போர்களத்தில் ஒரு திருமணம்.. (அணிந்துரை)




ரு பகைக் கொண்டு மனிதரைக் கொல்வாய்
விலங்குகளையும் மனிதரென வெட்டுவாய்
பொருட்களை ஒழிப்பாய்
எல்லாம் ஒழிந்து தனியே நிற்கையில்
தனிமை உனைக் கொன்றொழிக்கும்,
உள்ளேயொரு மனசு எதற்கோ வீறிட்டு அழுகையில் உடம்பெல்லாம் ஒரு கேவு கேவும்
கதறியுனை அழச் சொல்லும்,
தனியே வாழ்தல் வாழ்தலல்ல; உயிர்த்திருத்தல்
மட்டுமே அது.,
தனித்திரு, மனதால், ஆசையொழிய தனித்திரு அது வேறு
ஆனால் நீ மகிழ்கையில் மகிழ, வெல்கையில் உனக்குக் கைத்தட்ட
கூடயிருந்து உன்னோடு பூரிப்படைய இந்த மனிதர்கள் வேண்டுமென்பதை உணர்த்திய சில போர்கள் உண்டு.

நடக்கும் அத்தனைப் போரும் வெற்றியை ஈட்டுபவை மட்டுமல்ல. சிலது வேதாந்தம் போதித்தவை. சிலது காவியத்தை படைத்தவை. சிலது கண்ணீர் கதையெழுதிச் சென்றவை. அப்படி நடக்குமொரு போரில் கற்ற வேதாந்தமாய்த்தான் இந்த நாவலையொரு திருமணத்தை மைய்யப்படுத்தி கதையினூடாகவொரு வரலாற்றை நினைவுபடுத்தும் சிறப்புமிக்கதொரு சாதனைக் கதையை தந்திருக்கிறார் திரு. எச். ஜோஸ்.


சிலருடன் பழக பழகத்தான் அவர்களுடைய இனிப்பை அருங்குணத்தை உணரமுடியும், சிலரைப் பார்த்தாலே இனிப்பாய் தெரிவர், சிலரைப் படித்தால் அவருடைய மனசு புரியும், அத்தகு வடிவில் கதையினூடே நமக்கும் தனது மனதைத் திறந்து காட்டுகிறார் திரு. ஜோஸ் எனும் இப்புதிய படைப்பின் கதையாசிரியர்.
ஒரு புதிய படைப்பாளியின் முதல் புத்தகம் இதுவென்றுச் சொன்னால் அதை அறவே நம்புவதற்கில்லை. பிறக்கும் குழந்தை ஞானியாகவே பிறப்பதைப்போல முதல் படைப்பையே இத்தனை பேராற்றல் கொண்ட எழுத்து நடையோடு தந்து நமக்கெல்லாம் ஒரு பெருநம்பிக்கையை தந்திருக்கிறார்.
கதை சொல்வது ஒருபாங்கு. கதை சொல்ல இவர் வேண்டுமென்று எழுத்தே ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்வது ஒரு வரம்; அப்படி இவர் தமிழுலகம் தேடிய ஒரு வரமென்றே சொல்ல மனம் விழைகிறது முழு நம்பிக்கையோடு. காரணம், சாண்டிலியன், கல்கி போன்றவர்களின் வரிசையில் வரும் பல படைப்பாளிகளை படித்தவர்கள் உணர்வர் இவருடைய நாவலின் நடையழகையும் பெயர்கள் சூட்டியுள்ள தனித்தன்மையையும் பற்றியெல்லாம் என்பதே உண்மை.
எனக்கொரு கவலை இருந்துவந்தது, கதைச் சொல்லிகள் குறைகிறார்களோ என்றொரு மனக்கவலையாக அது இருந்தது. அதுபோல் எனக்கு நெடுநாளாகவே யொரு ஆசையும் இருந்தது எப்படியேனும் ஒரு வரலாறுக் கதையெழுதி விடவேண்டுமென. மண்ணின் வரலாறுகளையும், சென்னைப் போன்ற பெருநகரங்களின் கதைகளையும், உள்ளது உள்ளபடியும் வாழ்ந்ததை வாழ்ந்த படியும் எழுதவெல்லாம் எனக்கு நிறைய ஆசை உண்டு. ஆயினும் பல வேலைகளின் பொருட்டும் நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள இயலாமையினாலும் என்னால் அவைகளை இதுவரை தீர செய்திட இயலவில்லை. ஆனால் தம்பி திரு. எச். ஜோஸ் அவர்கள் அந்த குறையை ஒருபாதி போக்கும் விதமாக ஒரு வரலாற்றுக் கதையைப்போலவே தனது கற்பனை வளத்தின் மூலம் சிறந்ததொரு நடையில் இந்த எழில்மிகு வர்ணனைகள் கூடிய இந் நாவலை நிகழ்காலத்தில் நாம் நம் கண்ணில் காண்பதுபோலவே ஒவ்வொரு காட்சிகளையும் வனப்பு குறைவின்றி எழுதிக் காட்டியிருக்கிறார்.
ஒரு தனக்கான படைப்பாளியை தானெ தேர்ந்தெடுத்துக் கொள்வதென்பது தமிழுக்கே உள்ள மகதுவம் ஆகும். நாம் உணர்வோடு எழுதத் துவங்கினால் நமைக்கொண்டு ஒரு காலதவத்தையே எழுத்திற்குள் தீர்த்துக்கொள்ளும் மகத்துவ மொழி; தமிழ். அப்படிப்பட்ட இனிய தமிழ் இவர்மூலம் நம்மிடம் ஒரு நல்ல கதையைப் பேசுகிறது. ஒரு இனிய தமிழ் நடையை நமக்கு தரிசிக்க தருகிறது. அத்தகு பிரம்மாண்ட எழுத்து நடை இவருடைய எழுத்து நடை. அழகான பண்பு நிறைந்த கதைத்துவம் இவரிடம் உண்டு. நான் இடையிடையே சொலவதுண்டு ஐயா கல்கியின் ஆவி பிடித்துக் கொண்டதோ உன்னையென்று; வேண்டுமனில் பாருங்கள் இது முகம் நோக்கி பேசல் அல்ல, இது என் வாக்கு. எதிர்காலத்தில் பெருமைப்படத் தக்க ஒரு நல்ல படைப்பாளியாக இவர் திகழ்வார் என்பது திண்ணம். இப்படைப்பும் அதற்கேற்ற பல விருதுகளையும் பெருமைகளையும் அடையும் என்பதே நம்பிக்கை.
தமிழுலகம் பெரும்பேறு பெற்ற மண். இங்கே துளிர்ப்பவர்கள் உலகத்தை நோக்கியே பயணிக்கின்றனர். உலகத்திற்காகவே உருகி பல படைப்புக்களை படைக்கின்றனர், அப்படி இவருடைய பயணமும் உலகளவில் நீளும், நமது தமிழ் மண்ணிற்கு ஒரு சிறந்த படைப்பாளியாக வாழும் வரலாற்று கதைச் சொல்லியாக இவரும் திகழ்வாரென்பது எனது ஆழமான எதிர்ப்பார்ப்பு. அதற்கான என் முழு வாழ்த்தும் ஆசியும் அருமை தம்பிக்கு உண்டு.
வாழ்வாங்கு வாழட்டும் பல வராறுகளை படைக்கட்டுமென வாழ்த்தி., தமிழாளை வணங்கி, அவரின் எழுத்தை மதித்து, உங்களையும் உரிமையோடு இந்நாவலை வாசிக்க மனமுவந்து அழைக்கிறேன்..
மானுடக் கருணையின் பேரன்போடு..
வித்யாசாகர்
பதிப்பாசிரியர், முகில் பதிப்பகம்



No comments: