சிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி !.
asifa
காஷ்மீரைச் சேர்ந்த முசுலீம் சிறுமி ஆஷிஃபாவைக் கும்பல் வல்லுறவு செய்து கொன்றிருப்பது ஆர்.எஸ்.எஸ். நடைமுறைப்படுத்தி வரும் முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியலின் ஒரு பகுதியே.
ம்மு மாநிலம் கதுவாவிலும், உ.பி. மாநிலம் உன்னாவிலும் சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய குற்றவாளிகளைப் பாதுகாத்தும் ஆதரித்தும் வரும் பா.ஜ.க., சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கும் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை தரும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவருகிறது.
இச்சட்டத் திருத்தம் அக்கட்சியின் இரட்டை வேடத்தை, கபடத்தனத்தை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை. குற்றவாளிகளே நீதிபதிகளாக அதிகாரம் செலுத்தும் இழிவான, அபாயகரமான நிலையை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இந்திய மக்கள் நிறுத்தப்பட்டிருப்பதையும் அம்பலப்படுத்துகிறது.
ஜம்மு மாநிலம் கதுவா மாவட்டம் – ரஸானா கிராமத்தில் வசித்துவந்த ஆஷிஃபா என்ற எட்டே வயதான பால்மணம் மாறாத சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம், ஆர்.எஸ்.எஸ். நடைமுறைப்படுத்திவரும் முசுலிம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியல் திட்டத்தின் ஒரு பகுதி என்பதை இச்சம்பவம் தொடர்பான புலன் விசாரணையும் குற்றப் பத்திரிகையும் அம்பலப்படுத்துகின்றன.ஆஷிஃபா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த நாடோடி இனமான பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி. பக்கர்வால் சமூகத்தினர் முசுலீம் மதத்தின் சன்னி பிரிவைச் சேர்ந்த பழங்குடி இனத்தவராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அம்மாநிலத்தின் மொத்த மக்கட் தொகையில் 11.9 சதவீதமுள்ள இப்பழங்குடியின முசுலீம்கள், சொல்லிக்கொள்ளும்படியான நிலவுடமையோ, பிற வகையான சொத்துடமைகளோ இல்லாதவர்கள். இன்னமும் மாடுகளையும் குதிரைகளையும் மட்டுமே உடமையாகக் கொண்ட நாடோடி வாழ்க்கையைத்தான் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அக்கால்நடைகளை மேய்ப்பதும், அவற்றை வயல்வெளிகளில் பட்டி போடுவதும்தான் இவர்களது தொழில்.
குளிர்காலத்தில் ஜம்முவின் காட்டுப் பகுதிகளில் முகாமிட்டுத் தங்கும் இப்பழங்குடியின முசுலீம்கள், கோடை காலம் தொடங்கும் சமயத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குக் கால்நடையாகவே இடம் பெயர்ந்து செல்கிறார்கள்.
பள்ளத்தாக்கின் புல்வெளிப் பகுதிகளில் குடிசை போட்டுத் தங்கி, கால்நடைகளை மேய்க்கும் இவர்கள், பக்ரீத் பண்டிகை காலத்தில் தாங்கள் வளர்த்துவரும் ஆடு, மாடுகளை இறைச்சிக்காகப் பள்ளத்தாக்கு பகுதி முசுலீம்களுக்கு விற்பதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். சுழற்சி முறையில் பருவ காலங்கள் வந்து போவது போல, இவர்களும் ஜம்முவிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் மாறிமாறித் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த முப்பதாண்டுகளாக காஷ்மீர் மாநிலத்தில் நடந்துவரும் தன்னுரிமைக்கான போராட்டத்தை இராணுவரீதியில் வெற்றிகொள்ள முடியாத இந்திய ஆளும் வர்க்கம், அந்த நீதியான போராட்டத்தை இந்து – முசுலீம் மத மோதலாக மடைமாற்றிவிடத் தொடர்ந்து முயன்று வருகிறது.
இத்திட்டத்தின் களமாக ஜம்முவும், முன்னணி சக்திகளாக ஜம்முவில் ‘‘பெரும்பான்மையாக வசித்துவரும் பார்ப்பன பண்டிட்டுகளும், ராஜபுதன (டோக்ரா) சாதியினரும், சீக்கியர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். வாஜ்பாயி ஆட்சியின்போது காஷ்மீரிலிருந்து ஜம்மு பகுதியைப் பிரித்துத் தனி மாநிலமாக்க முயன்று தோற்றுப் போனது இந்து மதவெறிக் கும்பல்.
2011 ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஜம்முவின் மொத்த மக்கட்தொகையில் இந்துக்கள் 62 சதவீதமாகவும், முசுலீம்கள் 36 சதவீதமாகவும் உள்ளனர்.
ஆனால், இந்தியா ‘‘சுதந்திரம்” அடைவதற்கு முன்பு ஜம்முவிலும் முசுலீம்கள்தான் பெரும்பான்மையாக இருந்தனர். அச்சமயத்தில் ஜம்மு காஷ்மீரை ஆண்டு வந்த டோக்ரா சாதியைச் சேர்ந்த இந்து மன்னன் ஹரி சிங் முசுலீம்களுக்கு எதிராக நடத்திய இன அழித்தொழிப்பு நடவடிக்கையின் விளைவாகவே ஜம்முவில் இந்து பெரும்பான்மை நிறுவப்பட்டது.
kathua hindus support rapists
அவ்வின அழித்தொழிப்பு நடவடிக்கையில் இரண்டு இலட்சம் முசுலீம்கள் காணாமல் போயினர். ஐந்து இலட்சம் முசுலீம்கள் அகதிகளாக வெளியேறினர். இவ்வின அழித்தொழிப்பு நடவடிக்கையை காந்தி, நேரு தொடங்கி ஷேக் அப்துல்லா உள்ளிட்டுப் பலரும் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கின்றனர். (Dogra Raj in Kashmir, Frontline, Nov.24, 2017)
அன்று இந்து மன்னன் ஹரி சிங் முசுலீம்களுக்கு எதிராக ஆயுதந்தாங்கி நடத்திய இன அழித்தொழிப்பு நடவடிக்கையை, இன்று ஆர்.எஸ்.எஸ். கும்பல், ‘‘ஜம்மு பகுதியில் குஜ்ஜார், பக்கர்வால் முசுலீம்களுக்குக் குடியுரிமையோ, சொத்துரிமையோ வழங்கக் கூடாது. வன உரிமைச் சட்டத்தின் கீழ் பக்கர்வால் முசுலீம்களுக்கு ஜம்மு பகுதியில் உள்ள காடுகளில் நிலங்கள் ஒதுக்கக் கூடாது.
குஜ்ஜார், பக்கர்வால் முசுலீம்களைப் பள்ளத்தாக்கு பகுதிக்குத் துரத்திவிடுவதன் மூலமாகத்தான் ஜம்முவின் இந்து பெரும்பான்மையைத் தக்க வைக்க முடியும்” என்ற வடிவத்தில் நடத்தி வருகிறது.
பக்கர்வால் முசுலீமான ஆஷிஃபா, கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். -இன் இந்த முசுலீம் எதிர்ப்புப் பிரச்சாரம்தான் அடிக்கொள்ளியாக இருந்திருக்கிறது.
இவ்வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ள சஞ்சிராம், ஆர்.எஸ்.எஸ். -இன் இந்த செயல்திட்டத்தை ரஸானா கிராமப்புற பகுதிகளில் நடைமுறைப்படுத்துவதில் மும்முரமாகச் செயல்பட்டு வந்திருக்கின்றான்.
ஜம்மு பகுதியில் ஆர்.எஸ்.எஸ். விதைத்துவரும் நஞ்சு, எந்தளவிற்குப் பெரும்பாலான இந்துக்கள் மத்தியில் ஊடுருவி, முசுலீம் எதிர்ப்பு அரசியலை இயல்பான நடைமுறையாக்கிவிட்டது என்பதை சஞ்சிராமும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக ரஸானா கிராம இந்துக்கள் அணி திரண்டு நிற்பதும் எடுத்துக்காட்டுகின்றன.
‘‘குளிர்காலத்தில் ஜம்முவின் காட்டுப்பகுதிகளில் முகாமிட்டுத் தங்கியிருக்கும் பக்கர்வால் முசுலீம்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் இனி ஜம்முவில் முகாமிடுவதற்கு ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தித் தங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட வேண்டும் எனக் கோரி பக்கர்வால் முசுலீம்கள் போராடி வருவதைத் தடுக்க வேண்டும்” என்ற அரசியல் நோக்கிலேயே சிறுமி ஆஷிஃபாவின் மீது இந்தக் கொடூரமான பாலியல் வன்முறை ஏவிவிடப்பட்டிருக்கிறது.
jammu HC Lawyers support asifa killers

சிறுமி ஆஷிஃபாவும் தற்செயலாகக் குறிவைக்கப்பட்ட பலிகடா அல்ல. சஞ்சிராமின் மருமகன் சுபம் சங்ராவுக்கு சிறுமி ஆஷிஃபாவுடன் பழக்கம் இருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, அவனைக் கொண்டே அச்சிறுமியைக் கடத்தினான், சஞ்சிராம்.
கோவில் யாரும் சந்தேகப்பட முடியாத பொது இடம் என்பதால், கடத்தப்பட்ட சிறுமியைத் தனது கட்டுப்பாட்டிலுள்ள கோவிலில் அடைத்துவைத்தான். அடைத்துவைக்கப்பட்ட சிறுமி சத்தம்போட்டுத் திட்டத்தைப் பாழாக்கிவிடக் கூடாது என்பதற்காகவே, அச்சிறுமிக்கு அடுத்தடுத்து மயக்க மருந்தைச் செலுத்தி, அவளை மயங்கிய நிலையிலேயே வைத்திருந்தான்.
அச்சிறுமி மயங்கிய நிலையில் இருந்தபோதே, சுபம் சங்ரா அவளை வல்லுறவு செய்து சிதைத்தான். இந்தச் செய்தியையெல்லாம் உ.பி. மாநிலம் மீரட்டில் படித்துவரும் சஞ்சிராமின் மகன் விஷால் ஜன்கோத்ராவிடம் தெரிவித்து, உனது ஆசையைத் தீர்த்துக் கொள்ள உடனே கிளம்பி வா என அழைத்தான் சுபம் சங்ரா. இதற்காகவே மீரட்டிலிருந்து வந்த விஷால் ஜன்கோத்ரா மயங்கிய நிலையிலேயே ஆஷிஃபாவை வன்புணர்ந்தான்.
ஆஷிஃபாவைக் கொலைசெய்துவிடுவது என ஏற்கெனவே முடிவெடுத்திருந்த சஞ்சிராம், அச்சிறுமி தனது மகனாலும், மருமகனாலும் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
உள்ளூர் சிறப்பு போலீசு படையில் பணியாற்றும் தீபக் கஜுரியாவோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு ஆஷிஃபாவைக் கொலை செய்து, அவளது சடலத்தைக் காட்டுக்குள் வீசியெறிந்துவிடுவது என சஞ்சிராம் திட்டமிட்ட நேரத்தில், குற்றுயிராகக் கிடந்த சிறுமியைத் தானும் புணர விரும்புவதாகக் கூறி, தனது மிருகத்தனமான இச்சையைத் தீர்த்துக் கொண்டான் தீபக் கஜுரியா.
ஆஷிஃபா, கடந்த ஜனவரி மாதம் 10 தேதி சஞ்சிராம் கும்பலால் கடத்தப்பட்டாள். ஜனவரி மாதம் 17 தேதி அவளது சடலம் காட்டுப் பகுதிக்குள் கண்டெடுக்கப்பட்டது. இடைப்பட்ட இந்த ஒரு வார காலமும் அச்சிறுமி மயக்க நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தாள்.
மயக்கம் தெளிந்த சமயத்தில் எல்லாம் அடித்து உதைக்கப்பட்டு, மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மயக்கத்திற்குள் தள்ளப்பட்டாள். மயங்கிய நிலையிலேயே மூன்று இந்து மிருகங்களால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டாள்.
அளவுக்கு அதிகமான மயக்க மருந்து, சித்திரவதை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆகியவற்றால் ஆஷிஃபா சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த சமயத்திலும்கூட, அச்சிறுமியின் மீது இந்து மதவெறி பிடித்த சஞ்சிராம் கும்பல் இரக்கம் காட்டவில்லை.
அச்சிறுமியின் முதுகெலும்பை உடைத்து, தலை மீது ஒருமுறைக்கு இருமுறை பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுச் சிதைத்து, மிகக் கொடூரமான முறையில் அவளைக் கொன்று, சடலத்தைக் காட்டிற்குள் வீசியெறிந்தனர்.
BJP Police Rape
ஆஷிஃபா காணாமல் போனவுடனேயே, அவளது உறவினர்கள் போலீசு நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீசு அதிகாரிகளோ, ஆஷிஃபா எட்டு வயது சிறுமி என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவள் யாருடனாவது ஓடிப் போயிருப்பாள் என வக்கிரத்தோடு பதில் அளித்துப் புகாரைக் கிடப்பில் போட்டனர்.
இன்னொருபுறம், போலீசு அதிகாரிகள் தீபக் கஜுரியாவும், திலக் ராஜும் ஆஷிஃபாவின் உறவினர்களோடு சேர்ந்துகொண்டு, அவளைத் தேடுவது போல நடித்தனர். சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பிறகு, சஞ்சிராமின் மருமகன் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து, மற்ற குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்து, குற்றத்தின் தீவிரத்தன்மையை நீர்த்துப்போக வைத்தனர்.
ஆஷிஃபாவின் உறவினர்களும், பக்கர்வால் முசுலீம்களும் போராடிய பிறகுதான், விசாரணை உள்ளூர் போலீசிடமிருந்து மாநிலக் குற்றவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதன் பிறகுதான் குற்றவாளிகள் யார் யாரென்பதும் குற்றத்தின் பின்னுள்ள நோக்கமும் அம்பலமானது.
சஞ்சிராம், அவரது மகன் விஷால் ஜன்கோத்ரா, அவனது மருமகன் சுபம் சங்ரா, சஞ்சிராம் குடும்ப நண்பன் பிரவேஸ் குமார், போலீசு அதிகாரி தீபக் கஜுரியா ஆகியோர் மட்டுமின்றி, சஞ்சிராமிடமிருந்து இலஞ்சம் வாங்கிக்கொண்டு இக்குற்றத்தையும் சாட்சியங்களையும் அழிக்க முயன்ற போலீசு அதிகாரிகள் ஆனந்த் தத்தா, திலக் ராஜ், சுரேந்தர் வர்மா உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுக் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. ‘‘இந்த எட்டு பேரோடு குற்றவாளிகளின் எண்ணிக்கை முடிந்து போக வாய்ப்பில்லை” எனக் கூறியிருக்கிறார், விசாரணை அதிகாரி ரமேஷ்குமார் ஜல்லா.
அந்த அதிகாரி கூறியிருப்பது நடக்காவிட்டாலும்கூட, அந்த வார்த்தைகளில் அபாயகரமான உண்மை மறைந்து இருக்கத்தான் செய்கிறது.
கைது செய்யப்பட்டிருக்கும் எட்டுக் குற்றவாளிகளை வழக்கு, விசாரணை, தண்டனையிலிருந்து பாதுகாத்து, வழக்கைப் பத்தோடு பதினொன்றாக ஊத்தி மூடிவிடும் நோக்கில் இந்து ஏக்தா மஞ்ச் என்றொரு அமைப்பை ஜம்முவின் தெருக்களில் இறக்கிவிட்டிருக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.
நீதியைக் கொல்லும் நோக்கில் அவ்வமைப்பு நடத்திவரும் போராட்டங்களுக்கு ஜம்முவைச் சேர்ந்த இந்து பெரும்பான்மை தனது ஆதரவை வழங்கி வருகிறது.
ஆஷிஃபாவைக் கடத்தி, கூட்டுப் பாலியல் பலாத்காரப்படுத்தி, கொன்ற குற்றத்தில் எட்டு பேரோ, பத்துப் பேரோ முதன்மைக் குற்றவாளிகள் என்றால், அக்குற்றவாளிகளுக்கு ஆதரவாகத் தெருவில் இறங்கியிருக்கும் இந்துக்கள் அனைவரும் குற்றப் பட்டியலில் இரண்டாம், மூன்றாம் இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள்.
ஆஷிஃபாவின் சடலத்தை ரஸானா கிராமத்தில் புதைப்பதற்குக்கூட மறுத்து, மனிதத்தன்மையற்ற வக்கிரத்தை வெளிப்படுத்தியிருக்கிறது, இந்துக்களின் மனசாட்சி.
ஜம்மு காஷ்மீர் மாநில அரசில் அமைச்சர்களாகப் பொறுப்பு வகிக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த லால் சிங்கும், சந்தர் பிரகாஷ் கங்காவும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
விசாரணை அதிகாரி ரமேஷ் குமார் ஜல்லா நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வந்த சமயத்தில், அதனைத் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது ரஸானா நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம். நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிக்குமாறு அறைகூவல் விட்டதோடு, குற்றவாளிகளுக்கு ஆதரவாக முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியது ஜம்மு உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம்.
ஆஷிஃபா வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதாடிவரும் பெண் வழக்குரைஞர் தீபிகா சிங் ரஜாவத்தை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வைத்து வழக்குரைஞர் சங்கத் தலைவர் புபிந்தர் சிங் சலாதியா மிரட்டியிருக்கிறார். தீபிகா சிங் தனது உயிருக்கும் கண்ணியத்திற்கும் பாதுகாப்பு அளிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் ‘தேசியக்’ கொடி பறக்கவிடப்பட்டது. ‘‘தேசியக் கொடியை மட்டுமல்ல, தேவையென்றால் ஏ.கே.47 துப்பாக்கியை ஏந்தி வருவோம்” எனப் பகிரங்கமாக மிரட்டல் விட்டார் ஜம்மு உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவர், சலாதியா.
ஒரு முசுலீம் சிறுமி இந்து மதவெறி பிடித்த கிரிமினல்களால் பாலியல் பலாத்காரப்படுத்திக் கொல்லப்பட்டதைத் தேசபக்த நடவடிக்கையாகச் சித்திரிக்கும் குறியீடுகள் இவை.
இட்லரின் ஜெர்மனியில் மட்டும்தான் நடந்தது என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் அநீதி, அநியாயம், அசிங்கத்தை இந்து தேசியத்தின் பெயரால் இந்தியாவில் அரங்கேற்றி வருகிறது, ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிச கும்பல்.
ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் ஜம்மு பிராந்திய தலைமை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் தேசியத் தலைமையும், மோடி தலைமையில் உள்ள மைய அரசும்கூடக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் அணுசரனையாகவும்தான் நடந்துவருகின்றன.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் கதுவா, உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு தழுவிய அளவில் விவாதப் பொருளான சமயத்தில் பிரதமர் மோடியோ, வேற்றுக் கிரகவாசி போல, தனது முகநூல் மற்றும் சுட்டுரை பக்கங்களில்தான் யோகா செய்யும் படத்தை வெளியிட்டார்.
நாடாளுமன்ற அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்னின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்திய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ அதிகாரிகளைப் பாராட்டினார்.
கதுவா, உன்னாவ் சம்பவங்கள் இரண்டிலும் சங்கிகள்தான் குற்றவாளிகள் என்ற உண்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைப் பொத்தாம் பொதுவாகக் கண்டித்துக் காலந்தாழ்த்தி அவர் விடுத்த அறிக்கை, முதலைக் கண்ணீருக்கு ஒப்பானது. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் தந்திரம் நிறைந்தது.
கதுவாவில் ஆஷிஃபாவைச் சீரழித்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகத் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் பதவி விலகியது தண்டனையல்ல எனக் காட்டுவற்காகவே, பா.ஜ.க.வைச் சேர்ந்த மற்ற அமைச்சர்களையும் அமைச்சரவையிலிருந்து விலக வைக்கும் மலிவான தந்திரத்தைக் கையாண்டது.
காங்கிரசு கூட்டணி ஆட்சியின்போது டெல்லியில் நடந்த நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கைப் பிடித்துக்கொண்டு வட இந்தியப் பெரு நகரங்கள் அனைத்திலும் மன்மோகன் சிங்கிற்கு எதிராக அரசியல் ஆர்ப்பாட்டங்களை நடத்திய ஆர்.எஸ்.எஸ்., ஆஷிஃபா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்திவருகிறது.
இந்த எதிரும்புதிருமான அணுகுமுறையை, அறத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியல் கணக்குகளைக் கொண்டும் மதிப்பிட வேண்டும்.
Go Back BJPநிர்பயா வழக்கை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., ஆஷிஃபா வழக்கில், அதன் பின்னுள்ள இந்து மதவெறியை மறைத்து, அதனைச் சாதாரண வழக்காகக் காட்டுவதன் மூலம் நீர்த்துப் போக வைக்க முயலுகிறது.
இன்னொருபுறமோ, இந்த வழக்கில் இந்துக்கள் பழிவாங்கப்படுவதாகப் பொய்யான பிரச்சாரத்தை முன்னிறுத்தி, முசுலீம்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் எதிராக இந்துக்களைத் தூண்டி விடுகிறது.
முசுலீம்களைத் தேச விரோத சக்திகளாகச் சித்தரிக்கத் தயங்காத ஆர்.எஸ்.எஸ்., இப்பொழுது முசுலீம்களுக்கு எதிரான தனது ஒவ்வொரு வன்முறை நடவடிக்கையையும் தேசபக்த நடவடிக்கையாகச் சித்தரித்து வருகிறது.
மோடியால் குஜராத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த அயோக்கியத்தனம், பா.ஜ.க. மைய அரசைக் கைப்பற்றிய பிறகு ‘‘தேசிய”மயமாக்கப்பட்டு வருகிறது.
குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்கக் கோரி போராடுவதையும் வாதிடுவதையும் குஜராத்திகளின் கௌவரத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கையாகச் சித்தரித்தார், மோடி.
அந்த இனப் படுகொலையை நியாயமானதாகவும் இயல்பானதாகவும் ஏற்றுக்கொள்ளும்படியான மனோநிலையை குஜராத் இந்துக்களிடம் ஏற்படுத்துவதில் மோடியும் ஆர்.எஸ்.எஸ்ஸும் வெற்றியடைந்தனர்.
மோடி பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவுடனேயே அந்த குஜராத் பரிசோதனை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஏவிவிடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடிய கன்னையா உள்ளிட்ட மாணவர்கள் தேசவிரோத சக்திகளாகச் சித்தரிக்கப்பட்டு, அவர்களின் மீது ராஜதுரோக வழக்கு ஏவப்பட்டது.
அக்லக் படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவன் இறந்தபோது, அவனது சடலத்தின் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டது. பா.ஜ.க. அமைச்சர் நேரடியாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
முசாபர்பூர் மாவட்டத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம், இந்துக்கள் தமது பெண் குழந்தைகளின் கௌவரத்தைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்பட்ட நியாயமான நடவடிக்கையாகச் சித்தரிக்கப்பட்டது.
குஜராத் உனாவில் இந்து மதவெறிக் கும்பல் நான்கு தாழ்த்தப்பட்ட இளைஞர்களைத் தாக்கியதைக் கைபேசியில் படம் பிடித்து ஒளிபரப்பி, அக்காட்டுமிராண்டித்தனத்தை பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நியாயப்படுத்தியது.
ராஜஸ்தான் மாநிலம் நகரைச் சேர்ந்த ஷாம்புலால் ரேகர், தனது கள்ள உறவைத் தொடரும் நோக்கில் முகம்மது அஃப்ரஸுல் என்ற பெங்காலி முசுலீம் தொழிலாளியை வெட்டிக் கொன்றான். கொலைகாரன் இந்து, கொல்லப்பட்டவன் முசுலீம் கூலித் தொழிலாளி என்பதால், இந்தப் படுகொலையை லவ் ஜிகாத்துக்கு எதிரான நியாயமான நடவடிக்கையாக இந்து மதவெறி அமைப்புகள் சித்தரித்தன.
கொலைகாரனின் கட்-அவுட் படங்கள் ராஜஸ்தான்-ஜோத்பூரில் நடந்த ராமநவமி ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டன. அவனது வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, இந்து மதவெறிக் கும்பல் அந்நீதிமன்றக் கட்டிடத்தில் இருக்கும் கொடிக்கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றி ஆட்டம் போட்டது.
ஆஷிஃபா கூட்டுப் பாலியல் வன்கொடுமை இப்படி இயல்பானதாக, நியாயமானதாக, தேச பக்த நடவடிக்கையாகக் காட்டும் திசையில் சங்கப் பரிவார அமைப்புகள் எடுத்துச் செல்கின்றன.
ஆஷிஃபா வழக்கில், ஒரு பால்மணம் மாறாத சிறுமி மீது நடத்தப்பட்ட ஆகக் கொடூரமான பாலியல் வன்முறையையும் அதன் பின்னிருக்கும் இந்து மதவெறி அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது.
இச்சமயத்திலும்கூட, நகர்ப்புறத்து நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளும், பெண்ணியவாதிகளும் இவ்வழக்கை அரசியல் ஆக்காமல், வெறும் பெண்களுக்கு எதிரான குற்றமாக மட்டுமே பார்க்க வேண்டும் எனக் கோரி வருவது, எதிரிகளைப் பாதுகாப்பதற்கே உதவும்.
-செல்வம்
-புதிய ஜனநாயகம், மே 2018
nantri vinavu.com

No comments: