" திருமதி
ஸஹானாவின் ஒரு தேவதையின் கனவு சிறுகதைத்தொகுதி வெளிவருவது குறித்து பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
தெளிவுற அறிந்திடவும், தெளிவுபெற மொழிந்திடவும்,
சிந்திப்போர்க்கு அறிவுவளர, உள்ளத்தே ஆனந்தக்கனவு பல காட்டலும் கைவரப்பெற்றவர்கள் எழுதும்
படைப்புகள் காலத்தால் என்றென்றும் போற்றப்படும். அவை என்றும் புதியவை. அத்தகு இலக்கியவரிசையில் தேவதையின் கனவும் இடம்பெற வாழ்த்துகின்றேன்" என்று 22-01-1997
ஆம் திகதி சென்னையிலிருந்து ஜெயகாந்தன் வாழ்த்தியிருந்த, ஈழத்தின் இலக்கியப்படைப்பாளி
கெக்கிராவ ஸஹானாவும் கடந்த மாதம் எங்கள் இலக்கிய
உலகிலிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
"அற்பாயுள்
மரணமும் மேதா விலாசத்தின் அடையாளமோ? "
என்று ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் சுந்தரராமசாமி எழுதியிருந்ததுதான் நினைவுக்கு
வருகிறது. 1968 இல் பிறந்து 2018 இல் மறைந்துள்ள கெக்கிராவ ஸஹானா, குறுகிய காலத்தில் ஈழத்து இலக்கிய வானில் சுடர்விட்டு பிரகாசித்த நட்சத்திரம். எங்கள் மத்தியில் உதிர்ந்துள்ள இந்த நட்சத்திரம்
எம்மிடம் விட்டுச்சென்றுள்ளவை அவருடைய அருமைக்குழந்தைகளும், இலக்கியப்பிரதிகளும்தான்.
இனி எம்முடன்
பேசவிருப்பவை கெக்கிராவ ஸஹானவின் ஆக்க இலக்கியப்படைப்புகளும் ஆய்வுகளும் மொழிபெயர்ப்பு
பிரதிகளும்தான். கவிதை, சிறுகதை, விமர்சனம், அறிவியல் கட்டுரைகள் ஊடாக பாடசாலைப்பருவம்
முதலே தேடலில் ஈடுபட்டு வந்துள்ள ஸஹானா ஆசிரியையாக
பணியாற்றியவர்.
டொமினிக்
ஜீவாவின் மல்லிகை கண்டெடுத்த இலக்கிய மலர், இலங்கையிலும் தமிழகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்த
தேசங்களிலும் மணம்பரப்பியது.
மல்லிகை யாழ்ப்பாணத்திலிருந்து
வெளியான காலத்தில், 1980 காலப்பகுதியில் 12 வயதுச்சிறுமியாக பாடசாலையில் பயிலும் காலத்தில்
இவருக்கு அதனை அறிமுகப்படுத்தியவர் மர்ஹ_ம் கோயா அப்பாஸ் என்பவர் என்ற தகவலை மறக்காமல்
நன்றியுணர்வோடு தனது முதல் கதைத்தொகுப்பான ஒரு
தேவதைக்கனவு நூலின் என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வானொலி,
நாளாந்த தினசரிகள், தென்னிந்திய சஞ்சிகைகள் மூலமாகவும் பள்ளி ஆசிரியர்களின்
உதவியுடனும் பாரதி முதல் ஜெயகாந்தன் வரையில் தேடிக்கற்றவருக்கு - இலக்கியம்
என்றால் என்னவென்றே தெரியாத அந்த இளம் பருவத்தில்
இவருக்கு மல்லிகை அறிமுகமாகியிருக்கிறது. மல்லிகை ஆக்கங்கள் அந்தச்சிறுமிக்கு பிரமிப்பூட்டியவை.
அதனால் வாசிப்பதுடன் நின்றுகொண்டவர், அதில்
எழுதுவதற்கு தயங்கியிருக்கிறார். எனினும் எழுதிப்பார்க்கத்தூண்டிய பல படைப்புகளை இனம்
கண்டுள்ளார்.
இலங்கை வானொலி
ஒலிமஞ்சரிக்கு எழுதிய முதல் கவிதையும் முதல் சிறுகதையும் ஒலிபரப்பாகியதையடுத்து, தன்னாலும்
தொடர்ந்து ஆக்க இலக்கியம் படைக்கமுடியும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. தனது ஆரம்ப
இலக்கியப்பிரதிக்கு அங்கீகாரம் வழங்கி, களம்
தந்திருக்கும் வானொலி அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீட் அவர்களுக்கும் தனது முதல்
கதைத்தொகுப்பில் மறக்காமல் நன்றி தெரிவிக்கின்றார் ஸஹானா.
எண்பதுகளின்
இறுதியில் பாடசாலை இறுதித்தேர்வை முடித்துவிட்டு கிடைத்திருந்த விடுமுறைக்காலத்தில்
வீட்டில் சேகரித்துவைத்திருந்த அனைத்து மல்லிகை இதழ்களையும் மீண்டும் எடுத்துப்படிக்கிறார்.
மல்லிகை பற்றிய ஒரு நீள் வெட்டுமுகத்தோற்றம் அவர் மனதில் பதிவாகிறது. மல்லிகையில் வெளிவந்த
இலக்கியப்பிரதிகளை விட அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவாவின் சோர்வற்ற கடின உழைப்பும் ஒவ்வொரு
மாதமும் மல்லிகையை வெளியிடுவதற்கு அவர் சந்திக்கும் சவால்களும் கவனத்தை ஈர்க்கின்றன.
அதுவரையில் மல்லிகையில் எழுதாமலிருந்த ஸஹானா ஒரு நீண்ட இலக்கியமடலை மல்லிகைக்கு அனுப்புகின்றார்.
அதனையடுத்து,
மல்லிகை இதழ்கள் மட்டுமன்றி மல்லிகைப்பந்தல் வெளியீடுகளும் அவருடைய கெக்கிராவ இல்லத்திற்கு
வருகின்றன.
அநுராதபுரம்
- கண்டி வீதியில் மத்தியில் வரும் ஊர்தான் கெக்கிராவ. இங்கு மல்லிகை ஜீவாவின் சகோதரி
ஒருவரும் வசித்தார். அவரைக்காண்பதற்காகவும் அவ்வப்போது ஜீவா அங்கு தனது மகன் திலீபனுடன்
செல்வது வழக்கம். இதுபற்றி என்னிடமும் ஜீவா
சொல்லியிருக்கிறார். எங்கள் நீர்கொழும்பு ஊரில்
ஜீவாவின் ஒரு சகோதரர் இருந்தார். அவரது குடும்பத்தினரை பார்க்கவரும் வேளைகளில்தான்
என்னையும் சந்தித்து மல்லிகையில் அறிமுகப்படுத்தி
வளர்த்தார். அவ்வாறே கெக்கிராவையில் அவர் தேடிச்சென்று சந்தித்த ஸஹானவையும் அவர் இனம்
கண்டு மல்லிகையில் அறிமுகப்படுத்தி வளர்த்துவிட்டார்.
அந்தவகையில்
மல்லிகைப்பந்தலில் என்னைப்போன்று வளர்ந்தவர்கள்தான் திக்குவல்லை கமால், மேமன் கவி
, அநுராதபுரம் அன்பு ஜவஹர்ஷா, புத்தளம் ஜவாத் மரைக்கார் முதலான படைப்பாளிகள்.
இன்று , எங்கள்
இலக்கியக் குடும்பத்திலிருந்து விடைபெற்றிருக்கும் சகோதரி கெக்கிராவ ஸஹானாவின் திருமணத்திற்கும்
மல்லிகை ஜீவா தனது மகன் திலீபனுடன் சென்றார்.
அத்தருணத்தில்
மணமக்களுக்கு ஜீவா வழ ங்கிய திருமணப்பரிசு என்ன
தெரியுமா? " ஸஹானாவின் திருமண ஞாபகார்த்தமாக அவரது கதை மல்லிகையில் பிரசுரமாகிறது"
என்ற ஆசிரியர் குறிப்புடன் அக்கதை அந்த மாதம் மல்லிகையில் வெளிவந்துள்ளது. அதனைத்தான்
வழங்கிப்பெருமைப்படுத்தி ஆசிர்வதித்தார்!
அக்கால கட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து மிகுந்த சிரமங்களுடன் மல்லிகையை
வெளியிட்ட அதன் ஆசிரியர், யாழ்ப்பாணத்திற்கு வெளியே எவ்வாறு இலக்கியப்படைப்பாளிகளை
அறிமுகப்படுத்தினார், வளர்த்துவிட்டார், எவ்விதம்
இலக்கிய நேசம் பாராட்டினார் என்பதை இக்கால எழுத்தாளர்களுக்கும் இலக்கிய வாசகர்களுக்கும்
தெரியப்படுத்துவதற்காகவும் கெக்கிராவ ஸஹானவுக்கான இந்த அஞ்சலிக்குறிப்பினை பயன்படுத்துகின்றேன்.
ஸஹானாவின்
கதை வெளியான மல்லிகையை வழங்கி வாழ்த்தும்போது, அவருடைய கணவரிடம், " உங்கள் மனைவியை திருமணத்தின் பின்னர் இலக்கியத்துறையில் சோர்ந்துவிடச்செய்துவிடாமல்,
தொடர்ந்தும் இலக்கியத்துறையில் ஊக்குவித்து பக்கபலமாக இருங்கள்" என்றும் சொல்லியிருக்கிறார்
மல்லிகை ஜீவா.
"மனைவி
அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்றுதான் கவியரசு கண்ணதாசன் பாடினார். ஆனால்,
பல பெண்களுக்கு கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான் என்பதையும் வாழ்ந்துகாட்டியவர் ஸஹானாவின் கணவர்.
தனது அன்புக்கணவர் தனது எழுத்துப்பணிகள் குறித்து கொண்டிருந்த அக்கறையையும் ஸஹானா தனது நூலில் நன்றியுடன் குறிப்பிடுகிறார்.
1989 ஓகஸ்ட்
மாதம் மல்லிகையில் " ஊரடங்கு " என்ற கவிதையுடன் அறிமுகமான கவிஞி ஸஹானா,
அதே ஆண்டு ஒக்டோபர் மல்லிகை இதழில் "உள்ளிருக்கையில்"
என்ற சிறுகதையை எழுதி சிறுகதை எழுத்தாளராகவும் ஈழத்து இலக்கியவட்டாரத்தில் அறியப்பட்டார்.
" கெக்கிராவ
ஸஹானாவின் முதல் கதைத்தொகுப்பில் ( ஒரு தேவதைக்கனவு) இடம்பெற்றுள்ள அனைத்துக்கதைகளும் வாழ்வின் முரண்பாடுகளையும்
மனிதர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளையும் மனித மனங்களின் அசைவுகளையும் அறிவுத்தளத்தில்
நின்று, உளவியல் நுட்பத்துடன் தீர்க்கமாய்
விசாரிப்பதில் ஸஹானவுக்குள்ள அலாதியான அக்கறை புலனாகின்றது. " என்று இந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் பண்ணாமத்துக்கவிராயர்
பதிவுசெய்துள்ளார்.
ஸஹானாவின்
இந்த முதல் கதைத்தொகுப்பு அவரது 21 வயதில் வெளியாகிறது. இந்த நூலில் மல்லிகை ஜீவா,
ஜெயகாந்தன், பண்ணாமத்துக்கவிராயர், மேமன் கவி, பாத்திமா மைந்தன் முதலான மூத்தவர்கள்
ஸஹானாவின் எழுத்தாளுமைப்பண்புகளை இனம்கண்டு வாழ்த்தியிருக்கிறார்கள். இத்தொகுதியில்
14 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
மல்லிகைப்பந்தல்,
ஜீவநதி வெளியீடு , வடமத்திய மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய நூலக ஆவணாக்கல்
சேவைகள் சபை , Author Publication என்பன
இவரது நூல்களை வெளியிட்டன.
கெக்கிராவ
ஸஹானாவின் இதர நூல்கள்:
இன்றைய வண்ணத்துப்பூச்சிகள்
(கவிதை) ஒரு கூடும் இரு முட்டைகளும் (குறு நாவல்) சூழ ஓடும் நதி ( ஜெயகாந்தன் படைப்புகள்
பற்றிய ஆய்வு) ஊமையின் பாஷை ( சிறுகதை) இருட்தேர்
( கவிதை) மான சஞ்சாரம் ( சுயசரிதை) முடிவின் தொடங்கும் கதைகள். ( சிறுகதை) அன்னையின்
மகன் ( நாவல்) புதிய தரிசனங்கள் ( கட்டுரை)
முடிவின் தொடங்கும் கதைகள் தொகுப்பில் 12 கதைகள் இடம்பெற்றுள்ளன.
ஊமையின்
பாஷை தொகுப்பில் 11 சிறுகதைகள் இடம்பெற்றன.
இத்தொகுப்பில்
ஒரு கதையில் பணிப்பெண்களாக மத்திய கிழக்கிற்குச்செல்லும் தாய்மாரின் குழந்தைகள் பற்றிய
சித்திரம் இவ்வாறு பதிவாகியிருக்கிறது:
"எல்லோரும் அன்றலர்ந்த ரோஜாக்கள் என்று
பிள்ளைகளைக்கொண்டாடுகிறார்கள். ஒரு கிராமப்புற பாடசாலைக்கு வந்தால், கண்டுகொள்ளலாம்.
வாடி வதங்கி வறுமையில் தளர்ந்துபோயிருக்கும் பிள்ளை ரோஜாக்களை."
இருட்தேரில்
71 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
அதில் ஒன்று:
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனம்
சீனி டப்பிக்குள்
கதை பேசித்திரிகின்ற,
கைகோர்த்து
அலைகின்ற கல்யாணம் கட்டி குடித்தனம் நடத்துகின்ற
இந்த எறும்புகளில் சில சிக்கிக்கொள்ளும் என் கரண்டிக்குள்
கொதிக்கும்
தேநீரில் இடுவதற்கு முன்பு பல தடவை முயற்சிக்கின்றேன்
முடியாதபோது
தேநீரில் செத்து மிதக்கும் எறும்புகள்
டீ.வி. செய்தியில்
இடையறாது ஒலிக்கும் பலஸ்தீன மண்ணின்
மரண நிலவரம்.
மல்லிகையால்
அறிமுகமாகி வளர்ந்த கெக்கிராவ ஸஹானா அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவாவை இலக்கிய ஆசானாகப்பார்த்தார்.
பின்னாளில் தனது படைப்புகளுக்கு களம் தந்த யாழ்ப்பாணம் ஜீவநதியின் ஆசிரியர் கலாமணி
பரணீதரனை தனது மகனாகப்பார்த்தார்.
பரணீதரன்
சிறுவயதில், ஆசிரியையான தனது தாயாரது கையை பற்றிக்கொண்டு ஸஹானாவை
பார்க்கவந்த நனவிடை தோய்ந்த கதையையும் ஸஹானாவின்
ஒரு பதிவில் படித்திருக்கின்றேன்.
அநுராதபுரத்திலிருந்து
எல். வஸீம் அக்ரம் ஆசிரியராக இருந்து வெளியிடும் படிகள் இதழில் ( 2011 ஜனவரி) மேமன் கவி, கெக்கிராவ ஸஹானா, கெக்கிராவ சுலைஹா இலக்கியச்சகோதரிகள் பற்றி விரிவான கட்டுரை
எழுதியுள்ளார். படிகள் வெளியிட்ட வேலிகளைத்தாண்டும்
வேர்கள் கவிதைத்தொகுப்பிலும் ஸஹானாவின் கவிதைகள் இடம்பெற்றன.
கவிதைகளுக்காக
மலரும் பூங்காவனம் இதழ் ஸஹானாவை அட்டைப்பட
அதிதியாக கௌரவித்துள்ளது.
சிறந்த சிறுகதைக்கான
தமிழ்க்கதைஞர் வட்டத்தின் (தகவம்) பரிசு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கவிதைக்கான பரிசு,
மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது,
அரச சாகித்திய விழா சான்றிதழ்,
யாழ். கலை இலக்கியப் பேரவையின் சான்றிதழ் என்பவற்றையும் பெற்றவர்.
அகில உலக இலக்கியமாநாட்டிலும் பாராட்டப்பட்டவர்
இலங்கையில்
வெளியாகும் ஞானம், ஜீவநதி உட்பட புகலிட இணைய இதழ்களும் கெக்கிராவ ஸஹானாவின் திடீர்
மறைவுச்செய்தி அறிந்து அதிர்வுகலந்த அனுதாபக்குறிப்புகளை எழுதியுள்ளன.
ஸஹானாவின்
முதல் தொகுப்பு ஒரு தேவதைக்கனவு நூலின் பின்புற அட்டையில் பாத்திமா மைந்தன் எழுதியிருக்கும்
வரிகள்:
"ஸஹானா இசைப்பெயர். என்னை இசைக்கவைத்த பெயர். எதிர்காலத்தில்
எல்லோராலும் இசைக்கப்படப்போகிற பெயர். சராசரி மனித விருப்புகளில் எனக்கு விருப்பம்
இருந்ததில்லை. ஆனால், ஆக்ராவும் கெக்கிராவையும்
நான் செல்ல ஆசைப்படும் செல்ல இடங்கள். முன்னது
நேசக்கல்லறை. பின்னது பாசக்கருவறை. ' ஒரு தேவதையின் கனவு ' - இது இவருக்கு தலைப்பிரசவம். ஒருவகையில் எனக்கு பேரக்குழந்தை.
பெயர் சொல்லும் குழந்தையாக திகழ வாழ்த்துக்கள்."
ஆம்! இலக்கிய
உலகில் பெயர்சொல்லும் குழந்தையாகவே வாழ்ந்து மறைந்துள்ள இலக்கியத்தேவதைக்கு எமது கண்ணீர் அஞ்சலி.
letchumananm@gmail.com
No comments:
Post a Comment