கு தயார் செய்யுமாறு தகவல் அனுப்பட்டுள்ளது. 
குறித்த கடிதம் தொடர்பிலும் தொலைபேசி ஊடான அச்சுறுத்தல் தொடர்பிலும், வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு முதல்வர் கொண்டு சென்றார். அவரின் ஆலோசனையின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 
அதேவேளை , யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் அனுமதியின்றி கேபிள் கம்பங்களை கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்களை வழங்கும் நிறுவனம் நாட்டி இருந்தன. அவற்றை மாநகர சபை ஊழியர்கள் மூலம் நாம் அகற்றி இருந்தோம். அது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அந்த கம்பங்களை அகற்றியமையால் அந்த நிறுவனத்தார் மாத்திரமே தனக்கு எதிரிகளாக உள்ளனர் என விசாரணைகளின் போது முதல்வர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










வடக்கு கிழக்கில்  சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள் RTI மூலம் அம்பலம்!

20/03/2019 வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமான புல்மோட்டையில் தென்னமரவாடிக்கு அண்மையாகவுள்ள பகுதியில் இரண்டு புதிய சிங்கள குடியேற்றங்கள் சட்டவிரோதமான முறையில் உருவாக்கபட்டு வருகின்றமை (RTI) தகவல் அறியும் உரிமைசட்டம் மூலம் பெறப்பட்ட தகவலுக்கு அமைவாக உறுதிப்படுத்தபட்டுள்ளது .
PEARL action என்ற ஆய்வுநிறுவனம் கடந்தவாரம் புல்மோட்டையை அண்டிய பகுதியில் நடைபெற்றுவரும் சிங்கள மயமாக்கல் சம்மந்தமாக ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது .இந்த அறிக்கையில் வடக்கு கிழக்கின் எல்லையில் தமிழ் கிராமங்களை அபகரித்து மேற்கொள்ளபட்டுவரும் திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பு தொடர்பில் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
தென்னமராவடியிலிருந்து புல்மோட்டை செல்லும் வீதியில் புல்மோட்டை போககவெவ (B60) வீதியில் உள்ள  குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் வரும் இரண்டு தமிழ் கிராமங்களை ஆக்கிரமித்து  பௌத்த பிக்குகளின் ஆதரவுடனும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாப்புடனும் வீடமைப்பு அதிகாரசபையால் வீடுகள்  அமைக்கப்பட்டு  குறித்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது .
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வரும் மாலனூர்(12ஆம் கட்டை)  ,மற்றும் ஏரமடு (10ஆம் கட்டை) ஆகிய தமிழ் கிராமங்களை ஆக்கிரமித்து வீதியின் ஓரமாக பல சிங்கள குடும்பங்கள் காடுகளை வெட்டி தற்காலிக  வீடுகளை அமைத்து குடியேறியுள்ள நிலையில் அவர்களுக்கு வீடமைப்பு அதிகாரசபையால் பிரதேச செயலகத்தின் எந்தவிதமான அனுமதிகளுமின்றி வீட்டு திட்டங்களுக்கான நிதி வழங்கப்பட்டு வீடுகளை அமைக்கும் வேலைகள் நடைபெற்றுவருகின்றது .
இந்த குடியேற்றங்கள் தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்களை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது (கோரிக்கை  பதிவு இலக்கம் 069)  . அதாவது குறித்த குடியேற்றங்கள் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் இடம்பெறுகின்றதா எனவும் ,  இந்த குடியேற்றங்களுக்காக தற்போது மைக்கப்பட்டுவரும் வீடுகள் தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகத்தின் அனுமதி  பெறப்பட்டதா ? இந்த பிரதேசம் குச்சவெளி பிரதேச செயலக ஆடசி பகுதிக்குள்  வருகின்றதா எனவும் கேள்விகள் கேட்க்கப்பட்டது. 
இதற்க்கு குச்சவெளி பிரத்தேச செயலகத்தால்  பதில் வழங்கப்பட்டுள்ளது ,
அதாவது குறித்த பிரதேசத்தில் குறித்த நபர்களால் அத்துமீறல் மேற்கொள்ளப்பட்டே குடியேறினர் எனவும் ,குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் அத்துமீறி ஆட்சி செய்ததன் காரணமாக வெளியேற்றல் கட்டளை  பிறப்பிக்கப்பட்டதாகவும்  காணி பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதிகள் எவையுமின்றி வீடமைப்பு அதிகாரசபையால் வீடுகள் அமைக்கப்பட்டுவருவதாகவும் குறித்த பிரதேசம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குள் வருவதனால்   எமது பிரதேச செயலாகத்தாலேயே  நிர்வகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அறியும் உரிமைசட்டம்  மூலம் பெறப்பட்ட தகவலுக்கு அமைவாக இங்கே அத்துமீறல் மேற்கொள்ளப்பட்டு குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுவருவது அம்பலத்துக்கு வந்துள்ளது . இந்த குடியேற்றங்களை அண்மையாக 24 மணிநேரமும் சிவில் பாதுகாப்பு திணைக்கள இராணுவத்தினர் இருவர் பாதுகாப்பு அரண் ஒன்றை அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு மாலனூர் பிரதேசத்தில் மேற்கொள்ளபட்டு வரும் குடியேற்றத்துக்கு "சாந்திபுர" எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
அத்தோடு ஒவ்வொரு குடியேற்றத்துக்கும் அண்மையாக பௌத்த விகாரை மற்றும் புத்தர் சிலை என்பன அமைக்கப்பட்டுள்ளது. நான்கு பௌத்த பிக்குகளுக்கு மேற்பட்டவர்கள் இந்த பிரதேசத்துக்கு அண்மையாக 13ஆம் கட்டை  பகுதியில் மடம்  ஒன்றை அமைத்து அங்கே தங்கியிருந்து இந்த குடியேற்றங்களை மேற்கொண்டுவருவதாகவும் பௌத்த சின்னங்களை  புல்மோட்டையை சுற்றியுள்ள 30சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில்  அமைத்து வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கையும் கிழக்கியும் இணைக்கும் தமிழர் தாயக பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த குடியேற்றங்கள் தொடர்பில் எந்த தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதிகள் எவரும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இந்த பிரதேசங்களுக்கு வந்துகூட பார்க்கவில்லை எனவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி 











இராணுவத்தால் வழிபடப்பட்ட புத்தர் சிலை உள்ள காணியை கோரும் பௌத்த பிக்கு

20/03/2019 வவுனியா, மூனாமடுவில் இராணுவத்தால் வழிபடப்பட்ட புத்தர் சிலை உள்ள காணியை வழங்குமாறு பௌத்த பிக்கு ஒருவர் வவுனியா மாவட்ட செயலகத்தை கோரியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, மூனாமடுவில் உள்ள நாகபூஷணி அம்மன் ஆலயம் நீண்ட காலமாக அப்பகுதி மக்கள்  மற்றும் விசாயிகளின் வழிபாட்டுத்தெய்வமாக இருந்து வந்துள்ளது. ஓரு றூட் காணியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 
வவுனியா மூனாமடு மற்றும் பேயாடிக்கூழாங்குளம் போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்கள் காலாகாலமாக விவசாயத்தை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் வயல் அறுவடைக் காலங்களில் அந்நிலங்களிற்கு அண்மையில் இயற்கை விவசாயத்தினை பாதுகாக்கும் இவ் நாகபூஷணி அமைத்து வழிபட்டோடு மட்டுமல்லாமல் அவற்றில் இளைப்பாறும் இடங்களையும் உருவாக்கி தமது தொழிலினை செய்தனர். விளைச்சலின் பின் பொங்கல் செய்தும் வழிபட்டு வந்தனர்.  
1995 ஆம் ஆண்டு அப்பகுதி இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டது.  இதன் பின் இராணுவத்தினர் தாம் அமைத்த இராணுவ முகாமில் இராணுவ வழிபாட்டிற்காக சீமெந்தினால் புத்தருடைய சிலை ஒன்றை நிறுவி வழிபட்டு வந்தனர். 
ஆனால் தற்போது அந்தப் பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட போதும் அந்தப் புத்தர் சிலை அவ்விடத்தில் இருந்து அகற்றப்படவில்லை. இந்நிலையில், வவுனியாவில் உள்ள பிக்கு ஒருவர் குறித்த புத்தர் சிலை அமைந்துள்ள காணியை ஒப்படைக்கும் படி மாவட்ட செயலகத்தை கோரியுள்ளார். 
ஆனால், இவ்விடயம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்கப்படும் என மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 








பெலியத்தை - யாழ்ப்பாண ரயில் சேவை!

18/03/2019 தற்போது மாத்தறையில் இருந்து கண்டிக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடும் ரயில் சேவை எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு முதல் பெலியத்தையில் இருந்து சேவையை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த ரெயில் சேவை அடுத்த மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது. 
பெலியத்தையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான சேவைக்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரெயில் எஞ்சின் ஒன்று இணைத்துக் கொள்ளப்பட உள்ளது.  நன்றி வீரகேசரி 






No comments: