உருவம், உள்ளடக்கம்,
படைப்புமொழி, பாத்திர வார்ப்பு, காட்சி சித்திரிப்பு முதலான பல அம்சங்களை உள்ளடக்கியது
சிறுகதை வடிவம். இலங்கையில் இந்த இலக்கியம் தோன்றிய காலத்தில், எழுத முன்வந்த எழுத்தாளர்கள்
பலர், தென்னிந்திய சிற்றேடுகளில் வெளியான கதைகளின் பாதிப்பில், சென்னை மவுண்ட் ரோட்டையும்
மெரீனா பீச்சையும் பின்புலமாகக்கொண்டு கதை பண்ணினார்கள்!
அதற்குப்பின்னர்
மறுமலர்ச்சிக்காலம் இலக்கியத்தில் பதிவானபோது இலங்கையர்கோன், சி. வயித்திலிங்கம், சம்பந்தன்
ஆகியோரின் கதைகள் பரவலான வாசிப்பிற்குட்பட்டு
பிரதேச மொழி வழக்குகளும் அறிமுகமாயின.
இலங்கையில்
இடதுசாரிகளின் இலக்கியப்பிரவேசத்தையடுத்து, முற்போக்கான சிந்தனைகளை அடியொற்றியும்,
சமூக ஏற்றதாழ்வு - சாதிப்பிரச்சினைகள் - வர்க்கப்போராட்டம் பற்றியும் கதைகள் தோன்றின.
இக்கால கட்டத்தில்
அறிமுகமான பல விமர்சகர்கள் மார்க்ஸீயப் பண்டிதர்களாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவும்
பேராசிரியர்களாகவும் விளங்கினர். இவர்கள் நமது ஆக்க இலக்கியப்பிரதியாளர்களிடம், சோஷலிஸ
யதார்த்தப்பார்வையை எதிர்பார்த்தனர்.
இதனால் அந்தப்பார்வைக்கு
ஏற்பவும் அதே சமயத்தில் அழகியல் அம்சத்துடனும் பலர் ஈழத்து இலக்கிய உலகில் தமது படைப்புகளை
அறிமுகப்படுத்தினார்கள். இந்தப்பின்னணியில் தமிழகப்படைப்புகள் கலைத்துவத்தில் முன்னின்றன.
ஈழத்து படைப்பு இலக்கியம் இலக்கிய விமர்சன பிதாமகர்களின் ஆசீர்வாதத்தையும் அங்கீகாரத்தையும்
எதிர்பார்த்து அழகியலை இழக்கநேர்ந்தது. எனினும் குறிப்பிட்ட சில அழகியல் சார்ந்த படைப்புகள்
வெளிவந்தன.
1970 இன் பின்னர் தேசிய இனப்பிரச்சினை இனமுறுகலாகியதும் படைப்பு இலக்கியத்தில் " இஸங்கள்" குறித்த
விமர்சனங்கள் கூர்மையடைந்தன. கேள்விக்குட்படுத்தப்பட்டன.
போர்க்காலம்
தொடங்கியதும் போர்க்கால இலக்கியமும், போரினால் மக்கள் இடம்பெயர்ந்ததும், இடம்பெயர்ந்தோர் இலக்கியமும்
நாட்டைவிட்டு புலம்பெயர்ந்ததும், அவர்கள் மத்தியிலிருந்த இலக்கியவாதிகளினால் புலம்பெயர்ந்தோர்
இலக்கியமும் பின்னர் புகலிட இலக்கியமும் வரவாகியது.
கொட்டும் பனிக்குள்ளிருந்து நெருப்பின் தீவிரத்துடன் படைத்து,
ஆறாம் திணை இலக்கியத்தை அறிமுகப்படுத்தியவர்களிடமிருந்து, வீரியம் மிக்க எழுத்துக்கள் தமிழ் இலக்கிய வாசகப்பரப்பின்
பொதுவான கவனத்திற்குட்பட்டுள்ளன. தமிழகமும் இலங்கையும் விழியுயர்த்தி பார்க்கின்றன.
வெளியுலகத்தின்
கட்டற்ற சுதந்திரத்தினால் புகலிட வாழ்வுக்கோலங்களும் தாயகத்தின் நெருக்கடியிலிருந்து
தப்பி ஓடுவதற்கு எத்தனித்தவர்களின் செய்திகளும் கதைகளாகின. புலம்பெயர்ந்தோர் சந்தித்த அவலங்களும் படைப்புகளில் கருப்பொருளாகின. இந்தப் பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்ட உருவம், உள்ளடக்கம், படைப்புமொழி, பாத்திர வார்ப்பு,
காட்சி சித்திரிப்பு முதலான பல அம்சங்களை புகலிட படைப்பாளர்களும் நவீன முறையில் புத்தம்
புதிய உத்திகளுடன் பயன்படுத்தினர்.
இவர்களுக்கும்
ஆசிர்வாதமும் அங்கீகாரமும் தேவைப்படுகிறது. அதன்மூலம் தமக்கென ஒரு அடையாளத்தை தக்கவைப்பதற்கு
பிரயத்தனப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.
அவர்களுக்கு அந்த அடையாளம் கிடைத்ததும் அவர்களின்
சுமாரான கதைகளுக்கும் விமர்சகர்களின் Promotion
கிடைக்கிறது. எனினும் அவ்வாறு அடையாளம் காணப்படாத ஒரு சிலர் அந்த
Promotion ஐ எதிர்பார்க்காதுவிட்டாலும்,
தேர்ந்த வாசகர்கள், அவர்களின் படைப்புகளின் முக்கியத்துவம் குறித்து எழுதுகின்றனர்.
இந்தப்பின்னணியில்தான்
சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஈழத்திலிருந்து புலம்சென்று, ஜெர்மனியில் நீண்டகாலம் வதியும் பார்த்திபனின்
சிறுகதைகள் அவரது இலக்கிய நண்பர்களின் கடும்முயற்சியினால் "கதை "என்னும் தொகுப்பாக எமது கரங்களுக்கு வந்துள்ளது.
சுவிட்சர்லாந்திலிருந்து
மெல்பனுக்கு வருகை தந்திருந்த எழுத்தாளர் சயந்தன் எனக்கென எடுத்துவந்திருந்த கதை பிரதியை கையில் எடுத்தவுடன், இதில் இடம்பெற்றுள்ள
23 கதைகளையும் நான் படிக்கவில்லை. இந்நூலை
தொகுத்திருக்கும் நண்பர்கள் எழுதியுள்ள "
கதை" வந்த கதையையும் பின்னிணைப்பாக வாசிப்பு
என்ற அங்கத்தில் 12 பேர் எழுதியிருக்கும் பார்த்திபனின் கதைகள் பற்றிய வாசிப்பு அனுபவங்களையும்தான்
முதலில் படித்தேன். அதன்பின்னர் சில நாட்களுக்கு நூலை மூடிவைத்துவிட்டேன்.
334 பக்கங்கள் கொண்ட இந்த நூலை "
கதைக்காமல் ஆக்கப்பட்டவர்களுக்கு " பார்த்திபன்
சமர்ப்பித்துள்ளார். நாம் தற்போது அவரது கதைகள் பற்றி கதைக்கின்றோம்.
தமிழ்நாட்டினர்
"கதைக்கிறோம்" எனச்சொல்லமாட்டார்கள். அவ்வாறு கதைக்கும் எம்மிடத்தில்
, "பேசுகிறோம்" என்று நீங்கள்
ஏன் சொல்வதில்லை? என்று கேட்டுவருகின்றனர்.
விமர்சனங்கள்
- திறனாய்வுகள் -அறிமுகங்கள் நூல்களுக்கு அவசியம். ஆனால், அவற்றை எழுதிய ஆக்க
இலக்கியப்படைப்பாளிக்கு வழிகாட்டுவதற்கும் செல்நெறியை புகட்டுவதற்கும் புறப்பட்டால், படைப்பாளி தொலைந்துபோவான்!
இலங்கையில் இவ்வாறு சிலருக்கு நடந்திருக்கிறது. விரிவஞ்சி அந்தக்கதைகளைத் தவிர்த்துவிட்டு பார்த்திபனின் கதைகளுக்கு வருகின்றேன்.
1986-1987-1988-1989-1991-1994
-1995-1996-1997-1998 - 2005- 2007- 2012 ஆகிய ஆண்டுகளில் பார்த்திபன் எழுதியிருக்கும் கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த
இதழ்களில் வெளியாகின என்ற விபரத்தை ஏனைய பல எழுத்தாளர்கள் தமது தொகுப்புகளில்
குறிப்பிடுவதுபோன்று பார்த்திபனின் கதைகளை
தொகுத்த "நண்பர்கள்" பதிவுசெய்யவில்லை.
எந்தெந்த இதழ்கள்
எத்தகைய கதைகளை பிரசுரிக்கும் எத்தகைய
கதைகளை நிராகரிக்கும் என்பதில் சமகால படைப்பாளிகள் நல்லதெளிவுடன் இருக்கிறார்கள்! அவர்களின் பட்டறிவு இந்தத்தெளிவை அவர்களுக்கு வழங்கியிருக்கிறது.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கதைகளை இலங்கை - தமிழக இதழ்கள்
மட்டுமல்ல, புகலிடத்தில் வெளியாகும் இதழ்கள் சிலவும் நிச்சயமாக வெளியிடத்தயங்கும்!
பார்த்திபன் குறிப்பிட்ட சில கதைகளில் பயன்படுத்தியிருக்கும் சில வாய்மொழிக்கூற்றுக்கள்
மாத்திரமே அதற்குக் காரணம்.
முதல் கதையான
ஒரே ஒரு ஊரிலே தொடக்கம், இறுதிக்கதையான கல்தோன்றி வரையில் பார்த்திபன் தனது வாழ்வின் தரிசனங்களை பதிவுசெய்துள்ளார்.
இலங்கையில் நீடித்த போர்க்காலத்தில் தொடங்கி, அந்நியதேசங்களுக்கு தப்பியோடியவர்களின் புலம்பெயர்
காலம் வரையில் பார்த்திபனுக்கு சொல்வதற்கு ஏராளமான கதைகள் இருக்கின்றன.
ஆட்சியதிகாரத்தின்
ஆக்கிரமிப்பு படைகள் ஊர்களைச் சுற்றிவளைக்கும்
தருணங்களில் அங்கு வாழும் மக்களுக்கு அன்றாடப்பிரச்சினைகள்
அநேகம். ஆனால், அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு
வரும் ஆயுதப்படைக்கு ஒரே ஒரு பிரச்சினைதான் உண்டு.
காதல் - கலியாணம்
- கடன் தொல்லை - வீடற்ற பிரச்சினை - வெளிநாட்டு தபால்களை நம்பியிருக்கும் குடும்பங்களின்
எதிர்பார்ப்பு - கோயில் திருவிழா - வாழ்வாதாரம்
- இவ்வாறு அன்றாடம் பிரச்சினைகளுடன் வாழும்
மக்கள் வாழும் அந்த ஊரில் தேடுதலுக்கு வரும் ஆயுதப்படைக்கு அழிப்பதுமாத்திரம்தான் பிரச்சினை!
அதனை எளிதாக செய்துமுடிக்கிறது!
1986 இல்
எழுதப்பட்டுள்ள இக்கதையில் ஒன்பது காட்சிகள் தனித்தனியாக வந்து இறுதியில் சங்கமிக்கின்றன. உள்ளடக்கம் பல பாத்திரங்களின் இயல்புகளை காண்பிக்கிறது. கிட்டத்தட்ட தொலைக்காட்சி நாடகம் மற்றும் சினிமா எபிசொட் முறையில் கதை நகர்த்தப்படுகிறது. இறுதியில் அந்த மக்களின் அனைத்துப்
பிரச்சினைகளையும் ஆயுதப்படை தனது பாணியில்
தீர்த்துவைக்கிறது.
பாதியில் முடிந்த கதையில் வரும் அம்மா பற்றிய சித்திரிப்பு,
எம்மை நெகிழவைக்கிறது. அம்மா அருகில் இருந்தால் அனைத்துப்
பிரச்சினைகளுக்கும் அம்மாவை நம்புவோம்.
அம்மாவிடம் தீர்வு இருக்கும் என்ற நம்பிக்கை. அம்மாவும் ஓடாக உழைப்பார். ஆனால் அம்மாவின்
பிரச்சினைகளை அறியமாட்டோம். உழைப்புத்தான் அந்த அம்மா! அம்மாவென்றால் உழைப்பு!
இதில் வரும்
வசனம்: இயந்திரங்களுக்குக்கூட ஓய்வு கொடுக்கவேண்டும். இல்லையேல், சூடேறி ஆயுட் காலத்தை
முடித்துக்கொண்டுவிடும். ஆனால், அம்மாவுக்கு கிடைக்கும் ஓய்வை 365 நாட்களிலும் விரல்
விட்டு எண்ணிவிடலாம்.
கடலை நம்பி
வாழும் ஒரு மீனவர் குடும்பத்தின் கதை பசி.
தரையிலும் ஊரடங்கு உத்தரவு! கடலிலும் தடை உத்தரவு. வயிற்றுப்பசிக்கு எந்த உத்தரவாதமும்
இல்லையென்றால் என்ன செய்வது? அம்மக்களின் வாழ்வுக்கோலங்களை உருக்கமாகச்சொல்லும் பார்த்திபன், சுற்றாடலையும் அழகியலோடு இவ்வாறு சித்திரிக்கிறார்:
சூரியன் கடலில்
சுத்தமாகத் தலைமுழுகியதால் கருமேகங்கள் உல்லாசமாக வானவீதியில் அலையத்தொடங்கியது. எனினும்
சிவப்பு முழுவதுமாக அழிக்கப்படவில்லை.
சில பறவைகள்
கூட்டு ஞாபகம் வந்ததினால் வேகமாகத் திரும்பிக்கொண்டிருந்தன. கூச்சலிட்டுக்கொண்டு வந்த
அலைகள் கரையை அண்மித்ததும் காணாமல்போய்விட்டன. அவ்வப்போது காய்ந்த ஓலைகள், மரக்கட்டைகளென்று
அன்பளிப்புகளைப் பத்திரமாக கரையில் கொண்டுவந்து ஒப்படைத்துக்கொண்டிருந்தன.
சம்பவங்களின்
ஊடாகவும் கதைசொல்லும் பார்த்திபன், பாத்திரங்களின் சித்திரிப்பின் வாயிலாகவும் வாசகரின் சிந்தனையில் ஊடுறுவுகின்றார். ஊரிலிருந்து
துணைவியை இறக்குமதி செய்யும்போது நேரும் அனுபவம், அந்நியமாதல், நிறப்பாகுபாடு, காதல்,
குடும்ப உறவு, உழைக்கும் வர்க்கத்திற்கும்
சுரண்டும் வர்க்கத்திற்கும் இடையில் தீராது தொடரும் போராட்டம், பாலியல் சுரண்டல், நாடுவிட்டு
நாடு தப்பியோட உதவும் யாரோ ஒருவனது கடவுச்சீட்டு, மாபியாக்களிடம் சிக்கிச்சீரழியும்
இளம் குருத்துக்கள், போதைவஸ்துக்கும் இலக்கியப்போலித்தனங்களுக்கும்
அடிமையாகும் பிரகிருதிகள் பற்றிய கதைகளை - நமக்குத் தெரிந்த - தெரியாதிருக்கும் கதைகளை பார்த்திபன் சொல்கிறார்.
சில கதைகளில்
காட்சிகளை சித்திரித்துக்கொண்டுவந்து இறுதியில் ஒன்று அல்லது இரண்டு சொற்களில் நச்சென்று
முடிக்கும் உத்திமுறையையும் கையாள்கிறார்.
ஒரு இலங்கைத்
தமிழ் இளைஞன் ஜெர்மனிய யுவதியிடத்தில் கொள்ளும் ஒருதலைப்பட்சக் காதலில் திழைத்திருக்கும் possessiveness இலிருந்து நாட்டுக்கு நாடு வேறுபடும் கலாசாரத்தை
காதல் என்ற கதையில் சொல்லவரும் பார்த்திபன்,
ஜெர்மன் ஸில்வியா மூலம் இலங்கை ஜீவனுக்கு விரிவுரையாற்றுகிறார்!
ஒரு நீண்ட
பந்திக்கு நீளும் இந்தக் கதையின் இறுதிமுடிவையும் சில வரிகளில் நச்சென்று நெத்தியடியாக
முடித்திருக்கலாம் என்றும் எண்ணத்தோன்றுகிறது.
"மூக்குள்ளவரை" என்ற கதையை புன்னகையோடு நகரமுடிகிறது. ஒரு பாண்பேக்கரியில்
வேலை செய்யும் ஒருவர் அவ்வப்போது இலக்கியம்
படைக்கிறார். வேலைத்தலத்தில் மாவை சுவாசித்து
அவருக்கு சளித்தொல்லை வருகிறது. அவரைக்காண்பதற்கு இரண்டு எழுத்தாளர்கள் வந்து எழுதாமல்
இருந்தால் இலக்கியத்திற்கு பேரிழப்பு எனச்சொல்லி எழுதுமாறு தூண்டுகிறார்கள். அதில்
ஒருவருக்கு புகலிடத்தில் தமிழ் மின்னல், தமிழ் வைரம் பட்டங்களும் கொடுத்திருக்கிறார்கள்.
வருசத்திற்கு ஒருமுறையாதல் அவருக்கு பொன்னாடைகளும் கிடைக்கின்றன. அவருடைய இரண்டு புத்தகங்களை
மணிமேகலைப்பிரசுரம் வெளியிட்டுவிட்டதாம். அடுத்த புத்தகமும் தயாராம்! அதன் பெயர்: புலம்பெயர்ந்த நாடுகளில் குழாய்கள் திருத்துவது
எப்படி...?"
வந்திருப்பவர்கள், சளித்தொல்லை வந்து அவதிப்படும் இலக்கிய எழுத்துப்பணியை
குறைத்திருப்பவருக்கு வழங்கும் ஆலோசனைகளையடுத்து, தனக்குவந்திருக்கும் ஒவ்வாமை உபாதையை
வைத்து எழுதத்தொடங்குகிறார். அதற்கு தலைப்பு
வைப்பதற்கு தலையை பிய்த்துக்கொள்கிறார். ஒவ்வாமை என்ற தலைப்பு அவருக்கு திருப்தியில்லை.
தலைப்பெண்டிறது
வலு கிளியராயும் சிம்பிளாயும் இருக்கவேணும். ரண்டு நாளைக்கு பிறகு, " மூக்குள்ளவரை
சளி இருக்கும்" எண்ட தலைப்பு பொருத்தம் போல இருந்துது. ஏதோ தலைப்பில அட்ராக்சன்
இல்லாதமாதிரி கிடக்கு, " இருக்கும்" எண்டதை எடுத்துப்போட்டு, " மூக்குள்ளவரை
சளி".
இதுகும் திருப்தியில்லை.
தலைப்பே முழுவிசயத்தையும் சொல்லிப்போடுது. பிறகார் மிச்சக்கட்டுரையைப் படிச்சு மினக்கெடப்போறாங்கள்.
" சளி" யையும் எடுத்தால், " மூக்குள்ளவரை" இது சுப்பர்.
பார்த்திபனின்
"மூக்குள்ளவரை" கதை இவ்வாறு
அங்கதமாகச்செல்கிறது.
கெட்டனவாழும் என்ற கதை அதிர்வலைகளை எழுப்புகிறது. இந்தியா-
உக்ரேய்ன் - ஜேர்மனி முதலான நாடுகள் கதையின் களம். வாழ்வின் அவலங்களைச்சந்திக்கும் இளம்தலைமுறைபற்றிய கதை. காவல்துறை
- போதை வஸ்த்து - பணிப்பெண் வேலைக்கென ஆசைவார்த்தை சொல்லப்பட்டு மாபியாக்களின் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் யுவதிகள்
- பற்றியெல்லாம் பேசப்படும் கதை.
மொழிதெரியாத
தேசத்தில் ஒரு ஈழத்து தமிழ் இளைஞனுக்கும் உக்ரேனிய யுவதிக்கும் பரிபாஷையும் சைகையும்தான்
தொடர்பாடலுக்கு உதவுகிறது. இடையில் ஒரு காவல்துறை அதிகாரியின் எச்சரிக்கை. எனினும்
அவனுக்கும் கெட்டன பின்னால் வாழும் கும்பலுக்கும் நெருக்கமான உறவு.
கதையின் இறுதி
இவ்வாறு முடிகிறது: அமெரிக்கா ஈராக்கைத்தாக்கியது.
இஸ்ரேலிய
இராணுவம் பாலஸ்தீனச்சிறுவர்களை கொன்றது.
லைபீரியாவில்
ஆளை ஆள் வெட்டி தலைகளை கையில் கொண்டு திரிந்தார்கள்.
பிராங்பேட்டில்
காணாமல்போன ஏழுவயதுச்சிறுவனும் சிறுமியும் மூன்றுநாள் பாலியல் பலாத்காரத்தின் பின்
பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்கள்.
இந்தசெய்திகள்
யாவும் தொலைக்காட்சியில் நகருகிறது. மேற்கொண்டு
இந்தக்கதையின் நாயகனால் அதனைப்பார்க்கமுடியவில்லை. இந்த உலகம் கெட்டது அழிந்துபோகட்டும் என்ற தீர்மானத்திற்கு
வருகின்றான்.
பார்த்திபனின்
கதைகள் சிலவற்றில் இந்த அந்நியமாதல் அம்சங்களும் தெரிகின்றன. நாடற்றவர் - தனித்திருப்பவர்
- வீடற்றவர் - வாழ்வைத் தொலைத்தவர் - ஏஜண்டை
நம்பிவந்து நடுவழியில் ஆனாதையாக செத்துப்போனவர்கள் - மற்றும்
ஒருவரின் கடவுச்சீட்டில் நாடுகடந்து விபத்தில் கொல்லப்பட்டு காணாமல் போனவர்கள் - இவ்வாறு அற்றுப்போனவர்கள் பற்றிய கதைகளை புகலிடத்திலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் பார்த்திபனிடம் இன்னும் பல
கதைகள் இருக்கலாம்.
இவர் முற்றிலும் வித்தியாசமான படைப்பாளி. படைப்புமொழியில்
அவர் அறிமுகப்படுத்தும் உத்திகள் புதிய வரவு. இதனை பின்பற்றி மற்றவர்களையும் எழுதுவதற்கு இவர் தூண்டுவார் எனவும் நம்பலாம்.
புகலிடத்திற்கு வெளியே இலங்கை - தமிழகத்தில் பார்த்திபன்
பரவலாக அறியப்படாவிட்டாலும், இந்த நூலின் பின்னிணைப்பில் இடம்பெறும் எதிர்வினைகளிலிருந்து
இவர் பலரால் திறனாய்வுசெய்யப்பட்டுத்தான் இருக்கிறார் என்ற உண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான்
வேண்டும். பார்த்திபன் தொடர்ந்து எழுதவேண்டும்.
அவருக்கு எமது வாழ்த்துக்கள்.
letchumananm@gmail.com
No comments:
Post a Comment