இந்தியாவில் பெரும்பாலான நதிகளுக்கு பெண்களின்
பெயர்தான் சூட்டப்பட்டுள்ளன. அங்கு மத்திய - மாநில அரசுகளிடம் நதிநீர் இணைப்புத்திட்டங்களும்
உருவாகி, விவாதங்களும் போராட்டங்களும் தொடருகின்றன.
பெண்களின் பெயர்களை நதிகளுக்கு
சூட்டினால் எப்படித்தான் " இணைப்பு"
வரும்...? என்று அண்மையில் ஒரு முகநூல் குறிப்பு வேடிக்கையாக சொல்லியிருந்தது.
இலங்கை, இந்தியாவை விட பலமடங்கு சிறிய நாடு.
இன்னும்
சொல்லப்போனால், சிறிய தீவு. இந்தத்தீவுக்குள் பல நதிகள் இருந்தபோதிலும் அவை
வற்றாத ஜீவநதிகளாக விளங்கியமையால், நதி நீர் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை.
மகாவலி கங்கையை வடக்கே திருப்பும் திட்டம் இலங்கை
அரசியலில் ஒரு தனிக்கதை. இது இவ்விதமிருக்க, களனி கங்கை தீரத்தில் தோன்றிய தொழிற்சாலைகள்
பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு
வழங்கியிருக்கின்றன. வெளிநாட்டு ஏற்றுமதி வர்த்தகத்திற்கும் இலங்கை பொருளாதாரத்திற்கும்
வளம் சேர்த்துள்ளன.
அரசின் நிருவாகத்தின் கீழும் தனியார் துறையினரிடத்திலும்
பல தொழிற்சாலைகள் இந்தப்பிரதேசத்தில் நீண்டகாலம் இயங்கின. சில 1983 வன்செயல்களுக்குப்பின்னர்
மறைந்தன.
களனி பல்கலைக்கழகத்திற்கு சமீபமாகத்தான் டயர்
உற்பத்தி கூட்டுத்தாபனம் இயங்குகிறது. இலங்கை ஏற்றுமதி வர்த்தகத்தில் ரப்பரும் முக்கிய
இடத்தை வகிக்கிறது. களனி கங்கை ஓடும் திசைக்கு அருகாமையில் வெல்லம்பிட்டிய முதல் அவிசாவளை,
தெஹியோவிட்ட, தெரணியகல, இரத்தினபுரி, பெல்மதுளை, இறக்வானை, காவத்தை முதலான பிரதேசங்களில்
ஏராளமான ரப்பர் தோட்டங்களை பார்த்துவருகிறீர்கள்.
இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கைக்கு அடுத்ததாக
திகழ்ந்தவை, ரப்பரும் கொக்கோவும். இலங்கையில்
விளையும் இந்தத் தாவரங்களுக்கு உலக சந்தையில் பெருமதிப்பு ஒருகாலத்தில் இருந்தது.
இவற்றின் மதிப்பிறக்கத்திற்கும் மாறி மாறி பதவிக்கு
வந்த ஆட்சியாளர்களும் அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களும்தான் காரணம். ஆயிரக்கணக்கான
இந்திய வம்சாவளி தோட்டத்தொழிலாளர்கள் நாடுகடத்தப்பட்டு "ஒப்பாரிக்கோச்சி"
களில் தலைமன்னார் ஊடாக இராமேஸ்வரம் சென்று தமிழகத்தை வந்தடைந்தனர்.
தேயிலையும், ரப்பரும், கொக்கோவும் ஏற்றுமதியானது
போன்று அவற்றை உற்பத்திசெய்வதற்காக, காடுகளையும்
மலைகளையும் செப்பனிட்டு, அட்டைக்கடிகளுக்கும் மண்சரிவுகளுக்கும் மத்தியில் ஒரு அறை
லயன் குடியிருப்புகளில் வாழ்ந்த அந்த ஏழை மக்களை, தேசத்திற்கு அறுபது சதவீதமான அந்நிய செலவாணியை ஈட்டித்தந்த
அந்த அப்பாவி மக்களை நாடற்றவர்களாக்கி துரத்தியடித்த ஆட்சியாளர்கள் தேசத்தின் பொருளாதாரத்தையும் நலிவடையச்செய்தார்கள்.
களனியில் டயர் உற்பத்திதொழிற்சாலை இருந்த அதே
சமயம் ரப்பர் பாலில் பதனிடப்பட்ட ரப்பர் படங்குகளை மக்கள் பாவனைக்கான பல்வேறு உற்பத்திகளுக்கும்
விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களும் கொழும்பு வடக்கு, மத்தி முதலான பிரதேசங்களில்
பெருகியிருப்பதையும் அவதானித்திருப்பீர்கள். முக்கியமாக கிராண்ட்பாஸ் வீதி, புதிய
- பழைய சோனகத்தெருக்களில் ரப்பர் படங்கு விற்பனை நிலையங்களை காணமுடியும்.
ரப்பர், கார் மற்றும் கனரக வாகனங்களுக்கு டயர்
தயாரிப்பதற்கு மூலப்பொருளாக இருப்பதுபோன்று, மக்களின் பாதணிக்கும் தேவையாக இருக்கிறது.
நிலத்தில் பயிராக உற்பத்தியாகி, பாலைத்தந்து, அந்தப்பாலே உலரவைக்கப்பட்ட படங்குகளாகி,
வாகனங்கள் ஓடுவதற்கு டயர்களாக உருமாறியும், மக்களின் கால்களுக்கு பாதணிகளாகவும் மாறி மீண்டும் நிலத்திலேயே தேய்ந்து அழிந்துவிடும் தியாகிதான் இந்த ரப்பர்.
குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு சமமானவள்தான்
ரப்பர் மரம். தாயின் இரத்தம் தாய்ப்பாலாகி குழந்தைகளை காத்து மனிதர்களாக்குவது போன்று ரப்பர் மரத்தின் இரத்தமே பாலாகி மக்களின்
தேவைகளுக்கும் பாவனைகளுக்கும் உதவிவருகின்றது.
ரப்பரில் செய்யப்பட்ட டயர்கள் பொருத்தப்பட்ட
வாகனங்களில் பயணம் செய்யும்போதும், ரப்பரில் தயாரிக்கப்பட்ட பாதணிகளுடன் ஒய்யாரமாக
நடக்கும்போதும் நாம், இந்த ரப்பரின் தாயை ஒருகணம்
நினைத்துப்பார்க்கின்றோமா...???!!!
இலங்கையில் பிரசித்தமான ஆர்ஃபிக்கோ தயாரிப்புகளுக்கும்
மூலப்பொருள் ரப்பர்தான். களனி கங்கை பாலத்தை கடந்து தலைநகருக்குள் பிரவேசிக்கும் போது
எதிர்ப்படும் ஆமர்வீதிக்கும் களனி கங்கைக்கும் நடுவிலிருக்கும் விஸ்தாரமான பிரதேசத்திற்குள்தான்
எத்தனை வகையான தொழிற்சாலைகள். பல ஆயிரம் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கியிருக்கும் அவற்றின்
வரலாறுகளே தனித்தனி கதைகள்தான்.
வாசகர்களே, உங்களுக்கு நினைவிருக்கிறதா..? ஸ்டார்
பிராண்ட் இனிப்புவகைகள். ஃபிராங்கோ சொக்கலேட். இவற்றை உற்பத்தி செய்த நிறுவனம் மொடர்ண்
கொன்ஃபக்ஷனரி ஸ்தாபனம், இங்குதான் 1983 இனக்கலவரத்திற்கு
முன்னர் ஸெயின்ஸ்தான் தியேட்டருக்கு பக்கத்தில் இயங்கியது.
அந்தக்கட்டிடத்தின் சுவடுகள் படிப்படியாக மறைந்துவருகின்றன.
ஸெயின்ஸ்தான் தியேட்டரின் சுவடுகளும் மறைந்துவிட்டன. இலங்கையெங்கும் ஸ்டார் இனிப்புவகைகளை
விநியோகித்த அந்தப்பெரிய நிறுவனத்தில்தான் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் கணக்காளராக நீண்டகாலம் பணியாற்றினார்.
1983 வன்செயல்களுடன் அந்த ஸ்டார் நிறுவனமும்
மரணித்தது. தெளிவத்தைஜோசப்பும் மற்றும் பல ஊழியர்களும் வேலையை இழந்தனர். எவ்வாறு அந்த
நிறுவனம் வன்செயலின்போது தாக்கி அழிக்கப்பட்டது, சூறையாடப்பட்டது முதலான விபரங்களை
நேரில் கண்ட சாட்சியாக அவர் எழுதியிருக்கும் நாவல்தான் "நாங்கள் பாவியாக இருக்கிறோம் அல்லது
1983" என்ற நூல்.
அந்தச்சம்பவத்தில் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருக்கிறார்.
அருகிலிருந்த செயின்ஸ்தான் தியேட்டரில் இரண்டு நாட்கள் மறைந்திருந்து ஊண் உறக்கமின்றி
அவதிப்பட்டுள்ளார்.
களனி கங்கை பாலத்தைக்கடந்து தலைநகரத்திற்குள்
பிரவேசிக்கும் பாதையிலும் அதற்கு சமாந்தரமாகச்செல்லும் பாதையிலும் பல தொழிற்சாலைகள்
தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமானது. வெளிநாட்டு நிறுவனங்கள் சிலவும் இவற்றில்
மூலதனம் இட்டிருக்கலாம்.
பவர் அன்ட் கம்பனியின் வளாகம் முன்புறம் ஶ்ரீமாவோ
பண்டாரநாயக்கா வீதியிலிருந்து ( இதற்கு முன்பிருந்த பெயர் பிறிண்ஸ் ஒஃப் வேல்ஸ் அவனியூ)
பின்புறம் கிராண்ட் பாஸ் வீதிவரையில் நீடிக்கிறது. பின்புறத்தின் முகப்பிற்கு முன்பாகத்தான்
பிரசித்தி பெற்ற சுலைமான் நர்ஸிங் ஹோம் என்ற மருத்துவமனை வருகிறது.
இதனை கடந்து சென்றால் ஈஸ்வரன் பிரதர்ஸின் நிறுவனத்தின்
வளாகமும் அதனுள்ளே, மொரிஸீயஸ் நாட்டுக்கான இலங்கை பிரதித்தூதுவராக இருந்த தெய்வநாயகம்
ஈஸ்வரன் அவர்களின் அலுவலகமும் அமைந்துள்ளது. அவர் அண்மையில் மறைந்துவிட்டார்.
அவரது அந்த நிறுவனத்தையும் கடந்து கிராண்ட் பாஸ்
வீதியில் சென்றால் 80 ஆண்டுகாலத்திற்கும் மேற்பட்ட பழமையான வீரகேசரி பத்திரிகை நிறுவனம் 185 ஆம் இலக்கத்தில்
அமைந்துள்ளது.
அதனையடுத்து ஜபர்ஜி பிரதர்ஸ், லிவர் பிரதர்ஸ்
முதலான பெரிய நிறுவனங்களை காணமுடியும். அவற்றுக்கு மத்தியில் பிரபல எண்ணெய் ஏற்றுமதி
நிறுவனமான கிருஷ்ணா கோப்பரேஷன் அமைந்துள்ளது.
இதன் பங்குதாரர்களின் ஒருவரான செல்வநாதன் என்பவர் வீரகேசரியின் நிருவாகத்திலும் இணைந்திருந்தவர்.
ஆமர் வீதியில் சினிமாஸ் குணரத்தினத்தின் கெப்பிட்டல்
திரையரங்கும் அதனையடுத்து மஸ்கன்ஸ் என்ற அஸ்பஸ்டஸ் தொழிற்சாலையும் சென். அந்தனீஸ் கம்பனியும் அமைந்துள்ளன. இங்கிருந்து
எஸ்லோன் குழாய்கள் தயாரிக்கப்பட்டன.
அந்தனீஸின் உரிமையாளர்தான் இலங்கையின் கோடீஸ்வரர்களில்
ஒருவரான மறைந்த ஞானம் அவர்கள். இவர் வீரகேசரி பத்திரிகையை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ்
பேப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் விளங்கியவர். மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர். நடித்த
நினைத்ததை முடிப்பவன் திரைப்படத்தை தயாரித்தவர்!!
ஆமர் வீதியில்தான் சினிமாஸ் குணரத்தினம் அவர்களின்
கே. ஜி. இண்டஸ் ரீஸ் அமைந்திருந்தது. இங்கிருந்து மக்களின் அன்றாட பாவனைக்கான பல பொருட்கள்
உற்பத்தியாகின. இந்த குணரட்ணம் அவர்களின் சில சினிமா திரையரங்குகளும் கொளுத்தப்பட்டு
அழிக்கப்பட்டுள்ளன. இத்தனைக்கும் அவர் தயாரித்து வெளியிட்ட அனைத்துமே சிங்களப்படங்கள்தான்.
இறுதியில் அவரும் வேறு ஒரு சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இலங்கையில் வடக்கில் போர்க்காலம் தொடங்கியதும்,
ரயில் சேவைகளும் வவுனியாவுடன் மட்டுப்படுத்தப்பட்டதை அறிவீர்கள். அச்சமயம் சினிமாஸ் குணரத்தினத்தின் கே. ஜி. பஸ்கள்தான் யாழ்ப்பாணத்திற்கான
சேவையில் ஈடுபட்டன.
இவ்வாறு, களனி பாலத்திற்கும் ஆமர்வீதிக்கும்
மத்தியில் தமிழ்ப்பேசும் இனங்களின் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் பல முன்னர் இருந்தன.
சில தற்போதும் இயங்குகின்றன.
பேரினவாதிகளின் மத்தியிலிருக்கும் வன்முறையாளர்களை
1983 இல் தூண்டிவிட்ட சக்திகள், எவ்வாறு தமிழர்களின்
பொருளாதாரத்தை சூறையாடியிருக்கின்றன என்பதை ஆராய்வதற்கும் இந்த வரலாற்று ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.
இது இவ்விதமிருக்க அரசியலில் உலகப்புகழ் பெற்றவரும்,
இலங்கையில் இன்னமும் தீர்க்கப்பட முடியாத இனப்பிரச்சினைக்கும் அடிக்கடி அரசியல் அமைப்பு
மாற்றப்படவேண்டிய தேவைக்கான சிக்கலான முடிச்சினை உருவாக்கியவரும் இந்தப்பிரதேசத்தில்தான் 1906 ஆம் ஆண்டில் பிறந்திருக்கிறார்!!!
யார் அவர்...!? அடுத்தவாரம்
அவருடைய கதையுடன் சந்திப்போம்.
(தொடரும்)
( நன்றி:
அரங்கம் - இலங்கை இதழ்)
No comments:
Post a Comment