லெனின் உருவாக்கிய படங்கள் பெரும்பாலும் ஆண் கதாபாத்திரத்தை முக்கியத்துவப்படுத்தியே உருவாக்கப்பட்டன. இந்தப் படங்களில் நடித்ததின் மூலம் காமினி பொன்சேகா விஜயகுமாரணதுங்க ஆகியோர் சாதாரண ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தனர். குறிப்பாக லெனின் தொடர் படங்களான 'சூரயா'வைப் பார்த்த இளம் ரசிகர்கள் தாங்களும் ஒரு சூரயாவாக திகழ வேண்டும் என ஆசைப்பட்டனர்.
ஆனால் லஸ்ஸன கெல்ல படம் ஒரு பெண் பாத்திரத்தை பிரதானப் படுத்தியே உருவாக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் இயக்குனர் ஸ்ரீதர் எவ்வாறு ஜெயலலிதாவை அறிமுகப்படுத்தி அவரை நட்சத்திர நடிகையாக்கினாரோ அதே போன்ற சம்பவமே இலங்கையிலும் ஏற்பட்டது.
கீதா குமாரசிங்க என்ற இளம் கவர்ச்சியான அழகுப் பதுமையை இலங்கைத் திரைக்கு வழங்கியதன் மூலம் தன் கமெரா கண்களை ரசிகர்களுடன் கொண்டு சென்றார் லெனின்.
லஸ்ஸன் கெல்ல படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. லெனினின் தெரிவை பாராட்டாதவர்களே திரையுலகில் இல்லை. அதேபோல் அவர் மீது ஆத்திரப்படாத கதாநாயக நடிகைகளும் இல்லை எனலாம். ஆனால் லெனின் அவற்றைப்பற்றி எல்லாம் கவலைப்படமால் தன் எண்ணத்தை நிறைவேற்றினார். இதன் மூலம் ஒளிப்பதிவு, டைரக்ஷன் துறையில் மட்டுமன்றி நடிகையை தெரிவு செய்வதிலும் தான் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபித்தார். கீதா குமாரசிங்க பின்னர் ஏராளமான சிங்களப் படங்களில் நடித்து புகழ் பெற்றார். அத்துடன் சிவாஜி கணேசனுடன் மோகனப்புன்னகை படத்திலும் ஜெய்சங்கருடன் ரத்தத்தின் ரத்தகமே படத்திலும் நடித்தார். பின்நாட்களில் அரசியலும் குதித்து நாடாளுமன்ற உறுப்பினருமானார்.
இலங்கைத் திரையுலகிற்கும், அரசியலுக்கும் லெனின் ஒரு லஸ்ஸன கெல்லவைத் தேடிக் கொடுத்துவிட்டார்! சிங்களப் படத்தயாரிப்பாளர் நீல்ரூபசிங்க லெனின் மொறயஸ் பற்றி நினைவு கூர்ந்தார்.
என்னுடைய பல படங்களுக்கு லெனின்தான் ஒளிப்பதிவு செய்தார். மிகவும் திறமையான ஒளிப்பதிவாளர். சிறந்த ஒளிப்பதிவாளர் ஒருவர் பக்கத்தில் இருந்தால் டைரக்டருடைய வேலையும் சுலபமாகிவிடும். நான் எனது எண்ணத்தில் எதை எல்லாம் படமாக்க எண்ணினேனோ அவற்றை எல்லாம் தன் கைவண்ணத்தில் ஒளிப்பதிவு செய்து தந்தார் லெனின். அவருடைய திறமையை உணர்ந்து என் அண்ணன் சரத்ரூபசிங்க தான் தயாரித்த சரத்கூ10ரயா அதத்கூ10ரயா படத்தை ஒளிப்பதிவு செய்யவும் டைரக்ட் செய்யவும் லெனினுக்கு வாய்ப்பு வழங்கினார். அதனை வெற்றிப் படமாக்கினார் லெனின்.
நாங்கள் உருவாக்கிய படங்களில் எல்லாம் காமினி மாலினி, கீதா, அன்டனி சி பெரேரா போன்ற பிரபல கலைஞர்கள் நடித்துள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் எமது தயாரிப்புக்கள் புகழை கொடுத்திருக்கினறன.
தமிழரான லெனின் மொறயஸிக்கு இலங்கையில் தமிழ்ப் படங்களை உருவாக்கவேண்டும் என்ற ஆவல் நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால் சிங்களத் திரையுலகம் அவரை இறுக அணைத்துக் கொண்டதால் அதிலிருந்து மீண்டு வர அவரால் முடியவில்லை. அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்துக் கொண்டே இருந்ததால் தமிழின் பக்கம் திரும்ப முடியவில்லை.
இந்த நிலையில் தான் படத்தொகுப்பாளர் சாரங்கராஜா லெனினை தமிழ்ப் படத்தயாரிப்பு தொடர்பாக அணுகினார். புதிதாக தமிழில் படம் டைரக்ட் செய்ய அவகாசம் இன்மையால் ஏற்கனவே தான் சிங்களத்தில் டைரக்ட் செய்த அபிரஹச என்ற படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்ய முன்வந்தார் லெனின். படத்திற்கு யார் அவள் என பெயரிடப்பட்டது. தமிழ் வானெலி கலைஞர்கள் நடிகர்களுக்காக குரல் கொடுத்தார்கள்.
படத்திற்கு மெருகேற்ற ஒரு பாடல் காட்சி இணைக்கப்பட்டது. ஏ. ஈ. மனோகரனும் மாலினி பொன்சேகாவும் இந்தப் பாடல் காட்சியில் நடித்தார்கள். 1976ம் ஆண்டு யார் அவள் வெயியானது.
ஐம்பது வருடங்களுக்கு முன்னால் பம்பாய் நகரில் வரதராஜமுதலியார் என்றொரு தாதா இருந்தார். தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக பம்பாய் சென்ற இந்த வரதராஜமுதலியார் பின்னால் பம்பாய் நகரையே பல ஆண்டுகளுக்கு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இவரது வாழ்வில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து பிரபல இயக்குனர் மணிரத்தினம் நாயகன் படத்தை உருவாக்கியிருந்தார். இதன் கதாநாயகனாக கமல்ஹாசன் நடித்திருந்தார். படம் திரைக்கு வரத்தயாரான போது தணிக்கை குழுவினர் படத்தை வெளியிட அனுமதியளிக்க மறுத்துவிட்டனர். படம் உருவாகும் போது இது வரதராஜமுதலியாரின் வாழ்க்கை சம்பவம் என்று மணிரத்தினம் ஏதோ ஒரு பத்திரைக்கு பேட்டி கொடுத்தது விவகாரமாகி விட்டது. உயிருடன் இருக்கும் ஒருவரைப் பற்றி படம் எடுக்கக் கூடாது என்பது தணிக்கைக்குழுவின் விதி. பின்னர் படத்தின் தயாரிப்பாளர் வரதராஜமுதலியாரை சந்தித்து விஷயத்தை சொல்லி அவர் படத்தையே பார்க்காமல் இது தன்னுடைய வரலாறு அல்ல என்று கடிதம் எழுதி கொடுத்த பின்னரே 87ல் நாயகன் வெளிவந்து வெற்றி கண்டது.
ஆனால்
லெனின் மொறாயஸ் அதற்குமுன் 1977ஆம் ஆண்டிலேயே இலங்கையில் உண்மையில் நடைபெற்ற குற்றச்செயல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை டைரக்ட் செய்தார். அந்தப் படம் தான் ஹித்துவொத்த ஹித்துவமாய் (நினைத்தால் நினைத்தது தான்)
ஐம்பது
ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் அனுராதபுரத்தில் இடம் பெற்ற குற்றச் செயல்களுக்கு காரணமான அல்ப்பிரேட் சொயிஸா என்பவற்றின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப் பட்டது. சிலோன் தியேட்டர்ஸ் சார்பில் பேஜ் அவர்கள்
இந்திய படத்தை தயாரித்தார்.
ஏற்கனவே
மாலினி பொன்சேகாவை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்த லெனின் ஹித்துவொத்த ஹித்துவமாய் படத்தில் விஜயகுமாரணதுங்காவை இரட்டை வேடங்களில் நடிக்க செய்தார். இவர்களுக்கு ஜோடியாக மாலினியும் சிரியாணியும் நடித்தார்கள். வில்லனாக டொமி கயவர்தன நடித்தார். இவர்களுடன் ஜோ அபேவிக்ரமாவுக்கும் ஒரு முக்கிய வேடம் வழங்கப்பட்டிருந்தது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்தது.
கொத்தாய் நரக்காய் படத்தை தயாரித்த கே குயணராதியினம் தனது மகன் ஜி தியாகராகாவை தயாரிப்பாளராக்க விரும்பினார். அதன் பலனாக மீண்டும் படம் ஒன்றை டைரக்ட் செய்து தரும்படி லெனினை கேட்டுக் கொண்டார். தியாகராஜா தயாரித்த இந்த படத்திற்கு ஒண்ணா மாமே கெல்ல பெனப்பா (மாமா பெண் ஓடுகிறாள்) என்று பெயரிடப்பட்டது.
அன்றைய சிங்கள சினிமாவில் பிரபல நடிகராக விளங்கிய டோனி ரணசிங்க ஜோ அபேவிக்ரம் போன்ற முண்ணணி நடிகர்களும் அவருடைய படங்களில் நடித்து வர்த்தக ரீதியாக வளம் பெற்றார்கள்.
எந்தவித திரையுலகப் பின்னணியும் இல்லாமல் திரையுலகில் நுழைந்து இந்த வெற்றிகளை தமிழரான லெனின் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் திரையுலகில் பிஸி டைரக்டராக, ஒளிப்பதிவாளராக திகழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் வீரகேசரி பத்திரிகைக்கு உதவும் வாய்ப்பும் லெனினுக்கு எதிர்பாராமல் கிடைத்தது.
வீரகேசரி பத்திரிகையில் நீண்ட காலமாக சித்திரம் வரைபவராக பணியாற்றியவர் ஓவியர் ஆகஸ்டின் மோரைசிஸ். 70ஆம் ஆண்டுகளில் வீரகேசரி நிறுவனம் வீரகேசரி வெளியீடாக தமிழ் நாவல்களை வெளியிட்ட போது அந்த நாவல்களுக்கும் அட்டைப் படம் வரைந்தவர் இவர். இந்த மொறாயஸ், இயக்குனர் லெனின் மொராயனின் சகோதரர் ஆவார்.
லெனின் எவ்வாறு வீரகேசரிக்கு உதவினார் என்பதை அவரே கூறினார்.
1970 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஸ்ரீமா பண்டாரநாயகா தன் ஆட்சியில் தமிழ் நாட்டிலிருந்து வார இதழ்கள்,
நாவல்கள் என்பனவற்றிற்கான இறக்குமதிக்கு தடை விதித்தார். இதனால் உள்நாட்டு எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை வெளியிட ஆர்வம் காட்டினார்கள்.
அந்த சமயத்தில் வீரகேசரியின் பொது முகாமையாளராக எஸ் பாலா சந்திரன் இருந்தார். அவர் உடனடியாக வீரகேசரி பிரசுரம், ஜன மித்திரன் வெளியீடு என்று இரண்டு வெளியீட்டு நிறுவனங்களை ஆரம்பித்து அதன் மூலம் இலங்கை எழுத்தாளர்களின் நாவல்களை வெளியிடத்தொடங்கினார்.
இந்த நாவல்களுக்கு நல்ல வரவேற்பும் விற்பனையும் இருந்தன. இலங்கை எழுத்தாளர்களின் பொற்காலம் என்று கூறும் அளவிற்கு ஏராளமான எழுத்தாளர்கள் இதனால் பயனடைந்தார்கள்.
அதே கால கட்டத்தில் ஜி நேசன் என்ற எழுத்தாளர் மித்திரன் தினசரியில் பட்லி அலமாராணி,
கருப்பு ராஜா என்று வாடா இந்திய கொள்ளையர்களை பற்றி தொடர் கதைகள் எழுதி வந்தார். இந்தக் கதைகளுக்கு நான்தான் படம் வரைந்தேன். கதைகளும் வாசகர்களினிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
ஒருநாள் பாலச்சந்திரன் என்னையும் நேசனையும் தனது அலுவலகத்திற்கு அழைத்தார். நாங்கள் சென்றவுடன் பட்லி நாவலை புத்தகமாக வெளியிடப்போகிறேன்
அதற்கு நீங்கள்தான் படம் வரைய வேண்டும் என்று கூறினார்.
நான் உடனே அவரிடம் சொன்னேன் சார் எல்லா கதைகளுக்கும் நான்தான் படம் வரைகிறேன். இந்த முறை நான் படம் வரைவதற்கு பதிலாக புகைப்படங்களை கதையில் இணைத்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு நான் கூறியதும் பாலச்சந்திரனுக்கும் நேசனுக்கும் வியப்பு. புகைப் படமா அதற்கு யார் போஸ் கொடுப்பார்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பாலச்சந்திரன்.
நான் அவரிடம் கூறினேன் உங்களுக்குத்தான் தெரியுமே என்னுடைய அண்ணன் பட டைரக்டர் என்று அவரை அணுகினால் காரியம் நடக்கும் என்றவுடன் பாலச்சந்திரன் சம்மதித்தார்.
அண்ணனிடம் விஷயத்தை சொல்லிவிட்டு ஒரு நாள் மாலையில் நானும் நேசனும் ஹெந்தளை விஜயா ஸ்டுடியோவிற்கு சென்றோம். அங்கே அண்ணன் தயாராக இருந்தார். படத்திற்கு போஸ் கொடுப்பதற்கு என்று ஒரு நடிகையையும் தயார் படுத்தி வைத்திருந்தார்.
பட்லி நாவலுக்கு தேவையான அட்டைப் படத்தை புகைப்படமாக எடுக்க அண்ணன் நடிகையை அழைத்தார்.
நடிகை இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு மேலே ஆடை இன்றி ஒரு நீண்ட துப்பாக்கியை கையில் பிடித்துக்கொண்டு முத்துக்குப் புறத்தை காட்டி கொண்டு கழுத்தை ஓரமாகத் திருப்பி பார்ப்பதுபோல் படத்தை எடுத்தார்.
படம் பிரமாதமாக அமைந்தது. அந்தப் படம் தான் பட்லி நாவலுக்கு முகப்புப் படமாக வந்தது. புத்தகமும் பர பரப்பாக விற்று தீர்ந்தது.
தொடர்ந்து வெளிவந்த அலிமாராணி, கருப்பு ராஜா போன்ற கதைகளுக்கும் அண்ணனே புகைப்படங்களை எடுத்துக் கொடுத்தார்.
பாலச்சந்திரனுக்கும் வீரகேசரி நிருவாக்கத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சி. என்னையும் பாராட்டினார்கள் என்று சொன்ன ஓவியர் மொறாயஸ் திரையுலகில் நடிக நடிகைகளுக்கு மத்தியில் அண்ணனுக்கு இருந்த செல்வாக்கினாலேயே இதனை அன்று சாதிக்க முடிந்தது என்றார். நாவல்களில் புகைப்படங்களை எடுத்த லெனின் மொறாயஸுக்கு நன்றி என்றும் வீரகேசரி நிருவாகம் குறிப்பிட்டு இருந்தது.
தொடரும் ...................
No comments:
Post a Comment