நூல் நயப்பு
இன்று எஞ்சியிருக்கும் ஈழத்துச் சனத்துக்கு மரணம் என்ற ஒன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் கண்டு கடந்திருக்கும். வயது வேறுபாடில்லாமல் எல்லோருக்குமே பொதுமையான அனுபவம் இது. போர் தின்ற அந்தச் சனங்கள் மரணத்தின் நுனி வரை போய் வந்திருக்கிறார்கள். அந்த வாழ்வியல் அனுபவங்கள் ஏறக்குறைய எல்லோருக்குமே வெவ்வேறான கால கட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன.
போர் உச்சம் பெற்ற எண்பத்து மூன்றாம் ஆண்டுக்குப் பின்னதான கால கட்டம் என்பதை எழுதப் போனால் ஈழத்துச் சனங்களின் இரத்த வாடையைத் தொடாது கடக்க முடியாது. எனக்கும் இந்த மாதிரியான அனுபவங்கள் வாய்த்திருந்தாலும் 95 ஆம் ஆண்டுக்குப் பின்னான நேரடிக் கள அனுபவம் இல்லை. என்னைப் போலவே இந்தப் போர்க்கால வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பலரும் ஒரு குறித்த கால எல்லையோடு நின்று தான் எழுதிப் போந்திருக்கிறார்கள். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில், இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டில் முற்றுப் பெற்றாதாகக் கருதும் இறுதி யுத்தம் வரையான போர்க் கால வாழ்வு பற்றிப் பேசிய ஒரு முழுமையான நூலாக “காக்கா கொத்திய காயம்” பற்றியே சொல்லுவேன்.
உமாஜி என்ற இளைஞனை பேஸ்புக் வழியாகத் தான் அதிகம் அறிந்திருந்தேன். வலைப்பதிவு யுகம் பரவலாக இயங்கிய காலத்தில் கூட சக ஈழத்துப் பதிவராக அவர் எழுதியதாக நினைவிலில்லை. அந்த நேரத்தில் 4TamilMedia என்ற செய்தித் தளத்தில் உமா ஜி இன் வாழ்வியல் அனுபவங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தாலும் உண்மையில் ஒரு பதிவையும் வாசிக்கும் சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்தவில்லை. இப்போது வெளிவந்திருக்கும் “காக்கா கொத்திய காயம்” என்ற அவருடைய வாழ்வியல் அனுபவப் பகிர்வுத் திரட்டு கூட இவ்விதம் 4TamilMedia இல் அவர் எழுதிய பதிவுகளின் திரட்டே. சகோதரன் மைந்தன் சிவாவின் திருமணப் பரிசாக அவர் எனக்களித்த போது படிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஆனால் ஒவ்வொரு பதிவையும் படித்து முடித்து உடனேயே அடுத்ததுக்கு என்னால் நகர முடியாத ஒரு உளவியல் தாக்கத்துக்கு ஆளானேன். உண்மையிலும் உண்மை இது. ஏனென்றால் இந்த எழுத்தாளன் காட்டுகின்ற அந்த வாழ்ந்து கழித்த உலகு அப்படியொன்றும் சொகுசானதில்லை. போரின் நொருக்குவாரத்தில், வாழ்வின் பல்வேறு சவால்களோடு வாழ்ந்து கழித்த பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு மனிதர்களைப் பற்றியும் இவர் சொல்லி முடித்ததும் உமா ஜி ஆகி அந்த மனிதர்களோடு பழகி விட்டுத் திரும்புமாற் போலவொரு உணர்வை அந்த எழுத்துகள் ஏற்படுத்தி விட்டன. இப்போது சொல்லுங்கள் இதையெல்லாம் வேக ஓட்டத்தொடு வாசித்து முடிக்கும் காரியமா?
இந்த நூல் குறித்த நயப்புக்குப் போவதற்கு முன்னர் இது குறித்த என் வெளிப்படையான இரண்டு விமர்சனத்தைச் சொல்லி விடுகிறேன்.
ஈழத்தின் இரு தசாப்தங்களை உள்ளடக்கிய இந்த வாழ்வியல் அனுபவப் பகிர்வை “காக்கா கொத்திய காயம்” என்று கவிதைத்தனமாகத் (!) தலைப்பிட்டதற்குப் பதில் இன்னமும் அணுக்கமான தலைப்பை இட்டிருக்கலாம்.
இன்னொன்று, இந்தப் புத்தகத்தில் மிக ஆழமாகப் பேசப்பட்டிருக்கும் போரியல் வாழ்பனுபவங்கள் பிற் பகுதியிலேயே இடம் பெற்றிருக்கின்றன. உதாரணம் ஊரடங்கு வாழ்வு. ஒரே புத்தகத்தில் கனதியான பக்கங்களோடு வந்ததிலும் இதைத் தொகுதியாக வெளியிட்டிருக்கலாம். உதாரணமாக வேதநாயகம் தபேந்திரனின் நூல் போன்று பாகங்களாகப் பிரித்து வெளியிட்டிருக்கலாம் என்பது என் கருத்து.
அடுத்த நிமிடம் வாழ்வோமா என்ற நிலையாமை குறித்த கேள்வி எழும் சூழலில், போர்க்கால வாழ்வியலில், அத்தகு துன்பகரமான சூழலில் தான் உயர்ந்த நகைச்சுவை பிறக்கிறது. Life is beautiful படத்தில் கண்டதை எல்லாம் நம் வாழ்வியலில் தரிசித்திருக்கிறோம். அப்படியான எழுத்தைக் காட்டுகிறார் உமாஜி.
பக்கத்துக்குப் பக்கம் எள்ளல், நகைச்சுவை என்று கனதியான சம்பவங்களிலும் இந்த எழுத்தைக் கடைப்பிடிக்கிறார்.
உண்மையில் சொல்லப் போனால் இந்தப் புத்தகதை எடுத்துப் படித்துக் கொண்டு போகும் போது இசேலான பொறாமையும் எட்டிப் பார்த்தது. எவ்வளவு ஆழமான எழுத்து. யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையிலோ கொழும்பிலோ, வன்னியிலோ நிகழ்ந்ததைக் கொண்டு போய் ஒரு உலகத் தரமான Pianist படத்தோடோ The Last Emperor உடனோ அல்லது அறிஞர் ஒருவரின் கூற்றோடோ பொருதி எழுதும் நுட்பம் இவருக்குக் கச்சிதமாக வாய்த்திருக்கிறது.
ஈழத்துப் பிரதேசங்களில் தான் வாழ்ந்த காலத்தில் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகளைப் பற்றி எழுதினாலும் பொதுவான தமிழையே கையாண்டிருக்கிறார். பிரதேச வழக்குச் சொற்கள் கூட அந்நியப்படாமல் விளங்கக் கூடிய வகையில் குறித்த அனுபவங்களோடே இருப்பதால் தமிழகத்து வாசகனுக்கும் நெருக்கமாக இருக்கக் கூடியது.
இரண்டு தசப்தங்களைக் கடந்த புலம் பெயர் வாழ்வில் இருந்து கொண்டு தாயகம் செல்லும் போதெல்லாம் என்னோடு வாழ்ந்து பழகியவர்களைத் தேடி அவர்களின் இருப்பை அறிந்து கொள்ளும் வேட்கையை உமாஜியின் இந்த நூலும் செய்கிறார். அவரும் தேடுகிறார் இந்திய இராணுவ காலத்தில் இருந்து இறுதி யுத்தம் கண்டு, பழகிய அண்ணனில் இருந்து, மாமா, பாட்டா முறை சொல்லி அழைத்தவர்கள் எல்லாம் எங்கே என்று தேடும் எழுத்துகளில் அந்தப் பழைய நினைவுகளைப் பதிப்பிக்கிறார். இவர்களை நானும் போய்ப் பார்த்தால் என்ன என்றவொரு ஏக்கத்தை எழுப்பி விட்டு அவர்களின் இன்றைய நிலையை நிறுத்துமிடத்தில் மனது கனதியாகிறது. உமாஜியோடு வாழ்ந்து பழகியவர்கள் இப்போது நமக்கும் அறிமுகமானவர்களாகிறார்கள்.
காலி முகத்திடலில் நின்று விடும் பட்டமும் போரியல் வாழ்வை நோக்கி இழுத்துப் போகிறது, தமிழ்த் திரையிசையை இளையராஜாவாகவும், ரஹ்மானாகவும், ஹாரிஸ் ஜெயராஜாகவும் ஏன் எங்களூர் எஸ்.ஜி.சாந்தனாகவும் ஆழ்ந்து நுகரும் போதும் அப்படியே கடக்கிறார். இதையே
“யுத்தம் எமக்களித்த நாடோடி வாழ்க்கையில் நாம் கடந்து வந்த ஊர்களையும், வாழ்க்கையையும் பாடல்களே ஒரு காலப் பயணத்தினூடு, அடிக்கடி நிகழுலகுக்குக் கொண்டு வருகின்றன” என்று சொல்கிறார். இசைவு என்ற பகிர்தலில் இசை வேட்கை கொண்ட ஒரு கலைஞனின் இன்றைய நிலையை எழுதும் போது இது ஒரு உதாரணம் தான் இவர் போல இன்னும் பலரின் உண்மையான முகத்துக்கு நமது யுத்த பூமி கரியைப் பூசி மறைத்திருக்கிறது என்ற கசப்பான நிஜமும் உறைக்கிறது. இதையே இன்னொரு வாழ்வியல் அனுபவத்தில்
“வாழ்நாள் முழுவதும் தம்மை யாருக்கோ நிரூபித்துக் கொண்டிருப்பது கர்ணனுக்கு மட்டும் விதிக்கப்பட்டதல்ல. தோற்றுப் போனதாகக் கருதப்படும் வாழ்நாள் போராளிகளுக்கும் கூடத்தான். வாழ் நாள் போராளிகள் ஒவ்வொருவரும் ஒருவகையில் கர்ணன்கள்தான். கர்ணன்கள் பாவம்!” என்கிறார்.
பெருமூச்சு ஒன்றை எழ வைத்து விடுகிறது.
A9, ஊடரங்கு, மற்றும் விடைபெறல் ஆகிய பகிர்வுகளைப் படிக்கும் போதே அந்தக் காலகட்டத்து யுத்த நெருக்கடிகளும், அடுத்த நிமிடம் வாழ்தலுக்கான சவாலும் மீளவும் நிகழ் உலகில் அனுபவிப்பதைப் போன்ற உணர்வு, இங்கேயும் தன் வழக்கமான “நகைப்” பூச்சைப் போடுகிறார்.
எங்கள் வாழ்வியலில் புத்தகம் படிக்கவும், பாட்டுக் கேட்கவும் ஏன் இயக்கத்துக்குப் போகவும் கூட பக்கத்து வீட்டு அண்ணாவோ அக்காவோ முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். அதிலும் இந்தப் பாட்டுக் கேட்டல் ஒரு குரு சீட மரபில் கடத்தப்படுவது. இங்கேயும் அதையே எழுத்தாளர் தன்னுடைய அனுபவ வெளிப்பாட்டில் பகிர்கிறார்.
ரணேஸ் வாத்தி போன்ற ஒரு ரியூஷன் மாஸ்டரையோ அல்லது சோதிலிங்கம் மாமா போல ஆமிக்காறனோட மல்லுக் கட்டிப் பாட்டுப் போடுற உறவையோ, கல்குலஸ் கணக்கைப் பாடமெடுக்கும் மன நிலை பிறழ்ந்த மனிதரையோ எப்படியோ நாம் வாழ்ந்த ஊரில் இருந்த இன்னொருவரோடு பொருத்திப் பார்க்க முடிகிறது.
வவுனியா, குருமன்காட்டில் நான் கல்வி நோக்கில் வாழ்ந்திருக்கிறேன். இனி ஒருமுறை போக வேண்டும் உமாஜி சொன்ன அந்த “குருமன்காட்டுப் பிள்ளையாரடி” ஐப் பார்க்க.
மாவிட்டபுரத்தில் பிறந்து பின் போர்க்கால இடப் பெயர்வால் மில்க்வைற் கனகராசா அவர்களின் பக்கத்தி வீடு போய் வன்னி, கொழும்பு எல்லாம் பயணித்த உமாஜியின் இடப்பெயர்வுகள் அந்தந்தக் களத்தில் நிகழ்ந்த நனவிடை தோய்தல்களாகப் பிரசவித்திருக்கின்றன.
என்னால் இந்தப் புத்தகத்தைத் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை. காரணம், ஒவ்வொரு பகிர்வையும் படித்து முடித்த கணமே அதில் வாழ்ந்த மனிதரோடு ஐக்கியப்பட்டு விடுவேன். அதிலும் அந்த சோதிலிங்கம் மாமாவின் கதையைப் படித்து நான்கு வாரங்களாகியும் இன்னமும் அவர் நினைப்பிலேயே இருக்கிறேன். பகிர்வுகளின் முடிவில் உமாஜி முத்தாய்ப்பாய் முடித்து வைப்பார். அந்தக் கடைசிப் பந்தி தான் ஒவ்வொன்றுக்கும் அடி நாதம்.
கடந்த மூன்று தசப்தங்கள் தேங்கிய ஈழத்தின் வடபுலத்தோர் வாழ்வியலை ஆய்வு ரீதியான கண்ணோட்டத்தில் எப்படி அணுக முடியுமோ அதே போன்று இந்த “காக்கா கொத்திய காயம்” நூல் வழி திரட்டப்பட்டிருக்கும் அனுபவங்கள் அத்தகு பணியைச் செய்திருக்கிறது.
இந்த நூல் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த போது இருந்த பரபரப்பு இப்போது இல்லை. அதாவது நூலைப் படித்து விட்டு நாலு வரியாவது எழுதியவரையும் காணோம். நூலாசிரியருக்கும் தன்னை “விளம்பரப்படுத்தத்” தெரியாது
. ஆனால் அவ்வளவு தூரம் எளிதில் கடந்து விட முடியாத ஒரு படைப்பு இது என்பேன்.
கானா பிரபா
04.10.2018
No comments:
Post a Comment