உதவிநிற்கும் என உணர்வோம் ! - ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )


             இந்துமதம்  பெளத்தமதம்  இஸ்லாமொடு  கிறீஸ்தவமும்  
                    வந்திங்கு  பலவற்றை வழங்கியே இருக்கிறது
              சொந்தமெனக் கொண்டும் பலர்சுகம் காணாநிலையினிலே 
image1.JPG                     வெந்துவெந்து உழலுகிறார் வேதனையால் வாழ்வினிலே 
               எந்தமதம் பெரியமதம் எந்தமதம் சிறந்தமதம் 
                        என்றெண்ணிப் பலபோர்கள் எங்குமே நடக்கிறது  
               வந்தமைந்த மதமுரைத்த மனுநீதி யாவுமிங்கே 
                       மதம்பிடித்தோர் கைகாலே  மடிந்துகொண்டே போகிறது ! 

              களவெடுக்கப் பொய்யுரைக்க எம்மதமும் சொன்னதில்லை
                     கற்பழிக்கக் கொலைசெய்ய எம்மதமும் விரும்பவில்லை
             போட்டிபோட்டுப் பொருள்பறிக்க எம்மதமும் காட்டவில்லை
                  பொறாமைகொண்டு பொசுக்குவென்று எம்மதம் இயம்பவில்லை
             வீட்டுநலன் நாட்டுநலன் விலத்திநிற்க வேண்டுமென்று 
                   நாட்டிலுள்ள மதமேதும் சொன்னதுண்டா எண்ணிடுவீர் 
              காட்டுத்தனம் மிகுந்துநிற்கும் கயமைக்குணம் உடையோரால்
                   கண்ணியமாம் மதமனைத்தும் காணாமல் போகிறதே  !

             ஓடுகின்ற உதிரமதில் ஒழுகுகின்ற கண்ணீரில் 
                   தேடித்தான் பார்த்தாலும் தெரிந்திடுமா வேற்றுமைகள் 
             நாடுபல இருந்தாலும் நாகரிகம் பலவிருந்தும் 
                      வாழுகின்ற மக்களெலாம் மகத்தான உயிர்களன்றோ 
             யாதுமே ஊர்களென்றும் யாவருமே கேளிரென்றும் 
                      தீதகற்றும் உண்மைதனை செவிமடுக்க மறந்தோமே 
             வாழுகின்ற வாழ்வுதனை வண்ணமுற வாழ்வதற்கு
                  ஓதிநிற்கும் மதமனைத்தும் உதவிநிற்கும் எனவுணர்வோம் !                      
No comments: