.தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சூழலியல் போராளியுமான முகிலனை கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் காணவில்லை.
இது தொடர்பாக ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் காணாமல் போனதற்கான காரணம் குறித்த மர்மம் நீடிக்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த கலவரம், துப்பாக்கிச் சூடு ஆகியவற்றுக்கு தென்மண்டல ஐ.ஜி., டி.ஐ.ஜி. ஆகியோர் காரணம் என்று கூறி, அதற்கான ஆதாரமாக'கொளுத்தியது யார்? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்' என்ற தலைப்பில் வீடியோ படம் ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமையன்று முகிலன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டார்.
அன்றிரவு அங்கிருந்து மதுரைக்கு செல்வதற்காக முகிலனும் பொன்னரசன் என்பவரும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை பொன்னரசனிடம் கேட்டபோது, "நான் கரூருக்குச் செல்வதற்கும், அவர் மதுரைக்குச் செல்வதற்கும் பல்லாவரம் ரயில் நிலையத்திலேயே டிக்கெட் வாங்கிவிட்டோம். அதற்குப் பிறகு இருவரும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தோம்.
என்னுடைய ரயில் 11.15க்கும், அவருடைய ரயில் 11.50க்கும் புறப்படுவதாக இருந்தது. இதனால், முதலில் மதுரை செல்லும் ரயிலில் ஒரு துண்டின் மூலம் இடம்போட்டுவிட்டு, மங்களூர் எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்த நடைமேடைக்கு வந்து என்னை ரயிலில் ஏற்றிவிட்டார்," என்கிறார் பொன்னரசன்.
அடுத்த நாள் காலையில் கரூரைச் சென்றடைந்த பொன்னரசன் முகிலனுக்கு போன் செய்தபோது அவருடைய எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதற்குப் பிறகு முகிலன் மதுரைக்கு வந்து சேர்ந்தாரா என்பதை விசாரித்தார் பொன்னரசன். அவர் அங்கும் வந்து சேரவில்லையென்றவுடன் காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார்.
"இதற்குப் பிறகு எழும்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்னை அழைத்து விசாரித்தார்கள். அவர்களிடம் நடந்ததைச் சொன்னேன். அப்போது அவர்கள் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவியின் காட்சிகளைக் காட்டினார். அதில் முகிலன் ரயில் நிலையத்தில் என்னை மங்களூர் எக்ஸ்பிரசில் ரயில் ஏற்றிவிட்டர், அவர் மதுரை செல்லும் ரயிலில் ஏறவில்லை. ரயில் நிலையத்தைவிட்டு வெளியேறிச் செல்லும் காட்சி இருந்தது," என்கிறார்.
முன்னதாக, ரயிலில் செல்லும் வழியில் அவர் மாயமானதாக கருதப்பட்ட நிலையில், பொன்னரசன் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.
எழும்பூர் ரயில் நிலைய காவல்துறையிடம் கேட்டபோது, இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரித்துவருகிறோம். வேறு எதுவும் இப்போதைக்கு சொல்வதற்கில்லை என்று மட்டும் கூறினார்.
இதற்கிடையில், முகிலன் காணாமல்போனது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களை வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் காவல்துறை பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது.முகிலனின் மனைவி பூங்கொடியிடம் கேட்டபோது, "கடைசியாக பேசியபோது அவர் மதுரைக்குச் செல்வதாகச் சொன்னார். அதற்குப் பிறகு அவரிடமிருந்து தகவல் இல்லை. நாங்கள் அடிக்கடி போன் செய்து பேசுவதில்லை. அதனால், அவர் புறப்பட்டாரா, வந்துகொண்டிருக்கிறாரா என்பதையெல்லாம் விசாரிக்கவில்லை," என்று மட்டும் தெரிவித்தார்.
இதற்கு முன்பும் இவ்வாறு காணாமல்போய், அவர் கைதுசெய்யப்பட்டதாக தகவல் வெளியான சம்பவங்களையும் பூங்கொடி சுட்டிக்காட்டுகிறார். "காவல்துறை கைது செய்திருக்கலாம் நினைக்கிறேன். வேறு ஏதுவும் சொல்வதற்கு இல்லை," எனக் கூறினார்.
Nantri: bbc.com
No comments:
Post a Comment