கடவுள் பக்தி தனையின்று
காசைக் கொண்டு பார்க்கின்றார்
கடவுள் பக்தி என்றுசொல்லி
கழுத்தை அறுத்துக் கொல்லுகின்றார்
கடவுள் பக்தி எனும்பெயரால்
கற்பை விலை பேசுகிறார்
கடவுள் பக்தி எனுமுணர்வை
கருத்தில் கொள்ளா இருக்கின்றார் !
குரு பக்தி நாட்டிலிப்போ
குன்றிப் போய் இருக்கிறது
குரு கூட இப்போது
குறை கொண்டே உலவுகிறார்
நல்ல குரு வாய்த்துவிடின்
நம் எண்ணம் உயர்ந்துவிடும்
நல்ல குரு ஆசிபெற்று
நாம் வாழ்வோம் சிறப்புடனே !
அன்னை தந்தை பக்தியின்று
அருகி வரப் பார்க்கிறது
அன்னை தந்தை வார்த்தைக்கே
அர்த்தம் இன்றிப் போகிறது
அன்னை தந்தை எமக்கெல்லாம்
அதிக சுமை என்கின்றார்
அக்கருத்தை துடைத்து விட்டு
அன்னை தந்தை தாழ்பணிவோம் !
நாட்டுப் பக்தி இப்போது
ஏட்டில் மட்டும் இருக்கிறது
நாட்டு நலம் எனுமெண்ணம்
நாவில் மட்டும் இருக்கிறது
நாட்டைப் பற்றி நினையாதார்
வீட்டைப் பற்றி நினைக்காரே
நாட்டை என்றும் தாயெனவே
நாம் பக்தி செலித்திடுவோம் !
பக்தி எனும் போதினிலே
பக்குவம்தான் முதன்மை பெறும்
பக்தி என்று எண்ணுகையில்
பரந்த மனம் எழவேண்டும்
பக்தி எனும் பாதையிலே
பண்பு வந்து நிற்கவேணும்
பக்தி செய்து நாமென்றும்
பார் சிறக்க வாழ்ந்திடுவோம் !
No comments:
Post a Comment