சினிமா விமர்சனம் ஆண் தேவதை

.

மிடில் கிளாஸ் குடும்பங்களே... ஈ.எம்.ஐ.வாழ்க்கையை ஈஸி ஆக்குகிறதா?! - `ஆண் தேவதை' விமர்சனம்கணவன் மனைவிக்கு இடையே வளரும் ஈகோ எனும் சாத்தானை வென்று, கொன்று குடும்பம் போற்றுகிறான், இந்த `ஆண் தேவதை'.

மிடில் கிளாஸ் குடும்பங்களே... ஈ.எம்.ஐ.வாழ்க்கையை ஈஸி ஆக்குகிறதா?! - `ஆண் தேவதை' விமர்சனம்
இருப்பதை வைத்து வசதியாய் வாழும் மெடிக்கல் ரெப் இளங்கோ (சமுத்திரக்கனி). வசதியாக வாழவேண்டுமென இருப்பதையெல்லாம் புதுப்பிக்கும் ஐ.டி ஊழியர் ஜெஸ்ஸி (ரம்யா பாண்டியன்). இருவரும் காதலித்து, திருமணம் செய்து, இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்து, லோயர் மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்கிறார்கள். `மகிழ்ச்சியாய் வாழ்வதற்குப் பணம் தேவையில்லை, நல்ல மனம் இருந்தால் போதும்' என்ற கொள்கையுடையவர், சமுத்திரக்கனி. ஒரு கட்டத்தில் வேலை வேலையென ஓடி, குழந்தைகளைக் கவனிக்க மறப்பதை உணர்பவருக்கு, `வாழ்வதற்காக சம்பாதிக்கிறோமா அல்லது சம்பாதிப்பதற்காக வாழ்கிறோமா?' என்ற கேள்வி எழுகிறது. வேலையை விட்டுவிட்டு ஹவுஸ் ஹஸ்பண்டாக குழந்தைகளையும் மனைவியையும் கவனித்துக்கொள்கிறார். அத்தியாவசியம் போதுமென நினைக்கும் கணவன்; ஆடம்பர வாழ்க்கைக்கு நகர நினைக்கும் மனைவி... இருவருக்குமிடையேயான ஈகோ, சண்டை, சச்சரவுகளே மீதிக்கதை. 
ஆண் தேவதை
பெரும்பாலான படங்களைப் போலவே பக்கா பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி. அட்வைஸ் சொல்கிறார், அரசியல் பேசுகிறார், நடிக்கிறார், அவ்வப்போது நகைச்சுவைகூட செய்கிறார். நாயகிக்குப் பிரமாதமான கதாபாத்திரம். நடிக்க அத்தனை சூழல்கள் இருக்கிறது படத்தில்... அதை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியிருக்கிறார். இளவரசு, காளி வெங்கட், அறந்தாங்கி நிஷா, வினோதினி போன்றவர்களை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். ஓரிரு காட்சிகளில் வருகிறார்கள், போகிறார்கள் அவ்வளவே. கொடுத்த கேரக்டரைக் கச்சிதமாகச் செய்துமுடித்து அனுதாபம் அள்ளுகிறார், சுஜா வரூணி. அதேபோல், ராதாரவியும் திடீரென வருகிறார். அவர் அணிந்திருக்கும் சட்டையும் அதிலிருக்கும் பாக்கெட்டும் தமிழ் சினிமாவுக்குப் புதுசு. குருவிக்குப் போடும் தினையில் ஆரம்பித்து, ஏழை எளியோருக்குக் கொடுக்கும் பணம் வரை... உபயம்: இந்தச் சட்டை பாக்கெட்தான்! `விக்ரம் வேதா' சேட்டாதான் படத்தின் வில்லன். கடனைத் திருப்பி வாங்க அவர் செய்யும் யுக்தி, தமிழ்நாட்டுக்கு இல்லை, இந்தியாவுக்கு இல்லை, உலகத்துக்கே புதுசு. ச்சே... அப்படி மிரட்டி, கடன் வசூலிக்கும் வில்லனை யாரும் பார்த்ததே கிடையாதுப்பா!
ஆண் தேவதை
அடுத்து இதுதான் நடக்கப்போகிறது எனப் படம் ஆரம்பித்த இருபது நிமிடங்களிலேயே கண்டுபிடித்து கதை சொல்லிவிடலாம். முதல்பாதிதான் இந்தத் தேவதையின் பலவீனம். இரண்டாம் பாதி ஓரளவுக்குக் காப்பாற்றி உயரே பறக்க வைக்கிறது. `மகிழ்ச்சியா இருக்கியா, மகிழ்ச்சியா இருக்கியா...' எனப் படம் முழுவதும் குடும்பத்தார்கள் அனைவரும் ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், பின் பாதி ஏற்படுத்தப்போகும் சோகத்தையும், தாக்கத்தையும் முன் பாதி கொடுக்க மறுத்திருக்கிறது. தவிர, வலிந்து திணிக்கப்பட்ட பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன. `இதையெல்லாம் இப்படிச் சொன்னாதான் புரியுமா?' என்ற கேள்வியும் சில காட்சிகளுக்கு எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.  
படத்தில் அழுத்தமாகச் சொல்ல நினைத்த விஷயம், கடன் வாங்குவதும், அதற்குப் பலியாவதும்தான். அதை சரியாகச் சொல்லியிருக்கிறார், இயக்குநர் தாமிரா. வசதிக்காக கடன் வாங்கியாவது புது வீடு, புது கார் என தனது வாழ்க்கைத் தரத்தை சமூகத்துக்காக உயர்த்திக்கொள்ளத் துடிக்கும் பலருக்கும் இந்தப் படம் எச்சரிக்கை. திரைக்கதையில் இந்தப் பகுதிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை குடும்ப விஷயங்களுக்கும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இன்னும் எத்தனை படங்களில்தான் ஐ.டி நிறுவனம் என்றாலே பார்டி, பப் என்று மட்டும் காட்டப்போகிறார்களோ...! கார்ப்பரேட் அரசியல், குழந்தை வளர்ப்பு, நல்லது கெட்டது என அனைத்தும் பேசும் சமுத்திரக்கனி, அப்படியொரு விடுதியையா தங்குவதற்குத் தேர்ந்தெடுப்பார். அப்படியே இருந்தாலும், குடித்து எறியப்பட்டிருக்கும் காலி பாட்டில்களைப் பார்த்து, `ஏழ்மை இருக்கும் இடத்தில்தான் கடவுள் இருப்பார்' எனச் சொல்வதெல்லாம் ஓவர்டோஸ்.  
ஆண் தேவதை விமர்சனம்
ஜிப்ரானின் பாடல்கள் பெரிதாய் ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் அப்படியே. படத்தின் தேவைக்கென உழைத்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். படத்தின் கதைக்கேற்ப எடிட் செய்து கொடுத்திருக்கிறார், படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன். இதைப் பலரும் `பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்' படத்தின் தழுவல் என்றார்கள். அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் கடுகளவுகூட சம்பந்தமில்லை.  
சொல்லவந்த கருத்தை தெளிவாகக் கடத்திவிட்டாலும், புதுமையும் சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதையால், இந்த `ஆண் தேவதை'யைக் காப்பாற்ற முடியவில்லை. 

No comments: