.
கரட்டுப்பாளையத்துச் சுந்தரனுக்கு இந்த ஐப்பசியோடு முப்பத்தியேழு வயது முடிகிறது. மூன்றாம் வகுப்பில் குட்டிக்கரணம் அடித்த பிறகு மாடு மேய்க்கப் போட்டுவிட்டார்கள். குட்டிக்கரணம் அடித்ததற்கும் காரணம் இருக்கிறது. ஒரு முறை கணக்கு வாத்தியார் ராமசாமி "நாலும் மூணும் எவ்வளவுடா" என்று கடைசி வரிசையில் இருந்த சுந்தரனைக் கேட்டபோது விரல்விட்டு எண்ணியும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. வாத்தி சும்மா இருந்திருக்கலாம். “நாலும் மூணும் தெரியாத மொட்டை சைபர்” என்றுதான் இனி சுந்தரனைக் கூப்பிட வேண்டும் என்று மற்ற பசங்களை உசுப்பேத்திவிட்டுவிட்டார். முதலில் வகுப்பில் இருந்தவர்கள், பிறகு பள்ளியின் மற்ற மாணவர்கள் என்று பரவிய இந்த ‘மொட்டை சைபர்’ விவகாரம் கரட்டுப்பாளையத்திற்குள்ளும் கசிந்துவிட்டது. ஊர்க்காரப்பசங்களும் சுந்தரனைப் பார்க்கும் போதெல்லாம் பாட ஆரம்பித்துவிட்டார்கள்.
இது சுந்தரனுக்கு பெரிய அவமானமாகப் போய்விட்டது. வாத்தியாரின் மண்டையைப் பிளந்துவிட வேண்டும் என்று வாய்க்கால் மேட்டில் அமர்ந்து கொண்டான். ஞாயிற்றுக்கிழமை தன் மனைவியை சைக்கிளின் கேரியரில் வைத்துக் அழுத்த முடியாமல் அழுத்திக் கொண்டு வந்தார் ராமசாமி வாத்தியார். வேப்பமரத்தின் பின்புறமாக நின்றிருந்த சுந்தரன் கல்லுக்கு ஒரு முத்தம் கொடுத்து வீசினான். பாய்ந்த ஏவுகணை வாத்தியாரை விட்டுவிட்டு அவரது மனைவியின் மண்டையை பதம்பார்த்துவிட்டது. வாத்தியார் சைக்கிளைக் கீழே போட்டுவிட்டு சுந்தரனைப்பிடிக்க பாய்ந்தார். நான்கைந்து அடிதான் வைத்திருப்பார். செருப்பையும் மீறி அவரது காலில் இரண்டு மூன்று கருவேலம் முட்கள் தைத்தன. “வக்காரோளி இனிமே மூஞ்சிலேயே முழிக்காத” என்று கத்திக் கொண்டே நின்றுவிட்டார்.
நஞ்சப்ப கவுண்டருக்கு தன் மகனுக்கு படிப்பு வரவில்லை என்ற கவலையெல்லாம் இல்லை. கணக்குக்கூடத் தெரியவில்லை என்றுதான் அவ்வப்போது புலம்புவார். சுந்தரனின் அம்மா ராமக்காதான் அவரை சமாதானப்படுத்துவாள். “கணக்குத் தெரிஞ்சு கல்லேக்கட்டரா ஆவப்போறான்? வுடுங்க” என்று சொல்லிவிட்டு சமையலைறைக்கு போய்விடுவாள். சமையலறைக்குள் என்னதான் இருக்கிறதோ? கோழி கூப்பிடுவதற்கு முன்பாகவே சமையலறைக்குள் போய்விடுவாள். படுக்கைக்கு வர நள்ளிரவு ஆகும்.
நஞ்சப்ப கவுண்டர் கோபத்தில் இருக்கும் போதெல்லாம் “கலத முண்ட அதுக்குள்ள என்னதான் நொட்டுவாளோ, வெளிய வந்தா ஆவாதா?” என்று கத்துவார். அப்பொழுது மட்டும் கொஞ்ச நேரம் திண்ணையில் இருக்கும் பந்தல்காலில் சாய்ந்து அமர்ந்து கொள்வாள்.
அடுத்த முப்பது வருடங்களுக்கும் ராமக்கா சமையலறையிலேயேதான் இருந்தாள். நஞ்சப்ப கவுண்டர்தான் இருபது வருடங்களுக்கு முன்னால் போய்ச்சேர்ந்துவிட்டார். மேட்டாங்காட்டில் மாடுபிடித்துக் கட்டிவிட்டு வீட்டிற்கு வந்து நெஞ்சு வலிக்கிறது என்று கட்டிலில் அமர்ந்தவர்தான். ராமக்கா மோர் கொண்டு வந்து தருவதற்குள் பேச்சு மூச்சு இல்லை.
அப்பொழுது சுந்தரனுக்கு ட்ரவுசரிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த வயசு. அவனது மூக்குக்கு கீழாக பொன்னிற ரோமங்கள் முளைத்திருந்தன. அந்த செம்பட்டை முடிகளை சிரைத்துவிட்டால்தான் மீசை அடர்த்தியாக வரும் என்று யாரோ சொல்லியிருந்தார்கள். அவனாகவே பிளேடு வாங்கி வந்து மழித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் அதற்குள் நஞ்சப்ப கவுண்டர் போய்ச்சேர்ந்துவிட்டார். அவருக்கு காரியம் செய்த போது சுந்தரனுக்கு மொட்டையடித்து மீசையை மழித்துவிட்டார்கள்.
இப்பொழுது சுந்தரனுக்கு முப்பத்தியேழு வயது ஆகியிருந்தாலும் “மொட்டை சைபர்” பட்டம் மட்டும் ஊருக்குள் மாறியிருக்கவில்லை. அதைவிட முக்கியம் திருமணம் ஆகியிருக்கவில்லை. புரோக்கர்கள், சொந்தக்காரர்கள் என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சுந்தரனின் ஜாதகத்தை ராமக்கா கொடுத்து வைத்திருந்தாள். பெரும்பாலான ஜாதகங்கள் பொருத்தமில்லை என்று திரும்பி வந்துவிட்டன. ஒன்றிரண்டு ஜாதகங்கள் பொருந்தியிருந்தால் ஏதாவது குற்றங்குறை சொல்லி ராமக்கா தட்டிக் கழித்துவிட்டாள். அதையும் மீறி வந்த ஒரு பெண் பத்தாம் வகுப்பு முடித்திருந்தாள். மூன்றாம் வகுப்பு படித்தவன் தனக்கு ஒத்துவர மாட்டான் என்று சொல்லிவிட்டாள். இதெல்லாம் சுந்தரனுக்கு முப்பத்தியிரண்டு வயதுக்குள் நிகழ்ந்துவிட்டது. கடந்த ஐந்து வருடங்களாக ஒன்றுமே நடக்கவில்லை. இனி திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையை சுந்தரனும், ராமக்காவும் இழந்திருந்தார்கள். சுந்தரனின் தலை முழுச் சொட்டையாகியிருந்தது.
இந்த வருட மாரியாத்தா நோம்பிக்கு வந்திருந்த பாலப்பாளையத்துச் சுப்பிரமணியன் ராமக்காவிடம் பேச்சுக் கொடுத்தார். "இப்பல்லாம் படிச்ச பசங்களுக்குக் கூட பொண்ணு கிடைக்க மாட்டேங்குது அம்மிணி” என்றபோது ராமக்கா பொசுக்கென்று அழ ஆரம்பித்துவிட்டாள். தனது மூட்டுக்களில் கடும் வலி இருப்பதாகவும், வேலைகளைச் செய்யவே முடிவதில்லை என்றும் அழுதாள்.
"எத்தன நாளைக்குத்தான் இப்படியே இருக்கிறது? நம்ம பக்கத்துலேயே வேற சாதிப்புள்ளைகளை பாக்கலாமா?” என்றார். சுந்தரனுக்கு சரியென்றுபட்டது. வீட்டிற்குள் அனுமதிக்கும் நாசுவன், பண்டாரம், வண்ணார் போன்ற சாதிகளில் பெண் இருந்தால் கட்டிக்கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் அந்தப் பெண்கள் தன்னை கட்டிக்கொள்வார்களா என்று யோசிக்கவில்லை. இந்த திட்டம் ராமக்காவுக்கு அத்தனை உவப்புடையதாக இல்லை. வேற சாதிக்காரியிடம் தன்னால் கடைசி காலத்தில் கஞ்சி குடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள். சுப்பிரமணியன் ஒரு தில்லாலங்கடி. அவரது எத்தனை திட்டங்களை நிராகரித்தாலும் புதிதாக இன்னொரு திட்டத்தைச் சொல்வார். இப்பொழுதும் அப்படித்தான். பாலப்பாளையத்தில் சிலர் கேரளா சென்று திருமணம் செய்து வந்திருப்பதாகச் சொன்னார்.
“புள்ளைக செவச்செவன்னு இருக்குதுக. சுண்டுனா ரத்தம் தெறிக்கும். என்ன எழவு? பேச்சுவார்த்தைதான் புரியறதில்லை”என்றார். இப்பொழுதும் சுந்தரனுக்கு சந்தோஷமாக இருந்தது. செவச்செவன்னு ஒருத்தியைக் கட்டிக் கொண்டு வருவது அவனுடைய இருபத்தைந்து வருடக் கனவு. இந்தத் திட்டத்தையும் ராமக்கா நிராகரித்துவிடுவாளோ என்று பயந்து அவளது முகத்தைப்பார்த்தான். அவள் இரண்டு நாள் யோசிக்க வேண்டும் என்றாள். துண்டை உதறிக்கொண்டு சுந்தரன் வெளியே போய்விட்டான்.
சுப்பிரமணி எப்படியோ பேசி ராமக்காவை சரி செய்துவிட்டார். அடுத்தவாரம் கேரளா போவது என்று முடிவு செய்துவிட்டார்கள். பாலப்பாளையத்திலேயே ஒரு புரோக்கர் இருக்கிறார். பெண்பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம் என்ற எந்தச் சடங்குகளும் இல்லை. புரோக்கரைக் கூட்டிக் கொண்டு கேரளா போக வேண்டியது அவர் சில பெண்களைக் காட்டுவார். பிடித்த பெண் வீட்டாருக்கு ஐந்தாயிரமோ அல்லது பத்தாயிரமோ கொடுத்துவிட்டு ஏதாவதொரு கோயிலில் நிறுத்தி தாலியைக் கட்டினால் வேலை முடிந்தது.
மேலே சொன்னதெல்லாம் இம்மி பிசகாமல் சுந்தரன் திருமணத்திலும் நடந்தது. திருமணம் முடிந்தபிறகு தனக்கு வேலை இருப்பதாக புரோக்கர் அங்கேயே தங்கிக் கொண்டார். ராமக்கா, சுப்பிரமணி, சுந்தரன் மட்டும் செக்கச் செவேல் கேரளாப்பெண்ணோடு வாடகைக்காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்கள். அவளோடு யாருமே பேசவில்லை. என்ன கேள்வி கேட்டாலும் அவளுக்கு புரியவில்லை. அவள் என்ன சாதி என்பதைத் தெரிந்து கொள்ள ராமக்கா கடும் பிரயத்தனம் செய்தாள். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. இன்று தனக்கு முதலிரவு என்பதை நினைத்த சுந்தரன் படு உற்சாகமாகிவிட்டான். மனசுக்குள் சில இளையராஜாவின் பாடல்களை பாடிக் கொண்டே வந்தான். அவ்வப்போது கண்ணாடியில் தலைமுடியை சரி செய்து கொண்டு புதுமனைவியை ஓரக்கண்ணால் பார்த்தான். அவள் வெட்கப்பட்டாள்.
ஊருக்கு வந்து சேர்ந்தபோது மாலை ஆறு மணியாகியிருந்தது. பக்கத்துத் தோட்டத்து பெண்கள் ராமக்காவின் மருமகளை பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். அவளது நிறத்தையே ஒவ்வொருவரும் புகழ்ந்து பேசினார்கள். சுந்தரன் படுக்கையை தயார் செய்தான். படுக்கை என்றாள் நிலத்தை கூட்டிப்பெருக்கி ஒரு பாயை விரித்தான். அவ்வளவுதான். ராமக்கா சமையலை முடித்துவிட்டு சுந்தரனை சாப்பிட அழைத்தாள். புதுப்பெண்ணின் சத்தத்தையே காணோம்.
“அவ எங்க?” என்றான் சுந்தரன்.
"பத்து நாளத்து அழுக்குத்துணி கெடந்துச்சு. தொவைச்சுட்டு வான்னு சொன்னேன். வாய்க்கா மேட்டுக்கு போயிருக்கா” என்றாள். சுந்தரன் பஞ்சராகிப்போனான்.
“இருட்டுல அவளை எதுக்கு தனியா அனுப்புன?” என்று சத்தம் போட்டுவிட்டு அவளைத் தேடிப்போனான்.
ஒரே நாளில் பையன் மாறிவிட்டானே என்று ராமக்கா பொசுங்கத் துவங்கியிருந்தாள். வாய்க்கால் மேட்டில் தோதான இடங்களைப்பற்றி நினைத்துக் கொண்டே சுந்தரன் வேக வேகமாக நடந்தான். கீழே விரிப்பதற்கு அழுக்கு வேட்டி போதும் என்று நினைத்தபோது அவனது வேகம் அதிகரித்தது. அது படு ஆர்வமான வேகம்.
nantri nisaptham.com/
No comments:
Post a Comment