இலங்கைச் செய்திகள்


யாழில் ஆவா குழு சார்ந்த 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.'  யாழ் பொலிஸ்மா அதிபர்

முல்லைத்தீவில் வனவளத் திணைக்களத்தின் செயற்பாட்டால் 40 குடும்பங்கள் நிர்க்கதி!!!

அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

பெளத்த பிக்குகளை தொல்பொருள் திணைக்களம் எவ்வாறு ஆய்வுகளில் ஈடுபடுத்தமுடியும்?: நீதிமன்றம் எச்சரிக்கை !

தமிழர்களது பூர்வீக நிலங்கள் பறிக்கப்படுவது குறித்து ஆதாரங்களுடன் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டவுள்ளதாக த.தே.கூ. அறிவிப்பு

அரசியல் கைதிகளுக்காக வவுனியா அமைப்புக்களுடன் இணைந்து குரல் கொடுத்த சிங்கள இளைஞர்கள்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டுவில் உண்ணாவிரத போராட்டம்
யாழில் ஆவா குழு சார்ந்த 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.'  யாழ் பொலிஸ்மா அதிபர்

02/10/2018 “யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 27 குழு மோதல் சம்பவங்கள் இடம்பெற்று உள்ளன. அவற்றுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 38 பேர் கைது செய்யப்பட்டனர். 
அவர்களில் பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் – சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என யாழ். பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது, அண்மைக்காலங்களில் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்பட்ட போதே மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
அண்மையில் எனது ஆளுமைக்கு கீழ் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஆவா குழு சார்ந்த 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் அதிகமாக 10 சம்பவங்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிலும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 9 சம்பவங்களும் இடம்பெற்றன. ஏனைய பொலிஸ் நிலைய பகுதிகளில் எட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 38 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு, சம்பவங்கள் நடைபெற்ற நீதிமன்ற நியாயாதிக்க நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் சிலருக்கு தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் ஆவா குழுவைச் சாராத வேறு குழு மோதல்களில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சாவகச்சேரி அஜித் குழுவின் மீது 5 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, என்றார்.நன்றி வீரகேசரி முல்லைத்தீவில் வனவளத் திணைக்களத்தின் செயற்பாட்டால் 40 குடும்பங்கள் நிர்க்கதி!!!

02/10/2018 வனவளத் திணைக்ளத்தின் காணி பறிக்கும் படலம் முல்லைத்தீவில் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
100 ஏக்கர் தமிழர் காணிகளை வனவளத் திணைக்களம் அபகரித்து எல்லையிட்டுள்ளது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இக் காணி அபகரிப்பினால் 40 குடும்பங்களினதும் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு நிர்கதியாகியுள்ளனர்.
முல்லைத்தீவு செம்மலை புளியமுனைப் பகுதியிலுள்ள மக்களது தோட்டக் காணிகளே இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு கொக்குத் தொடுவாய் முதன்மை வீதியின் மேற்குப் புறமாக உள்ள புளியமுனைப் பகுதியில் உள்ள சுமார் 720 ஏக்கர் காணிகள் 1972ஆம் ஆண்டுகளில் செம்மலையில் உள்ள 350 மக்களுக்குப் பயிர்ச்செய்கைக்கென அரசால் வழங்கப்பட்டது.
அன்றிலிருந்து அப் பகுதி மக்கள் அக் காணிகளில் வயல் வெள்ளாமையிலும்; கச்சான் சோளம் போன்ற உப உணவுப் பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டனர்.
போர்க்காலங்களில் அங்கு விவசாயங்கள் செய்ய முடியாத நிலை தோன்றியது.
எனினும் போரின் பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக காணிகளின் ஒரு பகுதியை துப்புரவு செய்த மக்கள் மீண்டும் கச்சான் சோளம் போன்ற உப உணவுப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வந்தனர்.
இந் நிலையில் கடந்த வாரம் குறித்த பகுதிக்குச் சென்ற வன இலாக்காத் திணைக்களத்தினர் குறித்த காணிகள் வன வளத்துறைக்குச் சொந்தமானவை என தெரிவித்து காணிகளை அடையாளப்படுத்தி பெயர்ப் பலகை நாட்டியுள்ளனர்.
மேலும் காணிகளுக்குள் அத்துமீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களை அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால் காணகளில் பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியாதுள்ளது எனவும் காணிகளை மீட்டுத் தருமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் 
“உள் நாட்டுப் போர் காரணமாக விவசாயம் செய்ய முடியாது இருந்தது. பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் ஊடாக காணிகளுக்கான உறுதிப்படுத்தல் கோரப்பட்டது.
அத்துடன் முன்னர் விவசாயம் செய்த 350 குடும்பங்களில் 270 குடும்பங்கள் வரையில் காணிக் கச்சேரி ஊடாக காணிகள் அடையாளம் காணப்பட்டு உறுதிப்படத்தப்பட்டன.
ஆன்று முதல் 3 ஆண்டுகளாக நாங்கள் எமது காணிகளில் பயிரிட்டுள்ளோம். மீண்டும் இம் முறையும் பயிர்ச்செய்கை செய்ய எண்ணினோம். எனினும் வனவளத் திணைக்களத்தினர் எமது காணிகளுக்குச் செல் தடை விதித்துள்ளனர்.
சுமார் 100 ஏக்கர் காணிகளுக்கு இவ்வாறு அறிவித்தல்களை வனவளத்துறையினர் வழங்கியுள்ளனர்.
அத்து மீறிச்சென்றால் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.
எமது வாழ்வாதார காணிகளே அவை. அவற்றை மீட்டுத்தர அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக  வட மாகாண சபை உறுப்பினர் து. ரவீகரன் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் உள்ளிட்டவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்” என மக்கள் தெரிவித்தனர்.
இவ் விடயம் தொடர்பாக ரவீகரன்
“அவை மக்களுடைய காணிகள் தான் என்னால் உறுதியாக கூற முடியும். மக்கள் தங்களது காணிகளே அவை என்பதற்கான போமீட்களை என்னிடம் காட்டியுள்ளனர்.
சிலர் இன்று நாளை தருவதாக கூறியுள்ளனர். நான் நேரில் சென்று பார்வையிட்டேன்.
காணிகளில் கச்சான் பயிரிட்டதற்கான அடையாளங்கள் ஏராளம் உள்ளன. சிறிய பற்றைகள் வளர்ந்தவுடன் அது வன வளம் என்று கூறியே  வன வளத்தினர் காணிகளுக்கு எல்லையிட்டுள்ளனர்.
வனவளத்தினருடைய இத்தகைய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். முல்லைத்தீவில் அவவர்களுடைய இராச்சியம் தான் நடக்கிறது.
முகாவலி எல் வலையத்தில் எங்கோ உள்ளவர்களை கொண்டு வந்து இங்கு குடியமர்த்த முடிகிறது என்றால் தமிழர்களுடைய சொந்தக் காணிகளை அவர்களுக்கு கொடுப்பதில் என்ன? பிரச்சினையிருக்கிறது என்ற எனக்குத் தெரியவில்லை.
அக் காணிகளுக்குச் சென்று பார்க்கமாறு பிரதேச செயலரைக் கோரியுள்ளேன்.
தமிழ்த் தலைவர்கள் இவ் விடயத்தில் கூடிய கவனம் எடுத்து மக்களுக்குச் சொந்தமான காணிகள் திட்டமிட்டு பறிக்கப்படுவது தொடர்பில் பேசி உரிய தீர்வு காணவேண்டும்.
இந்த மக்களை போன்று மேலமு; மக்களுடைய காணிகள் அபகரிக்கப்படுவதற்கு முன்னர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 

  
அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

02/10/2018 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கிழக்கு பலக்லைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் அடைத்து வைக்காமல் உடனடியாக விடுதலை செய்யுமாறு இதன் போது வலியுறுத்தினர்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்கு பலக்லைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு முன்னாள் நிறுவக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யுத்தம் முடிவடைந்த நிலையில் எமமவர் குற்றவாளியா, அப்பாவி தமிழரை சிறையில் வாடச் செய்வதா நல்லாட்சி, பயங்கரவாத தடைச் சட்டம் தமிழருக்கு எதிரான அடக்குமுறையா? போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பி.இந்துஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.  நன்றி வீரகேசரி 


அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

02/10/2018 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. 
பல்வேறு இடங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டு அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் மிக நீண்டகாலமாக காரணங்கள் கூறப்படாது வழக்குகள் தொடரப்படாது சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
 இவர்கள் பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்தபோதும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படாத நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள்  கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பில் குதித்துள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாகவும் நல்லாட்சி அரசு உடனடியாக இவர்களது வழக்குகளை தொடுத்தோ அல்லது புணர்வாழ்வு அழித்தோ அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோரி முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நீதிமன்றுக்கு அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் நடத்தும் கொட்டகைக்கு முன்பாக அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கரைதுரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான த. அமலன் சி. லோகேஸ்வரன் துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் அ. அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
 போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் உறவுகளுக்கு நீதி வேண்டும் நல்லாட்சி அரசே சிறையில் இருக்கும் உறவுகளை விடுதலை செய் எங்கள் அரசியல் கைதிகளுக்கு உடன் நீதி வழங்கு அரசியல் கைதிகளின் விடுதலையை அரசே விரைவு படுத்து  உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது  நன்றி வீரகேசரி 
பெளத்த பிக்குகளை தொல்பொருள் திணைக்களம் எவ்வாறு ஆய்வுகளில் ஈடுபடுத்தமுடியும்?: நீதிமன்றம் எச்சரிக்கை !

01/10/2018 முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை தண்ணிமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்கில் புத்தர் சிலை வைப்பதற்காக பௌத்த மதகுருமார்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவினர்  கடந்த 04.09.18 அன்று புத்தர் சிலை உள்ளிட்ட கட்டுமான பொருட்களுடன் குருந்தூர் மலை பிரதேசத்துக்கு சென்றிருந்த வேளை பிரதேச இளைஞர்களினதும் கிராம மக்களினதும் எதிர்பினால் புத்தர் சிலை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பொலீசாரின் தலையீட்டுடன் ஏற்பட்ட முறுகல் நிலை சுமூகமாக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசாரினால்  கடந்த 06.09.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் ஒன்றை செய்துள்ளார்கள். இவ் வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 13.09.18 அன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது  அங்கு புதிதாக ஆலயங்கள் அமைக்கப்படமுடியாது என்றும், ஏற்கனவே வழிபாட்டை மேற்கொண்டுவந்த தமிழ்மக்கள் பாரம்பரிய கிராமிய வழிபாடுகளை தடையின்றி மேற்கொள்ளலாம் என்றும் தொல்பொருள் திணைக்களம் ஆய்வு செய்வதாக இருந்தால் யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை பங்குபற்றல் தொல்லியல்துறை தொல்பொருள் மூத்த வரலாற்று ஆராச்சியாளர்களின் பங்கு பற்றலுடனும் குறித்த கிராமத்தினை சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களையும் ஈடுபடுத்தியே  ஆராச்சியினை மேற்கொள்ளவேண்டும் என்றும் மன்று இடைக்கால கட்டளை பிறப்பித்திருந்தது .
இந் நிலையில் கடந்த 27.09.18 அன்று குறித்த வழக்கிற்கு எதிராக  நகர்த்தல் பத்திரம் ஊடாக தொல்பொருள் திணைக்களம் மற்றும் பௌத்த மதகுருமார் சார்பான சட்டத்தரணிகள் மூவர் தாக்கல் செய்து வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட தரப்பான பௌத்த குருமார்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் குருந்தூர் மலைப்பகுதியில்  குருந்த அசோகாராம பௌத்த வழிபாட்டு தலம் இருந்துள்ளது என்றும் வர்தமானியில் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. என்றும் இதன் படி அது தொடர்பில் ஆய்வு செய்யவே சென்றுள்ளதாகவும் இந்த சம்பத்தினை பிரதேசத்தில் உள்ள அரசியல் வாதிகள் இருவர் குறிப்பாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் ஆகியோர் மக்களை திரட்டி குழப்பத்தை விளைவித்துள்ளனர் என்றும் உண்மைக்கு புறம்பாக விகாரை அமைக்கும் முயற்சி என திரிவுபடுத்தி தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்ததோடு குருந்தூர் மலைப்பகுதியில் தொல்பொருள் ஆய்வினை மேற்கொள்ளவே தாங்கள் வந்துள்ளதாக மன்றில் தெரிவித்துள்ளார்கள். இதற்கு அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந் நிலையில் இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணைக்கு ஒட்டுசுட்டான் பொலீசார் முழுமையான அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாற்றினால் ஏற்கனவே பிறப்பிக்கபட்ட தற்காலிக கட்டளையை நீடித்தும்  குறித்த வழக்கிற்கு 01.10.18 தவணையிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த வழக்கு 01.10.18 இன்று   முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது .
இதன்போது பௌத்த மதகுரு ஒருவரும் அவர்கள் சார்பாக இரண்டு சட்டத்தரணிகளும்  மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் மன்றில் முன்னிலையாகியுள்ளார்கள்.
நீதிமன்றில் மிக நீண்டநேரமாக நடைபெற்ற குறித்த வழக்கு விசாரணையின்போது குருந்தூர் மலைப்பகுதி தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் விகாரை ஒன்று அமைந்துள்ளது அது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளவே சென்றதாகவும் அங்கு உள்ளதாக தெரிவித்து பௌத்த மத சின்னங்களை ஆதாரம் காட்டி தங்கள் கருத்தினை முன்வைத்துள்ளார்கள்.
இதன்போது கிராம மக்கள் சார்மாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் அனைவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.
ஜனாதிபதி சட்டத்தரணி திரு.புவிதரன் தலைமையில் முதன்மை சட்டத்தரணிகளான அன்ரன்புனிதநாயகம்,ரி.பரஞ்சோதி, கெங்காதரன், இளங்குமரன், மற்றும் இளம் சட்டத்தரணிகள் அனைவரும் இந்த வழக்கிற்கு கிராம தமிழ்மக்கள் சார்பாக தமது வாதங்களை முன்வைத்துள்ளார்கள்.
குருந்தூர்; மலைப்பகுதியினை அண்மித்த பகுதியில் உள்ள தமிழ்மக்களின் காணிகள் அனைத்தும் 1892 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டதற்கான பத்திரங்கள் வைத்துள்ளார்கள். அவர்களின் காணிகளையும் தொல்பொருள் திணைக்களம் எல்லைப்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் அங்கு தமிழர்கள்தான் பாரம்பரியமாக வாழ்ந்து வந்தார்கள் என்றும் அந்த மலையில் சிவன் மற்றும் ஜயனார் ஆலயங்கள் வைத்து பலநூறு ஆண்டுகளாக  கிராம மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள் அந்தவகையில் அங்கு தொல்பொருள் திணைக்களம் குறிப்பிடுவது போன்று பௌத்த விகாரை அமைந்திருந்தமை தொடர்பில் அதனை கண்டு பிடிக்க வேண்டும் என்பதாக இருந்தால் அதனை தொல்பொருள் திணைக்களம் மட்டுமே மேற்கொள்ளலாம் அதற்கு பௌத்த மதகுருமார்கள் அங்கு சென்று ஆய்வு செய்ய என்ன தகமை உண்டு இந்த அதிகாரம் அவர்களுக்கு யார் வழங்கியது இவ்வாறு செயற்பாட்டு தொல்பொருள் திணைக்களம் தமது அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்வது தவறாகும் என  தமிழ் மக்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் அனைவரும் தமது வாதத்தினை முன்வைத்துள்ளார்கள்.
இந் நிலையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் எவ்வாறு பௌத்த மதகுருமார்களை தொல்பொருள் திணைக்கள ஆய்விற்கு பயன்படுத்துவீர்கள்? என கௌரவ மன்று  கேட்ட போது தொல்பொருள் திணைக்களத்திடம் நிதி பற்றாக்குறை காரணத்தால் குறித்த விகாரை தொடர்பில் ஆய்வு பணியினை பௌத்த குருமார்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்றில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கு பதில் வழங்கிய மன்று பௌத்த மதகுருமார்களுக்கு  இந்த ஆய்வினை நடத்தும் அதிகாரம் யார் வழங்கியது என்றும் அவர்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ள என்ன தகைமை உண்டு  இவ்வாறு தொல்பொருள் திணைக்களம் தமது அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்முடியாது என மன்று எச்சரிக்கை செய்துள்ளது.
இந்த ஆய்வு பணியில் எவ்வாறு பௌத்த மாதகுருமார்களை தொல்பொருள் திணைக்களம் ஈடுபடுத்தியுள்ளது என்பது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தின் முழுமையான விளக்கத்தினை  அடுத்த வழக்கில் தொல்பொருள் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் ஆயராகி மன்றில் தெரிவிக்குமாறு தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளருக்கு நீதிமன்றால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த பிரசேதம் முல்லைத்தீவு பொலீஸ் பிரிவிற்குள் அடங்குவதால் ஒட்டுசுட்டான் பொலீசாரிடம் இருந்து குறித்த வழக்கினை முல்லைத்தீவு முதன்மை பொலீஸ் அத்தியகட்சகர் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப் பிரச்சனை தொடர்பில் முழுமையான அறிக்கையினை அடுத்த தவணையில் மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இவ்வளவு பிரச்சனையும் வருவதற்கு காரணம் தொல்லியல் திணைக்களம் தான் என்றும் இந்த இடத்தினை பாதுகாப்பதற்கு தொல்லியல் திணைக்களம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பது அதன் திட்டம் என்ன என்பது தொடர்பிலும் அடுத்த தவணைக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது.
அடுத்து வழமையாக மேற்கொண்டது போன்று  தமிழ் மக்கள் கிராமிய வழிபாடுகளை நடத்தலாம் என்றும்  மேலும் குறித்த மலைக்கு முல்லைத்தீவு பொலீசாரால் பாதுகாப்பு வழங்குமாறும் இந் நிலையில் குறித்த பகுதியில் எதுவித மாற்றங்களும் செய்யாமல் தமிழ்மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என மன்று  கட்டளை பிரப்பித்துள்ளதுடன் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையினை 22.10.18 அன்று திகதியிடப்பட்டுள்ளதுடன் விகாரை அமைப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள இடைக்கால தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது குமுழமுனை மற்றும் தண்ணிமுறிப்பு செம்மலை,கிராமங்களை சேர்ந்த பெருமளவான மக்கள் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினர்,கிறிஸ்தவ மற்றும் இந்து மதகுருமார்களும் நீதிமன்ற வளாகத்தில்  சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தமிழர்களது பூர்வீக நிலங்கள் பறிக்கப்படுவது குறித்து ஆதாரங்களுடன் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டவுள்ளதாக த.தே.கூ. அறிவிப்பு

01/10/2018 முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தினூடாக திட்டமிட்ட வகையில் தமிழர்களது பூர்விக நிலங்கள் பறிக்கப்பட்டு அவை தென்பகுதி மக்களுக்கு வழங்கப்படுவது குறித்து வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் ஆதாரங்களை சமர்பித்து ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
எதிர்வரும் 03 ஆம் திகதி மாலை மூன்று மணிக்கு வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டமானது ஜனாதிபதி தலைமையில்  இடம்பெறவுள்ளது.
இக் கலந்துரையாடலில் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாகவும் பேசவுள்ளோம். இதேவேளை இங்கு மற்றுமொரு முக்கிய விடயம் தொடர்பாகவும் பேசவுள்ளோம்.
அதாவது முல்லைதீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற மகாவலி எல் வலயத்தினூடாக தமிழர்களது பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டு அவை வெளி மாவட்டத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இது தொடர்பாக கடந்த கூட்டத்தில் நாம் தெரிவித்த போதும் பணிப்பாளருடன் பேசி விட்டு அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் தற்போது இடம்பெறவுள்ள கூட்டத்தில் அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்களை திரட்டியுள்ளோம். அவற்றை ஜனாதிபதி முன்னிலையில் சமர்பித்து இது தொடர்பாக பேசவுள்ளோம். முல்லைதீவில் இடம்பெறும் இவ்வாறான நில ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.  நன்றி வீரகேசரி அரசியல் கைதிகளுக்காக வவுனியா அமைப்புக்களுடன் இணைந்து குரல் கொடுத்த சிங்கள இளைஞர்கள்

05/10/2018 அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி வவுனியா அமைப்புக்களுடன் சிங்கள இளைஞர்களும் இணைந்து அனுராதபுரத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் அனுராதபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று நண்பகல் 12.00 மணியளவில் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய், புதிய சி.ரி.ஏ சட்டத்தினை உடனே நிறுத்து என்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய தமிழ் பதாதைகளுடனும் சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பாதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,  வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் , முற்போக்கு கூட்டணி , அனுராதபுர விவசாய அமைப்புக்கள்  கலந்துகொண்டிருந்தன.
போராட்டத்தின் போது வீதி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாமென போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தள்ளியதினால் பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கிடையே சிறு கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டுவில் உண்ணாவிரத போராட்டம்

06/10/2018 தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி கடந்த 14 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப் பட்ட உண்ணாவிரத போராட்டதுக்கு வலு சேர்க்கும் முகமாக ஆதரவு போராட்டமும் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இன்று காலை 10 மணியளவில் காந்தி பூங்காவிற்கு முன்பாக இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
குறித்த உண்ணாவிரத போராட்டத்தை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் அமைப்பான தேசத்தின் வேர்கள் அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
 குறித்த உண்ணாவிரத போராட்டத்தில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் காணாமல் போனவர்களின் உறவுகள் அரசியல் வாதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி No comments: