மெல்பேண் பாரதி பள்ளி தமிழ்ப் பாடசாலை SOUTH MORANG வளாகத்தின் நாடக விழா - 2018.


அவுஸ்திரேலியா மெல்பேணில் இயங்கிவரும் பாரதி பள்ளி தமிழ்ப் பாடசாலையின் SOUTH MORANG வளாகத்தின் நாடக விழா 11.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் கோலாகலமாக மண்டபம் நிறைந்த, பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தேறியது.
நாடகவிழா நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டது போல் பிற்பகல் 4.30 மணிக்கு வளாகத்தின் அதிபர், இணையதிபர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக நிருவாக உத்தியோகத்தர்களின் மங்கள் விளக்கேற்றுதலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து பாரதி பள்ளியின் பாடசாலைக் கீதத்தினை மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் யாவரும் மேடையில் இணைந்து நின்று இனிமையாக இசைத்திருந்தார்கள்.

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கடந்த கால ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மற்றும் பார்வையாளர்களுடன் மண்டபம் நிறைந்த நிகழ்ச்சியாக ஆரம்பமானதைக் கண்ணுற்றபோது மனதில் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. சவுத் மொராங் வளாகத்தின் அதிபர் திரு.சிவகரன் சிவானந்தம் அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று தனது வரவேற்புரையோடு அதிபர் உரையும் ஆற்றியிருந்தார். அவருடைய உரையில் வளாகத்தின் கடந்தகால, தற்போதைய நடவடிக்கைகள், தொடர்ந்து எதிர்காலத்திற்கு திட்டமிட்டுள்ள பலவகையான தமிழ்க் கல்வித் திட்டங்கள் பற்றி விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் மாணவச் செல்வங்களின் நிகழ்ச்சிகள் யாவும் ஆரம்பமானது. ”வண்ணத்துப் பூச்சி பாட்டு” நிகழ்ச்சியை K3 & K4 வகுப்பு சிறுவர்கள் அழகான வண்ணத்திப் பூச்சிகளாக மேடையில் பட்டாம் பூச்சிகளாகப் பறந்த வண்னம் பாடி ஆடினார்கள். தொடர்ந்து A1 வகுப்பு மாணவர்கள்  “என்ன சாப்பாடு” என்ற நாடகத்தினை மிகவும் அழகான மழழைத் தமிழில் பேசிப், பாடி பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் நடித்தார்கள்.
A2 வகுப்பு மாணவர்கள் ”நெல்மணி” என்ற நாடகத்தினை அற்புதமான நடிப்பால் அனைவரையும் தங்கள் பால் ஈர்த்ததோடு யாவரும் மகிழ்வுறும் வண்னம் அமைத்திருந்தார்கள். PREP வகுப்பு மாணவச் சிறுவர்கள் ”என்னைப் போல் பொம்மை” என்ற நாடகத்தினை தத்தமது இனிமையான மழழை மொழியில் பேசிய வண்னம் மகிழ்ச்சியாக நடிப்பாற்றலைக் கொண்டு வந்தார்கள். A3 வகுப்பு மாணவர்கள் ”கோழிகளும் நரிகளும்” என்ற நாடகத்தினை தமக்கே உரிய பாணியில் அற்புதமான நடிப்புத் திறமையை சிறப்பாக வெளிக்கொண்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்கள்.
A7, A8, TFL & VCE மாணவர்கள் ”சட்டியும் குட்டியும்” என்ற நாடகத்தினை தமக்கு நடிப்பாற்றலில் இருந்த ஆர்வம், திறமை, அனுபவம் ஆகியவற்றை தத்ரூபமாகவும், தமிழ் மொழியின் பிரயோகம், உச்சரிப்புடன் கலந்த சுவையை ரசிக்கவும் வைத்தார்கள். PREP வகுப்பு சிறுவர்கள் ”விளையாட வாங்கோ” என்ற நாடகத்தினை அழகான மழழை மொழியில் ஆடிப் பாடிக் கதையை சொல்லிச் சென்றார்கள். K4 வகுப்பு பிள்ளைகள் ”நரியும் திராட்சைப்பழமும்” என்ற நாடகத்தினை செந்தமிழ்ச் சுவைபட இனிமையாகப் பாடி, மேடையில் ஆடை அலங்காரத்துடன் அழகாக நடித்துக் காட்டியிருந்தார்கள்.
A6 வகுப்பு மாணவர்கள் மகாபாரதம் காவிய நாடகம் ”ஏகலைவன்” என்ற நாடகத்தினை தத்தமது பாத்திரங்களுக்கு ஏற்ப அற்புதமாக வேடம் தரித்து தமிழ் மொழிச் சுவையை அனல் எனப் பறந்த வசனங்களைப் பேசிய வண்ணம் நடித்த போது எதிர்காலச் சந்ததி தமிழை மறக்க மாட்டார்கள் என்பது நிதர்சனமானது. A4 & A5 வகுப்பு மாணவச் சிறுவர்கள் ”பூனைச் சண்டை” நாடகத்தினை மிகவும் சிறப்பாகவே தமது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்கள். நாங்கள் வளர்ந்து வரும் நடிகர்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணம் கொண்டு வந்தார்கள்.
A7, A8, & TFL வகுப்பு மாணவர்கள் ”விருந்தாளி” என்ற தாள லய நாடத்தில் மொழியின் உச்சரிப்பு, மனனம், பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு, வேடம், மற்றும் தாள லய இசைமெட்டில் நடித்து பார்வையாளர்கள் அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தமை சிறப்பாகவே இருந்தது. மொழியை நன்கு உணர்ந்து அற்புதமான ஒரு மேடை தாள லய நாடகத்தினை வெற்றியோடு அரங்கேற்றி இருந்தார்கள். இந்த நாடக நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தபேலா வாத்தியக் கலைஞன் திரு.வாசவன் பஞ்சாட்சரம் இசையை வழங்கி மேலும் மெருகூட்டியிருந்தார்.
பாரதி பள்ளியின் இயக்குனரும், அதிபருமான திரு.மாவை நித்தியானந்தன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வரமுடியாத காரணத்தினால் அவரது வாழ்த்துச் செய்தியை வளாகத்தின் இணையதிபர் திரு.சௌசாங்கன் திருஞானம் அவர்கள் வாசித்திருந்தார். அனைத்து நிகழ்வுகளையும் ஆசிரியர் திரு.தில்லை நடராஜா அவர்களுடன் மேற்வகுப்பு மாணவர்கள் இணைந்து நிகழ்ச்சி அறிவிப்பாளர்களாக செந்தமிழ் மொழியில் பேசி மிகவும் ஆர்வத்தோடும், திறமையாகவும் செயற்பட்டார்கள்.
ஒவ்வொரு நிகழ்ச்சியும் வளாக ஆசிரியர்களது கடும் முயற்சியாலும், பெற்றோர்களது முழு ஆதரவுடனும், முக்கியமாக பிள்ளைகளது திறமை, ஆர்வம், கடின பயிற்சிகளாலும் மட்டுமே இந்த வெற்றிக்கனியைப் பறிக்க சாத்தியமாக இருந்தது என்று சொல்லலாம். குறுகிய காலத்தில் இந்த நிகச்சியை நடாத்துவதற்கு வளாக நிருவாகம் மற்றும் பெற்றோர் சங்கம் இரண்டும் இணைந்து திட்டமிட்டிருந்தார்கள். அந்த வகையில் பெற்றோர் சங்கத்தின் தலைவர் திரு.யாதவன் இலங்க நாராயணன் அவர்கள் அனைவருக்கும் நன்றியுரை ஆற்றினார்.
ஒளியமைப்பில் திரு.ஈஸ்வரநாதன் கந்தசாமி, ஒலியமைப்பில் திரு.வாசவன் பஞ்சாட்சரம் மற்றும் திரு.தாஸ் நிர்மலதாஸ், போட்டோ திரு.வளவன் பாலசுப்பிரமணியம், வீடியோ திரு.தெய்வநேசன் தெய்வேந்திரம் மற்றும் மண்டப நிருவாகிகள் அனைவரும் மிகவும் சிறப்பாக தங்கள் ஆதரவினைக் கொடுத்திருந்தமை தரமானதொரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் நடாத்தி முடிக்கக் கூடியதாக இருந்தது.
--> அவுஸ்திரேலிய மண்ணில் மெல்பேண் மாநகரில் உதித்த தமிழ்ப் பாடசாலைகளில் ஒன்றுதான் பாரதி பள்ளி ஆகும். அதன் அபரிமிதமான வளர்ச்சியின் காலவோட்டத்தில் மெல்பேண் வடபகுதியில் SOUTH MORANG இல் ஆரம்பிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்களை தன்னகத்தே கொண்டு இயங்கி வருகின்றதென்பது தமிழ் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான ஒரு செய்தியல்லவா. அது ஒரு வரப்பிரசாதம் தானே. பாரதி பள்ளி SOUTH MORANG வளாகத்தின் நாடக விழா 2018 மொத்தத்தில் ஒரு கூட்டு முயற்சியின் வெற்றி என்பதை பறைசாற்றி நிற்கின்றது.      வாழ்க தமிழ். வளர்க நம் தமிழ் மாணவச் செல்வங்கள்.       நவரத்தினம் அல்லமதேவன். மெல்பேண். அவுஸ்திரேலி


No comments: