பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்ற தீர்க்கதரிசியாக அயராமல் உழைத்துவரும் சமூகப்பணியாளர் கடந்த வாரம் தனது 70 வயது பிறந்த தினத்தை கொண்டாடிய மெல்பன் 'சுந்தர்' சுந்தரமூர்த்தியின் வாழ்வும் பணிகளும் - முருகபூபதி


சமூகப்பணிகளில் ஈடுபடுவதற்கு மூலதனமாக இருப்பது: பொறுமை, சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை, நெகிழ்ச்சியான இயல்புகள், அர்ப்பணிப்பு, இரக்க சிந்தனை.
இந்தப்பண்புகளை கொண்டிருப்பவர்கள் நண்பர்களாக கிடைப்பதும் பெரிய கொடுப்பினை. அவ்வாறு மெல்பனில் எனக்குக் கிடைத்த நண்பர்தான் திரு. சபாரத்தினம் சுந்தரமூர்த்தி அவர்கள்.
இவரை நாம் சுந்தர் எனச்செல்லமாக அழைப்பது வழக்கம். இலங்கையில் காரைநகர் களபூமியில் 31-05-1948 ஆம் திகதி பிறந்திருக்கும் சுந்தர், நேற்றைய தினம் தனது 70 வயதை அடைந்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொண்டே,  அவர் பற்றிய இந்தப்பதிவை தொடங்குகின்றேன்.
தனது ஆரம்ப - இடைநிலைக்கல்வியை கொழும்பில் பம்பலப்பிட்டி, இரத்மலானை இந்துக்கல்லூரிகளில் நிறைவுசெய்துகொண்டு, Times Of Ceylon நிறுவனத்தில் தொழில் ரீதியாக  இணைந்துகொண்டிருக்கும் சுந்தர், தனது 23 வயதிலேயே சாம்பியா நாட்டிற்கு அச்சக நிறுவனம் ஒன்றில் தனக்குப்பிடித்தமான பயிற்சியை மேற்கொண்டு தேர்ச்சிபெற்று தாயகம் திரும்பினார்.
1974 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்து, சொந்தமாகவே ஒரு அச்சுக்கூடத்தை தொடங்கியவர். இவ்வாறு அந்நிய நாட்டில் தனக்குத்தெரிந்த தொழிலை முதல்கட்டத்திலேயே தொடங்குவதற்கு சற்று துணிவும் தன்னம்பிக்கையும் வேண்டும்.
குறிப்பிட்ட தொழில் துறையில் தாயகத்தில் ஈடுபட்டவர்களுக்கு புகலிடத்தில் தொடக்கத்தில் அதே துறையில் வேலை வாய்ப்புகள் கிடைப்பது அரிது. இலங்கையில் இவர் வாழ்ந்த காலத்தில் தலைநகரில் மூவின மக்களும் செறிந்து வாழும் பிரதேசத்தில் பெற்ற அனுபவங்களும் புகலிட நாட்டில் தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள மூலதனமாக இருந்திருக்கவேண்டும்.

மனிதர்களுக்கு தொழில் தொடர்பான Skill எவ்வளவுக்கு எவ்வளவு அவசியமோ, அதேயளவு சமூகரீதியான மக்கள் தொடர்பாடல் Skill உம் அவசியம்தான். இரண்டு Skill உம் ஒருவகையில் கலைதான். இரண்டு கலைகளிலும் தேர்ந்தவர்தான் எமது இனிய நண்பர் சுந்தர்.
இலங்கையில் காலத்துக்கு காலம் தோன்றிய இனநெருக்கடிகள், இன ரீதியான அச்சுறுத்தல்கள், கல்வியில் ஏற்படுத்தப்பட்ட தரப்படுத்தல், இனப்பாகுபாடுகள் என்பவற்றை ஒரு பிரஜையாக அவதானித்து வந்திருக்கும் சுந்தர், புகலிடம் வந்தபின்னரும் தாயகம் குறித்த சிந்தனைவயப்பட்டவராகவே விளங்கியவர்.
தன்னாலும் தனது தாயகத்திற்கும் தமது இனத்திற்கும் ஏதும் ஆக்கபூர்வமாகச்செய்யவேண்டும் என்ற கனவுகளுடன் புகலிட வாழ்வை அமைதியாக ஆரம்பித்திருக்கிறார்.
பெரும்பாலானவர்கள், வெளிநாடுகளுக்கு வந்ததும் தானுண்டு தன்பாடுண்டு, தனது குடும்பம் உண்டென்ற மனப்போக்குடன் பொதுவாழ்வை நெருங்கமாட்டார்கள். ஒரு வட்டத்திற்குள்ளேயே தம்மை வரையறுத்துக்கொள்வார்கள். பொதுவாழ்வில் கண்டனங்கள், விமர்சனங்களை எதிர்கொள்ளத்திராணியற்றவர்களாகவும், எமக்கு ஏன் வம்பு என ஒதுங்கியிருப்பவர்களாகவும் பலரை  சமூக வாழ்வில் பார்த்திருப்போம்!
ஆனால், சமூக ரீதியாகச்சிந்திப்பவர்கள் எப்பொழுதும் பொதுநோக்கத்துடனேயே செயல்படுபவர்கள், மக்கள் மத்தியில் Activist  ஆக இனம் காணப்படுவார்கள். நண்பர் சுந்தரமூர்த்தி அவர்களும் மெல்பனில் சமூகப்பணியாளராக அடையாளம் பெற்றவர்.
நாம் வசிக்கும் விக்ரோரியா மாநிலத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இலங்கைத்தமிழ்ச்சங்கத்தில் 1981 ஆம் இணைந்திருக்கும் சுந்தர், இச்சங்கத்தின் சமூக, கலை, கலாசார, கல்விப்பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு சங்கத்தின் தலைமைப்பீடம் உட்பட இதர உறுப்பினர்களின் நன்மதிப்பையும் பெற்றார். இச்சங்கத்தின் தற்போதைய பெயர் ஈழத்தமிழ்ச்சங்கம்.
1983 இல் இலங்கையில் இனக்கலவரத்தின் பின்னர்,  தமிழ்மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கும், வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்தவேளையில், இம்மக்களின் எதிர்காலம் தொடர்பான அக்கறையில் விக்ரோரியா இலங்கை தமிழ்ச்சங்கம் தீவிரம் காண்பித்த காலகட்டத்தில் அவுஸ்திரேலியா அரசமட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் சுந்தர் இடம்பெற்றிருந்தார்.
அத்துடன் இலங்கையில் 1983 இல் நடந்த இனக்கலவரத்தை கண்டித்து மெல்பனிலும் அவுஸ்திரேலியாவில் இதர மாநிலங்களிலும்  நிகழ்ந்த கவனஈர்ப்பு நிகழ்வுகள் கூட்டங்களிலெல்லாம் சுந்தரும் கலந்துகொண்டார்.
அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக வரத்தொடங்கியதும், அமைப்பு ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பலரது தஞ்சக்கோரிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி வந்திருக்கும் சுந்தர், இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் செய்தி ஏடான தென்துருவ தமிழ்முரசு இதழின் ஆசிரியராகவும் இயங்கினார். இவரது அச்சகத்திலிருந்தே இந்த இதழும், சங்கத்தின் பிரசுரங்களும் வெளிவந்தன.
இலங்கையில் இந்திய அமைதிப்படையின் பிரவேசத்திற்குப்பின்னரும், அதன் வெளியேற்றத்தின்போதும், அதனைத்தொடர்ந்து, மீண்டும் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தவேளைகளிலும் புகலிட தமிழ் அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார விடயங்களிலும் கவனம் செலுத்தியதை அறிவோம். அவ்வாறு தொடங்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் 1994 ஆம் ஆண்டில் இணைந்துகொண்ட சுந்தர், அதன்பொருட்டு நடத்தப்பட்ட நிதி சேகரிப்பு கலாசார நிகழ்ச்சிகளிலும் முன்னின்று உழைத்தார். அத்துடன் தமிழ் ஈழ பொருளாதார மேம்பாட்டு அமைப்பிலும் Tamil Elam Economic Development Organisation (TEEDOR) சுந்தரின் பங்களிப்பு முக்கியமானது.
இந்தத் தொண்டு நிறுவனங்களின் வாழ்வாதார உதவிகளை இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்குவதற்கும் சுந்தர் பல தடவை இலங்கைக்கு பயணங்களை மேற்கொண்டார். ஏ. 9 பாதை மூட்ப்பட்டிருந்த கால கட்டத்தில் உயிரையும் பணயம் வைத்து கிளாலி கடல் ஏரி மார்க்கமாகவும் நிவாரண உதவிகளை கொண்டு சேர்ப்பித்த இவரது துணிவும் முன்னுதாரணமானது.
இவ்வாறு தாயகத்தில் போரில் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் மனிதநேயப்பண்புகளுடன் செயல்பட்டிருக்கும் சுந்தர் அவர்களுக்கு 2009 ஆண்டு மேமாதம் நடந்த இறுதிப்போரின் முடிவுகள் ஆழ்ந்த வேதனைகளைத்தந்திருந்தது. அதனால் எம்மவர் மத்தியில் விரக்திநிலைக்கு தள்ளப்பட்ட பலரை பார்த்திருப்போம்.
எப்பொழுதும் மனிதநேயப்பணிகளில் அக்கறையோடு செயல்படுபவர்களுக்கு தீர்க்கதரிசனப்பார்வையும் இருப்பதனால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற எண்ணமும் இவரிடம் குடியிருந்தது.
வன்னியில் செஞ்சோலை, அன்பு இல்லம்,  பாரதி இல்லம் முதலான போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனங்களுடனும் சுந்தருக்கு தொடர்பாடல்கள் இருந்தமையால், வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி என்னும் தன்னார்வ அமைப்புடன் North East Rehabilitation and Development Organization (NERDO) இணைந்து இயங்க ஆரம்பித்தார். இந்த அமைப்பின் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான பெற்றோரை இழந்த குழந்தைகள் வன்னியில் பராமரிக்கப்படுகின்றனர்.
அந்தக்குழந்தைகளின் தேவைகளுக்காக அவ்வப்போது தாயாகத்திற்கு பயணிக்கும் சுந்தர், எப்பொழுதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நிற்பவர் என்பதனால் எமக்கும் நெருக்கமானார்.
1974 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு வந்தது முதல் பொதுவாழ்வில் பல மனிதநேய சமூகப்பணிகளில் ஈடுபட்டுவந்திருக்கும் சுந்தர் அவர்களுக்கு விக்ரோரியா மாநில அரசின் பல்லின கலாசார ஆணையம் காலம் கடந்துதான், 2016 ஆம் ஆண்டில் மகத்தான சமூகசேவைக்கான பாராட்டு விருதை வழங்கி கௌரவித்தது.
1981 முதல் 2006 வரையில் ஈழத்தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராக, துணைத்தலைவராக, தலைவராக, இதழாசிரியராக பல்வேறு பதவிகளில் அங்கம் வகித்திருக்கும் சுந்தர், 1986 முதல் 2009 வரையில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஸ்தாபக உறுப்பினராகவும் இயங்கியவர். 1986 இலேயே அவுஸ்திரேலியா லிபரல் கட்சியிலும் அங்கத்தவராக சேர்ந்தவர். 1991 முதல் 2004 வரையில் சமூகத்தொடர்புச் செயலாளராக அவுஸ்திரேலிய தமிழர் பேரவையிலும்  Australasian Federation of Tamil Association (AFTA) 1994 முதல் 2005 வரையில் ஸ்தாபக உறுப்பினராகவும் இணைப்பாளராகவும் Tamil Eelam Economic Development Organisation (TEEDOR) என்னும் அமைப்பிலும் இயங்கிவந்திருப்பவர்.
இவ்வாறு தாயகம் சார்ந்த தன்னார்வத்தொண்டு அமைப்புகளிலும் மனித உரிமை அமைப்புகளிலும் அர்ப்பணிப்புடன் இயங்கிவந்திருக்கும் சுந்தர், தனக்கு புகலிடம் வழங்கிய தேசத்திற்கும் விசுவாசம் மிக்கவராக சிறுவர் நலன்கள் உரிமைகளை பேணும் ஒன்றியத்திலும், லயன்ஸ் கழகத்திலும் இணைந்திருப்பவர். விக்ரோரியா மாநிலத்தின் பல்லின கலாசார ஆணையத்தின் ஆலோசகராகவும் அங்கம் வகித்துவருகிறார்.
இந்தப்பதிவில் எனக்கும் சுந்தருக்கும் ஏற்பட்ட நட்பின் தொடக்க காலத்தையும் சமகாலத்தையும்  நினைத்துப்பார்க்கின்றேன்.
1987 இல் நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர்தான் சுந்தர் எனக்கும் நண்பரானார்.அப்பொழுது அவர் இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் தென்துருவ தமிழ் முரசு இதழின் ஆசிரியர்.  என்னையும் தங்கள் சங்கத்தில் இணைந்து குறிப்பிட்ட செய்திஏட்டில் எழுதுமாறும் அழைத்தார். அக்காலப்பகுதியில் நான் இங்கு அகதியாக இருந்தமையால், அவர் சம்பந்தப்பட்ட சங்கத்திலும் குறிப்பிட்ட செய்தி ஏட்டிலும் இணைந்துகொள்வதற்கு எனக்கு சற்று தயக்கம் இருந்தது. அந்தத்தயக்கம் கருத்தியல் சார்ந்திருந்தமையாலும்  அவரிடம் எனது எண்ணத்தை பகிர்ந்துகொண்டேன்.
மற்றவர்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப நட்புறவை வளர்த்துக்கொள்ளும் பண்புகள் சுந்தரிடம் இருந்தமையால் என்னால் மட்டுல்ல அவருடன் மாற்றுக்கருத்துக்கொண்டிருந்தவர்களும் அவருடன் நேசம் பாராட்டினார்கள்.  எனக்கும் சுந்தரமூர்த்திக்கும் இடையிலான நட்புறவு இற்றைவரையில் எந்த விக்கினமும் இல்லாமல்  தொடருகின்றது.
1988 இல் நான் இங்கு வதியும் சில அன்பர்களுடன் தொடக்கிய இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வ தொண்டு  அமைப்புக்கு சுந்தர் அவர்கள் தனது தார்மீக ஆதரவை வழங்கினார்.
அந்த ஆண்டில் ஒருநாள், ஸ்பிரிங்வேலில் அமைந்திருந்த  அவரது  அச்சகத்திற்கு சென்றிருந்தேன். எமது கல்வி நிதியத்திலும் இணைந்து,  ஒரு மாணவருக்கு உதவுவதற்கு  முன்வந்த சுந்தர், நிதியத்திற்கான Letterhead ஐ இலவசமாகவும் அச்சிட்டுத்தந்தார். நீண்ட காலமாக,  அந்த Letterhead ஐத்தான் சுமார் 25 வருடங்கள் பயன்படுத்தியிருக்கின்றோம்.  எமது கல்வி நிதியம் ஊடாக இலங்கைப்போரில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவருக்கு தொடர்ச்சியாக உதவி வந்திருக்கும் சுந்தர், தனது மகள் பிருந்தாவையும் எமது தொண்டு நிறுவனத்தில் இணைத்துவிட்டார். இன்று அவரும் ஒரு மாணவரின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறார்.
கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக எம்முடன் நேசம் பாராட்டிவரும் இனிய நண்பர் சுந்தர் சுந்தரமூர்த்தி அவர்கள் சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார்.  மெல்பனில் நண்பர் நடேசன் சில வருடங்களுக்கு முன்னர் சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சியை ஒழுங்குசெய்தவேளையில் இந்த நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் சிலர் தமது கதைகளை தமிழில் சொன்னபோது அவற்றை ஆங்கிலத்தில் அழகாக மொழிபெயர்த்தார்.
எழுத்தாளர்களும், சமூகப்பணியாளர்களும் தீர்க்கதரிசனத்துடன் இயங்கவேண்டியவர்கள். ஒரு காலகட்டத்தில் சரியென தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் பிறிதொரு காலகட்டத்தில் வேறு ஒரு பரிமாணத்தை வந்தடையும். அத்தகைய வேளைகளில் எழுத்தாளர்கள் சமூகப்பணியாளர்களுக்கு கடந்த கால நிலைப்பாடுகள் தொடர்பாக  தளம்பலும் தோன்றும்.
அவ்வாறு தளம்பல் நிலைவந்தால் விரக்தியும் உடன் வரப்பார்க்கும். அதிலிருந்து மீண்டு, புத்தெழுச்சியுடன் இயங்குவதற்கு தீர்க்கதரிசனம்தான் பெரிதும் உதவும். அவ்வாறு 2009 இறுதிப்போருக்குப்பின்னரும் மனச்சோர்வடையாமல், பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நிற்கும் நிலைப்பாட்டில் எந்தவொரு தளம்பலும் தடங்களும் இன்றி அயராமல் இயங்கிவரும் எமது இனிய நண்பர் "சுந்தர்" சுந்தரமூர்த்தி அவர்களுக்கு 70 வயது நிறைவடையும் இத்தருணத்தில் வாழ்த்தி மகிழ்கின்றோம். சுந்தர் நல்லாரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.
letchumananm@gmail.com
---0---

-->
















No comments: