18/03/2019 நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் இரண்டு பள்ளிவாசல்களின் மீது கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட பயங்கரவாதத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதுடன், இன்னும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இந்நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா அடெர்ன் முஸ்லிம் பெண்கள் அணிகின்ற ஹிஜாப் அணிந்து, தாக்குதல் நடத்தப்பட்ட கிரிஸ்ட்சர்ச் நகர பள்ளிவாசலுக்குச் சென்று தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்திருந்தார். அச்சந்திப்பின் போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடன் பிரதமர் ஜசிந்தா உரையாடிய விதம், தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்திய முறை என்பன தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலதரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.
இந்நிலையில் காணாமல்போனோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள பதிவில், 
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா அடெர்ன் ஹிஜாப் அணிந்து கிரிஸ்ட்சர்ச்  நகர் பள்ளிவாசலுக்குச் சென்றிருக்கின்றார். தலைமைத்துவம் எனப்படுவது, மக்கள் மத்தியில் சென்று இழிந்த தீவிரவாதத்திற்கு எதிரான வலுவாக கருத்தினை அவர்களிடம் புகுத்தி, அவர்களுடன் கைகோர்த்து ஆதரவாக நிற்பதாகும். அதுவே சிறந்த தலைமைத்துவம் என்று குறிப்பிட்டுள்ளார்.