உலகின் தலை சிறந்த ஆசிரியர் பரிசு -2019 (Global Teacher Prize 2019) இறுதிச் சுற்றில் கென்யா நாட்டு ஆசிரியர் Peter Tabichi முதல் பரிசு வென்றார்

.

உலகின் தலை சிறந்த ஆசிரியர் பரிசு -2019 (Global Teacher Prize 2019) இறுதிச் சுற்றில் கென்யா நாட்டு ஆசிரியர் Peter Tabichi முதல் பரிசு வென்றார்

Peter Tabichi என்ற 36 வயதுடைய கணித மற்றும் பெளதீகவியல் ஆசிரியர் 2019 ஆம் ஆண்டுகான Global Teacher Prize விருதையும், 1 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசையும் நேற்று துபாயில் நிகழ்ந்த இறுதிச் சுற்று நிகழ்வின் வழியாகப் பெற்றிருக்கிறார்.

இவர் Keriko secondary school என்ற பாடசாலையில் கற்பித்து வருபவர்.இது கென்யாவின் Rift Valley என்ற பகுதியிலுள்ள Pwani எனும் மிகவும் பிற்பட்ட கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையாகும். தனது வருமானத்தில் 80 வீதத்தை வாழ்க்கைத் தரம் குன்றிய மாணவர்களின் கல்விச் செலவுக்காகக் கொடுப்பதோடு, இந்த மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பிரத்தியோக வகுப்புகளையும் நடத்தி வருபவர்.

“நான் இங்கே இருக்கிறேன் என்றால் அது என்னுடைய மாணவர்கள் 
சாதித்திருக்கிறார்கள் என்றே அர்த்தப்படுகிறது, இந்தப் பரிசு வழியாக 
அவர்களுக்குத் தான் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது, அவர்கள் எதையும் 
சாதித்துக் காட்டலாம் என்றே கூறி நிற்கின்றது” 
என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் Peter Tabichi.

ஆசிரியர் திரு Peter Tabichi இன் 95 வீதத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் மிகவும் வறிய குடும்பத்தினர் என்பதோடு மூன்றில் ஒரு பங்கினர் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்தவர்களாகவும், போதைப் பாவனை, பதின்ம வயது கர்ப்பம் தரித்தல், தற்கொலை போன்ற சவால்களுக்கு முகம் கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஏழு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே பள்ளிக்கு வருபவர்களாகவும், இந்தப் பகுதிகள் வரட்சியாலும், உணவுத் தட்டுப்பாட்டாலும் மிகவும் பாதிக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ற அமைப்பின் வழியாக உலகின் தலை சிறந்த ஆசிரியர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை 179 நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளிலிருந்து முதல் பத்துப் பேரில் ஒருவராக யசோதை செல்வகுமாரன் தெரிவாகியிருக்கின்றார். 
இதற்கு முன்பதாக அவுஸ்திரேலியாவின் Commonwealth Award ஐயும் இவர் பெற்றுச் சிறப்புச் சேர்த்திருக்கிறார். 
நேற்று மார்ச் மாதம் 24 ஆம் திகதி துபாயில் நடந்த இந்த நிகழ்வில் யசோதை செல்வகுமாரனும் முதல் பத்துப் பேராக இந்த இறுதிச் சுற்றில் கலந்து சிறப்பித்ததோடு, தன்னுடைய ஆளுமைத் திறனைக் காட்டும் செயல் திறன் அரங்க நிகழ்விலும் பங்காற்றி வெகுவான பாராட்டுகளையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


எந்தவிதமான வாக்களிப்பு முறைமையோ, தரப் பாகுபாடுமோ இல்லாது ஆசிரியர் ஒருவரின் ஆளுமைத் திறன், அவரின் கற்பித்தல் பண்பு இவற்றை அலசி ஆராய்ந்தே இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. 

“It’s morning in Africa. The skies are clear. The day is young and there is a blank page waiting to be written. This is Africa’s time” என்று நெகிழ்வாகக் கூறித் தன் பரிசை ஏற்றார் உலகின் தலை சிறந்த ஆசிரியர் திரு Peter Tabichi.

ஈழத்தில் போரால் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதிகளில் இவ்வாறானதொரு சவாலுக்கு முகம் கொடுத்துக் கல்விச் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு இந்தக் கென்ய நாட்டு ஆசிரியர் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்.

செய்தித் தயாரிப்பு : கானா பிரபா
No comments: