இலங்கைச் செய்திகள்


வெளியாகியது நாடே எதிர்பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு!!!

அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை  

மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் -  ரிஷாட் கோரிக்கை

வாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த

நாம் ஆட்சி அமைத்தவுடன்  தமிழருக்கு தீர்வு நிச்சயம்  சம்பந்தனிடம் ரணில் 

போர்க்களமாக மாறிய பாராளுமன்ற காட்சிகள்

இன்றைய சம்பவங்கள்- பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகரின் கருத்து என்ன?

கொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்

வடமராட்சியில் வாள்வெட்டு தாக்குதல்

விரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்

பலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த

ஜனாதிபதியின் விசேட அழைப்பு

சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த

நாங்கள் ஒப்படைக்கத் தயார், நீங்கள் தயாரா? - சவால் விடுத்த அஜித் பி பெரேரா

ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன் 


வெளியாகியது நாடே எதிர்பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு!!!

13/11/2018 நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீர்மானம் மிக்கதோர் தீர்ப்பானது பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர் குழாமினால் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் திடீரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.
இச் சம்பவத்தின் காரணமாக நாட்டில் யார் பிரதமர்? என்ற குழப்ப நிலை நிலவி வந்த நிலையில் ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றை கலைத்து பொதுத்தேர்தலுக்கு அழைப்பு வர்த்தமானியில் கையெழுத்திட்டார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இவ்வாறு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. 
ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி 12 மனுக்களும் இவ் விடயம் தொடர்பாக 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானதே என கூறி 5 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
குறித்த மனு விசாரணையானது உச்ச நீதிமன்றில் பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை குறித்த இடைக்கால தடையுத்தரவானது விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதேவேளை, டிசம்பர் மாதம்  4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.  
குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.   நன்றி வீரகேசரி 

அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை  

13/11/2018 உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.
பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
பாதுகாப்பை பலப்படுத்துமாறும்  அமைதியான சூழ்நிலையை பேணுமாறும் முப்படையினருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் 
ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் -  ரிஷாட் கோரிக்கை

14/11/2018 நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற செய்தியாளர் மாநாட்டில் இன்று கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
கடந்த இரண்டு வாரங்களாக இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் கொந்தளிப்புக்கள், குளறுபடிகள் நீங்கி, மீண்டும் இந்த நாட்டில் அமைதியானதும், சமாதானதுமான சூழல் ஏற்படுவதற்கு ஜனாதிபதி வழிவகுக்க வேண்டும்.
சுதந்திரத்துக்குப் பின்னர், இந்த நாட்டில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 
அவற்றை எல்லாம் முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலேயே, பெரும்பாலான சிறுபான்மை மக்கள் நிம்மதி, சமாதானம் மற்றும் சந்தோசத்தை எதிர்பார்த்தவர்களாக, ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்து, நாட்டுத் தலைவராக்கினர்.
எனினும், கடந்த 26 ஆம் திகதி ஜனாதிபதியால் இழைக்கப்பட்ட மாபெரும் தவறு, அதன்பின்னர், அடுத்தடுத்து முன்னெடுக்கப்பட்ட பிழையான விடயங்கள் காரணமாக, ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற நோக்கில் நீதிமன்றத்தின் தயவை நாடினோம்.
ஜனநாயகம் தழைத்தோங்கும் வகையிலே, நேற்றுய தினம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பின்னராவது, ஜனாதிபதி இவ்வாறான தவறுகளை செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
அவரால் நியமிக்கப்பட்ட பிரதமாரான மஹிந்த ராஜபக்ஷவையும், புதிய அமைச்சரவையையும் நிராகரிக்குமாறு 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்டு, சபாநாயகரிடம் கையளித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாங்கள் கையை உயர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளோம்.
இதன் பிறகு நாட்டிலே நல்லதொரு அரசியல் சுமுகநிலை ஏற்படும் என்ற பாரிய நம்பிக்கை எமக்குள்ளது என்று தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி வாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த

14/11/2018 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார். 


பாராளுமன்றம் இன்று கூடிய நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.  
சபைக்கூடும் முன்பே சபைக்குள் வந்து அமர்ந்திருந்த பிரதமர் மஹிந்த  ராஜபக்ஷ, சபை நடவடிக்கைகளை சிரித்தவாறே அவதானித்துக்கொண்டிருந்தார். 
இடை இடையே ஐக்கிய தேசியக் கட்சியை பார்த்து  கைகளையும் காட்டிக்கொண்டிருந்தார். 
இதன் பின்னர்  ஆளும் கட்சிக்கும்  எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும்வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பிரதமர் மஹிந்த  ராஜபக்ஷ தன் கருத்துகளை முன்வைக்க முற்பட்ட போதும் அதற்கான வாய்ப்பும் ஒலிவாங்கியும் அவருக்கு வழங்கப்படவில்லை. 
ஆனால் நிலைமை மோசமடைந்து எதிர்க்கட்சிகளின் கையோங்கிய நிலையில் அவர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்புக்குவிடப்பட தயாரானபோது பிரதமரை சக அமைச்சர்களும் உறுப்பினர்களும் சபைக்கு வெளியே அழைத்துச் சென்றுவிட்டனர்.  நன்றி வீரகேசரி நாம் ஆட்சி அமைத்தவுடன்  தமிழருக்கு தீர்வு நிச்சயம்  சம்பந்தனிடம் ரணில் 
14/11/2018 ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்  ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். 
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர்  பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதியென ரணில் - சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். 
பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். 
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய  கூட்டத்தில் கலந்துகொண்டதுடன் சித்தார்த்தன் எம்.பி மாத்திரம் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. 
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குழுவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.  
ஐக்கிய தேசியக் கட்சியும்  அதன் தலைமைத்துவமும் நெருக்கடியில் உள்ள நிலைகளில் எமது ஆதரவை தருகின்றோம். ஆனால் இதற்கான பலன் என்னவென மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். அதற்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்வியும் எழுப்பியுள்ளனர்.  நன்றி வீரகேசரி போர்க்களமாக மாறிய பாராளுமன்ற காட்சிகள்
15/11/2018 இன்று காலை சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் உரை மீது எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்த போது பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டது. 


பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய மீது அரச தரப்பினர் மேற்கொண்ட தாக்குதகளை அடுத்து ஏற்பட்ட கைகலப்பு மற்றும் களேபரங்களினால் சபை பெரும் அல்லோலக் கல்லோலப்பட்டதுடன் சில உறுப்பினர்களுக்கு இரத்தக் காயங்களும் ஏற்பட்டது.


நன்றி வீரகேசரி
இன்றைய சம்பவங்கள்- பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகரின் கருத்து என்ன?

16/11/2018 இலங்கை பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து இலங்கை;;கான  பிரிட்டனின் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் கவலையுடன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் முக்கியமான பணிகளையாற்றுவதற்கே பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தனர் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கை மக்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை மீண்டும் பார்த்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களிற்கும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பாரளுமன்றத்திற்கும் உரிய விதத்தில் செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் அதன் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அதன் உறுப்பினர்களே தடுத்தால் எந்த பாராளுமன்றமும் இயங்கமுடியாது எனவும் பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 


கொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்

16/11/2018 பாராளுமன்றில் இன்று மஹிந்த ராஜபக்ஷவின் கொலைவெறி கொண்ட குழுவினர் அராஜகமாக நடந்துகொண்டதை, மேலும் ஊக்குவிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக பாராளுமன்றுக்கு ஹெலிகொப்டரில் வந்திறங்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

சாதாரண தரப் பரீட்சையில் கூட தோற்றாத படிப்பறிவற்ற மீன் வியாபாரம், குடு, கசிப்பு விற்பனை செய்த சிலரே இன்று பாராளுமன்றில் அராஜகத்தில் முன்னின்று செயற்பட்டனர் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதியான இருந்த எனக்கு பிரதமர் பதவி ஆசையில்லை என்று கூறும் மஹிந்த ராஜபக்ஷ, பெரும்பான்மை இல்லாத போதும் ஏன் பதவியை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்.  
உண்மையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் மதிப்பவராக இருந்தால் அவராக பதவியை ராஜினாமா செய்து செல்ல வேண்டும். 
அவ்வாறு செய்திருந்தால் நாட்டு மக்கள் அல்ல உலகமே பாராட்டியிருக்கும்.
ஆனால் மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டுள்ளனர்.மனிதப் படுகொலைகளையும், பாரிய கொள்ளைகளையும் செய்த சிலருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழங்குத்தாக்கல்கள் நிலுவையில் உள்ளன.அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவே மீண்டும் கொலைவெறியுடன் இன்று பாராளுமன்றில் நடந்துகொள்கின்றனர்.
மேற்குல நாடுகளில் எவ்வாறான பாராளுமன்ற முறைமை இருக்கின்றது என்று கூட தெரியாதவர்களே இன்று எமது பாராளுமன்றில் இருக்கின்றனர். 
சிறிதளவும் படிப்பறிவு அற்ற இவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்யும் நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 

வடமராட்சியில் வாள்வெட்டு தாக்குதல்

17/11/2018 வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது வர்த்தக நிலையத்திலிருந்த பொருட்களை சேதப்படுத்துயும் வர்த்தக நிலையத்தை அடித்து நொருக்கியும் அங்கிருந்தவர்களை வெட்டி காயப்படுத்தியும் உள்ளனர்.
இச் சம்பவம் கஜா புயல் தாக்கம் ஏற்பட்ட கடந்த வியாழக்கிழமை இரவு இமையாணன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது.
கடந்த வியாழக்கிழமை முகமூடிகளை அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு கொண்டு வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் ஒரு குழுவினர் வந்து இறங்குயுள்ளனர்.
இதன் போது அங்குள்ள வர்த்தக நிலையமொன்றை அடித்து நொருக்கி அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்துயுள்ளனர். 
இவ்வாறு அட்டகாசத்தில் வாள்வவெட்டுக் கும்பல் ஈடுபட்டதுடன் அங்கிருந்தவர்களை வாள் கொண்டு அச்சுறுத்தியுள்ளனர். 
இந்தக் கும்பலின் அட்டகாசங்கள் அங்கிருந்த  சீ.சீ.ரீ.வீ கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது 
இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள வர்த்தக நிலைய மொன்றையும் நீக்கியுள்ளார். இதனால் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.  நன்றி வீரகேசரி 


விரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்

17/11/2018 நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு ஜனநாயகத்துக்கு அமைவாக ஜனாதிபதி விரைந்து தீர்க்கப்பட வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு முன்வருதல் தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான செயற்பாடுகள் மற்றும், பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பிலான இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று  வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்ற போதே மேற்கண்ட விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 


பலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த

17/11/2018 “என்னை பலவந்தமாகவும் முறையற்ற விதத்திலும் பதவி நீக்க முடியாது” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வீரகெட்டியவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 

ஜனாதிபதியின் விசேட அழைப்பு

18/11/2018 பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியினால் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 

சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

18/11/2018 இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்தும்படியும், மக்களின் உரிமையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியும் மாத்தளை நகரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாத்தளை பிரதேச சபை தலைவர் கபில பண்டார கேன்தெனிய, உறுப்பினர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு மாத்தளை நகரத்தில் ஊர்வமாக சென்று பட்டாசு வெடித்து சுமார் ஒரு மணித்தியாலயம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது. நன்றி வீரகேசரி 


ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த

18/11/2018 ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற சர்வகட்சி சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி  மைத்தரிபால சிறிசேன  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி நாங்கள் ஒப்படைக்கத் தயார், நீங்கள் தயாரா? - சவால் விடுத்த அஜித் பி பெரேரா

18/11/2018 மஹிந்த ராஜபக்ஷவுக்கும், புதிய அமைச்சரவைக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 113 பேர் கையொப்பமிட்டு எமது பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஜனாதிபதியிடம் சவால் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வ கட்சி சந்திப்பின்போதே அவர் ஜனாதிபதியிடம் இந்த சவாலை விடுத்துள்ளார்.
மேலும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவா 113 பேர் கையொப்பமிட்ட கடிதத்தினை நாளை காலை ஜனாதிபதியிடம் கையளிக்கத் தயார் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.  நன்றி வீரகேசரி ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன் 

18/11/2018 ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் எம்மை ஒன்றிணைக்கும் பணியை தமிழ் மக்கள் பேரவையின் பிரமுகர்கள் மேற்கொள்வார்கள் என்று நம்புகின்றேன். என்னைப் பொறுத்த வரையில் தண்ணீர் கலந்த மிளகாய்த்தூளை யார் மேலுந் தெளிக்காது உங்கள் முடிவை மனமுவந்து ஏற்றுக் கொள்வேன்.என  தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
 கடந்த மாதம் 24 ஆம் திகதிய விசேட பெருங் கூட்டத்தின் பின்னர் இன்று கூடுகின்றோம். அன்று தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியின் உருவாக்கம் பற்றி அறியத்தரப்பட்டது. அவ்வாறான உருவாக்கத்தின் பின்னரான சூழ்நிலை பற்றியும் தொடர்பு நிலை பற்றியும் இன்று பரிசீலிக்க வேண்டியுள்ளதாய் உள்ளது.
கட்சிகளின் சின்னங்கள் பல காலம் பாவிக்கப்படும் போது அவற்றுடன் அந்தந்தக் கட்சிகள் மேலுள்ள மதிப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்பு போன்றவை அடையாளப்படுத்தப்படுகின்றன. புதிதாக கொள்கை அடிப்படையில் அரசியலில் உள் நுழைவோர், அந்தந்தக் கட்சிகளின் சின்னங்களுடன் சேர்ந்து தேர்தலில் ஈடுபட்டால் அல்லது அவற்றின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டால் அந்தந்தக் கட்சி சின்னங்கள் சம்பந்தமாக மக்களிடையே இருக்கும் நம்பிக்கைகளும், அவ் நம்பிக்கைகளும் புதிய கட்சியின் மேலும் பதியும். 
அதன் பின்னர் சின்னத்தைத் தரும் அந்தக் கட்சியின் பொறுப்புக்களையும் இறந்த கால நிகழ்வுகளையும் புதிய கட்சி தாங்கிப் பயணிக்க வேண்டியிருக்கும். கொள்கைகளைப் பரப்ப வந்த நாங்கள் கடந்த கால கோபதாபங்களிற்கு ஆளாக நேரிடும். அதனால்த்தான் நாம் ஒரு பொதுவான சின்னத்துடன் அல்லது புதிய சின்னத்துடன் கொள்கைகள் சார்ந்து பயணிக்க வேண்டும் என்று எமது கட்சி பற்றி அபிப்பிராயம் தெரிவித்துள்ளேன்.
அடுத்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான எனது பொறுப்புக்கள் மீள் பரிசீலனை செய்யப்படவேண்டியுள்ளது. நான் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராக இருந்த போதே தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியின் ஸ்தாபகராகவும் செயலாளர் நாயகமாகவும் மாறியுள்ளேன். நான் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராக கடமையாற்றலாமா என்பதை உங்கள் பரிசீலனைக்கு விடுகின்றேன்.
எமது கட்சியின் அரசியல் குறிக்கோள்கள் பேரவையின் அரசியல் குறிக்கோள்களுக்கு மாறுபட்டதன்று. எமக்குள் நலவுரித்து முரண்பாடுகள் எழ வேண்டிய அவசியமில்லை. (Conflict of interests). ஆனால் பேரவையில் ஏற்கனவே இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கும் எமக்கும் கொள்கை அளவில் மாறுபாடுகள் இருக்கலாம். 
உதாரணமாக  சித்தார்த்தனின் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தே செயலாற்றி வருகின்றது. அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை நான் ஏற்க முடியாததால்த் தான் நான் அதிலிருந்து வெளியேறினேன். அந்த வகையில் சித்தார்த்தனுடன் எமக்கு கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கலாம். அதே போல் கூட்டமைப்பில் இணைந்திருக்கும் மற்றைய அரசியல் கட்சிகளின் நலங்களுடன் எமக்கு முரண்பாடுகள் எழக்கூடும். ஆனால் தமிழ் மக்கள் பேரவை என்ற மக்களின் கூட்டு சேர்ந்த இயக்கத்தில் இருந்து வெளிப்பட்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணி பேரவையுடன் கொள்கை ரீதியாக முரண்பாடுகளை எதிர்நோக்கக் காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. 
அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுசரணையுடன் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளப்பட்ட நான் குறித்த பதவி முடியும் வரை தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராகக் கடமையாற்றி வந்துள்ளேன். முரண்பாடுகள் எழவில்லை. அரசியல் முன்மொழிவுகள் அரசாங்கத்தின் முன் தமிழ் மக்கள் பேரவையினாலும் முன்வைக்கப்பட்டன. நான் அங்கம் வகித்த வடமாகாண சபையினாலும் முன்வைக்கப்பட்டன.
எது எவ்வாறு இருப்பினும் நான் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராகக் கடமையாற்றலாமா என்பது பற்றி நீங்களே தீர்மானிக்க வேண்டும். அடுத்து பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் கடந்த கால தேர்தல் செயற்பாடுகள் பற்றி ஆராய வேண்டியுள்ளதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையுடன் ஒருமித்த கொள்கைகள் கொண்ட கட்சிகள் சில தமக்குள் முரண்பட்டுள்ள ஒரு நிலை இன்று காணப்படுகிறது. 
அவற்றைத் தீர்ப்பது அந்தந்தக் கட்சிகளின் சவாலும் பொறுப்பும் ஆகும். அந்த முரண்பாடுகளுக்கான காரணம் பொதுநலம் என எடுத்துக்காட்டப்பட்டாலும் கட்சி நலம் கலந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆகவே தமிழ் மக்கள் பேரவையோ தமிழ் மக்கள் கூட்டணியோ அந்தக் கட்சிகளின் முரண்பாடுகளை தமக்குள் ஈர்க்க வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. அவர்களின் முரண்பாடுகளை மனதில் வைத்தே எமது கூட்டணி சுதந்திரமாகப் பொதுச்சின்னம் ஒன்றில் கட்சி அரசியலில் நுழையத் தீர்மானம் எடுத்துள்ளது. மற்றைய கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கொள்கை அடிப்படையில் எம்முடன் தேர்தல் உடன்பாடுகள் வைத்துக் கொள்ளலாம்.
எமது அங்கத்துவக் கட்சிகளின் முரண்பாடுகள் கொள்கை ரீதியானவையா கட்சி நல உரித்துக்கள் சம்பந்தப்பட்டவையா என்று நாம் பார்க்க வேண்டும். கட்சி நலவுரித்துக்கள் எம்மைக் கட்டுப்படுத்தாது. ஆனால் கொள்கை முரண்பாடுகள் எம்மை உள்ளீர்ப்பன. சில வேளைகளில் கொள்கைகள் ஒன்றாக இருக்க நடைமுறைச் செயற்பாடுகள் முரண்பாடுடையன என்று ஒரு கட்சி மற்றைய கட்சி பற்றி விமர்சிக்கக்கூடும். அவற்றைத் தீர்த்து வைக்க தமிழ் மக்கள் பேரவை அவர்களின் முரண்பாடுகளிடையே உள்நுழைய வேண்டும் என்பதில்லை. 
தனிப்பட்ட ரீதியில் பேரவையின் இணைத்தலைவர்களோ அங்கத்தவர்களோ அம் முரண்பாடுகளை நீக்க இரு சாராரினாலும் கோரப்பட்டார்கள் என்றால் அவற்றைத் தீர்க்க அவர்கள் முன்வரலாம். உதாரணத்திற்கு கஜேந்திரகுமாரின் கட்சிக்கும்  சுரேஷ் பிரேமச்சந்திரனின் கட்சிக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடுகளை நீக்க எமது இணைத்தலைவர் ஒருவர் முன்வரலாம். ஆனால் அது அந்த இணைத்தலைவரின் தனித்துவமான அவரின் ஏற்புடைத் தன்மையைப் பொறுத்து ஏற்கப்பட்ட கடமையாகவே இருக்கும்.
மூன்றாவதாக இன்று நாம் பரிசீலிக்கப் போவது அங்கத்துவக் கட்சிகளின் தேர்தல் செயற்பாடுகள் பற்றிய பேரவையின் கொள்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதாகும். அதனை நீங்களே தீர்மானிக்க வேண்டும். தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்கள் பேரவையில் இருந்து வெளிவந்த ஒரு கட்சி. பேரவை உருவாக்கும் போது அன்று நடைமுறையில் இல்லாத கட்சி. மற்றைய கட்சிகள் பேரவையை உருவாக்க உதவி புரிந்த கட்சிகள். இவற்றுள் வேறுபாடு காட்ட வேண்டுமா என்பது உங்களைச் சார்ந்தது. இப்பொழுது கூட பேரவையில் அங்கம் வகிக்கும் பலரே கூட்டணியின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கின்றார்கள். உதாரணத்திற்குப் பேராசிரியர் சிவநாதனைக் குறிப்பிடலாம். இவை யாவும் பற்றி நாம் இன்று கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
நாம் ஒற்றுமையுடனும் பரஸ்பர நம்பிக்கையுடனும் கட்சி பேதங்களைக் கடந்து இதுவரை காலமும் செயற்பட்டதன் விளைவாகவே தமிழ் மக்கள் பேரவையை எமது மக்கள் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் பார்த்து வந்துள்ளார்கள். எமது இந்த ஒற்றுமைதான் ‘எழுக தமிழ்’ போன்ற பல காத்திரமான செயற்பாடுகளை நாம் கடந்த சில வருடங்களில் இயற்ற வழிவகுத்திருந்தது. இது தொடரவேண்டும். எமது ஒற்றுமையின் மூலம் நாம் செய்யவேண்டிய பல காரியங்கள் இருக்கின்றன. நாம் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் அரசியல் நடவடிக்கைகளிலும் இந்த ஒற்றுமை நிலவவேண்டும் என்று எமது மக்கள் சார்பாக நான் எதிர்பார்க்கின்றேன்.
கடந்த காலங்களில் எமக்கிடையே சில கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம். இது சிலர் மனதை புண்படுத்தி இருக்கலாம். சிலருக்கு ஏமாற்றம் அளித்திருக்கலாம். சிலர் மத்தியில் பல சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் ஏற்படுத்தியும் இருக்கலாம். நான் அவற்றைப் புரிந்துகொள்கின்றேன். அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அதே தவறுகள் இடம்பெறாமல் நாம் எவ்வாறு எமது மக்களுக்கு சேவை செய்யப்போகிறோம், எவ்வாறு எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடையப்போகிறோம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு கடமையாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாம் இன்று நிற்கின்றோம். 
எமக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் நாம் முரண்பட்டுக் கொண்டு சண்டையிட்டுக்கொண்டு எம்மை நாமே அழிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட நாம் இனிமேலும் இடமளிக்கமுடியாது. சில சக்திகள் எம்முள் முரண்பாடுகளை முன்னெடுக்க மும்முரமாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் மறத்தலாகாது. எமக்கு இடையிலான அரசியல் ரீதியான காழ்ப்புணர்வுகள் மற்றும் வன்முறையான முரண்பாடுகள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கு எந்தளவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் இங்கு இருக்கும் எந்தவொரு கட்சிக்கும் பக்க சார்பாக செயற்படமுடியாது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியும் தனித்துவம் மிக்கவை. அந்த நிலைக்கு ஏற்ப அரசியலை எவ்வாறு எதிர்கொள்வது என்று நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் குறுக்கே நிற்கமாட்டேன். அது உங்களைப் பொறுத்த விடயம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது மக்களின் பிரச்சினையைக் கையாண்ட விதத்தில் எனக்கு எள்ளளவும் உடன்பாடு இருக்கவில்லை. அவர்கள் கொள்கை பிறழ்ந்தார்கள் என்று நான் நம்பியதால் அவர்களுடன் முரண்பட்டு வெளியேறினேன். அதற்காக இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பின் மீதோ அதன் தலைவர் சித்தார்த்தன் மீதோ எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வித கோப தாபங்களும் இல்லை. அரசியலில் நண்பர் சித்தார்த்தனின் அணுகுமுறை வேறாக இருக்கலாம். ஆனால் அவர் எனது நண்பர். என் மதிப்புக்குரிய ஒருவரின் மகன். அவருடன் இணைந்து பல வேலைகளை தமிழ் மக்கள் பேரவையில் நாம் எல்லோரும் முன்னெடுத்திருக்கின்றோம். அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சி ரீதியாக கூறு போடும் வேலையை நான் செய்யமாட்டேன்.
அதேவேளை, கொள்கை ரீதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முரண்பட்டு வெளியேறிய கட்சிகள் இங்கு இருக்கின்றன. அவர்களுடன் கொள்கை அடிப்படையில் ஒற்றுமையாக இணைந்து அரசியலில் செயற்படுவதே எனது விருப்பம்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளும் செயற்பாடுகளும் தமிழ் மக்கள் கூட்டணியுடன் முரண்படுவதால் நாம் சேர்ந்து மக்கள் முன்னிலையில் எமது கருத்துக்களை எடுத்துச் சொல்லி எமது கொள்கைகளுக்கு மக்களின் ஆதரவைப் பெற நாம் முயல வேண்டும் என்று கருதுகின்றேன். இந்த விதத்தில் தேசியக் கட்சிகளுடன் தற்பொழுது ஒரே கருத்துடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரே எதிர்மாறான கருத்துடைய ஒரு துருவக் கட்சியாக நாம் சேர்ந்து பயணிக்க வேண்டும். மாற்றுத் தலைமைத்துவத்தை உருவாக்கக் காலம் கனிந்துள்ளது. தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளுடன் நாம் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு.
நான் எந்தக் கட்சிக்கும் பக்க சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. இது எமக்கிடையிலான ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும். பிரிவினைகளை மேலும் ஏற்படுத்தும். தமிழ் மக்கள் பேரவைக்குள் பிளவை ஏற்படுத்தும். அதனால் தான், எந்தக் கட்சிக்கும் சார்பாகச் செயற்படாமல் ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும் EPDP தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளை அழைக்கிறேன். மீண்டும் மீண்டும் எமக்குள்ளேயே குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு தொடர்ந்தும் எமக்குள் முரண்பட்டுக்கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு இடங்கொடாமல் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு ஊடாகத் தேர்தல் அரசியலை பயன்படுத்திக்கொள்வதற்கு என்னுடன் கைகோர்க்குமாறு அழைக்கிறேன்.
கொள்கை அடிப்படையில் நாம் ஒன்றாக செயற்படுவோம். எங்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகளை எமது மக்களின் நன்மை கருதி களைந்துகொள்ளுவோம். எமது கூட்டு வெற்றியை நம்பி செயற்படுங்கள். எம்முடன் ஒத்த கருத்துடைய யாவரும் இணையுங்கள். நாம் கொள்கையில் பற்றுறுதி கொண்டு செயற்படுவோம்.
அதேவேளை, ஒற்றுமை என்ற காரணத்துக்காக தவறுகளைக் கண்டும் காணாது இருந்துவிட முடியாது. எமது பயணத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு நாம் இடம்கொடுக்க முடியாது. நான் தவறு விட்டால் அதனைச் சுட்டிக்காட்டி தக்க நடவடிக்கை எடுக்கும் கடமை உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. இதுவரையில் நடந்த எமது தவறுகளை மறப்போம், மன்னிப்போம். இதன் பின் நாம் ஒன்றாகக் கைகோர்த்து பயணிப்போம். ஆனால் இனிமேலும் தவறுகள் இடம்பெறாமல் இலட்சியத்தை மனதில் நிறுத்தி செயற்படுவோம். தவறுகளைத் தக்க முறையில் கையாள்வோம். ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் எம்மை ஒன்றிணைக்கும் பணியை தமிழ் மக்கள் பேரவையின் பிரமுகர்கள் மேற்கொள்வார்கள் என்று நம்புகின்றேன். என்னைப் பொறுத்த வரையில் தண்ணீர் கலந்த மிளகாய்த்தூளை யார் மேலுந் தெளிக்காது உங்கள் முடிவை மனமுவந்து ஏற்றுக் கொள்வேன்.   நன்றி வீரகேசரி 
No comments: