நடந்து முடிந்த அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டு தாபனத்தின் சொல்திறன் அரங்கம் 2018 - மது எமில்

.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டு தாபனம் முதல் முறையாக நடாத்தும் சொல்திறன் அரங்கம் 2018


கடந்த ஆடித்திங்கள் 8ம் நாள் ஞாயிற்றுக்கிழமை Seven hills இல் அமைந்துள்ள Mayura Function Centre இல் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டு தாபனம் முதல் முறையாக நடாத்திய சொல்திறன் 2018 பல்கலைகழக மாணவர்களுக்கான இறுதி சுற்று போட்டி நிகழ்வில் ஓர் பார்வையாளராக கலந்து கொண்டேன். போட்டிகள் என்றாலே எனக்கு தனிப்பட்ட ரீதியில் விருப்பமில்லாத ஒன்று என்பதாக இருந்தாலும் திரு செல்லையா பாஸ்கரனின் அழைப்பின் பேரில் எனது குழந்தைகளோடு சென்றிருந்தேன். போட்டிகள் சரியாக 6.15 மணியளவில் செல்வி சாரங்கா ராஜரட்ணம் அவர்களின் வரவேற்புரையோடும், திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்களின் ஆசியுரையோடும் இனிதே ஆரம்பமாகியது.


திரு கிருஷ்ணகுமார்  அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, திரு செல்லையா பாஸ்கரன் அவர்கள் போட்டிக்கான விதி முறைகளுடன் போட்டியாளர்களான செல்வி மாதுமை கோணேஸ்வரன், செல்வன் பருணிதன் ரங்கநாதன், செல்வன் தாயகன் செல்வானந்தம், செல்வன் சிந்துஜன் ஞானமூர்த்தி ஆகியோரை சபையோர்க்கு அறிமுகம் செய்து வைத்து போட்டியை எந்த வித தாமதமுமில்லாமல் ஆரம்பித்து வைத்தார். நடுவர்களாக திரு தனபாலசிங்கம், திரு அன்பு ஜெயா, திரு அண்ணாமலை அவர்கள் சபை நடுவே அமர்ந்திருந்தார்கள். உதவி நடுவர்களாக ATBC இன் திரு கானா பிரபா அவர்களும், செல்வி சாரங்கா அவர்களும் தமக்கான பணிகளை செவ்வனே செய்து கொண்டார்கள். போட்டியாளர்களுக்கான தலைப்புகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டிருந்தன. இதுவரை பொறுமையாக இருந்த எனது கடைசி மகள் நடக்கப்போகும் போட்டி பற்றியும், கொடுக்கப்பட்ட தலைப்புகளை பற்றியும் கொஞ்சம் ஆர்வத்தோடு கேட்க தொடங்கியதும் நானும் சற்று உசாராகினேன். மகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமல்லவா........போட்டியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்குள்ளே அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்தவரகள் என்பதாலும், NSW தமிழ் பாடசாலைகளில் தமிழை கற்று உயர்தர பரீட்சைகளில் தேற்றியவர்கள் என்பதாலும், கம்பன் கழக சிரேஷ்ட மாணவர்கள் என்பதாலும் 
சபையோரின் எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாக இருந்திருக்கலாம். அதே வேளை போட்டியாளர்களும் தாம் சழைத்தவர்கள் இல்லை என்பதை மிக துல்லியமாக காட்டி கொண்டிருந்தார்கள். செல்வி மாதுமையிடம் தமிழ்பெண்களுக்கான அடக்கமும், பேச்சில் பொருளும், சொற்களில் தெளிவும் காணப்பட்டது. செல்வன் பருணிதனிடம் ஆண்களுக்கே உரித்தான மிடுக்கும், விடயத்தில் பல்வகை செறிவும், நல்ல தொனியும் நிறைந்திருந்தது.
செல்வன் சிந்துஐனிடம் காணப்பட்ட இயற்கையான சொல்வளமும், ஜனரஞ்சகமும் சபையை அவன் பக்கம் இழுத்திருந்தது. செல்வன் தாயகனிடம் இருந்த மொழித்திறனும், அதன் உபயோகமும் மிகவும் கஷ்டமான தலைப்பிலும் அவனை சாதுரியமாக்கியது.


அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டு தாபனம் எடுத்திருக்கும் புது முயற்சியால் முதல் மூன்று இடங்களையும் முறையே பெற்றுக்கொண்ட மாதுமை கோணேஸ்வரன், பருணிதன் ரங்கநாதன், சிந்துஜன் ஞானமூர்த்தி ஆகியோர் ஆஸ்ட்ரோ வானவில் தொலை காட்சி மற்றும் வணக்கம் மலேசியா இணைந்து நடாத்தும் "பேசு தமிழா  பேசு" என்கின்ற உலகளாவிய பேச்சுப்போட்டியில் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளாக பங்கேற்பார்கள் என்பதனை அறிந்து தமிழ் பேசும் நல்லுலகம் அவர்களை பாராட்டுகின்ற இந்நேரத்தில் இவர்களின் மொழியார்வம் மேலும் வளமடையவும், உலகுள்ளளவும் தமிழ் நின்று நிலைக்கவும் பாராட்டி நிற்கின்றோம்.

நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மூவருக்கும்  அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டு தாபனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான திரு ஈசன் கேதீசன் அவர்கள் விமான பயணச் சீட்டை கையளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். 

வாழ்க வளமுடன்!

மது எமில்


No comments: