அன்றும் இன்றும் - அங்கம் 02 - ரஸஞானி

.


தெற்கின் சந்திரிக்காவும் வடக்கின் சந்திரகலாவும்


                                                                          
தமிழறிஞர் ஒருவர், தெருவில் சென்று கொண்டிருந்தார். சைக்கிளில் வந்த ஒருவன், கவனிக்காமல் அவர் மீது மோதி விட்டான். உடனே அவன்  " ஐயா,  மன்னித்துக் கொள்ளுங்கள். தெரியாமல் மோதி விட்டேன்."  என்றான்.
இதைக் கேட்டதும்   அந்த தமிழறிஞர், கோபமாக, " மன்னிப்பு என்பது உருதுச் சொல்!  பொறுத்துக் கொள்ளுங்கள் என்பதே சரி."  என்றார்.
மோதியவனும் அவ்வாறே சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான். அந்தத் தமிழறிஞர்தான் தமிழ் உலகில் புகழ்பெற்ற  தேவநேய பாவாணர்!

இவரது பெயரில் சென்னையில் ஒரு நினைவு மண்டபமும் இருக்கிறது.
அவர் அன்று சொன்ன கருத்து, இன்றளவும் விவாதிக்கப்படுகிறது. ஆய்வறிஞர்கள் உருது மொழியையும் தமிழ் மொழியையும் இதற்காகவும் ஆராய்ந்தார்கள்.

இது அன்று நடந்த சம்பவம். இன்று நடக்கும் சம்பவங்களுடன் மன்னித்தல் - பொறுத்தருள்தல் பற்றி பார்த்தால் பல சுவாரசியங்களை காணமுடிகிறது.

இலங்கையில் நீடித்த போரினால் கொல்லப்பட்டவர்கள், ஆயுதம் ஏந்திய இயக்கங்களினால் அநாவசியமாக கொல்லப்பட்ட சமூகத்தலைவர்கள், சமூக நலன் விரும்பிகள், கல்விமான்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் எண்ணிக்கை  பல்லாயிரங்களையும் தாண்டி இலட்சத்தை எட்டிப்பிடிக்கும். அத்துடன் தாக்குதல் சம்பவங்களில் படுகாயமுற்று உடல் ஊனமுற்று - கண்பார்வையை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளியாக மாறிப்போனவர்கள், இன்றும் வலிசுமந்த மேனியர்களாக நடமாடுகின்றனர்.






தினமும் காலை எழுந்ததும் கண்ணாடி முன்னால் நிற்கும்போது, தமக்கு நேர்ந்த பாதிப்பு பற்றிய நினைவு வந்து, மனஉளைச்சலையும் தரக்கூடும்.

அன்றும் - இன்றும் என்ற இந்தப்பதிவில் வரும் இரண்டு பெண்களைப்பற்றிச்சொல்ல விரும்புகின்றேன். இவர்கள் இரண்டுபேருமே ஏதோ ஒரு வகையில் ஆளுமைகள்தான். இழப்புகளுக்குப்பின்னரும் சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்பவர்கள்.  இவர்களின் ஆன்மபலம் முன்னுதாரணமானது.

அதில் ஒருவர் திருமதி சந்திரிக்கா குமாரணதுங்க பண்டாரநாயக்கா. 1945 ஆம் ஆண்டில் பிறந்திருக்கும் இவர்,  இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்த பெற்றோர்களின் புதல்வி. தந்தை 1959 இல் கொல்லப்பட்டபோது இவரது வயது 14.  கொழும்பில் படித்து, மேற்கல்விக்காக வெளிநாடு சென்று திரும்பி அரசியல் பிரவேசம் செய்து தந்தை தொடங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மகளிர் அணித்தலைவராகி, படிப்படியாக அரசியலில் பிரகாசித்து,  கணவர் விஜயகுமாரணதுங்க தொடங்கிய மக்கள் கட்சியின் துணைத்தலைவியானவர். கணவரை தனது 43 வயதில் பறிகொடுத்தார். மக்களின் அனுதாப அலைவீசியதையடுத்து, அரசியலில் மீண்டும்  தீவிரமானார். முதலில் மேற்கு மாகாண முதல்வராகவும் தெரிவாகி, 1994 இல் தாயும் தந்தையும் பிரதமராக பணியாற்றிய நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்து, நாட்டின் அதிபரானவர்.

உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெயரையெடுத்த தனது தாயாரை  தனது அதிபர் பதவிக்காலத்தில் தனது முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவைத்தவர். மகளிடம் பதவிப்பிரமாணம் செய்யும் தாயார் என்று அன்று செய்திகள் எழுதப்பட்டன.



தந்தையை, காதல் கணவரை கொலையாளிகளிடம் பறிகொடுத்தவர், 1999 இல் கொழும்பில் புலிகளின் தற்கொலைத்தாக்குலின்போது படுகாயமுற்று வலது கண் பார்வையை முற்றாக இழந்தார்.

அதன்பின்னரும் அவர் பொதுவாழ்வில் சோர்ந்துபோகாமல், துவண்டுவிடாமல் இலங்கை அரசியலில் ஒரு கிங்மேக்கராக இயங்கியவர். சாணக்கியமாக செயற்பட்டு, மகிந்தராஜபக்‌ஷவுக்கு எதிராக மைத்திரியை பொதுவேட்பாளராக்கி வெற்றிபெறவைத்து Silent killer  ஆனவர்.  

தற்போது தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவியாக செயற்படும் அவர், இந்த ஆண்டு வடக்கிற்கு சென்று, அன்று தனது பதவிக்காலத்தில் தனது  அரசுக்கு எதிராக போரிட்டு புனர்வாழ்வு பெற்றவர்களையும் போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் காயமுற்ற பெண்களையும் சந்தித்து,  புனர்வாழ்வுப்பணிகளில் பெண்களையும் இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டங்கள் பற்றியும் ஆராய்ந்தார்.

மேலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் யாவும்,  யாவரும் அறிந்த செய்திகள்தான். சந்திரிக்கா தனது வடபகுதி பயணத்தில் சந்தித்த ஒரு இளம்பெண், இலங்கையில் புலிகளின் போரியல் வரலாற்றில் மிகவும் முக்கிய பங்கெடுத்தவர். அவர் 1974 ஆம் ஆண்டு மன்னாரில் பிறந்தவர். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க இவர்,  1991 ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். ஆயுதம் ஏந்தினார். அத்துடன் புலிகளின் நிதர்சனம் மற்றும் புலிகளின் குரல் முதலான ஊடகங்களிலும் பணியாற்றினார்.



அவரது இயற்பெயர் சந்திரகலா. இயக்கத்திலும் இலக்கியத்திலும் அவரது பெயர் வெற்றிச்செல்வி. யுத்த காலத்தில் நேர்ந்த ஒரு வெடிவிபத்தில் வலதுகையையும் இழந்து,   வலது கண்ணிலும் பாதிப்புக்குள்ளானவர்.

    1997 முதல் இலக்கியத்துறையிலும் ஈடுபட்டு  கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல் முதலான துறைகளில்  எழுதிக்கொண்டிருப்பவர். போர் முடிவுக்கு வருமுன்னரே 2007இல் "இப்படிக்கு அக்கா" என்ற கவிதைத்தொகுப்பையும் எழுதி,  இதுவரையில்இப்படிக்கு தங்கை, துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும்  (கவிதைகள்) காணமல் போனவனின் மனைவி, முடியாத ஏக்கங்கள்  ( சிறுகதைகள்) போராளியின் காதலி (நாவல்) வெண்ணிலா              ( குறுநாவல்) ஆறிப்போன காயங்களின் வலிஈழப்போரின் இறுதிநாட்கள் (வரலாற்றுப்பதிவுகள்) முதலான நூல்களை வரவாக்கியவர்.  வெற்றிச்செல்வி தொடர்ந்தும் இயங்குகிறார்,  எழுதுகிறார்.
அவரது வாக்கு மூலங்கள் இவை:
" ஈழப்போரின் சாட்சியாகவும் இடப்பெயர்வுகளின் சாட்சியாகவும் ஈழத்தின் அடையாளமாகவும் நானும் இவ்வெழுத்தில் ஆகியிருக்கின்றேன். என் கண்ணால் கண்ட காட்சிகளை அப்போதிருந்த மனதின் உணர்வுகளோடு இங்கே பதிவுசெய்திருக்கிறேன். தமிழர்களின் கண்ணீரை கொஞ்சம் இங்கே சேமித்துவைத்திருக்கிறேன். அந்தக்கண்ணீர் காயாத வடிவமெடுத்திருக்கவேண்டும்  என்பதால் இற்றைவரை கண்ணீரையே எழுதிக்கொண்டிருக்கிறேன். இரத்தக்கண்ணீரை" ( நூல்: ஈழப்போரின் இறுதி நாட்கள்)



" தேசத்தின் குருத்துகள், அங்கு அனலிடை வெந்த உணர்வுகளுக்கு ஆளாகினார்கள். அந்த உணர்வுகள் அனைத்தையும் சொல்லிவிட முடியாது. தேசத்துக்குருத்துக்களின் வாக்குமூலமாக இதனை எடுத்துக்கொள்ளவேண்டும். நடந்த உண்மைகளை நடந்தது நடந்தபடி வரலாற்றில் பதிவுசெய்யவேண்டும் என்பதே இந்தப்பதிவின் நோக்கம். புனர்வாழ்வு என்று அழைக்கப்பட்ட தடைமுகாம் ஒன்றில் ஒரு தொகுதிப்பெண் போராளிகள் வாழ்ந்த வாழ்தலின் புரிந்துணர்வுக்கு எடுத்துக்கொண்டால் போதும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்"      ( நூல்: ஆறிப்போன காயங்களின் வலி)
" வலியோடும் வேதனையோடும் இதனை எழுதிக்கொண்டிருந்த நாட்களில் வீதியில் பயணித்த .சி. ஆர். சி. வாகனத்தின் கொடியினால் ஏற்பட்ட சத்தம்கூட எறிகணை பராஜ் பண்ணப்படுவதாய் நினைத்து என்னை நிலத்தில் விழ வைத்திருக்கிறது. காற்றால் அசைக்கப்பட்ட தகரத்தின் சத்தம்கூட எறிகணை கூவிக்கொண்டு வருவதாய் நெஞ்சை படபடக்கச்செய்திருக்கிறது. அந்த உயிராபத்தான சூழலுக்குள் மீண்டும் வாழ்ந்த உணர்வு, எழுதி முடித்தபோதும் இருந்தது. இதைப்பதிப்பாக்கத்திற்காக கணினியில் பொறித்தபோதும் அதை மீள் வாசிப்புச்செய்தபோதும் மீண்டும் மீண்டும் குருதி பாய்ந்த வன்னிக்குள் கிடந்து எப்படித்துடித்திருப்பேன் என்பதை இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்வீர்கள்" ( நூல்: போராளியின் காதலி - நாவல்)

இந்தப்பின்னணிகளிலிருந்து ஒரு உண்மையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.  வடக்கில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க செயலணியில் சந்திரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் சந்திரகலா (வெற்றிச்செல்வி) என்ற முன்னாள் ஈழவிடுதலைப் பெண் போராளியும்  சந்திரிக்கா என்ற முன்னாள் இலங்கை அதிபரும் போர் நடந்த காலத்தில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள்.
போர் நீடித்திருந்தால் இந்தச் சந்திப்பு சாத்தியமாகியிருக்குமா? உரிய காலத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வு காணப்பட்டிருக்குமானால், சந்திரிக்கா தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்திருப்பாரா?
சந்திரகலா என்ற வெற்றிச்செல்வி தனது ஒரு கரத்தையும் இழந்து, கண் பார்வையிலும்  பாதிப்புக்குள்ளாகியிருப்பாரா?
 2018 காலப்பகுதியில் தோன்றியிருக்கும் இந்த சமாதான நல்லிணக்கம் 2009 இற்கு முன்னர் ஏன்  ஏற்படவில்லை? எதனால் தாமதித்தது?
விடாக்கண்டர்களும் கொடாக்கண்டர்களும்,  கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.


நீடித்த உள்நாட்டுப்போரினால் எங்கள் தேசம் இழந்தது அநேகம்! வெளிநாட்டிலிருக்கும் ஆயுத விற்பனையாளர்களும் ஆயுதத் தரகர்களும் ஈட்டிய லாபம் அநேகம்.
அமெரிக்காவில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் பலவற்றை நடத்திவரும்  பெரும் கோடீஸ்வரர் குடும்பங்களைச்சேர்ந்த ஒருவர் அண்மையில்தான் மறைந்தார்.
அன்று எதிர் எதிர் தரப்பில் நின்று தங்கள் தரப்பு நியாயங்களுக்கு வலுச்சேர்த்த இரண்டு பெண்கள்,  இன்று -  உடல் ரீதியாக வலுவிழந்து, உணர்வு ரீதியாக சந்தித்திருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் தினமும் காலையில் கண்ணாடி முன்னால் தோன்றும்போது என்ன நினைப்பார்கள்? யாரை யார் குற்றம் சுமத்துவார்கள்?


வான்மதியும் விண்மீனும் கடலும் காற்றும் நதியும் கொடியும் சோலையும் இயற்கையும்  மாறவில்லை ! ஆனால், மாறும் இயல்புள்ள  மனிதன் மாறிவிட்டான். அதன் விளைவுகள்தான் யுத்தங்களும், ஆக்கிரமிப்புகளும்.
மனக்காயங்களை மன்னிப்புகள்தான் சுகப்படுத்தும். சந்திரிக்காவும் சந்திரகலாவும் எமக்கு ஓர் உதாரணம்!
தேவநேயப்பாவாணர் அன்று மன்னிப்பு என்ற வார்த்தைக்குச் சொன்ன மூல மொழி பேசப்படும் தேசத்திலும்,   நடந்த அனைத்தையும் பொறுத்தருள்க என நல்லிணக்கம் பேசப்படும் எங்கள் தேசத்திலும்  மனக்காயங்கள் சுகப்படுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்?
( நன்றி: "அரங்கம்" இலங்கை இதழ்)

No comments: