வாசகர் இறையனுபவம் - - ராஜலட்சுமி, சென்னை-10

.

வாசகர் இறையனுபவம் - ‘கண்ணீரில் நீராட்டினேன் அன்னையை...’

2016 - ம் ஆண்டு நவம்பர் மாதம், சென்னையை மழை புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த ஒரு நாள். தனியார் பள்ளி ஆசிரியையாகிய நான், பணி முடித்து மாலை 4 மணிக்கு வீடு திரும்பினேன். வீட்டில் சோகத்தோடு என் கணவர் தவித்துக்கொண்டிருந்தார்.

விஷயம் இதுதான். மதியம் 2 மணியளவில், பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்று வருவதாகக் கூறிச் சென்ற எங்களின் ஒரே மகள் இன்னமும் வரவில்லை; அவளைக் காணவில்லை என்றார். இடி இறங்கியதைப் போன்ற அந்தச் செய்தியால் நிலைகுலைந்து போனேன்.
16 வயது பெண்; விவரம் புரியாத வயது. நினைக்க நினைக்க எனக்குள் கவலையும் பயமும் பூதாகரமாக எழும்பி நின்றன. என்ன நடந்தது என்று கணவரிடம் கோபமும் அழுகையுமாய்க் கேட்டேன். `இந்த மழையில் பீச்சுக்குப் போனால் நன்றாக இருக்கும்' என்று கூறி கடற்கரைக்குச் சென்று வர அனுமதி கேட்டிருக்கிறாள். என் கணவர் அனுமதி தரவில்லையாம். அதனால் எழுந்த கோபத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, கடைக்குப் போய்விட்டு வருவ தாகச் சொல்லிச் சென்றிருக்கிறாள். மணி ஐந்தாகியும் திரும்பவில்லை.

நேரம் செல்ல செல்ல பயம் அதிகமா கியது. நண்பர்கள் வீடுகளில் போன் போட்டுக் கேட்டும் எங்குமில்லை. சிலர், காவல்துறைக்கு சொல்லுங்கள் என்றார்கள். ஆனால், அவளின் எதிர்காலம் பாதிக்குமோ என்ற கவலை எங்களுக்கு. உறவுகள், நண்பர்கள் எல்லோரும் தேடியபடி இருந்தார்கள். நான் வீட்டில் கவலையுடன் இருந்தேன். மாலை மெள்ள இருள் சூழ ஆரம்பித்தது. விளக்கேற்றும் நேரம் வந்தது. `இனி எல்லாம் இறை விட்ட வழி' என்று எங்கள் குலதெய்வமான காளிதேவியை மனதார வேண்டிகொண்டு விளக்கேற்றினேன்.

`18 ஆண்டுகள் கழித்து எங்களுக்குக்  கிடைத்த பெண் அவள். அதனால் அவள் இஷ்டத்துக்கு வளர்த்தோம். அது தவறோ...' என்று நினைத்து அழுதேன். `நவராத்திரி முதல் நாளில் பிறந்த பெண்; தாயே உன்னையே அன்னை எனச் சொல்லிக்கொடுத்து வளர்த்தோம்; எங்களைக் கைவிட்டு விடாதே. என் மகளை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்துவிடு' என்று வாய்விட்டு அரற்றினேன். திடீரென, அம்மன் முன் சுடர்விட்டுக் கொண்டிருந்த தீபம் பிரகாசமாக எழுந்து ஜொலித்தது. அன்னை ஏதோ உணர்த்துகிறாள் என்பது புரிந்தது. மனதில் நிம்மதி!
இரவு 7 மணி. நனைந்தபடியே என் பெண் வீட்டுக்கு வந்தாள். அவளைக் கண்டதும் அழுதுத் தீர்த்துவிட்டார் கணவர். நான், என் காளிதேவிக்கு மனதார நன்றி சொன்னேன்.துர்காஷ்டகம் படித்துப் போற்றினேன்.

கோபத்துடன் கடற்கரைக்கு சென்றுவிட்ட என் பெண்ணை, 5.30 மணியளவில் யாரா பின்னாலிருந்து தள்ளுவதுபோல் தள்ளி, `வீட்டுக்குப் போ' என்று உணர்த்துவதாகப் பட்டதாம் அவளுக்கு. அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் அப்படியான உணர்வு ஏற்படவே, மெரினா பேருந்து நிறுத்தத்துக்கு வந்திருக்கிறாள்.

அங்கிருந்த காவல்துறை அதிகாரி, தனியாக நின்றிருந்த இவளிடம் என்ன ஏதென்று விசாரித்திருக்கிறார். பயந்துபோன என் மகள், அந்நேரம் வந்து நின்ற பேருந்தைக் காட்டி `வீட்டுக்குப் போகிறேன்' என்று சொல்லவும், அவள் பேருந்தில் ஏறும்வரை  அங்கேயே நின்றுகொண்டாராம் காவலதிகாரி. மகளும்  வேறு வழியின்றி அந்தப் பேருந்தில் ஏறி வீட்டுக்கருகே இறங்கியவளுக்கு, வீட்டுக்கு வர பயம். அதனால், தயங்கி நின்றவளை மீண்டும்   ஒரு மனக்குரல் எழுந்து ‘போ!’ என்று விரட்டியிருக்கிறது. ஒருவழியாக எங்கள் மகள் வீட்டுக்கு வந்துவிட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டதும் உறைந்து போனேன். ஆம், நான் இங்கே சரியாக விளக்கேற்றிய நேரம், அங்கே என் தாய் (காளி) என் மகளை வீட்டுக்கு வரும்படி தூண்டியிருக்கிறாள். எங்குச் சென்றாலும் காளிதேவியின் குங்குமத்தை வைத்துக் கொண்டு செல்லும் என் மகளை அந்த மகாசக்தியே வழிநடத்திக் கூட்டி வந்திருக்கிறாள் என்பதை அறிந்து சிலிர்த்தேன். கண்ணீரில் எங்கள் குலதேவியை நீராட்டினேன். அதைத் தவிர வேறென்ன அவளுக்கு நான் செய்ய முடியும்?

- ராஜலட்சுமி, சென்னை-10

No comments: