உலகச் செய்திகள்


சிறுவர்கள் மீட்கப்பட்டதை கொண்டாடுகின்றது தாய்லாந்து

ஜப்பானில் கனமழை:பலியானோர் எண்ணிக்கை 122

பிரிட்டன்; நோவிசோக் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளான பெண் உயிரிழந்தார்

தடைகளை நீக்க அணு ஆயுதங்களை முற்றிலும்  அழிக்க வேண்டும்

மேலும் சீன பொருட்களுக்கு வரி விதித்துள்ள அமெரிக்கா 

கொடியேற்றி அரசியல் பயணம் தொடங்கினார் கமல்ஹாசன்

புதின் எனக்கு எதிரியல்ல; ட்ரம்ப்

நவாஸ் ஷெரிப் பேரன்கள் கைது

இந்தியா குடியரசு தினவிழாவில் பங்கேற்க ட்ரம்ப்புக்கு அழைப்பு

கைதானார் நவாஸ் ஷெரீஃப்


சிறுவர்கள் மீட்கப்பட்டதை கொண்டாடுகின்றது தாய்லாந்து

10/07/2018 குகைக்குள் சிக்கிய சிறுவர்களும் அவர்களது  பயிற்றுவிப்பாளரும் இரண்டு வாரங்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டதை தாய்லாந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
12 சிறுவர்களும் உயிருடன் மீட்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை மீட்பு நடவடிக்கை பல மாதங்கள் நீடிக்கலாம் என்ற அவநம்பிக்கைகளிற்கு மத்தியில் உலகநாடுகள் இணைந்து சிறுவர்களை மீட்டுள்ளன.
பிரிட்டிஸ் நிபுணர்கள் தலைமையிலான சுழியோடிகள் குழுவொன்றும் தாய்லாந்தின் நேவி சீல் படைப்பிரிவை  சேர்ந்தவர்களும் குகைக்குள் நுழைந்து சிறுவர்களை ஓவ்வொருவராக கடும் போராட்டத்திற்கு மத்தியில் நீண்ட தூரத்திலிருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர்.
குகைக்குள் இருந்த சிறுவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட செய்தி வெளியானதும் தாய்லாந்து அதனை கொண்டாடிவருகின்றது.
குகைக்கு அருகில் உள்ள சியாங் ராய் நகரின் மக்கள் வீதிகளில் இறங்கி சிறுவர்கள் மீட்கப்பட்டதை கொண்டாடி வருகின்றனர்.வாகனச்சாரதிகள் தங்கள் வாகனங்களின் ஓலிகளை எழுப்பி மகிழ்ச்சி வெளியிட்ட அதேவேளை சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வெளியே மக்கள் நடமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது எனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் நான் இதனை என்றும் நினைவில் வைத்திருப்பேன் என உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நபர் ஒருவர் தெரிவித்தார்.

நான் அழுத நாட்கள் உண்டு தாய்லாந்து மக்கள் ஒருவரையொருவர் நேசிப்பதை பார்த்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் என அவர் குறிப்பிட்டார்.
என்ன நடக்கின்றது என்பதை உன்னிப்பாக அவதானித்து வந்த தாய்லாந்து மக்கள் சிறுவர்கள் மீட்கப்பட்ட பின்னர் சமூக ஊடகங்களில் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை டொனால்ட் டிரம்ப் தெரேசா மே போன்ற உலக தலைவர்களும்  தங்கள் மகிழச்சியை வெளியிட்டுள்ளனர். நன்றி வீரகேசரி 










ஜப்பானில் கனமழை:பலியானோர் எண்ணிக்கை 122

10/07/2018 ஜப்பானில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. 
ஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 
தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கியும், மண்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 20 க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகளில்  மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.    நன்றி வீரகேசரி 










பிரிட்டன்; நோவிசோக் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளான பெண் உயிரிழந்தார்

09/07/2018 பிரிட்டனில் நோவிசோக் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பிரிட்டனில் வாழ்ந்து வந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவுக்கு ரசாயன விஷம் கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, பிரிட்டனில் மீண்டும் அதே போன்ற விஷ தாக்குதல் நடத்தப்பட்டது. 
இங்கிலாந்தின் வில்ட்ஷயர் கவுண்டியில் உள்ள சாலிஸ்பரி நகரில் கடந்த வாரம் தம்பதியர் சார்லி ரோவ்லெவும், டான் ஸ்டர்ஜஸூம் அவர்களின் வீட்டில் சுயநினைவிழந்த நிலையில் கவலைக்கிடமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அங்கிருந்து அவர்கள் மீட்கப்பட்டு சாலிஸ்பரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நரம்பு மண்டலத்தை பாதிக்கின்ற நோவிசோக் நச்சு வேதிப்பொருள் அவர்களின் உடலில் கலந்துள்ளது.
இந்நிலையில், நோவிகோச் நச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த டான் ஸ்டர்ஜஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி 









தடைகளை நீக்க அணு ஆயுதங்களை முற்றிலும்  அழிக்க வேண்டும்

09/07/2018 வட­கொ­ரியா அணு ஆயு­தங்­களை முற்­றி­லு­மாக அழித்த பிறகே அந்­நாட்டின் மீது விதிக்­கப்­பட்­டுள்ள பொரு­ளா­தார தடைகள் விலக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்சர் மைக் பாம்­பியோ தெரி­வித்­துள்ளார்.
வட­கொ­ரியா, ஜப்பான், வியட்னாம், ஐக்­கிய அரபு அமீ­ரகம், பெல்­ஜியம் உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்சர் மைக் பாம்­பியோ அரசு முறை பயணம் மேற்­கொண்­டுள்ளார். பய­ணத்தின் முதல் நாடாக அவர், வட­கொ­ரியா தலை­நகர் பியோங்­யாங்­கிற்கு கடந்த 5 ஆம் திகதி சென்­றி­ருந்தார்.
சமீ­பத்தில், அணு ஆயு­தங்­களை மிக வேக­மாக அழிக்க வட­கொ­ரியா நட­வ­டிக்கை எடுக்க வேண்டுமென அமெ­ரிக்கா அவ­சரம் காட்டி அழுத்தம் கொடுத்­தது. ஆனால், அவ்­வ­ளவு வேக­மாக அழிப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள முடி­யாது என அமெ­ரிக்­கா­விற்கு எதி­ராக வட­கொ­ரியா காட்­ட­மான அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்­தது.
இதனால், வட­கொ­ரிய பய­ணத்தின் போது கிம் ஜாங் அன்னை சந்­திக்­காத பாம்­பியோ, வட­கொ­ரிய உயர் அதி­கா­ரி­களை சந்­தித்தார், அவர்­க­ளிடம் சமீ­பத்தில் இரு­ நா­டு­க­ளுக்கு இடையே போடப்­பட்ட சிங்­கப்பூர் ஒப்­பந்தம் குறித்தும், அணு சோதனை மையங்­களை அழிப்­பது தொடர்­பா­கவும் அவர் பேச்­சு­வார்த்தை நடத்­தினார். 
வட­கொ­ரியா பய­ணத்தை முடித்­து­கொண்டு, பாம்­பியோ நேற்று ஜப்பான் தலை­நகர் டோக்­கியோ சென்­ற­டைந்தார். அங்கு தென்­கொ­ரியா மற்றும் ஜப்பான் நாட்டின் வெளி­யு­றவு மந்­தி­ரிகள் உடன் நீண்டநேரம் பேச்­சு­வார்த்தை நடத்­தினார். பின்னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறு­கையில், “வட­கொ­ரியா அணு ஆயு­தங்­களை முற்­றி­லு­மாக அழித்த பிறகே அந்­நாட்டின் மீது விதிக்­கப்­ப­ட்டுள்ள பொரு­ளா­தார தடைகள் விலக்­கி கொள்­ளப்­படும்.
மேலும், சிங்­கப்பூர் ஒப்­பந்­தத்தில் குறிப்­பிட்­டுள்­ள­வாறு, அணு ஆயு­தங்கள் வட­கொ­ரி­யாவில் முற்­றி­லு­மாக அழிக்­கப்­பட்­டு­ விட்­டதா என ஆய்வு குழு­வினர் ஆய்வு செய்து சரி பார்த்த பின்­னரே பொரு­ளா­தார தடைகள் விலக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்” என பாம்­பியோ தெரி­வித்தார். நன்றி வீரகேசரி 








மேலும் சீன பொருட்களுக்கு வரி விதித்துள்ள அமெரிக்கா 

12/07/2018 அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் 13 இலட்சம் கோடி மதிப்புள்ள சீன பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.    
சீனாவில் உற்பத்தியாகும் ஏராளமான பொருட்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வருகிற நிலையில் அமெரிக்க பொருட்களும் சீனாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
சமீபத்தில் அமெரிக்க பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் சீனா, அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரியை விதித்தது.
சுமார் 2 இலட்சம் கோடி பொருட்களுக்கு இவ்வாறு வரி உயர்த்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவில் இருந்து அமெரிக்கா செல்லும் .2 இலட்சம் கோடி பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் கூடுதல் வரி விதித்தது.
இதனால் இரு நாடுகளுக்கு மத்தியில் வர்த்தக ரீதியிலான மோதல் போக்கு உருவானது.
இந்த நிலையில் அமெரிக்காவில் விற்பனையாகும் 13 இலட்சம் கோடி மதிப்புள்ள சீன பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்தீசர் வெளியிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 








கொடியேற்றி அரசியல் பயணம் தொடங்கினார் கமல்ஹாசன்

12/07/2018 மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியொன்றைத் தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன். அந்த கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றபிறகு முதன்முறையாக கட்சிக் கொடியை ஏற்றி அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
கடந்த பெப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். 
அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக டெல்லியில் பதிவு செய்யப்பட்டது. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து முதன் முறையாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 
கட்சியின் கொடியேற்றி வைத்து கமல்ஹாசன் பேசியதாவது...
இன்று நம் அனைவருக்கும் மிக முக்கியமான நாள். மாற்றத்தை நோக்கிய நமது பயணத்தின் மிக முக்கிய மைல் கல்லாக நமது மக்கள் நீதி மய்யம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு தற்காலிகமாக அமைக்கப்பட்ட நமது உயர்நிலைக் குழு கலைக்கப்படுகிறது.
அக்குழுவில் சிறப்பாக தன்னலம் பாராமல் பணியாற்றிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிக்காக உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு, உள்ளச்சுத்தியுடன் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நமது உயர்நிலைக் குழு உறுப்பினர்களான ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார், சி.கே.குமர வேல், ஏ.ஜி.மவுரியா, எஸ். மூர்த்தி, ஆர்.ரங்கராஜன், சவுரிராஜன், ஆர்.தங்கவேல் ஆகியோர் இனி மக்கள் சேவையை மகத்தாக செய்து முடிப்பதற்கு ஏற்ப மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இன்று முதல் செயல்படத் தொடங்கி கட்சியினை வழி நடத்துவர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொண்டர்களும், மற்ற நிர்வாகிகளும் இவர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார்.   நன்றி வீரகேசரி 









புதின் எனக்கு எதிரியல்ல; ட்ரம்ப்

12/07/2018 ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனக்கு எதிரி அல்ல அவர் எனக்கு போட்டியாளர் மட்டுமே என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷிய ஜனாதிபதி புதின் ஆகியோர் ஐரோப்பாவில் சந்திக்கவுள்ளனர். உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பு குறித்து டொனால்ட் ட்ரம்ப் கூறியதாவது:
“எனது ஐரோப்பிய பயணத்தின் போது ரஷிய ஜனாதிபதி புதினை சந்தித்து பேசுவது எளிதான ஒன்றாகவே இருக்கும். புதின் எனது போட்டியாளர்தான், எதிரி இல்லை. ஏன் ஒரு நாள் நானும் அவரும் நண்பர்களாக கூட ஆகலாம். இருப்பினும் புதின் எப்படிப்பட்டவர் என்பது பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.
அத்தோடு புதினுடனான சந்திப்பின் போது, ஆயுத கட்டுப்பாட்டு விவகாரம், ஐ.என்.எப் ஒப்பந்தத்தை ரஷியா மீறுவது, புதிய ஒப்பந்தத்தை நீட்டிப்பது. உக்ரைன் விவகாரம், சிரியா விவகாரத்தில் தீர்வு காண்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி 








நவாஸ் ஷெரிப் பேரன்கள் கைது

13/07/2018 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்-ஐ கைது செய்ய லாகூரில் பொலிஸார் காத்திருக்கும் நிலையில் அவரது பேரன்களை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 
பனாமா லீக்ஸ் விவகாரத்தில் தண்டிக்கப்பட்டு பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷெரிப் தற்போது அவ்வழக்கில் மேல்முறையீட்டு விசாரணையை சந்தித்து வருகிறார். இந்நிலையில், ஊழல் செய்த பணத்தில் லண்டனின் அவன்பீல்ட் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. நவாஸ் ஷெரிப் மீதான குற்றம் உறுதியானதால் அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், அவரது மகள் மர்யம் நவாஸ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், லண்டனில் உள்ள நவாஸ் ஷெரிப்புக்கு சொந்தமான அவன்பீல்டட வீட்டின் முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியினர் சிலர் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் சிலர் நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம் ஷெரிப் மற்றும் மரியம் ஷெரிப் மகன்களான ஜுனைத் மற்றும் மைத்துனர் ஜக்கரியா ஆகியோருக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களில் ஒருவர் ஜுனைத், ஜக்கரியாவுக்கு எதிராக தகாத வார்த்தைகளை பிரயோகித்தார் இதனால் ஆவேசமடைந்த ஜுனைத் மற்றும் ஜக்கரியா வீட்டில் இருந்து வெளியேவந்து போராட்டக்காரர்களின் சட்டையை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அங்கு காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, ஜுனைத் மற்றும் ஜக்கரியாவை கைது செய்த பொலிஸார், அவர்கள் இருவரையும் வாகனத்தில் ஏற்றி அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம், ‘போராட்டக்காரர்கள் பயன்படுத்திய கெட்ட வார்த்தைகளை கேட்டவர்கள் யாராக இருந்தாலும், பொறுமையை இழந்து என் மகன் செய்த காரியத்தைதான் செய்திருப்பார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 








இந்தியா குடியரசு தினவிழாவில் பங்கேற்க ட்ரம்ப்புக்கு அழைப்பு

13/07/2018 அடுத்த வருடம் ஜனவரி 26 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் திகதி இடம்பெறும் குடியரசு தினவிழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் ட்ரம்ப்புக்கு முன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமா டெல்லி வந்து இந்தியாவின் குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார். 
தற்போது ட்ரம்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் மூலம் அமெரிக்காவுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. பல சுற்றுக்களாக கடிதப்பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் அழைப்பை ஏற்பது பற்றியோ, டிரம்ப் வருகை பற்றியோ இன்னும் அமெரிக்கா அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. என்றாலும் டிரம்ப் இந்தியா வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதென தெரிவிக்கப்படடுள்ளது   நன்றி வீரகேசரி 









கைதானார் நவாஸ் ஷெரீஃப்

 13/07/2018 ஊழல் வழக்கில் குற்றவாளிகள் என நிரூபனமாகி தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை பொலிஸார் இன்றிரவு கைது செய்தனர்
பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பிரதமர் பதவியையும் இழந்தார்.
அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷெரீஃப்   மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் ‘அவென்பீல்ட்’ வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அந்த நீதிமன்றம் முடிவு செய்தது. 
அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறை தண்டனை விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நவாஸ் ஷெரீஃப், மகள் மரியம் நவாசுடன் இன்று இரவு பாகிஸ்தான் திரும்புவதாக தகவல்கள் வெளியாகின.
லண்டனில் இருந்து அபுதாபி சென்ற நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் புறப்பட்டு வந்துகொண்டிருப்பதாக தெரியவந்தது.
இந்நிலையில் இன்று மாலை 6.15 மணியளவில் அபுதாபியில் இருந்து நவாஸ் ஷெரீஃப் வரும் விமானம் லாகூர் வந்தடையும் என முன்னர் தகவல் வெளியானது. ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்கு விமானம் வராததால் நவாஸ் ஷெரீஃபை வரவேற்க காத்திருந்த தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று இரவு சுமார் 9.15 மணியளவில் நவாஸ் ஷெரீஃப் வந்த விமானம் லாகூர் விமான நிலையத்தில் வந்தடைந்தது. விமானத்தில் இருந்து இறங்கி வந்த நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் ஷெரீஃப் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள் பாதுகாப்பு படையினர் சூழ, சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.   நன்றி வீரகேசரி 




No comments: