உங்கள் பத்திரிகை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள் …?


தமிழ் சினிமா உள்ளடக்கத்தில் உயர வேண்டும் : இலங்கைப் பத்திரிகையாளர் ச.சுந்தரதாஸ்   விருப்பம் தெரிவித்தார்!
தமிழ் சினிமா உள்ளடக்கத்தில்   உயர வேண்டும் என்று இலங்கைப் பத்திரிகையாளர் ச.சுந்தரதாஸ் ஆதங்கமாகக் கூறுகிறார்.
இலங்கை தினகரன் நாளிதழ் சினிமா பகுதிஆசிரியராகப் பணியாற்றி புகழ் பெற்றவர் ச.சுந்தரதாஸ் .அவர்   இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார் .
சமீபத்தில் ஒரு இலக்கிவிழாவுக்காகச் சென்னை வந்திருந்தார் .அவரை சந்தித்தபோது !
உங்கள் பத்திரிகை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள் …?
நான் முதலில் ‘கதம்பம் ‘என்ற மாத இதழில்  எழுதத் தொடங்கினேன் .இந்த இதழ் 1959 முதல்  முதல் 1983 வரை வெளிவந்தது. 1975ல் என் முதல் சிறுகதை கதம்பத்தில் வெளியானது .அதன்பிறகு நிறைய இதழ்களில் எழுதினேன். 
தினகரன் நாளிதழில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா பகுதி பொறுப்பாசிரியராக இருந்தேன். அப்போது திரையுலகம் சார்ந்து நிறைய செய்திகள் எழுதினேன்.நான் எழுதிய ’சுந்தர் பதில்கள்’ வாசகர்களிடம் பரவலான  கவனிப்பைப்பெற்றது. அவ்வப்போது தமிழகம் வந்து படப்பிடிப்புகள் பார்த்து நட்சத்திரங்களைப் பேட்டி கண்டு  ஏராளமாக எழுதியிருக்கிறேன். அப்படி ரஜினிகாந்த் ,கமல்ஹாசன்  போன்ற பல முன்னணி நட்சத்திரங்களைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறேன். இலங்கையில்  1983-ல் நடந்த கலவரங்களுக்குப் பிறகு நான்  ஆஸ்திரேலியா சென்றேன் .அங்கே ஒரு வங்கி சார்ந்த பணியில் இருக்கிறேன் .இணையாக  ஒரு பக்கம் எழுத்துப் பணியும் தொடர்கிறது .
ஆஸ்திரேலிய நாடு பற்றி மக்கள் பற்றிச்  சொல்லுங்கள்?
ஆஸ்திரேலியா ஒரு வித்தியாசமான நாடு .அதை ஒரு குட்டி உலகமாகப் பார்க்கலாம் பல்வேறு இன மக்களும் பல்வேறு மொழி பேசுபவர்களும் பல்வேறு கலாச்சாரத்தை சேர்ந்தவர்களும் அமைதியாக வாழ்கிறார்கள் .
அந்த நாடு இப்படி வேறுபட்ட பல அம்சங்களை தன்னகத்தே இடம் கொடுத்து வளர்த்து ஆதரித்து வருகிறது அங்கே அமெரிக்கர்களும் பிரிட்டிஷ்காரர்களும் சீனர்களும் அரேபியர்களும் இந்தியர்களும் இலங்கையரும் ஜப்பானியர்களும்  வசிக்கிறார்கள் .அமைதியாக வாழ்கிறார்கள்.
பல்வேறு இனம் மொழி கலாச்சாரம் ஆகியவற்றுக்கு இடம் கொடுத்து தன் நாட்டு சட்ட எல்லைக்குள் வாழ வழிவகுக்கிற ஆஸ்திரேலியா மிகவும் பாராட்டுக்குரிய ஒரு தேசமாகும்.
இப்படிப்பட்ட பெருந்தன்மையான போக்கு உலகின் பிற நாடுகளில் காண முடியாது .
ஆஸ்திரேலிய மக்களின் தொழில் ,பண்பாடு என்ன ?

அங்கே விவசாயமும் தொழிலும் வளமாக இருக்கின்றன .இறைச்சி ஏற்றுமதி  அமோகம் .ஆடு வளர்ப்பு முக்கியமான தொழிலாக  உள்ளது.இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்கிறது.
ஆஸ்திரேலிய மக்கள் பல்வேறு இன மக்களுக்கு வாழ இடம் கொடுத்து ஆதரவு தருவது பெருந்தன்மையான குணமாகும்.அங்கே நைட் க்ளப் முதல் பரதநாட்டியம் வரை அனைத்தும் உள்ளன.
ஒரு பத்திரிகையாளராக தமிழ்நாட்டுப் ஊடகங்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? இன்று ஊடக அறம் காற்றில் பறந்து கொண்டிருக்கிறதே?
இன்று ஊடகங்கள் வியாபார கருவியாகிவிட்டன .ஊடகங்கள் இடையே உலகம் முழுக்க வியாபாரப் போட்டி நடக்கிறது .சமூக ஊடகங்களின் ஆதிக்கம் இந்த நிலைக்கு அவற்றைத் தள்ளி விட்டது எனலாம் .சமூக ஊடகங்கள் தன்னை முந்திக் கொண்டு விடுமோ என்ற பதற்றத்தில்  வேகமும் ஆர்வமும் காட்டுவதால் இந்த நிலை ஏற்பட்டு வருகிறது .ஆனால் இந்த ஓட்டத்திலும் வேகத்திலும் நேர்மையுடன் உண்மை சார்ந்து இயங்கும் ஊடகங்களும் இருக்கின்றன.
இன்றைய சூழலில் சமூக ஊடகங்கள் சமுதாயத்தில் அவதூறு பரப்பவும் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டு வருகின்றன .இதுபற்றி?

அறிவியல் வளர்ச்சியில் ஒரு கூறுதான் சமூக ஊடகங்கள் .ஆனால் அவை பொறுப்பில்லாமல் துஷ்பிரயோகப்படுத்தப்படுகின்றன.  தனிநபர் கையில் சித்தித் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன ஆனால் மக்கள் விழிப்பாக இருந்து உண்மையை அறிந்துகொள்ள பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும் .
என்னைக் கேட்டால் அவதூறுகளையும் வதந்திகளையும் மக்கள் நம்புவதில்லை .நம்.கண்ணுக்கு எதிரே தினந்தோறும்  ஏராளமாக அவதூறுகள் பரப்பப்படுகின்றன.ஆனால் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் அதை நம்பினால் தினந்தோறும் கலவரம் நடக்கும் .ஆனால் நடப்பதில்லை.இதைப் பார்க்கும்போது  மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. இந்தச் சூழலில் அச்சு ஊடகங்களின் நம்பகத் தன்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும் .எதையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து சீர்தூக்கிய பிறகுதான் அச்சில் வரும் .எனவே அச்சுக்கூடம் மீதான  நம்பகத்தன்மை மக்களால் அறியப்படும் .
ஆஸ்திரேலியாவில் ஊடகங்கள் எப்படி இருக்கின்றன?
 ஆஸ்திரேலியாவில் ஊடகங்கள் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் இருக்கின்றன என்று சொல்லலாம் .ஆனால் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வரும் தேர்தலின்போது ஊடக முதலாளிகள் மக்களிடம் ஒரு கருத்தோட்டத்தை ஏற்படுத்த முனைவார்கள்.இதைத் தவிர்க்க முடியாது .மற்றபடி எல்லா காலங்களிலும் ஊடகங்கள் சுதந்திரமாகவே செயல்படுகின்றன .
திரையுலகம் சார்ந்த எழுத்துப் பணியில் இருப்பதால் இக்கேள்வி.தமிழ் திரையுலகம் பற்றி அதன் போக்கு பற்றி உங்கள் கருத்து என்ன ?
இதற்குப் பரவலாக இருக்கும் கருத்தைத்தான் நானும் சொல்வேன். தமிழ் சினிமா தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகத் தரத்தை நோக்கிச் செல்கிறது .ஆனால் உள்ளடக்கமான கதையில் மிகவும் பழமையான வழமையான பாதையில் சென்று கொண்டிருக்கிறது .
 பெரிய நாயகர்களின் படங்கள் கதாநாயக வழிபாட்டு படங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன .இது அன்று முதல் இன்று வரை தொடர்கிறது .கதைகளில் அரைத்த மாவையே அரைப்பது ஆரோக்கியமல்ல. பார்வையாளர்களுக்குச் சலிப்பூட்டும் .அதேநேரம் சிறிய படங்களில் வித்தியாசமான ,மாறுபட்ட, வியப்பூட்டும் வகையில் கதைகளைக் கையாண்டும் படங்கள் வருகின்றன .’மேற்கு தொடர்ச்சி மலை’,’ பரியேறும்பெருமாள்’ போன்றும் வருகின்றன.’டு லெட்’ என்கிற சிறிய படம் 32 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.இப்படி  அரிதான சில படங்களும் வரவே செய்கின்றன .தொழில்நுட்ப முன்னேற்றம் போலவே கதையிலும் முன்னேற்றம் தேவை. 
தமிழ் சினிமா உள்ளடக்கத்தில் உயர வேண்டும்.அப்படி உள்ளடக்கத்தில் உயர்ந்தால் உலகத்தரத்தில் உயரும்.
அண்மையில் பார்த்த திரைப்படம்?

ஆஸ்திரேலியாவில் ’தேவ்’ படம் பார்த்தேன் .படத்தில் கதையே இல்லை .லொக்கேஷன்களை மட்டும் நம்பி எடுத்து இருக்கிறார்கள். எனவே படத்தில் திருப்தியில்லாத போதாமை தென்படுகிறது.சென்னை வந்து  ’தடம்’ பார்த்தேன் .திரைக்கதையில் வித்தியாசமான அணுகுமுறையை ரசித்தேன் .’90 ML ’பார்த்தேன் .
அந்தப் படத்தில் நிறை குறை என்ன என்றால் பெரும்பாலும் ஆண்களின்  கோணத்தில்  அதாவது கதாநாயகன் பார்வையில் தான் கதைகள் செல்லும் .. பெண்களின் வெளியில் இப்படத்தில் பிரவேசிக்கிறது அந்த வகையில் இது புதிது.இது ஒரு மாறுபட்ட அணுகுமுறைதான். பெண்களின் சுதந்திர உலகத்தில் போகும் கதைப்போக்காக காட்ட முயன்று இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அக வெளியில் இருப்பது பாலுணர்வு மட்டும்தானா? அதுபற்றி மட்டும் கதை சொல்வதாக நினைத்து எடுத்திருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது.. இது மாதிரி பிரச்சினைக்குத் தீர்வை நோக்கி நகர்த்துகிற  திசையில்தான் இயக்குநர் தடுமாறியிருக்கிறார் .இப்படிப்பட்ட அவலம் நிகழும் போது  கடைசியாக செயல்படுத்த வேண்டிய தீர்வை முதன்மைப் படுத்தி இருக்கிறார். இது மிகவும் ஆபத்தானது .இளைய தலைமுறைக்குத்  தவறான முன் மாதிரி ஆகிவிடும். தங்களுக்கு வசதியாக தவறான பாதையில் செல்ல வழி காட்டிடும். சில காட்சிகளைப் பார்த்தால் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் தோன்றும் .எனவே இயக்குநரின் பெண்ணியம் பற்றிய அக்கைறை மீது கேள்வி எழுகிறது .ஒரு நாகரிகமான தீர்வை டாக்டர் பாத்திரத்தின் மூலம் கூறி இருக்கலாம் .

The interview was conducted by Arul Selvan for Tamilcinemareporter an online magazine, published in Chennai.

No comments: