கடித இலக்கியம்: வடமராட்சி " ஒப்பரேஷன் லிபரேஷன் " பேரழிவுக்காக 1987 இல் நடந்த ஒத்திகை ராஜஶ்ரீகாந்தன் (1948 - 2004) எழுதிய ஈழப்போர்க்கால கடிதம் - முருகபூபதி

                                                                                                                                                      ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகளின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்புகளை வழங்கியவர்களின் வரிசையில் ராஜஶ்ரீகாந்தன் அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர்.
 வடமராட்சியில் வதிரி என்னும் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்து தனது 56 ஆவது வயதில் கொழும்பில் மறைந்தார்.

சிறுகதை, கட்டுரை, விமர்சனம், திறனாய்வு, இதழியல், மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் ஈடுபட்டவர்.  வடமராட்சியில் அடிநிலை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் மறுமலர்ச்சிக்காகவும்  கடுமையாக உழைத்த பெரியார் சூரன் அவர்களினால் எழுதப்பட்ட சுயசரிதையை கையெழுத்துப்பிரதியிலிருந்து அச்சுப்பிரதியாக பதிப்பித்து வெளியிட்டவரும் ராஜஶ்ரீகாந்தன்தான்!

அழகு சுப்பிரமணியத்தினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட  சிறுகதைகள் ( நீதிபதியின் மகன்), நாவல் (மிஸ்டர் மூன்)  ஆகியனவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். இவரது காலச்சாளரம்  சிறுகதைத்தொகுதிக்கும் நீதிபதியின் மகன் மொழிபெயர்ப்பு நூலுக்கும் தேசிய சாகித்திய விருதுகள்  கிடைத்துள்ளன.
 
கொழும்பில் சோவியத் தூதரகத்தின் தகவல் பிரிவில் இவர் பணியாற்றிய காலத்தில் சோவியத் நாடு, சோஷலிஸம் - தத்துவமும் நடைமுறையும், மற்றும் புதிய உலகம், சக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியர்குழுவிலும் பணியாற்றி ஊடகவியலாளராக தனது எழுத்துப்பணிகளைத்தொடர்ந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை பாடநெறியிலும் பயிற்சி பெற்றிருந்த ராஜஶ்ரீகாந்தனின் சிறுகதைகள் ஆங்கிலம், ருஷ்யா உக்ரேய்ன், சிங்களம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சர்வதேச செயலாளராகவும் இயங்கியிருக்கும் ராஜஶ்ரீகாந்தன்,  கொழும்பில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியவர்.    2004 ஆம் ஆண்டு  ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி மறைந்தார்.

எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான ராஜஶ்ரீகாந்தன் மறைந்ததையடுத்து, ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளேன்.

அவுஸ்திரேலியாவுக்கு நான் 1987 இல் புலம்பெயர்ந்து வந்தபின்னர், குறிப்பிட்ட ஆண்டு முதல் அவர் மறைந்த 2004 ஏப்ரில் மாதம் வரையில் அவர் எனக்கு எழுதியிருக்கும் கடிதங்கள் ஏராளம். அவை இலக்கியம், சமூகம், அரசியல், எழுத்துலகம் பற்றிய செய்திகளையும் ஆவணப்படுத்தியிருக்கும். அழகிய சின்னச்சின்ன எழுத்துக்களில் அவரது கடிதங்கள் அவரது எளிமையான இயல்புகளையும்  பேசியிருக்கும்.

1987 ஆம் ஆண்டில் அன்றைய ஜே.ஆர். ஜெயவர்தனாவின் பதவிக்காலத்தில் வடமராட்சியில் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் உத்தரவின்பேரில் இடம்பெற்ற " ஒப்பரேஷன் லிபரேஷன் " தாக்குதல் ஆக்கிரமிப்பை பற்றி ராஜஶ்ரீகாந்தன் எனக்கு எழுதிய இக்கடிதம் தெரிவிக்கும் செய்திகளிலிருந்து  ஈழப்போராட்டத்தை முற்றாக நசுக்குவதற்காக  1987 இலேயே நடத்தப்பட்ட  ஒத்திகையாகவும்  அந்த " ஒப்பரேஷன் லிபரேஷன் " தாக்குதல் ஆக்கிரமிப்பை அவதானிக்கலாம்.
குறிப்பிட்ட " ஒப்பரேஷன் லிபரேஷன் " தாக்குதல் ஆக்கிரமிப்பினையடுத்தே, இந்தியா வடமராட்சியில் விமானங்கள் மூலம் உணவுப்பொட்டலங்களை வீசி மற்றும் ஒரு ஆக்கிரமிப்புக்கு அடிகோலியது. அதன்பின்னர் அமைதி காக்க வந்த இந்தியப்படைகளின் காலம், அதன் பின்னரும் நீடித்த போர்க்காலம், இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் அவலம்  பற்றி தொடர்ச்சியாக ஆவணங்களும் நூல்களும் பத்தி எழுத்துக்களும் வெளியாகின்றன.
ராஜஶ்ரீகாந்தன்,  கொழும்பிலிருந்து 14-07-1987 ஆம் திகதி எனக்கு எழுதிய இக்கடிதம் அன்றைய வடமராட்சி சம்பவங்களையும் தொகுத்துச்சொல்கின்றது.
----------------------------------------------------------------------------------------
கொழும்பு
14-07-1987
எனதன்புப் பூபதிக்கு,
            ஊரில் நடந்த சம்பவங்களை மிகச்சுருக்கமாக அறியத்தருகிறேன். நான் 14-04-87 ந் திகதி புதுவருடக்கொண்டாட்ட விடுமுறைக்குச்சென்று, திரும்ப கொழும்பிற்கு வரமுடியாத நிலையேற்பட்டதால் இந்த கசப்பான அனுபவங்களை நேரிற் பெறும் அனுபவம் கிட்டியது.

பாக்கியவாசாவில் (எனது வீட்டில்) கம்பர்மலையைச்சேர்ந்த மூன்று குடும்பங்கள் கடந்த பதினொரு மாதங்களாக வாழ்ந்து வருகின்றன. இதில் ஒரு குடும்பத்தலைவரான இராசன் என்பவர், ஏப்ரில் மாதம் (காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் Security officer) இவர் 17-4-87 ந் திகதி இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய மரணச்சடங்குகளை விமானக்குண்டு வீச்சுக்களுக்கிடையில் பாக்கியவாசாவில் நடாத்தினோம்.  பின்னர் எங்கள் சகோதரனான சற்குணம் கண்ணிவெடியில் சிக்குண்டு மரணமானார். இதுவே பொடியளின் இராணுவ மரியாதையுடன் வடமராட்சியில் நடந்த இறுதி மரணச்சடங்கு,
              26-05-1987 ந் திகதி முதல் பல குண்டு வீச்சு விமானங்கள் V.V.T. யிலிருந்து குண்டு வீச்சினை ஆரம்பித்தன. இத்தாலிய மராச்சிட்டி பொம்பர்கள், ஹெலிகொப்டர்கள், அவ்ரோ விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பகல் முழுக்க இவை குண்டுகளை வீச இரவில் V.V.T., தொண்டமனாறு, பருத்தித்துறை இராணுவ முகாம்களிலிருந்தும் இவற்றைச்சுற்றியுள்ள கடற் பிரதேசங்களிலிருந்தும் ஆட்டிலறி ஷெல்கள் சுடப்படும். நள்ளிரவிற்கூட அமைதியில்லை.
          24-05-1987 ந் திகதி இரவு 12. 30 மணியளவில் ஒரு ஹெலி சுட்டுக்கொண்டே வந்தது. நாங்கள் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு, அண்ணா வீட்டிற்கு ( எமது வீட்டிலிருந்து சுமார் நூறு மீற்றர் தூரம்) ஓடினோம். அங்கு பதுங்கு குழிகளில் இருந்தோம். இடையில் ஓய்வு கிடைத்தால் உணவு சமைத்து உண்போம்.
இக்காலப்பகுதிகளில் இராணுவத்தினர் "யாழ்ப்பாண வானொலி"  ஒன்றை ஆரம்பித்தனர். 29,-30-5-87 ந் திகதிகளில் வடமராட்சிப்பிரதேசத்தில் 48 மணித்தியால ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இங்குள்ள மக்கள் யாவரும் குறித்த சில கோயில்களுக்குச்சென்று தங்குமாறு ஹெலி துண்டுப்பிரசுரங்களை வீசியது. ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் ஹெலிகள் மூலம் முள்ளியிலும் மண்டானிலும் இறக்கப்பட்டார்கள். எங்கள் பூவற்கரைப்பிள்ளையார் கோயிலில் V.V.T. , பொலிகண்டி, நவிண்டில், கொற்றாவத்தை, ஓடை, மாலிச்சந்தியிலிருந்து சுமார் இருபதினாயிரம் பேர் வந்து சேர்ந்தனர்.
இதனால், திருவதிகை, கயிலம், பூவற்கரை, பனைவடலிக்காணி, வேதப்பள்ளிக்கூடம், தமிழ்மன்றம், தேவரையாளி இந்துக்கல்லூரி ஆகிய இடங்களில் சுமார் இருபதினாயிரம்பேர் அகதிகளாகக்கூடினோம். இவ்வளவுபேருக்கும் ஒரு மலசல கூடம் கூட இல்லை. மிகப்பலருக்கு உடுத்த உடைகளைத்தவிர வேறெதுவுமில்லை. உணவில்லை, குழந்தைகளுக்குக் கூடப் பாலில்லை. அல்வாயைச்சேர்ந்தவர்கள் பலர் முத்துமாரி அம்மன் கோயிலிலும் சிலர் சமணந்தறைப்பிள்ளையார் கோயிலிலும் இருந்தனர். 29-05-87 இரவு முத்துமாரியம்மன் கோயில் ஷெல் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது. சுமார் 150 பேர் கோயிலில் கொல்லப்பட்டார்கள்.
அவ்ரோ விமானத்திலிருந்து வீசப்பட்ட குண்டுகள் இரண்டு அல்வாயில் விழுந்தன. சில வீடுகள் சேதமடைந்தன. 30-05-87 இராணுவத்தினர் வீதிகளைத்தவிர்த்து, காணிகளுடாகவும் வீடுகளுடாகவும் சுட்டுக்கொண்டே வந்தனர். நாம் தங்கியிருந்த பூவற்கரைப்பிள்ளையார் கோயிலுக்கு வந்ததும் சுடுவதை நிறுத்தினர். 15-30 வயதிற்கிடைப்பட்ட இளைஞர்களை வருமாறும் தாம் அறிவுரை கூறிவிட்டு உடனே விடுவதாகவும் கூறியதையடுத்து, பெற்றோர்களே குழந்தைகளை கூட்டிச்சென்று கொடுத்தனர்.
இக்கோயிலிருந்து 746 பேர் கூட்டிச்செல்லப்பட்டனர். வடமராட்சியிலிருந்து மொத்தம் 2786 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுடன் V.V.T. க்கு நடத்திச்சென்று கப்பலில் காலித்துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டனர். அன்று மாலை, இராணுவத்தினர் அரிசி, மா, சீனி, தேயிலை, குழந்தைகள் பால்மா போன்றவற்றைச் சிறிய அளவில் தந்தனர். இவற்றைக்கொண்டு கஞ்சி, தேனீர் கோயிலிலேயே தயாரித்து பகிர்ந்தோம். இராணுவத்தினர் நெல்லியடி ம.ம.வி, புலோலி ஆகிய இடங்களிலும் உடுப்பிட்டியிலும் ஓரளவு பெரிய முகாம்களை அமைத்தனர். பின்னர் பொது மக்களுடன் சகஜமாகப்பழக ஆரம்பித்தனர்.
காலியில் விசாரணை முடிந்து முதலாவது தொகுதி இளைஞர்கள் விமான மூலம் பலாலிக்குக் கொண்டுவரப்பட்டு பின்னர் இராணுவ வாகனங்களில் கடற்கரை வீதிவழியாக பருத்தித்துறைக்குக் கொண்டுவருகையில், சக்கோட்டையில் பொடியளின் கண்ணிவெடியில் தவறுதலாக சுமார் 20 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இதனால் அடுத்த தொகுதி இளைஞர்கள் கப்பலில் காங்கேசன்துறை வந்து பின்னர் பருத்தித்துறை வந்து, மந்திகை முகாமிற்குக் கொண்டுவரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
யாவரும் உணவு பெறுவதற்கு பெரிதும் சிரமப்பட்டோம். கோயிலில் கஞ்சி காய்ச்சிக்கொடுத்தோம். 4-6-87 பிற்பகல் ஐந்து மணியளவில் இந்திய விமானங்கள் வந்தபோது மீண்டும் விசயம் தெரியாமையால் கலங்கினோம். பின்னர் வானொலிச்செய்தி மூலம் உண்மையறிந்து ஆறுதலடைய முடிந்தது. அடுத்த நாளே இலங்கை அரசு இராணுவ மூலம் அரிசி, மா, சீனி போன்றவற்றை இலவசமாக வழங்கியது. எமது பகுதியில் ஷெல் அடிப்பது நிறுத்தப்பட்டது.
ஹெலிகள் வருவதை நிறுத்திக்கொண்டன. ஓரிரு கடைகள் திறக்கப்பட்டன. உண்மையாகவே 29 ந் திகதிவரை பலர் கிணற்று நீரை மட்டும் குடித்தே உயிர் வாழ்ந்தனர். நமது கிராமத்தவர்கள் வீடுகளுக்குச்சென்றோம். பொலிகண்டி, நவிண்டில், கொற்றாவத்தையைச் சேர்ந்தவர்களும் படிப்படியாக வீடுகளுக்குத்திரும்பினர்.
22-06-87 பிற்பகல் கொழும்பு வந்தேன். கடிதங்கள் மலைபோல் குவிந்திருந்தன. உலகின் பல பாகங்களிலிருந்தும் உறவினர்களும் நண்பர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டவாறே இருந்தனர். சர்வதேச நிறுவனங்கள் சில நீண்ட நேரம் பேட்டிகண்டன. ஆறுதலாக மூச்சுவிட முடிந்தது. 27-06-87 இல் டொமினிக் ஜீவாவின் மணிவிழா யாழ்ப்பாணத்தில் நடந்தது. அடுத்த நாள் கொழும்பு வந்தார். இ.மு.எ.ச. சார்பிலும் மணிவிழாக் குழு சார்பிலும் இரு விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஐந்து நாட்களின் பின் ஜீவா யாழ்ப்பாணம் திரும்பினார்.
பின்னர் 05-07-1987 (இரவு 8-10) பொடியள் நெல்லியடி ம.ம.வி. முகாமைத்தாக்கி பெருஞ்சேதம் விளைவித்ததுடன், நேரடி மோதலை ஆரம்பித்தார்கள்.  சகல இராணுவ முகாம்களும் இரவு பகலாக ஷெல் மழை பொழிந்துகொண்டே இருந்தன. யாழ்ப்பாண வானொலி மூலமும் ஹெலியிலிருந்து வீசப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் மூலமும் வடமராட்சி மக்கள், வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
10-07-87 ந் திகதி, சிலர் கொழும்பு வந்துவிட்டனர். எனது மனைவி இரு தங்கைகள், எனது குழந்தைகள் இடம்பெயர்ந்து செல்லும்போது கொழும்பு செல்வதாகச் சொன்னார்களாம். இக்கடிதம் எழுதும்வரை அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்திற்குப்போய் காத்திருப்பேன். என்னைப்போல் பலர் அங்கு வருகிறார்கள். 20-07-87 ந் திகதி மாலை வழக்கம்போல மருதானை ரயில் நிலையத்திற்குப்போனேன். மனைவி குழந்தைகள் இருவர், மனைவியின் தங்கையர் இருவர் அகதிகளாக வந்திருந்தனர். மாற்றுடுப்புக்கூட கொழும்பிலேயே வாங்கவேண்டியிருந்தது.
இலங்கை - இந்திய சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்னர், இந்திய சமாதானப்படையினர் வந்துசேர்ந்த இரு வாரங்களின் பின்னர் மைத்துனிகள் இருவரும் ஊருக்குத் திரும்பிச்சென்றனர்.
சில வாரங்கள் நீடித்த அமைதி, இளைஞர்களிடையில் ஏற்பட்ட மோதல்களினால் மீண்டும் குலைந்தது. கோட்டை ரயில் சேவை கிளிநொச்சியுடன் நிறுத்தப்பட்டது. புலிகளின் பிரசாரப்பிரிவுத்தலைவர் திலீபன் ( 23 வயது) சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார். நீர்கூட அருந்துவதில்லை. அநேகமாக இவ்வாரத்தினுள் இறந்துவிடக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஐந்து கோரிக்கைகளை வைத்தே இந்த உண்ணாவிரதம் இருக்கிறார். இவருக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் வேறு சிலரும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
பதினோராவது நாள் திலீபன் இறந்துவிட்டார்.  இவருடைய உயிர்த்தியாகத்தின் பின்னர், புலிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியத்தூதுவர் டிக்ஸிற்றுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் செப்டெம்பர் 28 ந் திகதி ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. மேலும் விபரங்களை பின்னர் எழுதுகின்றேன். நீர்கொழும்புக்கு இன்னமும் போகவில்லை. போய் வந்த பின்பு எழுதுவேன்.
என்றும் அன்புள்ள
உங்கள் ஶ்ரீகாந்தன்
----------------------------------------------------------------------------------------------
 ( எனது பிற்குறிப்பு: ஈழப்போர் ஏன் நீண்டகாலம் நீடித்தது..? என்பதை ஆராய்வதற்காகவும் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற குரல் வெளியாகியிருக்கிறது! "விடாக்கண்டர்களும் கொடாக்கண்டர்களும்"  இருந்தால் போர்கள் நீடிக்கும்தானே...?! என்ற உண்மையைத்தான் அந்தக்குரலுக்கு பதிலாகச் சொல்ல முடியும்! - முருகபூபதி)
----------------------------------
(நன்றி: " நடு" இணையம் பிரான்ஸ்)

-->









No comments: