தூத்துக்குடியில் குண்டடிபட்ட 90 பேருக்கு வீட்டிலேயே சிகிச்சை..! அதிர்ச்சி அறிக்கை

நடக்கநேர்ந்தாலும்
தீமையானதற்கு அஞ்சேன்!'
- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு காவு வாங்கிய ஸ்னோலின் உடலின் முன் படிக்கப்பட்ட சங்கீத வசனங்கள் இவை. நேற்று அவர் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன்தினம் தமிழரசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
தமிழக மக்கள் தங்கள் வாழ்நாளில் மறந்திடாத பெருந்துயரச் சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. உயிர் நீத்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டும் புதைக்கப்பட்டும் வருகின்றன. உறவினர்களின் கண்ணீர் இன்னும் ஓய்ந்தபாடில்லை. மக்கள் இன்னும் அந்தத் துயரத்திலிருந்து மீளவில்லை என்பதைத்தான் தூத்துக்குடியிலிருந்து வரும் புகைப்படங்களும் வீடியோக்களும் பதிவுசெய்கின்றன. ஆனால் அரசின் தரப்பிலோ, `தூத்துக்குடி இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது' என்கின்றனர். 


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குப் பூட்டு போடப்பட்டுவிட்டது. அரசியல் கட்சித்தலைவர்களும் அமைச்சர்களும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர். 144 தடை உத்தரவு நீக்கப்பட்ட பிறகும்கூட, தூத்துக்குடியில் அதிக அளவில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 13-ஐத் தாண்டும் எனப் பல்வேறு தகவல்கள் கூறுகின்றன. உண்மையில், இன்று தூத்துக்குடி எப்படி இருக்கிறது? துயரம் பீடித்த அந்த மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டனரா எனத் தெரிந்துகொள்ள,  தூத்துக்குடிப் போராட்டம் குறித்து கள அறிக்கை தயாரித்துவரும் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேனுடன் பேசினோம். 
துப்பாக்கிச் சூடு
'அமைச்சர்களும் தலைவர்களும், காயமடைந்த மக்களை மருத்துவமனைகளில் சந்தித்தனர்' என்று செய்திகள் வெளியாகின்றன. ஆனால், உண்மையில் வெளிவரவேண்டியவை அந்தச் செய்திகள் அல்ல. இதில் அடிப்படையாகவே சில முரண்கள் இருக்கின்றன. இவை பற்றிய கேள்விகள் எழுப்பப்படாமல் மறைக்கப்படுகின்றன. துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது 22-ம் தேதி. மே 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை  நகரத்துக்குள் 22-க்கும் அதிகமான ஐ.பி.எஸ் அதிகாரிகள் இருந்தார்கள். ஒரு ஏ.டி.ஜி.பி., நான்கு ஐ.ஜி., இரண்டு டி.ஐ.ஜி., 15 எஸ்.பி இருந்தனர். அவர்கள் தயாரித்த தகவல்கள்தாம் இதுவரை வெளியான அனைத்தும். துணை வட்டாட்சியர் கொடுத்ததாகச் சொல்லப்படும் புகார், நமக்கு ஐந்து நாள்கள் கழித்தே தெரியவந்தது. எஃப்.ஐ.ஆர் பதிவதாக இருந்தால் 22-ம் தேதியே அல்லவா பதிவுசெய்திருக்க வேண்டும். ஆன்லைனில் இருக்கவேண்டிய அந்த எஃப்.ஐ.ஆர்., பிளாக் செய்யப்பட்டுள்ளது. க்ரைம் நம்பர் மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் இருக்கும் உண்மை மறைக்கப்பட்டு, அவர்களுக்குத் தகுந்தாற்போன்ற `உண்மைகள்' தயாரிக்கப்பட்டுள்ளன. 
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச் சூடு நடந்த அன்று, ஐ.பி.எஸ் அலுவலர்களின் உத்தரவின் பேரில் பல எளிய மக்கள் தாக்கப்பட்டனர். கறுப்புச் சட்டை அணிந்து கோஷமிட்டவர்கள், போராட்டம் குறித்த செய்தியை முகநூலில் பரப்பியவர்கள் என அனைவரையும் வீடுவீடாகச் சென்று தாக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான இளைஞர்களை அழைத்துச் சென்று சித்ரவதை செய்துள்ளனர்.
தகவல் சேகரிப்பதற்காக, பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு எங்கள் குழுவினர் நேரில் சென்றனர். அவர்கள் பேசவே அச்சப்படுகின்றனர். ஏதாவது தகவல் சொன்னால், போலீஸ் வழக்கு பதிவுசெய்து துன்புறுத்தும் என அவர்கள் பயப்படுகிறார்கள். அதில் நியாயம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. பலரும் குண்டடி பட்டு காயத்துடன் வீடுகளில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட 90 பேரை நாங்கள் சந்தித்தோம். பலரும் சிறுவர்கள். அவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்கிறார்கள். மருத்துவமனைக்குச் சென்றால் அவர்களையும் போலீஸார் துன்புறுத்துவர் என அச்சப்படுகிறார்கள். உண்மை நிலவரம் இப்படி இருக்கையில், இயல்புநிலை திரும்பிவிட்டது என்பது எதன் அடிப்படையில் நியாயமாகும்? இங்கு உள்ள மக்களையெல்லாம் ஒன்றுதிரட்டி உண்மையான அறிக்கையைத் தயார்செய்துவருகிறோம். அந்த அறிக்கை தயாரானவுடன் சட்டரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்வோம்" என்றார் ஆதங்கத்துடன். 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
'இந்தத் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், துணை வட்டாட்சியரின் உத்தரவின் பேரில்தான் நடந்தது' என்று செய்தி பரவுவதைப் பற்றி ஹென்றி திபேனிடம் கேட்டோம்.
"துணை வட்டாட்சியருக்கும் law&order-க்கும் என்ன சம்பந்தம்? பலர் தப்பிப்பதற்காக துணை வட்டாட்சியரின் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அந்த மாவட்டத்தின் கலெக்டர் அல்லவா இதற்கு பதில் சொல்லியிருக்க வேண்டும். எங்கே சென்றார் அவர்? 144 தடை உத்தரவு போட்டவர் கலெக்டர். மக்கள் தடை உத்தரவை மீறி வரும்போது கலெக்டர் மாவட்டத்தில் இல்லாமல் ஏன் வெளியே சென்றார்? 144 தடை உத்தரவைப் போட்டுவிட்டு அவர் ஜமாபந்திக்காக கோவில்பட்டி செல்லவேண்டிய காரணம் என்ன? இவையெல்லாம் மறைக்கப்பட்டு, அந்த மஞ்சள் சட்டை அணிந்த காவலரை மட்டும் குற்றவாளி ஆக்குகிறார்கள். அந்தக் காவலருக்குச் சுட அதிகாரம் கொடுத்த டி.ஐ.ஜி-யும் அல்லவா அதற்குப் பொறுப்பு! ஆனால், அப்பாவி மக்கள் தாக்கினார்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். தாக்க வேண்டும் என முடிவுசெய்த மக்கள், இவ்வளவு நாள் காத்திருந்தா தாக்குவார்கள்? காவல் துறையைச் சேர்ந்த பலர் மாற்று உடையில் இருந்தார்கள். அந்தத் தகவல் எல்லாம் ஒவ்வொன்றாக வெளிவரும். அப்போது தெரியும் யார் கலவரத்துக்குக் காரணம் என்று; யார் வாகனங்களைக் கொளுத்தினார்கள் என்று'' என வேதனையுடன் கூறிய ஹென்றி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விரிவான அறிக்கை தயார்செய்து வருகிறார். 

No comments: