ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க தமிழகம் ரூ.10 கோடி நிதி

.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென ஒரு இருக்கையை உருவாக்குவதற்காக தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த இருக்கையை ஏற்படுத்துவதன் மூலம் தமிழை ஆய்வுமொழியாகக் கொண்டு, இந்தியவியல் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளுதல், ஆராய்ச்சிக் கல்வியில் தமிழ் இலக்கியம், இலக்கணம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்குதல், அமெரிக்க நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் உள்ள தமிழ் தொடர்பான புத்தகங்களையும் ஆவணங்களையும் ஆய்வுக்குட்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளின் மூலம் தமிழின் வளம் உலகறியச் செய்யப்படும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இந்த நிதியுதவியை தமிழக அரசு தற்போது அறிவிப்பதாகவும் பழனிச்சாமி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மாஸச்சூஸட்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகமான ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென ஒரு இருக்கையை ஏற்படுத்துவதற்கு கடந்த மூன்றாண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.


இதற்கான முயற்சிகளை, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிக்கும் சேர்ந்த இதயநோய் மருத்துவரான வி. ஜானகிராமனும், ரோட் ஐலாண்டில் வசிக்கும் புற்றுநோய் மருத்துவரான ஞானசம்பந்தனும் மேற்கொண்டுவந்தனர்.
ஜானகிராமனும், சம்பந்தனும் தலா அரை மில்லியன் டாலர்களைத் தானமாகக் கொடுத்துள்ளனர்
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான நிரந்தர இருக்கையை ஏற்படுத்த 6 மில்லியன் டாலர்கள் தேவைப்படும். ஜானகிராமனும், சம்பந்தனும் தலா அரை மில்லியன் டாலர்களைத் தானமாகக் கொடுத்துள்ளனர். தற்போது தமிழக அரசு சுமார் 1.5 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இருந்து சுமார் 2 மில்லியன் டாலர்கள் அளவுக்குத் திரட்டப்பட்ட நிலையில், மீதமுள்ள நிதியைத் திரட்டும் முயற்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
"உலகில் உள்ள செவ்வியல் மொழிகள் ஏழில் ஆறு மொழிகளுக்கு இங்கே இருக்கைகள் உள்ளன. சமஸ்கிருதத்திற்கு 110 ஆண்டுகளாக நிரந்தர இருக்கை இருக்கிறது. இந்த நிலையில்தான் இங்கு நிரந்தர இருக்கை ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினோம்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் டாக்டர் ஜானகிராமன்.
அமெரிக்காவில் வசிக்கும் மொழிபெயர்ப்பாளரான வைதேகி ஹெர்பர்ட் சங்க இலக்கிய நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவருடன் தொடர்ந்து உரையாடியதன் மூலமே தனக்கு இந்த முயற்சியில் ஈடுபடும் எண்ணம் ஏற்பட்டதாக ஜானகிராமன் தெரிவித்தார்.
ஆனால், இந்தியாவில் இருந்து பலரும் நிதியுதவி அளிக்க விரும்பினாலும் மத்திய அரசின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
Image captionஅப்பாதுரை முத்துலிங்கம்
பிபிசி தமிழிடம் பேசிய ஹார்வர்ட் தமிழ் இருக்கை குழுவின் உறுப்பினர்களுள் ஒருவரான கனடாவை சேர்ந்த அப்பாதுரை முத்துலிங்கம், "ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்கு இன்னும் 9.5 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்றாலும், தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இருக்கையை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் விரைவில் தொடங்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகமெங்கும் 7,102 மொழிகள் பேசப்படும் நிலையில் அதில் தமிழ், சமஸ்கிருதம், பாரசீகம், லத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் மற்றும் சீனம் ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே செம்மொழிகளாக உள்ளன.
அந்த ஏழு மொழிகளில் தமிழை தவிர்த்து மற்ற ஆறு மொழிகளுக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருக்கைகள் உள்ளன.
ஹார்வர்டில் ஒரு மொழிக்கு இருக்கை எனப்படும் ஆராய்ச்சித் துறையை அமைக்க வேண்டுமென்றால், அப்பல்கலைக்கழகம் வரையறுத்துள்ள இலக்கிய வளமை, தொன்மை மற்றும் நடுநிலைத் தன்மை போன்ற 11 அடிப்படைத் தகுதிகளில் பெரும்பாலானவற்றை நிரூபிக்க வேண்டும்.
இந்நிலையில், மற்ற 6 மொழிகளில் தமிழ் மொழி மட்டுமே அனைத்து 11 அடிப்படைத் தகுதிகளையும் நிரூபித்துள்ளதாக ஹார்வர்ட் தமிழ் இருக்கை குழு தெரிவித்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் துறையில் Sangam Tamil Chair என்ற பெயரில் இந்த இருக்கை உருவாக்கப்படும்.
nantri http://www.bbc.com

No comments: