பேரன்பு - சினிமா விமர்சனம்

.

'கற்றது தமிழ்' ராம் இயக்கத்தில், மம்முட்டி கதாநாயகனாக நடித்து வெளிவரும் பேரன்பு திரைப்படம், இயற்கையின் பல குணங்களை விவரிக்கும் தனித்தனி அத்தியாயங்களின் வழியாக கதை சொல்லும் பாணியைக் கடைபிடிக்கிறது. நாம் வாழும் வாழ்க்கையின் உன்னதத்தைப் பற்றிப் பேசுகிற படம்.

திரைப்படம்பேரன்பு
நடிகர்கள்மம்மூட்டி, அஞ்சலி, அஞ்சலி அமீர், சாதனா


நீங்க எவ்வளவு நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கனு நீங்க புரிஞ்சுக்கறதுக்காக என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களத் தேர்ந்தெடுத்து இந்தக் கதைய நான் எழுதறேன்' என்கிற அமுதவனின் (மம்மூட்டி) குரலுடன் தொடங்கும் படம், இயற்கையை பல அத்தியாயங்களாக பிரித்து பேரன்புமிக்க ஒரு வாழ்வின் தரிசனத்தை பார்வையாளர்களுக்கு தருகிறது.
உலகமயமாக்கல் எப்படி தனி மனிதர்களின் வாழ்வில் தாக்கம் செலுத்துகிறது என்று தனது முந்தைய மூன்று படங்கள் மூலம் பேசிய இயக்குநர் ராம், இந்த திரைப்படத்தில் இயற்கையின் முரண் குறித்து கேள்வி எழுப்புகிறார்.
இயற்கை ஒவ்வொருவரையும் விதவிதமாய் படைத்திருக்கிறது. ஆனால் சமமாய் பாவிக்கிறது. ஏன் இந்த முரண்? என்ற கேள்வியே பேரன்பு.

'ஒரு குருவி, ஒரு குதிரை, ஒரு வீடு, கொஞ்சம் நெயில்பாலிஷ்'

இயற்கை இரக்கமற்றது, இயற்கை அதிசயமானது , இயற்கை மகத்துவமானது, இயற்கை அழகானது, இயற்கை கொடூரமானது, இயற்கை கருணையானது, இயற்கை பேரன்பானது என இயற்கையின் பல்வேறு குணங்கள் ஊடாக விரிகிறது இந்த திரைப்படம்.


இயற்கையின் ஒரு துண்டுதான் மனிதன். இந்த இயற்கையின் குணங்களை எப்படி அவன் வெளிப்படுத்துகிறான் என்பதை பேசுகிறது 'பேரன்பு'.
மனைவி பிரிந்து சென்றுவிட மாற்றுதிறனாளி மகளான பாப்பாவை (சாதனாவை) தனித்து வளர்க்கும் பொறுப்பு அமுதவனிடம் வந்து சேர்கிறது. இவர்கள் இருவர் வாழ்வில் இயற்கை எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை இவர்கள் கடந்து செல்லும், இவர்களை கடந்து செல்லும் மனிதர்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.பேரன்புபடத்தின் காப்புரிமைFACEBOOK/DIRECTORRAMOFFICIAL

மனைவி விட்டுச் சென்ற பிறகு நகரத்தில் இருக்க அமுதவனுக்கு பிடிக்கவில்லை. அதுபோல குருவி செத்த ஊரில் இருக்க பாப்பாவுக்கும் பிடிக்கவில்லை. மனிதர்கள் இல்லாத இடமா குருவி சாகாத இடமா ஒரு இடம் தேடி கொடைக்கானிலில் நீர்நிலை ஓரம் இருக்கும் மரவீட்டிற்கு வந்து குடியேறுகிறார்கள்.
பின் அவர்களுடன் வந்து சேரும் ஒரு குதிரை, புதிராக வந்து சேர்ந்து வஞ்சிக்கும் விஜயலட்சுமி (அஞ்சலி) என சில மனிதர்களை கொண்டு விரியும் இந்த திரைப்படம் இதுவரை தமிழ்சினிமாவில் பேசப்படாத ஒரு விஷயத்தை மிக எளிமையான காட்சி மொழின் வழியாக பேசி இருக்கிறது.
  • முதல் பாதியில் வனம் சூழ நகரும் படம், இரண்டாம் பாதியில் மீண்டும் நகரத்திற்கு குடிபெயர்கிறது. இவர்கள் வாழ்வில் திருநங்கை மீரா (அஞ்சலி அமீர்) வந்து சேர்கிறார். அமுதவன் மீதான அவர் காதல் அமுதவனின் வாழ்க்கையை அசைத்துப் பார்க்கிறது. இந்த வாழ்வு பேரன்பானது என்பதை உணர்த்துகிறது.பேரன்புபடத்தின் காப்புரிமைFACEBOOK/DIRECTORRAMOFFICIAL

படத்தில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிடலாம், அமுதவனை விட்டுச் சென்று இன்னொருவருடன் வாழும் அந்த பெண்ணின் முகத்தைக் கூட காட்டாமல் காட்சிப்படுத்தி இருப்பது, காமத்தை தாண்டிய அன்பும் , அரவணைப்பும்தான் அனைவருக்கும் தேவையானதாக இருக்கிறது என்பதை ஆழமாக போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது.
ஒளியால் மெல்ல ஒத்தடம் கொடுக்கும் தேனி ஈஸ்வரின் கேமிரா இயற்கையை அதே எளிமையுடன் காட்சிப்படுத்தி உள்ளது. ராமின் திரைப்படங்களில் யுவன்சங்கர் ராஜாவின் இசைக்கு எப்போதும் சிறகு முளைத்துவிடும். அந்த அற்புதம் இந்த திரைப்படத்திலும் நிகழ்ந்து இருக்கிறது.
நெதர்லாந்தின் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா, ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா மற்றும் இந்திய பனோராமா திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படைப்புதான்.
வில்லன் இல்லாத, வன்முறை இல்லாத இந்தப் படம், காட்சிக்கும், மனதுக்கும் இனிமையான அனுபவத்தைத் தந்தாலும், படம் மெதுவாக நகர்கிற உணர்வை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். பாடல்கள் இனிமையாக இருந்தாலும், ராம் திரைப்படங்களின் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக இருந்துவந்த நா.முத்துக்குமார் பாடல் வரிகள் இல்லாத குறை பளிச்சென தெரிகிறது. கேட்ட நொடியில் மனதில் பதியும் பாடல் வரிகள் ஏதும் தென்படவில்லை.

Nantri bbc.com

No comments: