இலங்கை குறித்து மீண்டும் ஓரு சர்ச்சை கருத்தை வெளியிட்டார் நேஸ்பிபிரபு
"த.தே. கூட்டமைப்பினர் பெயரளவிலே எதிரணியாகவும் அரசாங்கத்தின் பங்காளியாகவும் செயற்படுகின்றனர்"
ஈ.பி.டி.பி யே மகேஸ்வரனை படுகொலை செய்தது;துவாரகேஸ்வரன்
சட்டம் ஒழுங்கு அமைச்சர் யாழ். விஜயம்
"வன்முறைகளை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை"
இலங்கை வந்தடைந்தார் தாய்லாந்து பிரதமர்
இரு நாடுகளுக்குமிடையில் 04 புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து
காணாமல்போனோர் அலுவலகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
“விஜயகலாவின் உரையை சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்க உத்தரவு“
ரோம் நகரை அடைந்தார் மைத்திரி
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உதவி புரிந்த பெண் மீது தாக்குதல்
இலங்கை குறித்து மீண்டும் ஓரு சர்ச்சை கருத்தை வெளியிட்டார் நேஸ்பிபிரபு
09/07/2018 இலங்கை மீதான பிரேரணையை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை வாபஸ்பெறவேண்டும் என அமெரிக்காவும் பிரிட்டனும் கேட்டுக்கொள்ளவேண்டும் என பிரிட்டனின் நேஸ்பி பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கியஇராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னரே வேர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பிரிட்டனும் அமெரிக்காவும் பல அநீதிகளை இழைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் சித்திரவதையையும்,மோசமாக நடத்தப்படுவதையும் கண்டிக்கவேண்டும் ஆனால் சில சந்தர்ப்பங்களில் அதனை தூண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவும் பிரிட்டனும் தங்கள் நடவடிக்கைகள் ஐநா பிரகடனத்திற்கும் மனித உரிமைகள் பிரகடனத்திற்கும் எதிரானவை என்பதை உணரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
நேஸ்பி பிரபு மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் நெருங்கிய உறவுகளை கொண்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
"த.தே. கூட்டமைப்பினர் பெயரளவிலே எதிரணியாகவும் அரசாங்கத்தின் பங்காளியாகவும் செயற்படுகின்றனர்"
11/07/2018 "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் போருக்கு பின்னர் தெற்கினை விட வடக்கிலே அதிக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்திகளும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் முடக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் வடக்கிற்கு நிலையான அபிவிருத்திகளை இதுவரையில் மேற்கொள்ளவில்லை" என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.
யாழ்பாணத்திற்கு இன்று விஜயத்தை மேற்கொண்டு ஊடகவியலாளர்களுக்க கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சியமைத்தனர். வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் வெறும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றது. 30 வருட காலம் யுத்தம் இடம் பெற்ற வடக்கில் யுத்தத்திற்கான எவ்வித சுவடுகளும் காணப்பட கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெற்கினை விடய வடக்கிற்கே அதிகமான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தார். ஆனால் தேசிய அரசாங்கம் 3வருட காலத்தில் எவ்வித அபிவிருத்திகளின் நிலைபேறான திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
வடக்கிற்கு அபிவிருத்திகளை மேற்கொள்வதாக மக்கள் தெரிவு செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெயரளவிலே எதிரணியாக செயற்படுகின்றனர். அரசாங்கத்தின் பங்காளியாகவே செயற்படுகின்றனர். அரசாங்கத்தின் குறைப்பாடுகளை இவர்கள் இதுவரை காலமும் சுட்டிக்காட்டவில்லை. அரசாங்கத்திற்கு ஆதரவாகவே அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். வடக்கிற்கு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கும் செயற்திட்டங்களை முன்னெடுக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதற்கு ஆதரவாகவே செயற்பட்டனர்.
வடக்கில் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனையே பிரதானமாக காணப்படுகின்றது. மறுபுறம் விவசாயத்துறை இன்று பௌதீக காரணிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் சரி தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் எவ்வித அக்கறையும் மேற்கொள்ளவில்லை. கடந்த அரசாங்கத்தில் பட்டதாரிகளுக்கு கல்வி தகைமைகளுக்க ஏற்ப தொழில்வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று பட்டதாரிகள் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறாமல் சாதாரண நபர் போல் வறுமையின் காரணமாக கிடைத்த தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கிற்கு அரசியலமைப்பு மாத்திரமே தற்போதைய தீர்வு என்று எதிர் கட்சி தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிடுவது பொருத்தமற்றதாகவே காணப்படுகின்றது. அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணண்பதை விடுத்து முறையற்ற விதமாக அரசியலை பயன்படுத்துவது பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்க இழைக்கப்படும் துரோகமாகவே காணப்படுகின்றது. வடக்கு மக்கள் அரசியல் தீர்வினை ஒரு போதும் கோரி நிற்கவில்லை என்று கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெளிப்படுத்தினர்.
தெற்கினை போன்று வடக்கிலும் இன்று குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றது. வடக்கில் போதை பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குறிப்பிட்ட விடயம் ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் அவர் குறிப்பிட்ட விதமே அரசியலமைப்பிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் முரணானது. தெற்கில் இருந்து அரசியல்வாதிகளின் செல்வாக்குடனே வடக்கிற்கு போதைபொருட்கள் கைமாற்றப்படுகின்றது என்று இவர் குறிப்பிட்டமை தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி வடக்கின் அமைதியினை உறுதிப்படுத்த வேண்டும் 30 வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் இவ்வாறான பிரச்சினைகள் ஏதும் இடம் பெறவில்லை ஆனால் இன்று தேசிய அரசாங்கத்தின் 3 வருட ஆட்சியில் வடக்கு மக்களின் வாழ்க்கை மிகவும் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது.
ஆகவே நிலைபேறான அபிவிருத்தியை வடக்கிற்கு செயற்படுத்த வேண்டுமாயின் ஆட்சி மாற்றம் அவசியமானதாகவே காணப்படுகின்றது. மாகாண சபை தேர்தலை அரசாங்கம் பிற்போடுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாமல் விரைவில் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்த வேண்டும். அப்போது மக்கள் தங்களது பதிலடியினை நன்கு வெளிப்படுத்துவார்கள்" . என தெரிவித்தார். நன்றி வீரகேசரி
ஈ.பி.டி.பி யே மகேஸ்வரனை படுகொலை செய்தது;துவாரகேஸ்வரன்
12/07/2018 முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பி கட்சியினரும் , யாழில்.உள்ள நான்கு பிரபல வர்த்தகர்களும் உள்ளனர் என மகேஸ்வரின் சகோதரரும் , ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான தியாகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சார்ந்தவர்களும் , அக் கட்சியின் செயலாளரான டக்ளஸ் தேவானந்தாவும் மகேஸ்வரனை படுகொலை செய்வதற்கு பல தடவைகள் முயற்சித்தார்கள்.
யாழ்.காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தினுள் வைத்து சுட்டுப்படுகொலை செய்வதற்கு 2000ஆம் ஆண்டு முயற்சித்தார்கள். பின்னர் இளவாலை சென் அன்ரனிஸ் தேவாலயத்திற்கு அருகில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டு இருக்கும் போது ஈ.பி.டி.பி. கட்சியை சேர்ந்த திருலோகநாதன் என்பவரால் சுடப்பட்டார். அதில் மகேஸ்வரன் உயிர்தப்பி இருந்தார்.
அதன் பின்னர் ஊர்காவற்துறை பகுதிக்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி.பி கட்சியினர் தாக்குதலை மேற்கொண்டதில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஆதாரவாளர்களை காப்பற்ற சென்ற மகேஸ்வரன் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அவர் உயிர் தப்பி இருந்தார். பின்னர் கடந்த 2007ஆம் ஆண்டு மார்கழி மாதம் காரைநகர் சிவன் கோவில் திருவாதிரை உற்சவ தேர்த்திருவிழாவின் போது கோயிலில் வைத்து மகேஸ்வரனை படுகொலை செய்ய முயற்சித்தார்கள். அதிலும் அவர் உயிர் தப்பி இருந்தார்.
அதன் பின்னரே கொழும்பில் வைத்து சுட்டுபடுகொலை செய்யப்பட்டார்.
மகேஸ்வரனை படுகொலை செய்த வசந்தன் என அழைக்கப்படும் வெலேன்ரைன் என்பவர் முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர். பிறகு அமைப்பில் இருந்து விலகி ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து இயங்கினார்.
மகேஸ்வரனுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் முரண்பாடுகள் காணப்படவில்லை. அக்கால பகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி "அல்மீசா" எனும் கப்பல் ஊடாக பொருட்களை ஏற்றி இறக்கும் வியாபாரம் செய்து வந்தார்.
அதன் ஊடாக யாழில் உள்ள பிரபல வார்த்தகர்கள் நால்வருடன் நட்பு கொண்டு அவர்கள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்கள்.
அந்த வர்த்தக வியாபாரத்திற்கு வியாபர ரீதியாக மகேஸ்வரன் போட்டியாக இருந்தார். ஏற்கனவே தனி ஒரு மனிதனாக அரசியலில் ஈ.பி.டி.பி.யினருக்கு போட்டியாக இருந்தமையால் , வர்த்தக மற்றும் அரசியல் போட்டியாளனை இல்லாதொழிக்கவே மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டார்.
மகேஸ்வரனை படுகொலை செய்த நபருக்கு உதவியாக வந்த அரியாலையை சேர்ந்த நபர் அன்றைய தினம் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து இருந்தார். அவரது சடலத்தை அறியாலைக்கு கொண்டு வர உதவியது ஈ.பி.டி.பி.யினரே.
அதேபோன்று கொலையாளி சார்பில் சட்டத்தரணியை நியமித்தமை , சட்டத்தரணிக்கான கொடுப்பனவுகளை கொடுத்தமை அனைத்துமே ஈ.பி.டி,பி.யினர்.
எனவே மகேஸ்வரின் படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டியமை , படுகொலை செய்தமை , கொலையாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கியமை ,உதவியமை என அனைத்தையும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தான்.
தற்போது எனக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு உள்ளனர். போலி முகநூல்கள் ஊடாகவும் , பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் ஊடாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதுடன் அச்சுறுத்தல்களையும் விடுத்து வருகின்றனர். என தெரிவித்தார். நன்றி வீரகேசரி
சட்டம் ஒழுங்கு அமைச்சர் யாழ். விஜயம்
12/07/2018 யாழிற்கு விஐயம் செய்துள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாண நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இச் சந்திப்பு இன்று இரவு யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவுள்ள ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவரது செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பிரதி அமைச்சர் நளின் பண்டார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வாள்வெட்டு, கொள்ளை, துஸ்பிரயோகங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இதனைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
"வன்முறைகளை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை"
13/07/2018 வடக்கில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு பொதுமக்கள் பூரண ஆதரவு வழங்க வேண்டும். அது தொடர்பான தகவல்களை மக்கள் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
வடக்கில் அதிகரித்துள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்றைய தினம் சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பிரதி அமைச்சர் நளின் பண்டார மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நிலையில் அங்கு அவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார கருத்து தெரிவிக்கையில்,

முப்பதாண்டுகால யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கில் அநேகமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தற்போது மக்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்கின்றார்கள். மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளில் மென்மேலும் விருத்தியடைந்து வருவதுடன் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் காணப்படுகின்றது.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, சட்ட மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுமாறு நான் ஆலோசனை வழங்கியிருந்தேன். அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சரியான சேவையை செய்கின்றார்கள் என நான் கூறிக் கொள்கின்றேன்.
அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் சிலவற்றை கூற வேண்டியுள்ளது. அரச முகாமைத்துவ ஆட்சேர்ப்பின் போது 131 பேரினை உள்வாங்கியிருந்தோம். ஆனால் அதில் வடக்கிலிருந்து 31 பேர் மாத்திரமே வந்திருந்தார்கள்.
அதேபோன்று பொறியியலாளர்கள், கணக்காளர்கள் போன்ற துறைகளிலும் இங்கிருந்து வருவோரது எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இலங்கையர் என்ற ரீதியில் எல்லோருக்கும் சமனாகவே சந்தர்ப்பங்களை வழங்கிவருகின்றோம்.
தற்போது வடக்கு, கிழக்கில் 1500 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். இவை தவிர கிராம மட்டத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக அதற்கான வேலைத் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் பதிலளித்திருந்தனர்.
கேள்வி: பொலிஸாருடன் தற்போது இடம் பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக கூறுங் கள்?
பதில்: ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், வடக்கில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நேரில் சென்று ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எனக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்கள். அந்தவகையில் அது தொடர்பாக பொலிஸாருடன் கலந்துரையாடியிருந்தேன்.
இங்கு சட்ட மற்றும் ஒழுங்கினை நிலைநாட்டும் வகையில் செயற்படுமாறு பொலிஸாருக்கு நான் ஆலோசனை வழங்கியிருந் தேன்.
கேள்வி: யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதே ?
பதில்: இங்கே இடம்பெறுகின்ற வாள்வெட்டுச் சம்பவங்கள், பாலியல் துன்புறுத் தல் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகநபர்களை கைது செய்துள்ளோம். அவர்களை நீதிமன்றில் முற்படுத்தியுள்ளோம். விசேடமாக இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்ற போது பொது மக்கள் அது தொடர்பான தகவல்களை வழங்க வேண் டும். அதனூடாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
கேள்வி : வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறும் நிலையில் முக்கியமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா ?
பதில்: இது தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பதில் வழங்குவார்.
கேள்வி: வன்முறைச் சம்பவங்கள் காலத்திற்கு காலம் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் ஏன் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
பதில்: இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது அது தொடர்பாக முன்னுரிமை கொடுத்து விசாரணை செய்ய வேண்டும். அதேநேரம் பொதுமக்களும் இது தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும். தற்போது இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. அதனூடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கேள்வி: புதிதாக சட்ட ஒழுங்கு அமைச்சராக பதவியேற்ற நிலையில் முதல் தடவை யாக வடக்கிற்கு வந்துள்ளீர்கள். இந்நிலை யில் இங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஏன் அரசியல் தலைமைகளுடனோ பாராளுமன்ற உறுப்பினர்களுடனோ பேசவில்லை?
பதில்: முதலாவதாக பொலிஸாருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருக்கின்றோம். இதனை தொடர்ந்து மாலை ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர், மாவட்ட அரச அதிபர், யாழ்.மாநகர மேயர் ஆகியோரை சந்திக்கவுள்ளேன். வடமாகாண முதலமைச்சர் இங்கு இல்லை.
கேள்வி: வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அதனை கடத்துவதில் ஈடுபடுபவர்களை ஏன் கைது செய்யவில்லை?
பதில்: போதைவஸ்து தொடர்பில் பல கைதுகள் இடம்பெறுகின்றன. உதாரணமாக அண்மையில் கூட அதிகளவு பெறுமதியான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் விசேட சுற்றிவளைப்பு தேடுதல்களையும் மேற்கொள்ளவுள்ளோம். இவை தவிர போதைப்பொருள் தொடர்பான கைது நடவடிக்கையின் போது அதனோடு சந்தேகநபர்களுமே கைது செய்யப்படுகின்றார்கள்.
கேள்வி: இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பான கருத்து குறித்து என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன ?
பதில்: விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பாக தெற்கிலும் வடக்கிலும் ஆதரவாகவும் எதிராகவும் செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. நாட்டில் உள்ள சட்டத்தின் படி, அவ் உரை தொடர்பாக புலன் விசாரணைகள் நடத்தப்பட்டு அதன் கோவைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் சட்டமா அதிபரது ஆலோசனைக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சட்ட ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
கேள்வி : வடக்கில் இராணுவத்தின் இருப்பு அவசியமானதா?
பதில்: இராணுவத்தின் சேவையானது இன்றியமையாததாகும். இயற்கை அனர்த் தங்களின் போது இராணுவத்தின் தேவை அவசியமானதாகும். அதேபோன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் அதிகம் தேவைப்படு கின்றார்கள். இவர்கள் மக்களோடு இணைந்து மக்களுக்குரிய சேவைகளை செய்ய தேவை.
கேள்வி : இராணுவம் பொலிஸ் ஆகியோர் மக்களுக்கான சேவை செய்ய தேவை என கூறுகின்றீர்கள். ஆனால் விடுதலைப் புலி கள் இருந்தால் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாது என மக்கள் ஏன் கூறுகின்றார்களே?
பதில் : அது பிழையான எண்ணமாகும். தென் பகுதியிலும் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அங்கும் பாதாள உலக குழுவினர் இருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகள் காலத்தில் இவ்வாறான வன்முறைச் சம்ப வங்கள் இடம்பெறவில்லை என மக்கள் கூறுவதானது அவர்களது அறியாமையினால் வெளியிடப்படும் விடயமாகும். நன்றி வீரகேசரி
இலங்கை வந்தடைந்தார் தாய்லாந்து பிரதமர்
12/07/2018 இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கை வந்தடைந்தார் தாய்லாந்து பிரதமர் பிரியுட் சான்ஓச்சா.

இவர் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
ஜனாதிபதி அலுவலகதிற்கு வருகைத்தந்த தாய்லாந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் தாய்லாந்து பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதுடன் இரு தரப்புக்களுக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

பினனர் நாளைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகையில் வைத்து சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இரு நாடுகளுக்குமிடையில் 04 புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து
13/07/2018 இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்த இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தினர்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓ ஷா மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி 2016 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயம் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தற்போது குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு வளர்ச்சியடைந்துள்ளமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த தாய்லாந்து பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியை குறைத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் தாய்லாந்தின் முன்னேற்றத்தைப் பாராட்டிய ஜனாதிபதி இலங்கையும் அத் துறைகளில் முன்னேற்றம் காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு இணக்கம் தெரிவித்த தாய்லாந்து பிரதமர் அதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், தாய்லாந்தில் இலங்கை தேயிலைக்கான கேள்வியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் கண்டறியவும் நடவடிக்கை எடுப்பதாக தாய்லாந்து பிரதமர் உறுதியளித்தார்.
இரு நாடுகளினதும் பௌத்த மரபுரிமைகளை உலக நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கான ஒன்றிணைந்த சுற்றுலா மேம்பாட்டு செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் அரச தலைவர்கள் கவனம் செலுத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பினையும் நட்பினையும் மேலும் பலப்படுத்துவதற்காக தாய்லாந்திற்கு மீண்டுமொரு முறை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு தாய்லாந்து பிரதமர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.
இலங்கைக்கும் தாய்லாந்திற்குமிடையிலான நான்கு புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.
சட்ட விரோதமான ஆள்கடத்தலுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளுடன் தொடர்புடைய புரிந்துணர்வு உடன்படிக்கை முதலாவதாகக் கைச்சாத்திடப்பட்டதுடன், அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் தாய்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இருநாடுகளுக்கும் இடையிலான உபாய மார்க்க பொருளாதார கூட்டுமுயற்சி தொடர்பான உடன்படிக்கையில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் தாய்லாந்தின் பிரதி வர்த்தக அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
தாய்லாந்து அரசரால் பிரபல்யப்படுத்தப்படும் அளவீட்டு பொருளாதார கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த பேண்தகு சமூக அபிவிருத்தி மாதிரி தொடர்பான ஒன்றிணைந்த செயற்திட்டம் பற்றிய உடன்படிக்கையும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது.
அதேபோன்று ஆரம்பக் கைத்தொழில் உற்பத்திகளின் பெறுமதிசேர் நடவடிக்கையுடன் தொடர்புடைய தொழிநுட்பம் பற்றிய உடன்படிக்கை தாய்லாந்தின் பல்கலைக்கழகத்திற்கும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. நன்றி வீரகேசரி
காணாமல்போனோர் அலுவலகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
14/07/2018 இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல்போனோர் அலுவலகத்திற்கு எதிராக இன்று யாழ்ப்பணாத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தினர் இன்று யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் அமர்வொன்றில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த அமர்விற்கு எதிராகவே காணாமல்போனவர்களின் உறவினர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீரசிங்க மண்டபத்தின் முன்னாள் கூடியுள்ள காணாமல்போனவர்களின் உறவினர்கள் நாங்கள் இந்த அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்கள் எவரும் காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் ஆணையாளர்கள் முன் சாட்சியமளிக்க செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை காணாமல்போனவர்களின் உறவினர்கள் வீரசிங்க மண்டபத்திற்குள் சென்று ஆணையாளர்கள் முன்னிலையிலும் தங்கள் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுவருகின்றனர்



“விஜயகலாவின் உரையை சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்க உத்தரவு“
14/07/2018 தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரன் தமிழில் ஆற்றிய உரையை சிங்கள மொழியில் மொழி பெயர்த்து, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு (ஓ.சி.பி.டி) பொறுப்பதிகாரியிடம் கையளிக்கு மாறு கொழும்பு பிரதான நீதிவான் ரங்க திஸா நாயக்க நேற்று அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பில் நேற்று திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினர், இடையீட்டு மனு ஊடாக கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில், விஜயகலா தொடர்பான வழக்கினை விசாரணைக்கு எடுத்தனர். இதன்போது அவர்கள், விஜயகலா மகேஸ்வரன் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஆற்றிய உரையின் செம்மைப்படுத்தப்படாத பதிவுகள் இரண்டை நீதிமன்றில் கையளித்தனர்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பெற்ற உரைப் பதிவுகளையே அவர்கள் இவ்வாறு நீதிமன்றிடம் கையளித்தனர். இவ்வாறு நீதிமன்றிடம் கையளித்து, அதனை அரச கரும மொழிகள் திணைக்களம் ஊடாக மொழி பெயர்ப்புச் செய்ய திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றைக் கோரினர்.
இதனைக் கருத்தில் கொண்ட நீதிவான், ஒலி, ஒளி வடிவில் உள்ள விஜயகலா மகேஸ்வரனின் தமிழ் மொழி மூல உரையை அப்படியே எந்த வித்தியாசமும் இல்லாமல் எழுத்துருவுக்கு மாற்றி அவ்வாறு எழுத்துருவுக்கு மாற்றப்பட்ட தமிழ் பிரதியை சிங்கள மொழிக்கு நேரடியாக மொழிமாற்றம் செய்து திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் கையளிக்குமாறு அரச கரும மொழிகள் திணைக்களத்தின் அரச மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
இந் நிலையில் நேற்று இது குறித்து மேலும் தகவல்களை நீதிவானிடம் வெளிப்படுத்திய விசாரணையாளர்களான திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு, விஜயகலாவின் உரை தொடர்பில் முறைப்பாடளித்த அனைவரினதும் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் உரையாற்றும் போது மேடையில் இருந்த பிரமுகர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெறுவதாக வும் அறிவித்தனர்.
அதன்படி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சரின் வாக்கு மூலத்தை பெற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினர் நீதிவானுக்கு அறிவித்தனர். நன்றி வீரகேசரி
ரோம் நகரை அடைந்தார் மைத்திரி
15/07/2018 ஐக்கிய நாடுகள் உணவு விவசாய நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 6 ஆவது உகல வன வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் மாநாடு மற்றும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24 ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக ரோம் பயணித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரோம் பியுமிசினோ விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரோம் சென்றடைந்த ஜனாதிபதியையும் 20 பேர் அடங்கிய தூதுக் குழுவினரையும் அந் நாட்டின் விசேட பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய நிறுவனமானது பேண்தகு அபிவிருத்தி நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக வனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதனை நோக்காக கொண்டே இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.
நாளைய தினம் இடம்பெறும் இந்த மாநாட்டின் கூட்டத் தொடரின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உதவி புரிந்த பெண் மீது தாக்குதல்
15/07/2018 இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுவினை தொடர்வதற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உதவி புரிந்த பெண் மீதும் அவரது மகன் மீது இனந்தெரியாதோர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த இந்த தாக்குதல் சம்பவமானது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணும் அவரது 6 வயது மகனுமே தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் நேற்யை தினம் தனது மகனுடன் வட்டுக்கோட்டை, கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது
இனம் தெரியாத கும்பல் ஒன்று அவரை வழி மறித்து இரும்புக் கம்பிகளால் தலையில் தாக்கியதுடன் அவரது மகன் மீதும் தாக்கிவிட்டு தப்பித்துச் சென்று விட்டனர்.
இதனைதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் வீதியில் வந்தவர்கள் மீட்டு கொட்டைக்காடு ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர். இதன் பின்னர் குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இது தொடர்பாக குறித்த பெண்ணின் உறவினர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யச் சென்றபோதும் வீதியால் செல்லும் போது தவறுதலாக வீழ்ந்தே அப்பெண் காயமடைந்ததாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலைப் பொலிஸாரே பெண்ணிடம் வாக்குமூல்களைப் பெற்று விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதேவேளை குறித்த பெண்னே கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி இராணுவ முகாம் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணவர்வு மனுவினை அவர்களது உறவினர்கள் தாக்கல் செய்வதற்கு உதவி புரிந்திருந்தார். அத்துடன் தொடர்ச்சியாக அவ் வழக்கினை நடத்திச் செல்லும் நடுத்தாரர் தரப்புச் சட்டத்தரணிகளுக்கு உதவிகளையும் வழங்கி வருகின்றார்.
கடந்த 10 ஆம் திகதி யாழ்.மேல்நீதிமன்றில் இடம்பெற்ற இவ் வழக்கு விசாரணையின் போது மனுதாரர்களுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் முறையற்ற அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகவும் வழக்கு நடவடிக்கையின்போது நீதிமன்றத்தில் இராணுவப் புலனாய்வாளர்கள் அதிகளவில் பிரசன்னமாகி அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்புச் சட்டத்தரணி குருபரன் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே தற்போது அவ் வழக்கிற்கு உதவி வரும் பெண்மீது இனம்தெரியாதேரால் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment