சிட்னியில் தமிழோசையின் பத்தாவது ஆண்டு நிறைவு - செ.பாஸ்கரன்

.


சிட்னியில் வெளிவரும் மாதாந்த சஞ்சிகையான தமிழோசை தனது பத்தாவது ஆண்டு நிறைவை சென்ற திங்கட்கிழமை 01.10.2018  அன்று
ரெட்கொம் மண்டபத்தில் கொண்டாடியது.

ஈழத்து எழுத்தாளரான மாத்தளை சோமு அவர்கள் இதன் ஆசிரியராக இருந்து கடந்த பத்து ஆண்டுகள்  புலம் பெயர்ந்த நாட்டினில்  இதனைக்  கொண்டுவந்திருப்பது ஒரு சாதனை என்றே கூறவேண்டும்.
எத்தனையோ தமிழ் சஞ்சிகைகள் வெளிவந்து சில மாதங்களிலோ அல்லது சில வருடங்களிலோ நின்று போகின்ற இந்தக் காலகட்டத்தில் தமிழோசை தொடர்ந்து பத்து ஆண்டுகள் வெளிவந்திருப்பது பாராட்டப் படவேண்டிய ஒன்றாகும்.

இதை தொடர்ந்து பதிப்பித்துக் கொண்டிருக்கும்  பதிப்பகத்தார்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மக்களின் அன்பும் ஆதரவும் நிறையவே இருக்கின்றதென்பதை  அன்றைய தினம் இடம் பெற்ற பத்தாவது ஆண்டு விழாவிற்கு வருகை தந்திருந்த மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டமே சாட்சி.

இந்த விழாவோடு  ஈழத்து எழுத்தாளரான மாத்தளை சோமு அவர்களின் பர்மாவும் தமிழர்களும் என்ற ஆய்வு நூலும் வெளியிடப்பட்டது சாலப் பொருத்தமாக இருந்தது.  நூலாசிரியர் உரையாற்றும்போது  பர்மாவில் தமிழர்களின் சுதந்திரம் அவர்களுக்கு ஏற்ப்பட்ட துயரங்கள் இதெல்லாம் மீறி அவர்கள் தமிழை தக்கவைத்துக் கொண்டிருக்கும் முறைகள் என்பதை மிக அழகாக எடுத்துக் கூறினார்.

இந்த விழாவிற்கு தமிழகத்தின் பிரபலமான சஞ்சிகையான கலைமகள் சஞ்சிகையின் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் வருகை தந்திருந்து சிறப்புரை ஆற்றினார்.  வாழ் த்துரை வழங்க மதுரையைச் சேர்ந்த எழுத்தாளரும் அறிஞரும் காந்திய வாதியுமான திரு மு சிதம்பர பாரதி அவர்கள் வருகை தந்து அருமையான வாழ்த்துரையை வழைகினார்.

Image may contain: 1 person, standingபர்மாவும் தமிழர்களும் என்ற ஆய்வு நூல் அறிமுகத்தை சட்டத்தரணி பாடும்மீன் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் சிறப்பாக செய்தார். இளம் கவிஞரான திரு செல்வம் கவிதையில் தமிழோசையை வாழ்த்தினார் .

காந்திமதி தினகரன் அவர்கள் மிக அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஆடல் பாடல் பறை இசை என பண்பாட்டு விழுமியங்களோடு இந்த விழா  மிக சிறப்பாக நடந்தது .

தமிழோசை இன்னும் பல ஆண்டுகள் தொடர்து வரவேண்டும் மாத்தளை சோமு அவர்கள் தொடர்ந்து தமிழ்ப்  பணியை செய்யவேண்டும் என்று வாழ்த்துகிறோம் .Image may contain: 1 person, standing

No comments: