உலகச் செய்திகள்


இந்தோனேசியா சுனாமி தாக்குதலில் இதுவரை 1350 பேர் பலி

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள்

புற்று நோய் சிகிச்சையில் புரட்சிகர கண்டுப்பிடிப்பாளர்களுக்கு நோபல் பரிசு

சீர் திருத்தத்துடன் உடன்பாட்டுக்கு வந்த அமெரிக்கா - கனடாவுக்கிடையிலான “நப்டா” ஒப்பந்தம்

ஆங் சான் சூ கீ யின்  கௌரவ குடியுரிமையை ரத்து செய்தது கனடா

"சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசையில்லை"

இந்தியாவை சென்றடைந்தார் புட்டின் ; கோபத்தில் அமெரிக்கா

மோதல்களின் போது பாலியல் வன்முறைக்கு எதிராக குரல்கொடுத்தவர்களிற்கு நோபல்சமாதானப்பரிசு



இந்தோனேசியா சுனாமி தாக்குதலில் இதுவரை 1350 பேர் பலி

03/10/2018 இந்தோனேசியா நாட்டின் சிலாவேசி தீவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1350 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த 29 ஆம் திகதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சுனாமி தாக்குதலில் பாதிக்னப்பட்ட பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தோண்ட தோண்ட சடலங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதே நேரத்தில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.
அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 34 மாணவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர். மேலும் 86 மாணவர்களை காணவில்லை. 52 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் கடுமையான தாக்குதலால் பலு நகரில் உள்ள பெரிய பாலம் இடிந்தது. வைத்தியசாலைகள் சேதம் அடைந்தன. இதனால் காயம் அடைந்த மக்களுக்கு திறந்த வெளியிலும், ராணுவ முகாம்களிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விமானநிலையம் மூடப்பட்டுள்ளதால் சுமார் 5 ஆயிரம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ராணுவ விமானம் மூலம் பலுவில் இருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை 1350 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பல அடுக்கு மாடி குடியிருப்புகள், ஹொட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.
அனைத்து இடிபாடுகளும் அகற்றப்பட்டு மீட்பு பணி நிறைவுறும் போது பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 










மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள்

02/10/2018 மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளான இன்று டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
நம் நாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடிய மாமனிதர் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான அக்டோபர் 2 இன்று காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. 
டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இன்று காலை பிரதமர் மோடி காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
 அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற தலைவர்களும் மரியாதை செலுத்தினர். நன்றி வீரகேசரி 











புற்று நோய் சிகிச்சையில் புரட்சிகர கண்டுப்பிடிப்பாளர்களுக்கு நோபல் பரிசு

02/10/2018 புற்று நோய்க்கான சிகிச்சையில் புரட்சிகரமான கண்டுப்பிடிப்புக்களை மேற்கொண்ட அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் அலிஸன் மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி டாசுகு ஹோஞ்சோ ஆகிய இருவரும் மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புற்று நோய் அணுக்களை நேரடியாக அழிக்கும் சிகிச்சை முறைமைக்கு மாறாக மனித உடலில் இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி புற்று நோய் அணுக்களை அழிப்பதற்கான சிகிச்சை முறையை உருவாக்கியமைக்காவே குறித்த இரு விஞ்ஞானிகளும் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள எம்.டி ஆண்டர்ஸன் புற்றுநோய் மையத்தின் நிர்வாக இயக்குநரான ஜேம்ஸ் அலிஸன் நோயெதிர்ப்பியல் துறை வல்லுநர் ஆவார்.
இவர் புற்று நோய் சிகிச்சைக்கு ஆற்றிய பங்களிப்பிற்கான 13ற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்த நோயெதிர்ப்புத் துறை வல்லுநரான டாசுகு ஹோஞ்சோ அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகடமியின் வெளிநாட்டு உறுப்பினராக இருந்துள்ளார்.
கடந்த வருடம் முதல் ஜப்பானிலுள்ள கியோட்டா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
அமெரிக்க விஞ்ஞானியான அலிஸன் கடந்த 1995ஆம் ஆண்டளவில் மனித உடலின் நோய் எதிர்ப்புச் செயற்பாடுகளுக்கு தடை விசை போல் செயற்படும் மிக முக்கிய மூலக்கூறான இரத்தத்தின் வெள்ளை அணுக்களில் உள்ள சிடிஎல்ஏ-4 ஐ கண்டறிந்தார்.
அதே போலவே நோய் எதிர்ப்பு அணுக்களில் உள்ள பி.டி.1 என்ற புரதமும் எதிர்ப்புச் செயற்பாடுகளுக்கான தடை விசைகளாக பயன்னடுகின்றன என்பதை ஜப்பானிய விஞ்ஞானி டாசுகு ஹோஞ்சோ கண்டறிந்தார்.
இவ் இருவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டே நோயெதிர்ப்பு சக்தியின் வீரியத்தை அதிகரித்து புற்று நோய் அணுக்களைக் கொல்லும் மருந்துகள் உருவாக்கப்பட்டன.   நன்றி வீரகேசரி 














சீர் திருத்தத்துடன் உடன்பாட்டுக்கு வந்த அமெரிக்கா - கனடாவுக்கிடையிலான “நப்டா” ஒப்பந்தம்

01/10/2018 வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக கடந்த 1994 ஆம் ஆண்டு ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (நப்டா) அமல்படுத்தப்பட்டது. 
ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தார். மிக மோசமான ஒப்பந்தங்களில் இதுவும் என்று என கூறிய அவர்,  தற்போதையை சூழலில் நப்டா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தில் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யாவிட்டால் நப்டா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்தார்.
இதையடுத்து மூன்று நாடுகளிடையே பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நீண்டது. அதன்பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் (ஞாயிறு) கனடா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், தவறினால் இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தமாக மாற்றப்படும் என்றும் டிரம்ப் காலக்கெடு விதித்தார். அதன்பின்னர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விதிப்போம் என்றும் கூறினார். 
இந்த காலக்கேடு முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் நேற்று இரவு அமைச்சரவை அவசரமாக கூடி இதுபற்றி ஆலோசித்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கனடாவின் நலன்களை பாதுகாக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதன்மூலம் வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை சீர்திருத்தம் செய்வது தொடர்பான கனடா மற்றும் அமெரிக்கா குழுவினரிடையே இன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கனடா ஊடகம் வெளியிட்டுள்ளது. 
இது தொடர்பாக இரு நாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நப்டா ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட பிரிவுகளில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் கனடா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











ஆங் சான் சூ கீ யின்  கௌரவ குடியுரிமையை ரத்து செய்தது கனடா

04/10/2018 மியன்மாரின் அரசு ஆலோசகரான ஆங் சான் சூ கீ யின் கௌரவ குடியுரிமையை கனடா பாராளுமன்றம் நேற்று ரத்து செய்தது. 
மியன்மார் வடபகுதியில் அமைந்துள்ள ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். பங்களாதேசிலிருந்து குடிபெயர்ந்து மியன்மாரில் பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 
இராணுவத்தினர் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பங்களாதேசத்திற்கு தப்பிச் சென்றவண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்குமிடையிலான ஆற்றின் வழியாக படகில் சென்ற பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர். 
மியன்மாரில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த 25-8-2017 அன்று ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான வேட்டை தீவிரமானது. இதைத்தொடர்ந்து, மியன்மாரிலிருந்து சுமார் 7 இலட்சம் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் வெளியேறி பங்களாதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். 
இந்நிலையில், ரோஹிங்கியா விவகாரத்தில் தலையிட தவறிய காரணத்துக்காக மியன்மாரின் அரசு ஆலோசகரான ஆங் சான் சூ கீ யின் கௌரவ குடியுரிமையை கனடா பாராளுமன்றம் நேற்று ரத்து செய்தது.
இதுதொடர்பாக, கடந்த 2007ஆம் ஆண்டு கனடா அளித்த கௌரவ குடியுரிமையை பறிக்க வகைசெய்யும் தீர்மானம் கடந்த சில தினங்களுக்கு முன் கனடா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்தே ஆங் சான் சூ கீ யின் கௌர குடியுரிமையை கனடா பாராளுமன்றம் ரத்து செய்துள்ளது.
ரோஹிங்கியா இன மக்களை திட்டமிட்டு மியன்மார் இராணுவம் கொன்று குவித்ததும், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை தீவைத்து கொளுத்தியதும் இன அழிப்பு மற்றும் ரோஹிங்கியா இனப் பெண்களை இராணுவம் குழு கூட்டுப் பலாத்காரம் செய்ததும், ஐ.நா. உண்மை அறியும் குழுவின் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுபோன்று ஒரு கௌரவ குடியுரிமையை ரத்து செய்வது கனடா வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










"சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசையில்லை"

03/10/2018 சபரிமலை தரிசனத்தின் போது பெண்கள் தனி வரிசையில் அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என கேரள அரசாங்கம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு அனைத்து வயதுடைய பெண்களும் சென்று தரிசனம் மேற்கொள்ள முடியும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.
இந் நிலையில் குறித்த கோவிலுக்கு பெண்கள் தரிசனம் மேற்கொள்ள செல்லும்போது தமக்கென தனி வரிசை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேரள அரசாங்கம் அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.
இது குறித்து கேரள தேவஸ்தான நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், சபரிமலைக்கு சென்று தரிசனம் மேற்கொள்ள 8 முதல் 10 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தான் ஆக வேண்டும். அங்கு பெண்களுக்கு தனி வரிசை வழங்கப்படுவது என்பது சாத்தியமாகாது. ஆகையினால் அதிக நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய நினைக்கும் பெண்கள் மாத்திரம் வர வேண்டும்.
அத்துடன் பெண்களுக்கென்று தனி வரிசை கொடுத்தால், அவர்கள் குடும்பத்திலிருந்து பிரிக்கப்படுவார்கள். இதனால் பல பிரச்சினைகள் தோன்றலாம் என தெரிவித்துள்ளனர்.
எனினும் இது தொடர்பில் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், தேவஸ்தான நிர்வாகத்தினரை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம். அதன்படி சபரிமலை தரிசனத்துக்கு வருகை  தரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.  நன்றி வீரகேசரி 









இந்தியாவை சென்றடைந்தார் புட்டின் ; கோபத்தில் அமெரிக்கா

05/10/2018 இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்றைய தினம் இந்தியாவை சென்றடைந்துள்ளார்.
நேற்றைய தினம் இந்தியா வந்தடைந்த புட்டினை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவாஜ் வரவேற்பளித்ததுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புட்டினை கட்டித் தழுவி வரவேற்பு கொடுத்தார். இதனையடுத்து இருவருக்கிடையிலான தனிப்பட்ட சந்திப்பு நடந்தது. அதன் பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர்.
புட்டினின் இந்த விஜயத்தின் போது இந்தியாவுடன் விண்வெளி துறை, அணுசக்தி, பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய துறைகளிலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
மேலும் எஸ் 400 ஒப்பந்தத்தினூடாக ரஷ்யாவிடம் இந்தியா, எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க உள்ளது. இது மிகவும் வலிமை வாய்ந்த திறன் மிக்க ஏவுகணை ஆகும். இதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. 
புட்டினின் இந்த ஏவுகணை ஒப்பந்தம் அமெரிக்காவை கோபப்படுத்தி இருக்கிறது. இதனால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











மோதல்களின் போது பாலியல் வன்முறைக்கு எதிராக குரல்கொடுத்தவர்களிற்கு நோபல்சமாதானப்பரிசு

05/10/2018 யுத்தம் மற்றும் மோதல்களின் போது பாலியல் வன்முறைகளை ஆயுதமாக பயன்படுத்துவதற்கு  எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுட்டுள்ள  நடியா முராட்டும் டெனிஸ் முக்வெஜெயும் 2018 ஆண்டிற்கான நோபல்சமாதானப்பரிசினை பெற்றுள்ளனர்.
மோதல்களின் போது பாலியல் வன்முறைகளில் ஈடுபடுதல் என்ற குற்றச்செயல்களிற்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்குவதில் இருவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிவருகின்றனர் என நோபல் பரிசுக்குழுவின் தலைவர் பெரிட் அன்டெர்சன் தெரிவித்துள்ளார்.
உலக சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமாக உள்ள பெண்கள் யுத்தங்களின் போது ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றனர் அவர்களிற்கு பாதுகாப்பு அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
நடியா முராட் ஐஎஸ் அமைப்பினால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட யாசிடி இனப்பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
2014 இல் ஐஎஸ் அமைப்பினர் ஈராக்கின் மௌசூல் நகரை கைப்பற்றிய வேளை முராட் அவர்களிடம் பிடிபட்டார்.
அதன் பின்னர் ஐஎஸ் அமைப்பினர் முராட்டை பல நாள் தடுத்து வைத்திருந்து பாலியல் வன்முறைக்குள்ளாக்கியிருந்தனர்
பலமாதகால துன்புறுத்தல்களின் பின்னர் அவர் மௌசூலில் இருந்து பக்தாத்திற்கு தப்பி வந்து தான் சந்தித்த அவலத்தை விபரித்தார்.
அதன் பின்னர் அவர் தனது சமூகத்திற்காக குரல் கொடுப்பவராக மாறியுள்ளார்.
மேலும் மோதல்களின் போது பாலியல் வன்முறைகளிற்கு எதிரான பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளார்.
டெனிஸ் முக்வெஜெ கொங்கோவை சேர்ந்த பெண்கள் நோய் தொடர்பான மருத்துவர் இவர் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிசிச்சை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இவர் தனது சகாக்களுடன் இணைந்து பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 30.000 பேரிற்கு சிகிச்சை அளித்துள்ளார். நன்றி வீரகேசரி 






No comments: