நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 04 இலங்கைக்கு வந்த முதலாவது சமாதானத் தூதுவர் யார்...? - ரஸஞானி"இலங்கைக்கு வந்த முதலாவது சமாதானத் தூதுவர் யார்...?" என்ற கேள்வியுடன் இந்த அங்கத்தை தொடங்குவோம்.
எமது தாயகத்தின் வரலாற்றை ஆராயும்போது, பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகின்றன.  25 ஆயிரத்து 330 சதுரமீட்டர்  பரப்பளவு கொண்ட  இந்த சின்னஞ்சிறிய தீவில், தமிழ் - சிங்கள - முஸ்லிம் இன நல்லுறவுக்கு காலத்திற்குகாலம் சோதனைகள் வந்திருப்பது இன்று நேற்று அல்ல என்பதை வரலாற்றின் ஏடுகளிலிருந்து பார்க்கின்றோம்.
முரண்பாடுகள் இராமன் - இராவணன் காலத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது. இலங்கையில் 1983 இல் இனநெருக்கடி உச்சத்திற்கு வந்து கலவரமாக வெடித்தபோது பாரதப்பிரதமர் இந்திராகாந்தி,  தனது தரப்பிலிருந்து ஒரு நல்லெண்ணத் தூதுவரை அனுப்பியிருந்தார். அவர் பெயர் ஜி. பார்த்தசாரதி. அவர் வந்தும் சரியான சமாதானத்தீர்வு கிடைக்கவில்லை. எதிர்பாராதவிதமாக இந்திராகந்தி கொல்லப்பட்டதும்,  ராஜிவ் காந்தியின் பதவிக்காலத்தில் ரொமேஷ் பண்டாரி என்பவர் வந்தார். அவராலும் உரிய தீர்வைக்கண்டுபிடிக்க முடியவில்லை.
1987 இல் வடமராட்சியில் லிபரேஷன் ஒப்பரேஷன் தாக்குதலை அன்றைய பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி தொடக்கியதும், இந்திய விமானங்கள் வந்து பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி உணவு மற்றும் உதவிப்பொருட்களை வீசியதும், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா உஷாரடைந்தார். சண்டைக்காரனுடன் சமாதானம் பேசுவதைவிட சாட்சிக்கு வருபவனுடன் பேசுவதற்கு அவர் தயாரானர்.
ஒரு சமாதானத் தூதுவராக  ராஜிவ் காந்தியும் வந்து வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு தீர்வை முன்வைத்தார். முதலில் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அதனை ஏற்று மானிப்பாய் சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் மக்களிடம் தோன்றி ஆயுதங்களை ஒப்படைப்பதாகச்சொல்லி சமாதானத்திற்கு சமிக்ஞையும் காண்பித்தார்.


பிறகு நடந்த சிக்கல்கள் தெரிந்த வரலாறுதான். புதிதாகச்சொல்வதற்கு எதுவும் இல்லை! அந்தச்சிக்கல்கள் அதி உச்சம் சென்றவேளையில் 2002 இல் நோர்வேயிலிருந்து சொல்ஹெய்ம் என்ற தூதுவர் வந்தார். மீண்டும் மீண்டும் வந்தார்.
இறுதியில் அவரும் " எக்கேடும் கெட்டுப்போங்கள்" என்று கையைவிரித்தார்.
2009 மே மாதத்திற்குப்பின்னர் ஐ. நா. சபையின் பிரதிநிதிகள் ஒருவர் பின் ஒருவராக வந்து வந்து செல்கிறார்கள். இன்னும்தான் பிரச்சினை தீரவில்லை.
இந்தப்பின்னணிகளுடன்தான் இந்தப்பதிவில் முதலில் முன்வைத்த "இலங்கைக்கு வந்த முதலாவது சமாதானத் தூதுவர் யார்...?" என்ற கேள்வியை  களனி  கங்கையின் பின்னணியிலிருந்து  நாம் பார்க்கலாம்.
இலங்கையின் முதல் வேந்தன் என அறியப்படும் இலங்கேஸ்வரன் இராவணன் எந்த நேரத்தில் சீதையைப்பார்த்தானோ தெரியாது...?! அது அவனுக்கும் கெட்டநேரம்! சீதைக்கும் கெட்ட நேரம்! இராமனுக்கும் கெட்டநேரம். இராம பக்த ஹனுமானின் நீண்ட வாலுக்கும் கெட்ட நேரம்!
அந்த கெட்டநேரங்கள், இன்றுவரையில் தொடருகின்றன!
சீதையை மீட்பதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்ட முதலாவது சமாதான நல்லெண்ணத்தூதுவர்  ஶ்ரீராம பக்த ஹனுமான். அவர் வந்து சீதையை அசோகவனத்தில் பார்த்து இராமனின் கணையாழியை காண்பித்து தன்னை அறிமுகப்படுத்திவிட்டு, அதன்பிறகே இராவணனை சந்தித்து சீதையை மீட்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அந்த சமாதானப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஹனுமானின் வாலில் தீயை வைத்து அவமானப்படுத்தி அனுப்பிய கோபம் ஒரு புறம், தனது மனைவியை கவர்ந்து சென்ற கோபம் மறுபுறம், இராமன் தனது தம்பி இலக்குமணனுடனும் வானரப்படைகளுடனும் இலங்கை மீது போர் தொடுத்து மனைவியை மீட்டார்.
அவர் இராவணனை வென்று திரும்புகையில் அந்தப்போர்க் காலத்தில் தனது பக்கம் வந்து சேர்ந்த இராவணன் தம்பி விபீஷணனிடம்  நாட்டை ஒப்படைத்து முடிசூட்டிவிட்டே சென்றார்.
விபீஷணன் குறித்து விமர்சனங்களும் இருக்கின்றன. இராமன் பக்கம் சென்று தனது உடன்பிறப்பை காட்டிக்கொடுத்தான் என்று ஒரு சாராரும், அண்ணனைத்திருத்த முடியாத சூழலில்தான் அவன் எதிரியின் பக்கம் சென்றான் என்று மற்றும் ஒரு சாராரும் இன்றுவரையில் பட்டிமன்றம் நடத்தி விவாதிக்கிறார்கள்.
இந்த விபீஷணனுக்கும் ஒரு கோயில் இலங்கையில் இருக்கிறது எனச்சொன்னால் நம்பமாட்டீர்கள்! அந்தக்கோயிலும் கௌதம புத்தர் தரிசனம் செய்த களனிகங்கைக்கு  அருகில்தான் இருக்கிறது. அங்கு புத்தர் வந்ததற்கு அடையாளமாக ரஜமஹா விஹாரை அமைந்திருப்பதுபோன்று, இராவணனுக்குப்பின்னர், இராமனால் முடிசூட்டப்பெற்ற அவன் தம்பி விபீஷணனுக்கும் ஒரு கோயில் அமைந்துள்ளது.
மகா விஷ்ணுவின் மற்றும் ஓர் அவதாரமான இராமனிடத்தில் ஆழ்ந்த பக்திகொண்டிருந்தமையால், இவரை விபீஷண ஆழ்வார் என்றும் வைணவர்கள் வணங்கிவருகிறார்கள்.
"மாற்றான் மனைவி சீதையை அசோகவனத்தில் தடுத்துவைத்திருப்பது தகாத செயல். அத்துடன் பஞ்சமா பாதகம். அவளை விட்டுவிடு" என்று சொல்லியும் கேளாதவன்தான் அண்ணன் இராவணன். அவனைத்திருத்த முடியாத சூழலில்தான் இராமனிடம் சென்று அடைக்கலம் புகுந்தான் விபீஷணன்.
இலங்கையில் ராஜிவ் காந்தியின் இந்திய அரசு அனுப்பிய இராணுவத்தின்பெயர் அமைதிப்படை!? இராமன் தனது மனைவியை மீட்க உடன் அழைத்துவந்தது வானரப்படை!.
இரண்டு படைகளும் செய்த செயல்களை காவியமும் வரலாறும் சொல்கின்றன. இந்திய அமைதிப்படை, வடகிழக்கில் வரதராஜப்பெருமாளை ஒரு தேர்தலின் மூலம்  முதலமைச்சராக்கியது.
இராமனின் வானரப்படை இராவணனை வெற்றிகொண்டதும் அவன் தம்பி விபீஷணனுக்கு அரசை வழங்கி மூடிசூட்டிவிட்டு அகன்றது.
இந்தக்கதைகள் ஐதீகத்திலும் இலங்கை வரலாற்றிலும் இடம்பெறுகின்றன.
விபீஷணனிடம் இலங்கையை ஒப்படைத்த காலம் கி.மு. 1300 காலப்பகுதி எனவும் ஆய்வுகள் சொல்கின்றன. விபீஷணன் களனியை தலைநகராகக்கொண்டு ஆட்சிசெய்ததாகவும், அவன் மறைந்த பின்னர், யட்டாலதீசன் என்ற மன்னன் ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்று, களனியிலேயே விபீஷணனுக்கு கோயில்  அமைத்ததாகவும் ஐதீகக்கதைகள் சொல்கின்றன.
விபீஷணன் இயக்கர் சமூகத்தை சேர்ந்தவன். அதேவேளை நாகவம்சத்தினர் வடக்கில் ஆட்சி நடத்தியிருப்பதாகவும், அங்கும் பங்காளிச்சண்டை நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நாகதீபத்தில் மகோதரன், சுலோதரன் ஆகிய இருவரும் அங்கு ஆட்சியிலிருக்கும்போது, இவர்களின் இளைய சகோதரன் மணியக்கிரானவன் களனியை ஆட்சிசெய்து வந்திருக்கிறான்.
நாகதீபத்தில் மகோதரன், சுலோதரன் ஆகிய மன்னர்கள் ஒரு தாய்மக்களாக இருந்தாலும் பதவி ஆசை என வந்துவிட்டால் பிறகு பங்காளிச்சண்டைதானே..? எங்கு சண்டை நடந்தாலும் அதனைத்தீர்த்துவைப்பதற்கு யாராவது ஒருவர் வருவார்.
தற்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை இருக்கிறது. சிலசமயங்களில் இந்தச்சபையும் எதுவும் செய்யமுடியாமல் கையை பிசைந்துகொண்டிருக்கும்.
விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதை போன்று அந்த நாகதீப சகோதரர்களும் முடியாட்சிக்காக தமக்குள் சண்டையிட்டபோது அவர்களை சமாதானப்படுத்த வந்த அமைதிப்புறாதான் கௌதம புத்தர். நாகதீபத்திற்கு வந்திருக்கும் போதிமாதவனை தரிசிப்பதற்காக அங்கு சென்றான் யட்டாலதீசன் என்ற மன்னனுக்கு பின்னர் களனியை ஆட்சிசெய்த மணியக்கிரானவன் என்ற மன்னன்.
புத்தரை நாகதீபத்தில் சந்தித்த இந்த களனி மன்னன், தனது இராச்சியத்திற்கும் வருமாறு அழைத்திருக்கிறான்.
அவரும் களனிக்கு வந்தார். இது அவரது இரண்டாவது இலங்கைப்பயணம். இந்தத் தகவல்களை பாளி இலக்கிய நூல்கள் தெரிவிக்கின்றன.
இதிலிருந்து என்ன தெரிகிறது? இலங்கைக்குள் எங்கு பிரச்சினை வந்தாலும் வெளியிலிருந்து யாராவது ஒருவர் சமாதானத் தூதுவராக வந்திருக்கிறார்.
இராவணன் காலத்திலிருந்து இராஜபக்‌ஷ காலம் வரையில் இவ்வாறு பலரும் இந்தியாவிலிருந்து சமாதான தூதுவர்களாக வந்துகொண்டிருக்கிறார்கள். இன்று மைத்திரி அதிபர் பதவியிலிருந்தாலும், இலங்கையில் மீண்டும் இனக்கலவரங்கள் தோன்றிவிடக்கூடாது என்பதற்காகவே, நல்லிணக்கம் பற்றி தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்கிறார்.
இராமாயண காலத்தின்  விபீஷணன் களனியில் கோயில் கொண்டிருக்கிறார். அவருக்குப்பின்னர் சமாதானத்தூதுவராக வந்த புத்தர் பெருமான் இலங்கை முழுவதும் சிலையாக மெளனத்தவமிருக்கிறார்.
அவரது சிலைகளும் தற்காலத்தில்  அரசியலாகிவிட்டன.  இந்த புத்தர் சிலை அரசியல் நெருக்கடியாகிவிடக்கூடாது. நெருக்கடியானால் மீண்டும் மீண்டும் சமாதானத்தூதுவர்கள் எங்கள் தேசத்திற்கு படையெடுப்பார்கள்!
ஐதீகமும் வரலாறும் பல தொடர்கதைகளுக்கு ஊற்றுக்கண். களனி கங்கையும் இந்த ஊற்றில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
(தொடரும்)
( நன்றி: அரங்கம் - இலங்கை இதழ்)
.

-->
No comments: