கைப்பேசியும் களவுபோன நாட்களும்.. (வசனக் கவிதை) வித்யாசாகர்!


நாட்களை கைப்பேசிக்குள் தொலைக்குமொரு 
ஆபத்தான கனப்பொழுது,

எழுதாத கடிதங்களைப்போல சிந்தாதக் கண்ணீரும்
இரத்தநெடியோடு நிரம்பிக்கிடக்கும் 

வலிநிறைந்த மனசெனக்கு,மருத்துவர்கள் கொலஸ்ட்ரால் சுகர்
பிரஷர் விட்டமின்-டி ஆயா தாத்தா பாட்டி என்றெல்லாம் 
மலிவு சொற்களோடும் மயக்க ஊசியினோடும் 
திரிந்துக் கொண்டிருக்க, நான் அங்கிருந்து நகர்ந்து 
பின்னறையை நோக்கி நடக்கிறேன்,இரத்த சகதியில்
கசங்கிய மலர்போன்றோரு மகனை 
ஊர் பேர் தெரியாத சிலர் தூக்கிவந்து
மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்,


ஒரு வரலாறு எழுதுமளவு கேள்விகள் பல 
கேட்டுமுடிய 
பெரிய மருத்துவர் ஒருவர் ஓடிவந்து
இன்சூரன்ஸ் பற்றியும்,
அவன் வேலைப்பார்க்கும் நிறுவனம், சம்பளம்
பற்றியெல்லாமும் கேட்டுக்கொண்டு 
அவசர சிகிச்சை அறைக்குள் அவனைக் 
கொண்டுசெல்ல ஆணையிடுகிறார்.,திடுமென அவருடைய கைப்பேசி கத்த
அதை எடுத்துக்கொண்டு 
செவிலிப்பெண்ணொருத்தி ஓடிவருகிறாள்..கைப்பேசியில் அலறிக்கொண்டிருந்த மனைவி 
மருத்துவரிடம் என்னங்க நம்ம பையன் 
போன்பேசிட்டேப் போய் லாரியில் மோதிட்டானாம் 
என்கிறாள்,மருத்துவருக்கு ஏதோ சட்டையின்
நிறம் பார்த்த நினைவு சடாரென வந்து
கவனத்தில் அறைய
பதறியடித்துக் கொண்டு 
அவசரசிகிச்சை அறைக்குள் ஓடுகிறார்..அவருக்கு 
மூடியிருந்த வெள்ளைத்துணியை யகற்றி 
யாரென்று முகம் திருப்பிப் பார்ப்பதற்குள் 
கை காலெல்லாம் படபடவென நடுங்கிற்று 
தடதடவென உடம்பு ஆடியது 
மூச்சு முட்டி மயக்கம் வருவது போலிருந்ததுகைப்பேசிக்குள் மனைவி கதறும் 
சப்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது.. 
-------------------------------------

வித்யாசாகர்


No comments: