இரண்டாவது முறையாக வெற்றிவாகை சூடியது பிரான்ஸ்
20 வருடங்களின் பின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ்
இங்கிலாந்தை கட்டுப்படுத்தி முதன் முறைாயக இறுதிப் போட்டியில் கால்பதித்த குரோஷியா
இங்கிலாந்தை 2 ஆவது தடவையும் வெற்றிகொண்ட பெல்ஜியம் 3 ஆவது இடத்தில்
இரண்டாவது முறையாக வெற்றிவாகை சூடியது பிரான்ஸ்
16/07/2018 ஸ்கோ லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் குரோஷியாவை 4 க்கு 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட பிரான்ஸ் கடந்த 20 வருடங்களில் இரண்டாவது தடவையாக பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட சம்பியனானது.
ஆனால் போட்டியின் 18ஆவது நிமிடத்தில் மரியோ மாண்ட்சூக்கிச் போட்டுக்கொடுத்த சொந்த கோல் பிரான்ஸை உற்சாகமடையச் செய்தது.
அந்த சந்தர்ப்பத்தில் பிரான்ஸுக்கு கிடைத்த ப்றீ கிக்கை அன்டொய்ன் க்றீஸ்மான் 30 யார் தூரத்திலிருந்து உதைக்க குரோஷிய வீரர் மரியோ மாண்சூக்கிச் தலையால் பின்னோக்கி தட்டி தனது சொந்த கோலுக்குள்ளேயே பந்தை புகுத்த, பிரான்ஸ் முன்னிலை அடைந்தது.
எனினும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் கிடைத்த ப்றீ கிக்கை புத்திசாதுரியமாக வலப்புறமாக அணித் தலைவர் லூக்கா மொட்ரிச் உதைக்க அங்கிருந்த வீரர் தலையால் முட்டி பந்தை பெனல்டி எல்லையை நோக்கி நகர்த்தினார். அங்கு மற்றொரு குரோஷிய வீரர் தலையால் தட்டி ஐவன் பெரிசிச்சுக்கு கொடுக்க அவர் இடது காலால் பலமாக உதைத்து கோல் நிலையை சமப்படுத்தினார்.
ஆனால் போட்டியின் 38ஆவது நிமிடத்தில் பெரிசிச் பந்தை கையால் தட்டியமைக்கு பெனல்டி ஒன்றைத் தாரைவார்த்தார்.
பிரான்ஸ் வீரர் அன்டொய்ன் க்றீஸ்மான் எடுத்த கோர்ணர் கிக்கை நோக்கி உயரே தாவிய ஐவன் பெரிசிச்சின் கையில் பட்ட பந்து வெளியே சென்றது. இதனை அடுத்து பிரான்ஸ் வீரர்கள் பெனல்டி கோரினர். தொடர்ந்து வீடியோ மத்தியஸ்தரின் உதிவியை நாடிய பிரதான மத்தியஸ்தர் பிட்டானா நெஸ்டர், பிரான்ஸுக்கு பெனால்டியை வழங்கினார். க்றீஸ்மான் மிக இலகுவாக பந்தை கோலினுள் புகுத்தி பிரான்ஸை மீண்டும் முன்னிலையில் இட்டார்.
இடைவேளையின்போது பிரான்ஸ் 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.
இடைவேளையின் பின்னர் சுமார் 15 நிமிடங்கள் வரை குரோஷியா கடுமையாக போராடியபோதிலும் கோல்போடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக மேலதிக நேரத்தில் விளையாடிய குரோஷிய வீரர்களிடம் உடல்பலம் குன்றி இருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதனை சாதமாக்கிக்கொண்ட பிரான்ஸ் 6 நிமிட இடைவெளியில் மேலும் இரண்டு கோல்களைப் போட்டது.
போட்டியின் 59ஆவது நிமிடத்தில் போல் பொக்பா அடுத்தடுத்து இரண்டு முயற்சிகளை எடுத்து இரண்டாவது முயற்சியில் பிரான்ஸின் மூன்றாவது கோலைப் போட்டார். வலதுகாலால் உதைத்த பந்து குரோஷிய வீரரின் மேல்பட்டு திரும்பிவந்தபோது பொக்பா இடதுகாலால் உதைத்து இலகுவாக கோல் போட்டார்.
மெலும் ஆறு நிமிடங்கள் கழித்து கிலியான் எம்பாப்பே வெகமாக பந்தை முன்னொக்கி நகர்த்திச் சென்று அலாதியான கோல் ஒன்றைப் போட்டு பிரான்ஸை 4 க்கு 1 என முன்னிலையில் இட்டார்.
போட்டியின் 69ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் காப்பாளர் ஹியூகொ லோரிஸ் இழைத்த தவறினால் குரோஷியாவுக்கு கோல் ஒன்று கிடைத்தது.
பிரான்ஸின் பின்கள வீரர் பின்னோக்கி பரிமாறிய பந்தை லோரிஸ் தனது பாதத்தால் கட்டுப்படுத்திய அதேவேளை வேமாக ஓடிவந்த மரியோ மாண்ட்சூக்கிச்சுக்கு வித்தைக் காட்டி பந்தை முன்னோக்கி உதைக்க முற்பட்டபோது பந்து மாண்ட்சூக்கிச்சின் வலதுகாலில் பட்டு கோலினுள் புகுந்தது.
எனினும் அதன் பின்னர் பிரான்ஸ் வீரர்கள் அனைவரும் நிதானத்துடனும் கட்டுப்பாட்டுடனும் விளையாடி உலகக் கிண்ணமும் தங்கப் பதக்கமும் தங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தனர்.
உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் அறிமுகமான 20 வருடங்களில் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்ற குரோஷியா, வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.
இதேவேளை, பிரான்ஸ் கோல்காப்பாளருக்கும் குரோஷியா கோல்காப்பாளருக்கும் இடையிலான போட்டியாக இறுதிப் போட்டி அமையும் என எமது இணையத்தில் எதிர்வு கூறியிருந்ததைப் போன்று போட்டி அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, 1998இல் பிரான்ஸ் உலக சம்பியனானபோது அணியில் வீரராக இடம்பெற்ற டிடியர் டெஸ்சாம்ப்ஸ் இம்முறை பிரான்ஸ் அணியின் பயிற்றுநராக உலகக் கிண்ணத்தை வென்று சாதனை புரிந்துள்ளார்.
இதன் மூலம் மரியோ ஸகல்லோ (பிரேஸில்), பிரான்ஸ் பெக்கன்போயர் (ஜேர்மனி) ஆகியோரைத் தொடர்ந்து வீரராகவும் பயிற்றுநராகவும் உலகக் கிண்ணத்தை வென்ற மூன்றாமவர் என்ற பெருமையை டெஸ்சாம்ப் பெற்றுக்கொண்டுள்ளார். (என்.வீ.ஏ.)
விசேட விருதுகள்
அதி சிறந்த வீரருக்கான தங்கப் பந்து: லூக்கா மொட்ரிச் (குரோஷியா)
அதிக கோல்களுக்கான தங்கப் பாதணி: ஹெரி கேன் (இங்கிலாந்து 6 கோல்கள்)
சிறந்த கோல்காப்பாளருக்கான தங்கக் கையுறை: திபோட் கோர்ட்டொய்ஸ் (பெல்ஜியம்)
அதி சிறந்த இளம் வீரர்: கிலியான் எம்பாப்பே (பிரான்ஸ்)
நேர்த்தியான விளையாட்டு விருது:: ஸ்பெய்ன்
நன்றி வீரகேசரி
20 வருடங்களின் பின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ்
11/07/2018 பெல்ஜியத்துக்கு எதிராக செய்ன்ட் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கில் செவ்வாய் இரவு நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்ற பிரான்ஸ், 2018 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
போட்டியின் 51ஆவது நிமிடத்தில் செமுவல் யூம்டிட்டி தலையால் தட்டி போட்ட கோல் பிரான்ஸை உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இட்டுச் செல்வதற்கு போதுமானதாக அமைந்தது.
1998இல் தனது சொந்த மண்ணில் சம்பியனான பிரான்ஸ் கடந்த 20 வருடங்களில் மூன்றாவது தடவையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. ஜெர்மனியில் 2002இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரான்ஸ் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது.
மறுபுறத்தில் 32 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாடிய பெல்ஜியம் மீண்டும் ஏமாற்றம் அடைந்ததுடன் மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் விளையாடவுள்ளது.
போட்டி ஆரம்பித்தது முதல் இரண்டு அணியினரும் கடும் முயற்சியுடன் விளையாடியதுடன் இரண்டு அணியினருக்கும் கிடைத்த கோல் போடும் வாய்ப்புகளை கோல்காப்பாளர்கள் இருவரும் அற்புதமாக செயற்பட்டு தடுத்தனர்.
மேலும் இரண்டு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் கால்பந்தாட்ட ஆற்றல்களை உயரிய அளவில் வெளிப்படுத்தி இரசிகர்களை பரபரப்பின் உச்சத்துக்கே இட்டுச் சென்றனர்.
முதல் மூன்று நிமிடங்கள் பிரான்ஸ் அணியினர் பந்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் கிலியான் எம்பாப்பேயின் வேகத்தில் பெல்ஜியம் வீரர்கள் சற்று தடுமாறிப் போயினர்.
ஆனால் அடுத்த மூன்று நிமிடங்கள் பதிலுக்கு தமது திறமையை வெளிப்படுத்திய பெல்ஜியம் வீரர்கள் அதிவேக பந்து பரிமாற்றங்களில் ஈடுபட்டு எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தனர்.
எந்த அணி பலசாலி என்று கூற முடியாத அளவுக்கு இரண்டு அணிகளினதும் பந்து பரிமாற்றங்கள், வேகமான நகர்வுகள், கோலை நோக்கிய முயற்சிகள் அனைத்தும் விறுவிறுப்பை தோற்றுவித்தன.
போட்டியின் 13ஆவது நிமிடத்தில் ஈடன் ஹஸார்ட் கோலை நோக்கி உதைத்த பந்து இலக்கு தவறியது.24ஆவது நிமிடத்தில் டொபி ஆல்டர்வெய்ரெல்ட் உதைத்த பந்தை பிரான்ஸ் கோல்காப்பாளர் ஹியூகோ லோரிஸ் வலதுபுறமாகத் தாவி கையால் தட்டி வெளியேற்றினார்.41ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் விரர் பெஞ்சமின் பவார்டின் முயற்சி சில அடிகளால் இலக்கு தவறியது.
போட்டியின் இரண்டாவது பகுதியில் ஆக்ரோஷத்துடன் விளையாடிய பிரான்ஸ் 51ஆவது நிமிடத்தில் உரிய பலனைப் பெற்றது. வலது புறத்திலிருந்து அன்டொய்ன் க்றீஸ்மான் உயர்த்திய கோர்ணர் கிக்கை நோக்கி உயரே சென்ற செமுவல் யும்டிட்டி தலையால் தட்டி போட்டியின் முதலாவது கோலை பிரான்ஸ் சார்பாக போட்டார்.
சில நிமிடங்களில் பெல்ஜியம் வீரர் மேரௌன் பெல்லானி தலையால் தட்டிய பந்து இலக்கு தவறி வெளியேறியது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் வீரர் எம்பாப்பே பின்னோக்கிப் பரிமாறிய பந்தை ஒலிவியர் கிரூட் கோலினுள் புகுத்த முயற்சித்தபோது பெல்ஜிய பின்கள வீரர் வின்சென்ட் கொம்ப்பெனி அதனை முறியடித்தார்.இதனைத் தொடர்ந்து முரட்டுத்தனமாக விளைாடியதன் காரணமாக பெல்ஜியம் அணித் தலைவர் ஈடன் ஹஸார்ட் (63 நி.), அவரது சக வீரர்
ஆல்டர்வெய்ரெல்ட் (71 நி.) ஆகிய இருவரும் மஞ்சள் அட்டைக்கு இலக்காகினர்.போட்டியின் 81ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் விட்செல் மிகவும் பலமாகவும் சற்று தாழ்வாகவும் உதைத்த பந்தை நோக்கி இடது பக்கவாட்டில் தாவிய பிரான்ஸ் கோல்காப்பாளர் லோரிஸ் இரண்டாவது முறையாக கோல் போடப்படுவதைத் தடுத்தார்.
88ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்துக்கு கோல் போடுவதற்கு அடுத்தடுத்து கிடைத்த இரண்டு வாய்ப்புகள் நழுவிப்போயின. இரண்டு சந்தர்ப்பங்களிலும் கெவின் டி ப்றயன் பரிமாறிய பந்தை என்ஸொன்ஸியும் லூக்காக்குவும் கோலாக்க எடுத்த முயற்சிகள் வீண்போயின.
இதனிடையே 87ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் எங்கொலோ கென்டே மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்.போட்டியின் 94ஆவது நிமிடத்தில் பந்தை கையில் பற்றிப்பிடித்தவாறு நேரத்தை கடத்திய எம்பாப்பே அநாவசியமாக மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்.
இவர் கடந்த போட்டியிலும் மஞ்சள் அட்டைக்கு இலக்கானதால் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழக்கின்றார்.உபாதையீடு நேரத்தில் பிரான்ஸ் வீரர் க்றீஸ்மானின் கோ் முயற்சியை பெல்ஜிய கோல்காப்பாளர் திபோட் கோர்ட்டொய்ஸ் இலகுவாக தடுத்து நிறுத்தினார்.கடைசி நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கொரென்டின் டொலிசோவின் முயற்சியையும் கோர்ட்டொய்ஸ் திசை திருப்பினார். நன்றி வீரகேசரி
12/07/2018 இங்கிலாந்துக்கு எதிராக மொஸ்கோ லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியின் மேலதிக நேரத்தில் போடப்பட்ட கோலின் உதவியுடன் 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி ஈட்டிய குரோஷியா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட முதல் தடவையாக தகுதிபெற்று வரலாறு படைத்தது.
மேலதிக நேரத்தின் 109 ஆவது நிமிடத்தில் மரியோ மாண்ட்சூக்கிக் போட்ட கோல் முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்தின் இறுதிப் போட்டி கனவை சிதைத்தது.
மேலும் ரஷ்யா 2018 பிபா கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் மூன்றாவது தடவையாக மேலதிக நேரத்துக்கு சென்று குரோஷியா வெற்றிபெற்றமை விசேட அம்சமாகும்.
1998 இல் முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டியில் தனி நாடாக விளையாடிய குரோஷியா, ஐந்தாவது முயற்சியில் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இந்த வெற்றியை அடுத்து லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் பிரான்ஸை குரோஷியா எதிர்த்தாடவுள்ளது.
லீக் சுற்றில் மெசியைக் கட்டுப்படுத்தி ஆர்ஜன்டீனாவை வெற்றிகொண்ட குரோஷியா, இரண்டாவது அரை இறுதியில் ஹெரி கேனைக் குறிவைத்து அவரைக் கட்டுப்படுத்தி இங்கிலாந்தை வெற்றிகொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
போட்டியின் ஆரம்பித்திலேயே போடப்பட்ட கோலின் மூலம் உற்சாகம் அடைந்த இங்கிலாந்து மிக நேர்த்தியாகவும் புத்தி சாதுரியமாகவும் விளையாடி இடைவேளை வரை 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.
போட்டி ஆரம்பித்த சொற்ப நேரத்தில் குரோஷியா எல்லையை ஆக்கிரமித்த இங்கிலாந்துக்கு பெனல்டி வில்வளைவு முன்பாக ப்றீ கிக் ஒன்று கிடைத்தது.
போட்டியின் 5 ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர்களைக் கொண்ட 'தடுப்பு சுவருக்கு' (டிபென்சிவ் வோல்) மேலாக கீரன் ட்ரிப்பயர் உதைத்த பந்து (ப்றீ கிக்) கோல்காப்பாளர் டெனியல் சுபாசிக்கின் இடது புறமாக கோலினுள்ளே செல்ல இங்கிலாந்து வீரர்களும் இரசிகர்களும் அடைந்த ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.
அடுத்த இரண்டாவது நிமிடத்தில் குரோஷிய வீரர் அன்டே ரெபிக், பெனல்டி எல்லையிலிருந்து உதைத்த பந்தை இங்கிலாந்து கோல்காப்பாளர் பிக்போர்ட் இலகுவாக பற்றிப் பிடித்தார்.
இங்கிலாந்து போட்ட கோலினால் பதற்றம் அடைந்த குரோஷிய வீரர்கள் பந்துக்கு பதில் ஆட்களை இலக்குவைத்து விளையாடினர். ஒரு சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி கேனின் நெஞ்சுப் பகுதியில் குரோஷிய வீரர் டிஜான் லவ்ரென் தாக்கி வீழ்த்தியபோதிலும் மத்தியஸ்தரின் வாய்மூல எச்சரிக்கையுடன் அவர் தப்பினார்.
27ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஏஷ்லி யங் உதைத்த பந்தை குரோஷிய கோல்காப்பாளர் டெனியல் சுபாசிக் கடும் பிரயாசையுடன் உயரே பாய்ந்து திசை திருப்பினார்.
ஆட்டம் 30 ஆவது நிமிடத்தைத் தொட்டபோது ஹெரி கேனுக்கு கோல் போடுவதற்கு இலகுவான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆனால் கோலுக்கு மிக அருகாமையிலிருந்து அவர் உதைத்த பந்து வலது கோல் கம்பத்தில் பட்டு முன்னோக்கி வந்தது. அதேவேளை கேன் ஓவ்சைட் நிலையிலிருந்ததாக உதவி மத்திஸ்தர் சமிக்ஞை கொடுக்க பிரதான மத்தியஸ்தர் தனது விசில் மூலம் அதனை அங்கீரித்தார்.
அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த குரோஷியா எவ்வளவோ முயன்றும் இடைவேளை வரை அதன் முயற்சிகள் சாதக பலனைத் தரவில்லை.
இடைவேளையின் பின்னர் ஆட்டம் தொடர்ந்த சொற்ப நேரத்தில் குரோஷிய வீரர் மண்ட்சூக்கிக், இங்கிலாநது வீரர் வோக்கர் ஆகியோர் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளாகினர்.
குரோஷியா தொடர்ந்து எதிர்த்தாடலில் இறங்கி 68 ஆவது நிமிடத்தில் கோல் நிலையை சமப்படுத்தியது. வலது எல்லையிலிருந்து சிமோ விர்சாஜோ உயர்வாக பரிமாறிய பந்தை பெனல்டி எல்லைக்குள் இருந்தவாறு இடது நுணிக்காலால் தட்டிய ஐவன் பெரிசிக் கோல் நிலையை சமப்படுத்தினார். இங்கிலாந்து பின்கள வீரர் கய்ல் வோக்கர் அப் பந்தை தலையால் தட்டி திசை திருப்ப முற்பட்டபோதிலும் ஐவன் பெரிசிக் தனது இடது காலை நீட்டி கோல் போட்ட விதம் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து கடும் நெருக்கடியை எதிர்கொண்டதுடன் தடுத்தாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனை சாதமாக்கிக்கொண்ட குரோஷிய வீரர்கள் எதிர்த்தாடும் உத்தியைக் கையாண்டு கோல் போடுவதற்கு முயற்சித்தனர். ஆனால் மூன்று சந்தர்ப்பங்களில் அவ்வணிக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போனது.
இப் போட்டியில் ஹெரி கேனினால் கோல் போடும் ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் போனதுடன் உபாதையீடு நேரத்தில் அவர் தலையால் முட்டிய பந்து இலக்கு தவறிப் போனது.
90 நிமிடங்கள் நிறைவின்போது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் போட்டிருந்ததால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.
மேலதிக நேரத்தில் இங்கிலாந்து திறமையாக விளையாடியபோதிலும் கோல் போட முடியாமல் போனது.
போட்டியின் 105 ஆவது நிமிடத்தில் கோல் போடும் வாய்ப்பொன்றைத் தவறவிட்ட மரியோ மாண்ட்சூக்கிக், மேலதி நேரத்தின் இரண்டாவது பகுதியில் (109ஆவது நிமிடம்) கோல் போட கிடைத்த வாய்ப்பை சாதமாகப் பயன்படுத்தி குரோஷியாவை முன்னிலையில் இட்டார்.
இங்கிலாந்து வீரர் ஒருவரால் உதைக்கப்பட்ட பந்து மேலெழுந்தபோது அதனை ஐவன் பெரிசிக் தனது தலையால் பின்னோக்கி தட்ட பந்தை நோக்கி வேகமாக நகர்ந்த மாண்சூக்கிக்கு 6 யார் கட்டத்தின் விளிம்பிலிருந்து இடதுகாலால் இலாகவகமாக கோல் போட்டு முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்தைப் பிரமிப்பில் ஆழ்த்தினார்.
கடைசி நிமிடத்தில் இங்கிலாந்துக்கு ஒரு ப்றி கிக் கிடைத்த போதிலும் அதனால் குரோஷியாவின் இறுதி ஆட்ட வாய்ப்பைத் தடுக்க முடியாமல் போனது. நன்றி வீரகேசரி
இங்கிலாந்தை 2 ஆவது தடவையும் வெற்றிகொண்ட பெல்ஜியம் 3 ஆவது இடத்தில்
14/07/2018 ரஷ்யாவின் செய்ன்ட் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் இங்கிலாந்தை 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட பெல்ஜியம், வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டது.
இந்த வெற்றியுடன் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் பெல்ஜியம் அதி சிறந்த பெறுபேறை பதிவு செய்தது.
இப் போட்டியின் ஆரம்பத்தில் தோமஸ் மியூனியரும் பிற்பகுதியில் அணித் தலைவர் ஈடன் ஹஸார்டும் கோல்களைப் போட்டு தமது அணியை வெற்றிபெறச் செய்து இங்கிலாந்தை நான்காம் இடத்துக்கு பின்தள்ளினர்.
ஜீ குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்தை 1 க்கு 0 என வெற்றிகொண்ட பெல்ஜியம் மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் ஒரு கோல் கூடுதலாக போட்டு இரண்டாவது தடவையாக இங்கிலாந்தை உலகக் கிண்ணப் போட்டிகளில் வெற்றிகொண்டு லீக் வெற்றி வெறுமனே வரவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
போட்டியின் நான்காவது நிமிடத்தில் நாசர் செட்லி பரிமாறிய பந்தை நோக்கி வேகமாக முன்னோக்கி நகர்ந்த தோமஸ் மியூனியர் வலதுகாலால் தட்டி பெல்ஜியத்தின் முதலாவது கோலைப் போட்டார்.
இரண்டு போட்டிகளில் இரண்டு மஞ்சள் அட்டை எச்சரிக்கைகள் காரணமாக அரை இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த தோமஸ் மியூனியருக்கு இந்தக் கோல் பெரும் மனமகிழ்வை கொடுத்தது.
ரஷ்யா 2018 உலகக் கிண்ணப் போட்டியில் பெல்ஜியம் சார்பாக கோல் போட்ட பத்தாவது வீரர் மியூனியர் ஆவார். இதன் மூலம் 1982இல் பிரான்ஸ் சார்பாகவும் 2006இல் இத்தாலி சார்பாகவும் தலா பத்து வெவ்வேறு வீரர்கள் கொல்கள் போட்ட சாதனையை பெல்ஜியம் இம்முறை சமப்படுத்தியது.
இந்தக் கோலைத் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் கோல் போடுவதற்கான வாய்ப்புகளை பெல்ஜியம் தோற்றுவித்தபோதிலும் இங்கிலாந்தின் ரூபென் லொவ்டஸ் சீக், எரிக் டயர் ஆகிய இருவரும் அவற்றை முறியடித்தவண்ணம் இருந்தனர்.
இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டபோது பெல்ஜியம் 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலை வகித்தது.
இடைவேளையின் பின்னர் இங்கிலாந்து வித்தியாசமான அணியாக தோன்றி சில கோல்போடும் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால் இங்கிலாந்துக்கு அதிர்ஷ்டம் கிட்டவில்லை.
போட்டியின் 70 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்க்கஸ் ரஷ்போர்ட் பரிமாறிய பந்தை பெல்ஜிய கோல்காப்பாளர் திபோட் கோர்ட்டொய்ஸைக் கடந்து கோலினுள் செல்லும் வகையில் எரிக் டயர் தனது வலது காலால் தட்டிவிட்டார்.
ஆனால் கோலினுள்ளே செல்லவிருந்த பந்தை நோக்கி மிக வேகமாக ஓடிய டயரின் டொட்டன்ஹாம் அணி சகாவும் எதிரணி வீரருமான டொபி ஆல்டர்வெய்ரெல்ட கடும் முயற்சியுடன் காலால் உதைத்து பந்தை வெளியேற்றினார்.
சில நிமிடங்கள் கழித்து தோமஸ் மியூனியரின் முயற்சியை இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜோர்டான் பிக்போர்ட் தடுத்து நிறுத்தி இங்கிலாந்துக்கு உற்சாகம் ஊட்டினார். ஆனால் அந்த உற்சாகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
போட்டியின் 82ஆவது நிமிடத்தில் கெவின் டி ப்றயன் மத்திய களத்தில் இருந்து பரிமாறிய பந்தை நோக்கி வேகமாக ஓடிய பெல்ஜியம் அணித் தலைவர் ஈடன் ஹஸார்ட் மிக இலாவகமாக பந்தை கோலினுள் புகுத்தி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அதன் பின்னர் இங்கிலாந்தினால் மீண்டெழ முடியாமல் போக வெண்கலப் பதக்கம் தங்களுக்கு கிடைப்பதை பெல்ஜிய வீரர்கள் உறுதிசெய்துகொண்டனர்.
போட்டி முடிவில் உடன் அமைக்கப்பட்ட மேடையில் வைத்து பெல்ஜிய வீரர்களுக்கு பீபா தலைவர் ஜியான்னி இன்பன்டினோ வெண்கலப் பதக்கங்களை சூட்டினார்.
ரஷ்யா 2018 உலகக் கிண்ணப் போட்டிகளில் பெல்ஜியம் சார்பாக 4 கோல்களைப் போட்டிருந்த ரொமேலு லூக்காக்கு போட்டியின் 60ஆவது நிமிடத்தில் மாற்று வீரர் மேர்ட்டென்ஸுக்கு வாய்ப்பு வழங்கியதால் ஹெரி கேனுக்கு தங்கப் பாதணி கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
பிரான்ஸ் வீரர் அன்டொய்ன் க்றீஸ்மான் இறுதிப் போட்டியில் 3 கோல்களைப் போட்டால் தங்கப் பாதணி கைமாறுவதற்கு வாய்ப்புள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment