மருத்துவர் பத்மறஞ்சனி கிருஷ்ணாவுடன் நேர்காணல் - நேர்காணலை கண்டவர்: உஷா ஜவாகர்



மருத்துவர் பத்மறஞ்சனி கிருஷ்ணா ஐயா மெடிக்கல் சென்டரை 2 - 4 ஸ்டேசன் வீதி, ஹோம்புஷ், சிட்னி, அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஐயா மெடிக்கல் சென்டருக்கு வரும் அனைத்து நோயாளிகளையும் தன் குடும்பத்தினர் போல் எண்ணி அவர் சிகிச்சை அளிக்கும் பாங்கே தனி!

இனி அவருடன் ஒர் நேர்காணல். 

1 உங்களது பெற்றோரின் பெயர் என்ன?
தாய்: முத்தம்மா தம்பு
தந்தை: ஐயாத்துரை குமாரவேல்

2 உங்களது ஊர் எது?
வவுனியா  - இலங்கை


3 உங்களது ஆரம்ப கல்வி, உயர் கல்வி, போன்றவற்றை எங்கு கற்றீர்கள்?
எனது ஆரம்ப கல்வியை அதாவது பாலர் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை வவுனியாவில் மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் படித்தேன். அதன்பின் எனது தந்தையார் என்னையும் எனது அக்காவையும் உடுவில் மகளிர் பாடசாலை விடுதியில் இருந்து படிக்கக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தார். எனது உயர் படிப்பை சுண்டிக்குளி பாடசாலை விடுதியில் இருந்து படித்து விட்டு 1976ஆம் ஆண்டு பல்கலைகழகத்துகுச் சென்றேன். 


4 உங்களுக்கு எத்தனை சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள்? அவர்களுள் எத்தனை பேர் மருத்துவத் துறையில் இருக்கிறார்கள்?
எனது தகப்பனார் ஒரு வழக்கறிஞர். அந்தக் காலத்தில் வவுனியா என்னும் சிறு கிராமத்தில் படித்து பட்டம் வாங்கிய வெகுசிலரில் அவரும் ஒருவர் ஆவார்.  எனக்கு 8 சகோதரர்களும் 2 சகோதரிகளும் உள்ளனர். அம்மா தமிழ் பட்டதாரி ஆவார். ஆனாலும் அவர் தனது முழு நேரத்தையும் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக வளர்ப்பதற்கே அர்ப்பணித்தார். எங்கள் அய்யாவின் கடுமையான உழைப்பும் எங்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு உதவின. எனது தந்தை எல்லாப் பிள்ளைகளையும் யாழ்ப்பாண பாடசாலை விடுதிகளில் விட்டு படிப்பித்தார். அவரின் கவனம் முழுவதும் எங்கள் கல்வியில் இருந்தது. எனது அய்யா தனது மூத்த மகனை மருத்துவராகவும் இரண்டாவது மகனை எஞ்சினியராகவும் மூன்றாவது மகனை கணக்காளராகவும் படிப்பிக்க வேண்டும் என கனவு கண்டார். ஆனால் எனது மூத்த சகோதரன் தான் அய்யாவின் தொழிலைச் செய்யவேண்டும் என எண்ணி வழக்கறிஞர் ஆனார். இரண்டாவது அண்ணா மின்சாரம் தொடர்பான படிப்பை முடித்தார். மூன்றாவது அண்ணா கணக்காளராகப் படித்தார். நான்காவது அண்ணா என் அய்யாவின் ஆசையை நிறைவேற்றி மருத்துவராக ஆனார். எனது குடும்பத்தில் எனது அண்ணாவும் நானும் மட்டும் தான் மருத்துவர்களாக கடைமையாற்றுகிறோம். 

5 மருத்துவப் படிப்பை நீங்களே விரும்பித் தெரிவு செய்தீர்களா? அல்லது பெற்றோரின் விருப்பத்துக்காக மருத்துவப் படிப்பை தெரிவு செய்தீர்களா?
சிறு வயதில் இருந்தே எனக்கு மருத்துவராக வர வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது. ஏன் என்று கேட்டால் எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

6 சில மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேர்வாகிவிட்டு அதிலிருந்து விலகி வேறு துறையில் கல்வி பயின்று இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவப் படிப்பு படிக்கும் போது 'ஏனடா இந்தத் துறைக்கு வந்தோம்! படிப்பு கஷ்டமாக இருக்கிறதே' என எப்போதாவது எண்ணியதுண்டா?
நான் மருத்துவப் படிப்பை சந்தோசமாகத்தான் படித்தேன். தமிழ் மொழியில் பாடசாலை படிப்பை படித்து விட்டு திடீரென பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் படிப்பது மிகவும் கடினமாக இருந்த போதிலும் நான் எனது படிப்பை சந்தோசமாகத்தான் படித்தேன். 

7 'ஐயா கிளினி'க்கை  திறந்து சில வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறீர்கள். 'ஐயா கிளினி'க்கை  ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியது.

எனது அண்ணா வவுனியாவில் 'ஐயாத்துரை கிளினி'க்கை நடத்தி வந்தார். எனது தந்தையின் பெயரான ஐயாத்துரை என்ற பெயரில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார். ஆனால் நாட்டின் உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அன்று முதல் எனது ஆழ்மனதில் எனது தந்தையின் பெயரில் தொடர்ந்து ஒரு மருத்துவ கிளினிக்கை நடத்த வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது.

8 உங்கள் மருத்துவ படிப்பு தகமைகள் (Qualifications) என்ன?
MBBS, FRACGP, DCH

9 உங்களது இரண்டு பிள்ளைகளும் மருத்துவர்களாக இருக்கிறார்களா?
ஆமாம் இருவருமே மருத்துவர்களாக தொழில் புரிகின்றார்கள்.

10 இளவேனிற் காலமோ, குளிர் காலமோ, வெயிலோ அல்லது மழையோ எந்தக் கால நிலையாக இருந்தாலும் நீங்கள் ஏறக்குறைய காலை 7 மணிக்கு உங்கள் 'ஐயா மெடிக்கல் சென்டருக்கு' வந்து வேலை பார்க்கிறீர்கள்! இந்தச் சுறுசுறுப்பு பெற்றோருடமிருந்து வந்ததா?  உங்கள் ரகசியத்தை எங்களுக்கும் கூறுங்களேன்.
நான் சிறு வயதில் இருந்தே சுறுசுறுப்பாக இருப்பேன். அது என் அம்மாவிடம் இருந்து வந்தது என கூறலாம். அது மட்டுமல்ல நான் அவுஸ்திரேலியாவில் வேலை தொடங்கிய காலத்தில் வைத்தியர் பாலாவுடன் ஏழு வருடங்கள் வேலை செய்தேன். அவர் என்னை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் அவரின் சுறுசுறுப்பைக் கண்டு வியந்தேன். அவரை முன்மாதிரியாகக் கொண்டு எனது சுறுசுறுப்பை இன்னமும் அதிகப்படுத்தினேன்.

11 ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் எனப் பெரியோர் கூறுவர். அது போல் உங்கள் வெற்றிக்குப் பின்னால் உங்கள் கணவர் இருக்கிறார் எனக் கூறலாமா?
அது நூற்றுக்கு நூறு உண்மை. எங்களது கிளினிக் இவ்வளவு முன்னுக்கு வந்ததற்கு எனது கணவரது மிகுந்த ஆதரவு ஒரு பெரிய காரணம். அதைவிட எனது ரிசப்ஷனிஸ்ட்மாரின் கடுமையான உழைப்பும் ஒரு முக்கிய காரணம் ஆகும். என்னிடம் பல நோயாளிகள், 'டாக்டர், ஏன் நீங்கள் ஒரு நாளும் அவுஸ்திரேலியாவில் வேலை செய்யாத இலங்கைப் பிள்ளைகளை ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு எடுத்திருக்கிறீர்கள்?' எனக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு நான் 'எனது நாட்டுப் பிள்ளைகளுக்கு நான் உதவாவிட்டால் வேறு யார் உதவி செய்வார்கள்?'  எனக் கூறுவதுண்டு. நான் எனது சுறுசுறுப்பான ரிசப்ஷனிஸ்ட்டுகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

12 நீங்கள் 'ஐயா மெடிக்கல் சென்டரை திறக்கும் போது எப்படி நடத்தப் போகிறேனோ என்ற ஐயம் உங்கள் மனதில் இருந்ததா அல்லது அது நிச்சயமாக நன்றாக நடக்கும்' என்ற நம்பிக்கை மட்டுமே இருந்ததா?
நான் எனது கிளினிக்கை தொடங்கியபோது எல்லோரையும் போல எனக்கும் மனதில் ஒரு சிறு ஐயம் இருந்தாலும் எனது முயற்சியிலும் குடும்பத்தின் அதிகளவு ஆதரவிலும் நம்பிக்கை இருந்ததால் துணிந்து இறங்கக்கூடியதாக இருந்தது. அதுமட்டுமல்ல எனது நோயாளிகள் என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கை, அவர்கள் நான் எங்கு சென்றாலும் என்னை பின் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.

13 இலங்கை, இந்திய நாடுகளில் post natal depression (குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு ஏற்படும் மனோவியாதி) பற்றி நாம் அதிகமாக கேள்விப் பட்டதில்லை. ஆனால் மேலை நாடுகளில் தான் அதைப்பற்றிக் கூடுதலாக கேள்விப்படுகிறோம்! அது ஏன்? இங்கு பெண்கள் அனுபவிக்கும் தனிமை ஒரு காரணமாக இருக்குமா?
அது உண்மை. இலங்கை இந்திய நாடுகளில் குழந்தை பிறக்கும் முன்பும் பிறந்த பின்பும் இருக்கும் பராமரிப்பும் அரவணைப்பும் இப்படியான மேலை நாடுகளில் கிடைப்பது மிகவும் கடினம். சிறிய குடும்பங்கள், ஒரு சில உறவினர்கள் தான் உள்ளார்கள். உறவினர்களும் தங்கள் தங்கள் வேலைகளில் மும்முரமாக பிஸியாக இருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் கர்ப்பமாக இருக்கும் மனைவியைப் பார்க்கவோ, அல்லது அன்பாக இரண்டு வார்த்தைகள் கூட கணவனுக்குப் பேச முடியாத நிலை. மனப்பாதிப்பு சிலவேளைகளில் பெண்கள், பிள்ளைகளை வயிற்றில் சுமக்கும் போதே தொடங்கி பிள்ளை பிறந்த பின் அதிகரிக்கலாம். தனிமை ஒரு முக்கிய காரணம். மற்றும் சில குடும்பங்களில் பரம்பரையாக மனோவியாதி இருந்தாலும் அதுவும் ஒரு காரணமாக அமையும்.

14 அதேபோல் அல்சைமர், டிமென்சியா பற்றியும் இலங்கை, இந்திய நாடுகளில் அதிகம் கேள்விப்பட்டதில்லை. இங்கு அதிகம் கேள்விப் படுகிறோம். அது ஏன்?
முதலாவதாக இலங்கை, இந்திய நாடுகளில் டிமென்சியாவை கண்டறிய முன் அவர்கள் இறந்துவிடுகிறார்கள். இலங்கை, இந்திய நாடுகளில் 55 வயதிற்கு மேல் உள்ளவர்களை முதியோர்கள் என அழைப்பார்கள். மேலைத்தேய நாடுகளில் மக்கள் 90 வயதிற்கு பின்னும் வாழ்கிறார்கள். அதனால் இலகுவாக டிமென்சியாவைக் கண்டறியக் கூடியதாகவிருக்கிறது.
இரண்டாவதாக என்னைப் பொறுத்தவரையில் எல்லா நாடுகளிலும் அல்சைமர், டிமென்சியா நோய்கள் இருக்கின்றன. ஆனால் மேல்நாடுகளில் வளர்ச்சி அடைந்த மருத்துவ முறைகளால் அல்சைமர், டிமென்சியா போன்றவற்றைக் கண்டு பிடிக்கக்கூடியதாக இருக்கிறது.

15 மைக்ரோ அவனைப் (Micro Oven) பாவித்தால் கான்சர் வரும் என்கிறார்கள். அது உண்மையா? அதன் விளக்கத்தை தருவீர்களா?  உங்களது விளக்கம் மக்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
அதற்கு சரியான மருத்துவ சான்றுகள் (proven medical evidence) இல்லை. ஆனால் மைக்ரோ அவன் பாதுகாப்பான பாத்திரங்களை பாவிப்பது நல்லது. பிளாஸ்டிக் பெட்டிகளை மைக்ரோ அவனுக்குள் வைத்து சூடாக்கும் போது பெட்டியில் இருக்கும் இரசாயனப் பொருட்கள் தொடர்ந்தும் உணவுடன் கலந்தால் ஈரல் புற்றுநோய் வரலாம் என்றும் நம்புகிறார்கள். ஆனால் சரியான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை.

16 நீங்கள் வைத்தியம் பார்த்து கான்ஸர் அல்லது வேறு எதாவது பெரிய வியாதியால் ஒரு இளம்பையன் அல்லது ஒரு இளம் பெண் இறந்தால் அது உங்களது மனதைப் பாதிக்குமா?
இந்த விடயத்தில் நான் மிகவும் பலவீனமானவள். நான் கடுமையான விதத்தில் பாதிப்பு அடைவதுண்டு.  பல நாட்கள் நித்திரை இல்லாமல் தவிப்பேன். இரவில் விழிப்பு ஏற்படும் போதெல்லாம் அவர்களின் முகம் என் முன்னே வருவது போல் ஒரு பிரமை ஏற்படுவதுண்டு.

17 இளம் மாணவர்களுக்கு இளம் மருத்துவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை அதாவது மருத்துவரை நம்பி வரும் ஒவ்வொரு நோயாளியையும் உங்களது குடுப்பத்தில் ஒருவராக கருதி மருத்துவ உதவி (medical treatment) கொடுக்கப் பழக வேண்டும்.

18 உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?
என்னுடைய பொழுதுபோக்கு நீச்சலும் சமையலும் ஆகும்.

19 உங்கள் அம்மாவுக்கு அடுத்ததாக நீங்கள் மிகவும் மதித்து போற்றும் பெண்மணி யார்?
எனது அம்மாவுக்கு அடுத்ததாக நான் அன்னை தெரஸாவை மிகவும் மதித்து போற்றுகிறேன்.

20 ஒருவர் வாழ்க்கையில் முன்னேற திறமை, தன்னம்பிக்கை, கடின உழைப்பு தேவை. அத்துடன் அதிர்ஷ்டமும் (luck) தேவையா?
எனக்கு அதிர்ஷ்டத்தில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. ஆனால் தன்னம்பிக்கையிலும் கடின உழைப்பிலும் கடவுள் நம்பிக்கையிலும் நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கிறது.

நன்றி வணக்கம்




No comments: