தமிழ் சினிமா - காற்றின் மொழி திரை விமர்சனம்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு ஒதுங்கியிருந்தார். இரண்டாவது சீசனில் மரத்தை சுற்றி ஆடாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
36 வயதினிலே, மகளிர்மட்டும் படத்தையடுத்து ஜோதிகா தற்போது பாலிவுட்டில் ஹிட்டான துமாரி சுலு படத்தின் ரீமேக்கான காற்றின் மொழி படத்தில் நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி இப்படம் வந்துள்ளதா பார்ப்போம்.

கதைக்களம்

திருமணமான ஜோதிகா 12 வயது பையனுக்கு அம்மாவாக நடித்துள்ளார். விதார்த்தின் மனைவியாக வரும் இவர் வீட்டில் அன்றாட வேலையை செய்யும் வழக்கமான குடும்பப்பெண்ணாக வருகிறார்.
ஒருகட்டத்தில் தானும் வேலைக்கு போகவேண்டும் என முடிவெடுக்கும் ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக மாறுகிறார். அவர் குரலில் இருக்கும் ஈர்ப்பை பார்த்து அவருக்கு சமையல் மந்திரம் பாணியிலான ஒரு இரவுநேர ஷோவை தருகின்றனர்.
இதில் முதலில் பேசும் நேயரே மிகவும் காதுகூசும்படியான கேள்வியை கேட்கிறார். ஆனால் அதற்கு ஜோதிகா தரும் பதிலில் ரசிகர்களின் கைதட்டை பெறுகிறார். இதன்பிறகு இவரது குரலுக்கு பல ரசிகர்கள் உருவாகிறார்கள்.
அதன்பின் அவரது குடும்ப வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது. வேலைக்கு செல்வதால் கணவன், மனைவி இடையே என்ன பிரச்சனை ஏற்படுகிறது என்பதே மீதிக்கதை.

படத்தைப்பற்றிய அலசல்

ராதா மோகன் படம் என்றாலே குடும்பத்தோடு போகலாம் என்ற நம்பிக்கை உள்ளது. இதை இந்தப்படத்திலும் காப்பாற்றியிருக்கிறார். இரவு நேர வேலைக்கு செல்வதால் குடும்பத்திலும், சமூகத்திலும் எந்த மாதிரியான பிரச்சனையை ஒரு பெண் சந்திக்கிறார் என்பதை அழகாக காட்டியுள்ளார்.
படத்துக்கு மொத்த பலமே ஜோதிகாதான் டிரைலரில் ஓவர்ஆக்டிங் போல தெரிந்தாலும் படத்தோடு பார்க்கையில் அந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் சரியாக செய்திருக்கிறார் என்று சொல்லவைக்கிறார். முந்தைய படங்களை போல அதிக சோகத்தை காட்டாமல் காமெடியில் கலக்கியுள்ளார். அழுகிற காட்சிகளில் அனைவரையும் கலங்க வைக்கிறார்.
யோகி பாபுவின் காமெடியை விட மற்ற ராதாமோகனின் பேவரைட் காமெடி நடிகர்களான குமரவேல், எம்.எஸ் பாஸ்கர், மனோபாலா, மயில்சாமி போன்றோரின் காமெடிகளும் ரசிக்கவைக்கிறது.
லட்சுமி மஞ்சு கதாபாத்திரம் மிகவும் கவனிக்கவைக்கிறது. மொபைல் கேமுக்கு அடிமையாக மாறிய ஜோதிகாவின் மகனாக வரும் சிறுவனின் கதாபாத்திரம் இன்றைய அவசர உலகில் பெற்றொர் எப்படி பிள்ளைகளை கவனிக்க மறக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
கணவனாக வரும் விதார்த்தும் தன் நடிப்பை சிறப்பாக செய்துள்ளார். இருவருக்குமான கெமிஸ்ட்ரி ஓரளவு நன்றாகவே உள்ளது.
கெஸ்ட்ரோலில் வரும் சிம்புவும் கைதட்டல் வாங்குகிறார்.
பாடல்களை விட பின்னணி இசையில் அசத்தியுள்ளார் ஏ.ஆர் ரஹ்மானின் தங்கை மகனான அறிமுக இசையமைப்பாளர் காஷிப். நம்புறவங்கிட்ட சாரி சொல்ல வேண்டியிருக்கு, நம்பாதவங்ககிட்ட சரி சொல்ல வேண்டியிருக்கு என பல வசனங்களில் அசத்துகிறார் பொன்.பார்த்திபன்.

க்ளாப்ஸ்

அடுத்த லெவலுக்கு முன்னேறியுள்ள ஜோதிகாவின் நடிப்பு, துணிச்சலாக இந்த கதாபாத்திரத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். காமெடி நன்றாகவே உள்ளது.

பல்ப்ஸ்

பெரிதாக இல்லையென்றாலும் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். சில செயற்கைத்தனமான காட்சிகள்.
மொத்தத்தில் காற்றின் மொழி அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் மொழி.
நன்றி 

No comments: